BREAKING NEWS
Search

விளைநிலங்களெல்லாம் வீடுகள்… அரிசி உற்பத்தி வீழ்ச்சி.. கிடு கிடு விலை உயர்வு!

விளைநிலங்கள் வீடுகளானதன் விளைவு… அரிசி உற்பத்தி வீழ்ச்சி – கிலோ ரூ 48 ஆக உயர்வு!


1996-ம் ஆண்டு. தமிழகமெங்கும் நல்ல மழை. பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. காஞ்சிபுரம் ‘மேல்ரோட்டில்’ ஒரு பஸ் அடித்துச் செல்லப்பட்டது. ஆனால் சந்தோஷமாக பஸ்ஸிலிருந்து பயணிகள் குதித்து ஓடி வந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றை அப்படிப் பார்த்த மகிழ்ச்சி!

அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு வெளியிட்ட தகவல் குறிப்பில், காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டங்கள் நெல் உற்பத்தியில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றதாக அறிவித்திருந்தது. நெற்களஞ்சியம் எனப்பட்ட திருச்சி – தஞ்சை மாவட்டங்களை விட 20 சதவீதம் அதிக நெல் உற்பத்தி நடந்திருந்தது இந்த மாவட்டங்களில்… அதாவது சென்னைக்கு மிக மிக அருகாமையில் இருந்த நகர்ப்புறங்களில்!

15 ஆண்டுகள் கழித்து இன்றைக்குப் பார்த்தால், தமிழகத்தில் விவசாய உற்பத்தி 80 சதவீதம் பாழ்பட்ட மாவட்டங்களாக இந்த இரண்டும் மாறிவிட்டதை என்னவென்பது?

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், பாலுச்செட்டி சத்திரம், ஓச்சேரி வரை இப்போது சென்னை என்றாகிவிட்டது. இந்தப் பகுதிகளில் நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த வயல்கள், ஆழம்குறைந்த ஏரிகள் அனைத்தும் வீடுகள், தொழிற்சாலைகளாகி விட்டன.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தாம்பரம் – காஞ்சிபுரம் சாலையில் இரண்டு பக்கமும் நீர் நிலைகளும், நெல் வயல்களும் வாழைத் தோப்புகளுமாகத்தான் இருக்கும். ஒரகடத்தை நெருங்கினாலே இரண்டு பக்கம் நான்கு ஏரிகளில் நீர் நிறைந்து கதகதப்பான சூழலை உணர முடியும். வாகனத்தில் செல்வோர், அந்தப் பக்கம் முந்திரி தோப்புகளுக்கு நடுவே எப்போதும் வற்றாமல் கசிந்து ஓடும்  சுனை நீரை குடித்து இளைப்பாறிவிட்டுச் செல்வார்கள்.

ஆனால் இன்று அவையெல்லாம் அடித்து தூர்க்கப்பட்டுவிட்டன. நீர் தளும்பி நின்ற ஏரிகளைக் காணவே இல்லை. கல்லூரிகள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி வீடுகள், என எங்கும் கட்டடங்கள்.

திருவள்ளூர் பக்கம் நிலைமை ரொம்ப மோசம். முன்பெல்லாம் அம்பத்தூர்தான் ரொம்ப நெரிசலான பகுதியாக இருந்தது. இப்போதோ பட்டாபிராம், திருநின்றவூர், கடம்பத்தூர் என எல்லா பகுதிகளுமே அம்பத்தூர் ஆவடி மாதிரிதான் ஆகிவிட்டன. சென்னை – அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், இருப்புப்பாதையை ஒட்டிய அனைத்து ஏரிகள், புறம்போக்கு நிலங்கள், வயல்கள் அனைத்துமே இப்போது கட்டடங்களாகிவிட்டன அல்லது ஆங்காங்கே மஞ்சள் கற்கள் நட்டு கலர் கலராக கொடிகள் பறக்கின்றன. பெரிய ஐநா சபை கட்டட நினைப்பு!

அப்புறம் எங்கே இருக்கும் விளைச்சல்… அலங்கார வீடுகளில் உட்கார்ந்து கொண்டு கலர் கலர் மாத்திரைகளை அனுபவித்து திண்ணவேண்டியதுதான்!

இந்த இரண்டு மாவட்டங்கள்தான் என்றில்லை.. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே வயல்கள் வேகவேகமாக வீட்டுமனைகளாக மாறிவருகின்றன. வேலூர் மாவட்டத்தின் உள்ளார்ந்த பல கிராமங்களில்கூட ரியல் எஸ்டேட் கற்கள் அல்லது கொடிகளைப் பார்க்க முடிகிறது.

நெற்களஞ்சியம் எனப்பட்ட திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும், அதுவும் காவிரிக் கரையோர கிராமங்கள் சிலவற்றில் கூட வயல்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டிருந்த கொடூரத்தை சமீபத்தில் காண முடிந்தது.

இந்தக் கொடுமை ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் விவசாயத்துக்கு கூலியாட்கள் கிடைக்காத நிலை. அப்படியே வருபவர்களும் ஏகத்துக்கும் கூலி கேட்கிறார்கள்.

உரம், பூச்சி மருந்து என எக்கச்சக்க செலவு. இதைத் தாங்க முடியாத விவசாயிகள், கரும்பு, வாழை, பூக்கள், காய்கறிகள் என பணப்பயிர்களுக்குத் தாவுவதும் நடக்கிறது.


இன்னும் சில பகுதிகளில் ஊதுவத்தி தொழில் விவசாயத்தை அடியோடு முடக்கிப் போட்டிருக்கிறது. நாளெல்லாம் டிவி சீரியல் பார்த்தபடி ஊதுவத்தி தேய்ப்பதில் சுகம் கண்டுவிட்டார்கள் பெண்கள். ஆண்கள் புரோக்கர் தொழில், கட்சிகளுக்கு கூலித் தொண்டராகப் போவது அல்லது ஊரை ஏமாற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வெட்டியாக பொழுதைக் கழித்துவிட்டு கிடைப்பதைப் பெற்றுக் கொள்வது என மாறிப் போய்விட்டார்கள்.

விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதும், கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயி கண்ணீர் வடிக்க, இடைத்தரகர்களும் வியாபாரிகளும் பெரும் லாபம் அடைவதும் இன்னொரு கொடுமை.

கிராம ஒழுங்குமுறை, விவசாய கட்டமைப்பு முற்றாக சீர்குலைந்துபோயுள்ளது என்பதே உண்மை. இனி இந்த நிலை மாறி, மீண்டும் பழையபடி விவசாயம் நடக்குமா என்பதெல்லாம் சந்தேகம்தான்!

இந்த நாட்டில் ஒருமுறை சீரழிந்த எதுவும் மீண்டும் மேம்பட்டதாக சரித்திரமே இல்லை. இன்று கிராமங்களில் விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் என்றால் குறைந்தபட்சம் 40 வயதுக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். அதற்கு அடுத்த தலைமுறையிலிருந்து பெரும்பாலும் யாரும் விவசாயம் பக்கம் போகவே இல்லை. எந்த மரத்துல அரிசி தொங்குது? என்று கேட்பவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். !

எதிர்மறை கருத்தாக தோன்றினாலும், நிஜம் அதுதானே!

தஞ்சை, திருச்சி, ஆரணி, திண்டிவனம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, பொன்னேரி, இளவமேடு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நெல் அறுவடை அடியோடு நின்று விட்டது. காஞ்சிபுரம், செங்குன்றம் போன்ற பகுதிகளில் இயங்கி வந்த பல நூறு அரிசி ஆலைகள் நின்றுபோய் பல மாதங்களாகின்றன!

இதன் விளைவு, அரிசி விலை தாறுமாறாக உயர ஆரம்பித்துள்ளது. 75 கிலோ பொன்னி அரிசி மூட்டைக்கு ரூ 2000 லிருந்து ரூ 3000 வரை போகிறது, ரகத்தைப் பொறுத்து. போன மாதத்தைவிட இந்த மாதம் மூட்டைக்கு ரூ 300 முதல் 500 வரை உயர்ந்துவிட்டது.

குறிப்பாக கடந்த ஒரு வாரத்துக்குள் மூட்டைக்கு ரூ 150 உயர்ந்திருக்கிறது அரிசி விலை. இன்றைய விலை நிலை, தரமான வெள்ளைப் பொன்னி அரிசி கிலோ ரூ 48!


“ஒரு வியாபாரிதான் என்றாலும், இந்த விலை உயர்வு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. நாங்களும் அதே அரிசியைத்தானே சாப்பிடுகிறோம். இன்னும் நாளாக ஆக விலை ஏறுமே தவிர குறைய வாய்ப்பில்லை. இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடியும் தள்ளிப் போய்விட்டது. பல ஆயிரம் ஏக்கர் விளைச்சல் நிலங்கள் வேறு பயன்பாட்டுக்குப் போய்விட்டன. தண்ணீர்ப் பிரச்சினையில் சிக்கிக் கொண்ட காவிரி பகுதி விவசாயிகள் வேறு பயிர்களுக்கு மாறிவிட்டனர். அடுத்த மூன்று மாதங்களில் குறுவை நெல் வந்தால்கூட விலை குறையுமா என்று தெரியவில்லை,” என்கிறார் தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க மாநில தலைவர் எஸ்.பி.சொருபன்.

வியாபாரியே கவலைப்படும் இந்த விலை உயர்வு எதில் கொண்டுபோய் நிறுத்துமோ…

-என்வழி ஸ்பெஷல்
10 thoughts on “விளைநிலங்களெல்லாம் வீடுகள்… அரிசி உற்பத்தி வீழ்ச்சி.. கிடு கிடு விலை உயர்வு!

 1. Baskaran

  ஹலோ வினோ,

  நமது நாட்டில் மட்டும் தான் உழைப்புக்கு மரியாதையை இல்லாமல் பொய் விட்டது . நான் விவசாயத்தை சொன்னேன் . எங்களுடிய வயலில் ௮ மாதங்கல்லுகு முன்பு நெல் பயிர் செய்தோம் இரண்டு ஏக்கரரில் ! என் அம்மா செய்த மொத்த செலவு 40000 ரூபாய் . அனால் அறுவடைக்கு பின்பு கிடைத்த மொத நெல்லின் விலை ௧௫௦௦௦ ரூபாய் தான் ! எங்கம்மா நெல்லை விற்காமல் வீட்டிக்கு வைத்து கொண்டோம் ! இது தான் இன்றைய விவசாயின் நிலை இன்று தமிழ் நாட்டில் ! இப்பொழுது ஒரு ஏக்கரில் கரும்பு நட்டு உள்ளோம் ! மீதி ஒரு ஏக்கர் சும்மா தான் உள்ளது ! இங்க விவசாயி உழைக்கிறான் , ஆணால் லாபத்தை இடை தரகர்களும் , அரிசி மண்டி கரர்களுள் அனுபவிக்கிறார்கள் ! கஷ்டப்பட்டு விவசாயின் மன நிலை அறிந்த ரியல் எஸ்டேட் ( திடீர் ) தொழில் அதிபர்கள் ( இந்த பருதி கொட்ட , புண்ணாக்கு , நிலம் விட்கிரவங்கலேலம் தொழில் அதிபர்கலாம் இவனுங்க தொல்ல தங்க முடியல்லட சாமி 🙂 🙂 ) பணம் ஆசை காட்டி சுலபமா வாங்கி வீடு மனை ஆகிரடுணுக ! US ல இருக்குற மாதிரி இங்கேயும் corporate முதலைகள் விவசாய நிலங்களை கைப்பற்ற இந்த அரசாங்களால் துணை போகிக் கொண்டு இருக்கின்றன !

  அடுத்த தலைமுறைக்கு எதை விட்டு செல்வோம் என்று தெரிய வில்லை !

 2. Rajmohan

  Very Good Article! Very Much Needed Right Now!

  IN my Erode district, 100 days employment plan brings all to new style of working(i.e without working get the daily wages), indirectly getting affected the agriculture, no person is willing to come to field. Now they thought, it is very hard one.

  In my areas, paddy cultivation is very much reduced.

 3. palPalani

  100 நாள் வேலையின்னு கூலிய கூட்டிவிட்டர்கள். நல்லதுதான், ஆனால் விவசாய விளைபொருட்களின் விலை ஏறவில்லை!

 4. palPalani

  @Rajmohan: சரியா சொன்னீங்க! விவசாயிகளையும் தினக்கூளியாக்கி விட்டது! பிறகு, வேலை செய்யாம எவன் சம்பளம் கொடுப்பான்!

 5. சுதந்திரன்

  சரியான நேரத்தில் எழுதப்பட்ட சரியான கட்டுரை. ஆனால், இதில் இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் தோழர்களே? இது போன்ற வீட்டு நிலங்களை வாங்குவதில்லை என்று உறுதி பூண வேண்டுமா அல்லது பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த படுபாதக செயலை செய்யும் காட்டுமிராண்டிகளை அடக்கி ஒடுக்க வேண்டுமா? சொல்லுங்கள் தோழர்களே.
  வெறுமனே கட்டுரையை படித்து விட்டு நானும் இட்டேன் பின்னூட்டத்தை என்று மனம் நிரம்பி விடுதல் முறையாகுமோ?

  வருத்தத்துடன்,
  சுதந்திரன்
  http://sudhandhiran.blogspot.in/

 6. anbudan ravi

  இந்த உலகம் அழிய வெகு நாட்கள் இல்லை. நம் வருங்கால சந்ததிகளைப்பற்றி நமக்கு கவலை இல்லை. அடிப்படைக்காரணங்கள் – விளைச்சல் நிலங்கள் அழிக்கப்படுகிறது. நீர் நிலைகள் அழிக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்படுகிறது. ரசாயன பயன்பாடுகள் அதிகமாகிவிட்டது. காற்றின் நச்சுத்தன்மை அதிகமாகிவிட்டது. இந்த காரணங்களால் உலக உருண்டையின் வெப்பம் அதிகமாகிவிட்டது. இனி ஆங்காங்கே அழிவுகள் ஆரம்பமாகும்.

  எல்லோரிடமும் பணம் நிறைய இருக்கும்…ஆனால் உண்பதற்கு உணவு இருக்காது…குடிக்க நீர் இருக்காது…சுவாசிக்க சுத்தமான காற்று இருக்காது. இன்னுமொரு 70 அல்லது 80 வருடங்கள்தான் இந்த பூமி தாங்கும்…..பின் வெடித்து சிதறப்போவது உறுதி.

  அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *