BREAKING NEWS
Search

காவியக் கவிஞர் வாலிக்கு பா விஜய்யின் கவிதாஞ்சலி

காவியக் கவிஞர் வாலிக்கு பா விஜய்யின் கவிதாஞ்சலி

ன் தமிழுக்கு வாரிசு என கவிஞர் வாலியால் அடையாளம் காட்டப்பட்ட கவிஞர் பா விஜய், மறைந்த தன் ஆசானுக்கு எழுதியுள்ள இரங்கல் கவிதை இது…

ஞ்ஞான்றும் கண்டதில்லை
உன்போல்
எவர் குளிரிவிப்பார்
செழுந்தமிழால் எம்
செவியை?

ஜூலை 18
‘அடக்கம்’ இன்றுதான்
அடக்கம் ஆனது!
‘இயக்கம்’ இன்றுதான்
இயக்கம் நின்றது!

சிகரம் போலுயர்ந்தும்-நாங்கள்
கைத்தொடும் தூரமிறங்கிய
அடிவாரமே

அவதார காவியத்தின்
அவதாரமே
நுண்மான் நுழைப்புலம்
நுகர்த்த சீர்நீ!

தமிழ்ப்பால்
தடையறச் சுரந்த
மார்நீ!

அவணி நெடுக-எழுத்தால்
அடைமழை பெய்வித்த
கார்நீ!

ஒருவரல்ல அய்யன்மீர்-நீர்
ஒருவன் எனும் ஒருமைக்குள்
ஆயிரம் புலவராய் வாழ்ந்த ஊர்நீ!

அமிர்தம் மட்டுமல்ல
வெய்யிலில் கருத்த உழைப்பாளியின்
நாவறட்சிக்கு ஈந்த நற்றமிழ்
மோர்நீ!

அனிச்சம் போல் மடல்விடும்
அடுத்த தலைமுறை கவிஞர்களின்
வேர்நீ!

யார் தெரியுமா
கவிஞர்களின் தலைவாநீ!

புடவைக் கட்டியது
போதுமென்று
வேட்டி கட்டி வாழ்ந்த
கலைவாணி!

“நேற்றிரவு
சுவாசம்-மிக மோசம்”
இது நீ மரணப் படுக்கையில்
யாத்த கடைசி சாசனம்!

அது எப்படி அய்யா
ஆவி தீரும் அந்தகாரத்திலும்
எதுகையும் மோனையும் உன்னுள்
ஆகிக்கொண்டிருக்கிறது பாசனம்?

காலப் பேழைக்குள்
கடு மருந்து பூச்சுப் பூசி
உன் பூதவுடலையும் வைத்திருக்கலாம்
அழுகாது!

வைத்திருந்தால்-உன்
விழி முடங்கி கிடந்திருக்கும்
விரல் மடங்கி கிடந்திருக்குமா
எழுதாது?

ஆன்மீகம் உன் அரண்!
ஹரனைச் சேவித்த வரனே
உன்னுள் எத்தனை
அழகிய முரண்? அழகிய முரண்?

வைஷ்ணவத் திலகம்-உன்
சிந்தைச் சிகையைச் சுற்றி
சிலிர்ப்பிப் பார்த்தால்-அதில்
பெரியாரின் கலகம்

எம்.ஜி.ஆரின் பாட்டுப் படைக்கு
நீதான் நிரந்தர தளபதி!
கலைஞரின்
கவிரங்கில் நீ கணபதி!

ஆச்சார அனுஷ்டானம்
நோக்காது நோன்பு நீ
நோற்றதில்லை – ஆனாலும்

அயிரை மீன் குழம்பிடம் – உன்
அடிநாவு என்றுமே
தோற்றதில்லை

யாதெனச் சொல்லுவேம்-உனை
தமிழ்
நாதெனச் சொல்லுவேன்

யாப்புக்குள் மூழ்கி
குற்றியலிகரம் கொத்தி
கட்டளை கலித்துறையும் மிளிற்றும்
உன்பேனா


ஷாப்புக்குள்ளும் மூழ்கி
டிவிட்டரில் சொல்பொறுக்கி
திரைக்கும் பாட்டியற்றும்
ஐ-டியூனா

காவிரி-உந்தூள் மலர்சூழ
களிநடைப் புரிந்தர
திருவரங்கம்-உன்
கருவரங்கம்

ஆழிமேல் அனந்தசயனமிடும்
அரங்கராஜன் குடைநிழலில்
அரங்கநாதனாய் நடந்தாய்!-இன்று
கோடம்பாக்க கோபுரத்தில்
குலவிளக்காய்க் கலந்தாய்!

மனசொப்பக் கண்டால்-நீ
நியூரான்ஸ் எல்லாம்
நித்தம் இளமைச் சொரிய
புதுப்புது சொல் கண்டெடுக்கும்
நியூட்டன்

வயசொப்பக் கண்டால்
வாலிபக் கவியே-நீ
பாட்டுப் பேரன்களுக்கெல்லாம்
பாட்டன்

அகவையில் தான்நீ
எண்பத்திரெண்டு!-ஆனால்
கொஞ்சிச் சிரித்துப் பேசும் எண்ணத்தில் ‘ரெண்டு’

நீரே முற்பிறவியில்
ஏழிசைத் தாண்டி
தாழிசைக் கண்ட
திருநாவுக்கரசர்!

இப்பிறவியில்
சொன்ன சொல் பொய்க்காது
கொடுத்த வாக்குத் தவறாது-வாழ்ந்த
ஒருநாவுக்கு அரசர்!

கையும் மலரடியும்
கண்ணும் கனிவாயும்
உண்ணும் தீ எனத் தெரிந்தும்
விட்டுவந்தோம்!

தமிழா-இதுவரை
நீ வாசித்த கவிதையை
தீ வாசிக்கட்டும் என்று-இன்று!

பிரபஞ்சமே பிரமிக்கிறது
பேராசானே!
பதினைந்தாயிரம் பாடல் எனும்
கணக்கைக் கேட்டு!

ஓ!இறைவா-எமது
தமிழ்ப்பெருங் கவிஞன்-உனை
நேரில் பாட வந்துவிட்டான்

அந்த அமர ஜோதி அமர-உன்
அகத்தின் அருகாமையில் ஓர்
இடத்தைக் காட்டு!

பா.விஜய்

vaali 1 vaali 2 vaali 3

-என்வழி

குறிப்பு: நண்பர் குமரனின் கருத்துக்கிணங்க கவிஞரின் அனுமதியோடு பிழைகள் திருத்தப்பட்ட வடிவில்!
2 thoughts on “காவியக் கவிஞர் வாலிக்கு பா விஜய்யின் கவிதாஞ்சலி

 1. குமரன்

  வெகு அருமையான அஞ்சலி
  வாலியின் நடப்புக்கு
  அவரது நடையிலேயே நடக்கும் கவிதை.

  தமிழுக்கும் அஞ்சலியா எனும் அளவுக்குப் பிழைகள் மலினம்.
  அச்சுக் கோர்த்தவர் குற்றமா?
  பிழை திருத்தப பதிப்பகத்தில் ஆளில்லையா?

  அச்சுப் பிழையும் அதன் சரியான சொல்லும்

  அவணி …… அவனி (பொருள், உலகம், பூமி)
  சாசணம் …… சாசனம்
  பாசணம் …. பாசனம் (நல்ல வேளை ‘பாஷாணம்’ என்று அச்சு செய்ய வில்லை!)
  ஹரனைப் சேவித்த … ஹரனைச் சேவித்த
  எத்துனை … எத்துணை
  நோண்பு …. நோன்பு
  புரிந்தா … புரிந்ததா
  அரங்கநானாய் …. அரங்கநாதனாய்
  தமிழ்பெருஞ் கவிஞன் … தமிழ்ப்பெருங் கவிஞன்

  இன்னும் பல இடங்களில் ஒற்று இரட்டித்தல் செய்யாத பிழைகள் உள்ளன.

  அஞ்சலி என்ற பெயரில் “அச்சுப் பிச்சுக் கவிதைகள்” மலிந்த இந்தக் காலத்தில்
  ஒரு நல்ல கவிதாஞ்சலி “அச்சுப் பிழையால் நசிகிறதே” என்ற ஆதங்கம்.

  இதனைப் பதிப்பாளர் நல்ல விதமாகத் திருத்தி மறுபதிப்பு செய்வதே முறையான அஞ்சலி ஆகும். வினோ முயல வேண்டும் எனக் கோருகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *