BREAKING NEWS
Search

பிரபாகரன்… வழித்துணையல்ல.. வழி! – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ

பிரபாகரன்… வழித்துணையல்ல.. வழி! – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ

prabhakaran-787953

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்த நாளையொட்டி கவிஞரும் பாடலாசிரியருமான பழனிபாரதி ஒரு சிறப்புக் கவிதை எழுதியுள்ளார்.

இந்தக் கவிதையை பிரபல இசையமைப்பாளர் தாஜ் நூர் இசையில் வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். தாஜ் நூரின் இசை ஒலிக்க, கவிதை வரிகளை பழனி பாரதியே வாசித்துள்ளார்.

இன அழிப்புக்கு எதிரான ஆயுதம்தான் பிரபாகரன் எனும் பெயர் என்று கவிதையில் அவர் குறிப்பிட்டுள்ளது படிப்பவரை மெய் சிலிர்க்கச் செய்யும்.

பிரபாகரன் என்ற பெயர் தமிழ் இனத்தின் வழித்துணை மட்டுமல்ல, வழியே அதுதான் என்று கவிதையை அவர் முடித்துள்ளார்.

10530837_10204611208024658_9044424636708180942_n

இதோ அந்தக் கவிதை…

கானுறை வேங்கையின்
கனலும் கண்களைப் பார்த்திருந்தால்…
சமாதானத்தின்
வெள்ளைச் சொற்கள் தீர்ந்து
பீரங்கியின் மேல் அமர்ந்திருக்கும்
புறாவின்
சிறகுகளைத் தடவிக் கொடுத்திருந்தால்…
நான் உங்களுக்கு
அந்தப் பெயரைச் சொல்லவேண்டியதில்லை

இன அழிப்புக்கு எதிரான
அந்தப் பெயர்
எங்களுக்கு ஓர் ஆயுதம்
அது எங்கள் படையெடுப்பு
அது எங்கள் மானங்காத்த சீருடை
அது எங்கள் காயம் ஆற்றிய சிகிச்சை

எம் பெண்களை
வன்புணர வருகின்றவர்களின்
வழியில்
அது ஒரு கண்ணிவெடியாக இருந்தது
எம் குழந்தைகளுக்கு
தாய்ப்பாலாகச் சுரந்தது

மாபெரும் மனிதச் சங்கிலியான
அந்தப் பெயர்
எங்களுக்கு ஒரு விதை
அது எங்கள் பசி
அது எங்கள் தாகம்
அது எங்கள் இரத்தம்
அது எங்கள் தழும்பு
அது எங்கள் புன்னகை

காற்றில்
தீச்சுடராய் அசையும்
காந்தள் மலரைத் தொட்டுப் பாருங்கள்
அந்தப் பெயரை
நீங்களும் சூடிக்கொள்வீர்கள்

உயிருருக்கும்
யாழிசையைக் கேட்டுப் பாருங்கள்
நீங்களும்
அந்தப் பெயரை
நீங்களும் பாடிச் செல்வீர்கள்

மனிதர்களுக்கு எதிரானவர்கள்
அந்தப் பெயரை
முள்ளிவாய்க்காலில்
புதைக்க நினைத்தார்கள் …
நந்திக் கடலில்
கரைக்க நினைத்தார்கள்…

அது
எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு
அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டது

அந்தப் பெயர்
எங்கள் வழித்துணையல்ல
வழியே அதுதான்

– பழநிபாரதி

கவிதையின் வீடியோ வடிவம்:

-என்வழி

 

 
4 thoughts on “பிரபாகரன்… வழித்துணையல்ல.. வழி! – கவிஞர் பழனி பாரதி கவிதை வீடியோ

 1. Kalidass

  . “அந்தப் பெயர்
  எங்கள் வழித்துணையல்ல
  வழியே அதுதான்” உண்மை.

 2. குமரன்

  வழி மீது வைத்த விழிகள்
  நீரில் முழுகியனவே …………..

  நினைக்க நினைக்க விழிகள்
  சுரக்கின்றனவே ………..

  அந்த ஆயுதம் என்றும் ஒளிரும்..
  என்றாவது ஒருநாள் வெல்லும்….
  நிச்சயம்

 3. Kalidass

  அந்தப் பெயர்
  எங்கள் வழித்துணையல்ல
  வழியே அதுதான்,
  இன்னும் சொன்னால்
  எங்கள் வாழ்வே
  அதுதான்.

 4. குமரன்

  இந்த அநியாயத்தைப் பாருங்கள். பிரபாகரன் பிறந்தநாளில் பூஜை கூடக் கூடாது என்று சொல்லும் அளவுக்கு அராஜக அரசு, போலீஸ் ஆட்சி.

  ஆலங்குடி : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள அகதிகள் முகாமில், இலங்கை தமிழகர்களால் சக்தி விநாயகர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலய கும்பாபிஷேகத்திற்கு முதல் கால பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், இன்று 2ம் கால பூஜையும், நாளை கும்பாபிஷேகமும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று, விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதாலும், நாளை மாவீரர் தினம் கொண்டாடப்படுவதாலும் கும்பாபிஷேகத்தை நடத்தக் கூடாது என எஸ்.பி., உமா தலைமையிலான போலீசார் தடை விதித்துள்ளனர். கும்பாபிஷேகத்தை திங்கள்கிழமை நடத்துமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது தொடர்பாக இலங்கை தமிழர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்து விட்டதாலும், கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் நடத்தப்பட்டு விட்டதாலும் திட்டமிட்டபடி கும்பாபிஷேகத்தை நடத்த அப்பகுதி மக்கள் உறுதியாக இருப்பதால் போலீசாருக்கும், அப்பகுதியினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *