BREAKING NEWS
Search

திமுக சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு உள்பட 1 லட்சம் பேர் கைது!

திமுக சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு உள்பட 1 லட்சம் பேர் கைது!


சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான தலைவர்கள் – தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

கனிமொழி, குஷ்பு உள்பட திமுக முக்கியப் பிரமுகர்கள் தமிழகம் முழுவதும் இன்று கைதாகி கல்யாண மண்டபங்களிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டுகிறது.

திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து அக்கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆங்காங்கே திரண்டு சென்று போராட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.

காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இன்றைய போராட்டத்தில் அவர்  கலந்து கொண்டார்.

காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக்  கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.

முக ஸ்டாலின்

முன்னதாக பேசிய மு.க.ஸ்டாலின், “சிறை நிரப்பும் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு மேல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த போராட்டத்தைப் பார்த்து இந்த ஆட்சியின் முதல் அமைச்சர் ஜெயலலிதா திருந்த வேண்டும். திமுகவினர் மீது பொய் வழக்கு தொடர்ந்தால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். எத்தனை வழக்கு போட்டாலும் திமுக அதனை சந்திக்கும். இந்த போராட்டமே சிறை நிரப்பும் போராட்டம். ஆகையால் கைது செய்யப்படுவதை பற்றி திமுக அஞ்சாது,” என்றார்

கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்ததால், சைதாப்பேட்டையில் நடக்கும் போராட்டத்தில் அவர் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் அவர் கைதானார். அவரது தாயார் ராஜாத்தியம்மாள் அவரை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

குஷ்பு கைது

சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கே.என்.நேரு கைது

திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு  தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தமிழகத்தின் பல இடங்களிலும் நடந்த இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களை வழிநடத்திய முக்கியத் தலைவர்கள் அனைவருடனும் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.

முக அழகிரி பங்கேற்கவில்லை

இந்தப் போராட்டத்தில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் முக அழகிரி, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்ட திமுக மத்திய அமைச்சர்கள் மட்டும் பங்கேற்கவில்லை. ஆனாலும் மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் திரளாகப் பங்கேற்று கைதாகியுள்ளனர்.

சென்னையில் மட்டும் 50,000 பேர் கைது

தலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.

மத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும். மற்ற மாவட்டங்களில் கைதாகியுள்ளவர்கள் அனைவரையும் சேர்த்தால் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது.

கைதாகியுள்ள திமுகவினரை 15 நாட்கள் வரை சிறையில் வைத்திருக்க ஜெ அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் சிறைகள் நிரம்பி வழியும் அளவுக்கு தொண்டர்கள் குவிந்துள்ளதால், என்ன செய்வது என்ற ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது தமிழக அரசு.

-என்வழி செய்திகள்




24 thoughts on “திமுக சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி, குஷ்பு உள்பட 1 லட்சம் பேர் கைது!

  1. மு. செந்தில் குமார்

    ///கைதாகியுள்ள திமுகவினரை 15 நாட்கள் வரை சிறையில் வைத்திருக்க ஜெ அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.///

    ??????

  2. Manoharan

    ///கைதாகியுள்ள திமுகவினரை 15 நாட்கள் வரை சிறையில் வைத்திருக்க ஜெ அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.///

    இது பத்தாது .ஸ்டாலினுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. கனியும் பழகிவிட்டார். எப்படியோ அஞ்சா நெஞ்சன் எஸ்கேப். குஷ்பு சிறையில் என்ன செய்வார் என்று பார்க்க ஆவலாக உள்ளது.

  3. Manoharan

    திமுக சிறை நிரப்பும் போராட்டம் மாபெரும் வெற்றி. எந்த மாநில சிறைக்கும் அஞ்சமாட்டோம். – சொகுசு நாற்காலியில் ஏசியில் உட்கார்ந்துகொண்டு கருணாநிதி பேட்டி.

    நான் எதுக்கு சிறைக்கு போகணும். எவன் கைதானால் எனக்கென்ன – திமுகவின் ஒரே புத்திசாலி அண்ணன் அழகிரி பேட்டி.

  4. Manoharan

    தாம்பரத்தில் குஷ்புங்க….
    சேப்பாக்கத்தில் பாலுங்க…
    சைதாப்பேட்டையில் கனிமொழிங்க…

    என்னங்க தேர்தல்ல ஜெயிச்சுட்டாங்க்களா…?

    இல்லைங்க ….கதை எதிர்த்து கைதாகி இருக்காங்க…

    ஓஹோ ..?

    ஒரு லட்சத்தை தாண்டிடுச்சுங்க…

    என்னங்க ஒட்டு எண்ணிக்கையா…?

    இல்லங்க கைதானவர்கள் எண்ணிக்கை…

    …..அரசியல்னாலே ஆயிரம் என்கொயரிஸ் …ஆயிரம் கைதுகள்…இதுக்கெல்லாம் நாளைக்கு சிலை வெப்பாங்க..ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க….

  5. தினகர்

    ஜாமீன் கேட்ககூடாது என்று கறாராக சொன்ன பிறகும் ஒரு லட்சம் பேர் சிறை சென்றுள்ளார்கள் என்றால் அந்த இயக்கத்தின் வலிமை தெரிகிறது.. திமுகவினருக்கு இது ஒரு புத்துணர்ச்சி தான். இதை அப்படியே கொண்டு சென்றால் 2014ல் மீண்டும் திமுக சரித்திரம் படைக்கும்.

  6. தினகர்

    அழகிரி கைதாகவில்லை என்று கேலி செய்பவர்களுக்கு ஒரு சின்ன யதார்த்தம் புரியவில்லை. மத்திய அமைச்சர் கைது என்றால் என்னவாகும். சட்ட சிக்கல்கள் உருவாகாதா? சாதுரியமாக வீண் பரபரப்பையும் சட்டசிக்கல்களையும் தவிர்த்துள்ளார். நெப்போலியன் உள்ளிட்ட வேறு எந்த மத்திய அமைச்சராவது கைதாகியுள்ளார்களா என்று யோசித்தாலே இந்த உண்மை எளிதில் புரிந்து விடும்.

  7. மிஸ்டர் பாவலன்

    ///திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது. /// (என் வழி செய்தி)

    அதிமுக அரசு வழக்குகள் பொய் வழக்குகளா, இல்லையா, என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்கள் தான்.

    -மிஸ்டர் பாவலன்

  8. Manoharan

    ///ஜாமீன் கேட்ககூடாது என்று கறாராக சொன்ன பிறகும்….

    போயிட்டு வந்தா பதவி கிடைக்குன்னு கூடத்தான் சொன்னாங்க.
    .
    /// இதை அப்படியே கொண்டு சென்றால் 2014ல் மீண்டும் திமுக சரித்திரம் படைக்கும்.///

    படைக்கும் படைக்கும் கண்டிப்பா படைக்கும் ஏன் படிக்காது ? ஏற்க்கனவே சரித்திரம், பூகோளம், எல்லாம் படைசிருச்சே…!

  9. palPalani

    போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்க்குகள அல்ல! திமுகவில் சிலர் மட்டும் மாட்டி உள்ளனர். பெரும் புள்ளிகள், அதிமுக மற்றும் இதர கட்சியினர் யாரும் தண்டிக்கப்படவில்லை! இதுதான் உண்மை!

  10. Palaniyappan, Qatar

    மக்கள் நலனுககவா இவர்கள் சிறை செல்கிறார்கள்?
    பல ஆயிரகணக்கான தமிழ் மக்கள் கொல்லபட்ட நேரத்தில் இவர்கள் என்ன செய்தார்கள் பல நூறு இந்திய மீனவர்கள் தமிழகத்தில் இலங்கை இராணுவதால் சுட்டு கொல்லபட்ட நேரத்தில் எங்கை போனது இவர்களது இந்த போராட்ட குணம்.

  11. Krishna

    //திமுகவினருக்கு இது ஒரு புத்துணர்ச்சி தான். இதை அப்படியே கொண்டு சென்றால் 2014ல் மீண்டும் திமுக சரித்திரம் படைக்கும்.//

    திகாரில் சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் பல மாநிலங்களில் மக்களுக்கு கை சின்னத்தை தோற்கடிக்க கூடிய சின்னத்தில் தான் குத்துவது என்ற எண்ணம் வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் 2G வழக்கை வைத்தே இருபதுக்கும் மேற்பட்ட சீட்டுகளை கேட்டு காங்கிரஸ் தனக்கும் திமுகவுக்கும் ஆப்பு வைத்து கொள்ளும் என்பது தான் உண்மை.

  12. Rajkumar.V

    ///திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது. /// (என் வழி செய்தி)

    அதிமுக அரசு வழக்குகள் பொய் வழக்குகளா, இல்லையா, என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்கள் தான்.

    -மிஸ்டர் பாவலன்

    Athu Epidi DMK news vantha matum Mr.Pavalan Comment poda vararau?
    Spectrum la Corruption panitanga nu solaringale athuvum Court than Solanum Corruption nadanthuruka ilayanu. Athu mattum epidi solaringa? Corruption panitanganu?
    Nadunilayalar nu ini comment podathinga. Jaya vin Unmai visuvasinu comment podunga.

  13. குமரன்

    ///நடிகை குஷ்பு தலைமையில்……………. தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.///

    முன்னாள் மத்திய அமைச்சர் சொக்கத்தங்கம் அன்னை தியாகத் திருவிளக்கு சோனியா ஆசி பெற்ற ….

    தயாநிதி மாறன் ……
    தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜே.அன்பழகனைப் பார்த்துக் கூறுகிறார்:

    என்ன கொடுமை சரவணா இது!

  14. குமரன்

    /// அழகிரி கைதாகவில்லை என்று கேலி செய்பவர்களுக்கு ஒரு சின்ன யதார்த்தம் புரியவில்லை. மத்திய அமைச்சர் கைது என்றால் என்னவாகும். சட்ட சிக்கல்கள் உருவாகாதா? சாதுரியமாக வீண் பரபரப்பையும் சட்டசிக்கல்களையும் தவிர்த்துள்ளார். ///

    அதுதானே,

    முன்னர் 2001 ஆம் ஆண்டு, முரசொலி மாறனும், டி ஆர் .பாலுவும் மத்திய அமைச்சர்களாக இருந்தபோதே கைதாகி வீண் பரபரப்பையும் சட்டசிக்கல்களையும் ஏற்படுத்தி, தாங்கள் அழகிரியைப் போல சாதுயம் இல்லாதவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்!

  15. குமரன்

    ///அதிமுக அரசு வழக்குகள் பொய் வழக்குகளா, இல்லையா, என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்கள் தான்.///

    உண்மைதான் பாவலன் அவர்களே.

    ஆனால் பல சமயங்களில் ஜெயலலிதாவின் அரசு பொய் வழக்குகளைப் போட்டு (திமுகவினர் மட்டும் என்றில்லை, பலதரப்பினரும் பலியாடுகளே) மிகக் கெட்ட பெயரை மக்கள் மத்தியில் சம்பாதித்துள்ளது என்பதும் உண்மை. அவருக்குப் பிடிக்காதவர்கள்/ வேண்டாதவர்கள் மீது வழக்குப் போட்டு கைது செய்வது என்பது ஜெயாவுக்கு மிகப் பிடித்த ஒன்று.

    அரசின் தலைமைப் பதவியில் இருக்கும் எவரும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரமாக நடமாடும் அடிப்படை உரிமையை மற்ற எல்லாரிடமிருந்தும் பாதுகாப்பாக அமைத்துத் தரவேண்டும் என்பது அவரது முதல் கடமை.

    அரசே அப்படிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விஷயத்தில் ஆளும் தகுதியை ஜெயா இழந்துவிடுகிறார். இந்த ஒரே குற்ரத்துக்காகவே அவரை முதல்வராக ஏற்க எனக்கு எப்போதும் மனம் இருந்ததில்லை. மக்களைப் பாதுகாக்காத அரசன் இருந்தென்ன பயன்?

  16. மிஸ்டர் பாவலன்

    ///தமிழகத்தை பொறுத்தவரையில் 2G வழக்கை வைத்தே இருபதுக்கும் மேற்பட்ட சீட்டுகளை கேட்டு காங்கிரஸ் தனக்கும் திமுகவுக்கும் ஆப்பு வைத்து கொள்ளும் என்பது தான் உண்மை./// (கிருஷ்ணா)

    காங்கிரஸ் முப்பது தொகுதிகளைப் பேரம் பேசி வாங்கினால் ரிசல்ட்
    கலக்கலாக இருக்கும்!( ED நேற்று JPC-க்கு அளித்த கருத்துக்கள்
    Times of India நாளேட்டில் வந்திருக்கிறது.)

    –== மிஸ்டர் பாவலன் ===-

  17. தினகர்

    ”அதிமுக அரசு வழக்குகள் பொய் வழக்குகளா, இல்லையா, என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றங்கள் தான்.”

    அதிமுக போட் குண்டர் சட்ட வழக்குகளில் கிட்டத்தட்ட அனைத்திலும் திமுகவினர், நீதிமன்றத்தில் விடுதலையாகி இருக்கிறார்களே.. அது பொய் வழக்குகள் தானே? இன்னும் சில விசாரணையில் இருக்கிறது..

    சசிகலா நடராசன் மற்றும் குடும்பத்தார் மீது போட்டது, செரினா கஞ்சா வழக்கு, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கஞ்சா மற்றும் இன்ன பிற வழக்குகள் – இவையெல்லாம் பொய் வழக்குகளா? நிஜ வழக்குகளா?

  18. Manoharan

    இவங்களுக்கு இந்த வழக்கு எல்லாம் பத்தாது. கருணாநிதிக்கு இன்னும் …” ஐயோ கொல்றாங்கப்பா…” என்று கத்தியது ஞாபகம் இருக்கிறது. அதனால்தான் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து விட்டார். அஞ்சா ..??// நெஞ்சனும் ஆளையே காணோம். எப்படியோ புலி பிடிக்க போய் பூனையை பிடித்த கதையாகிவிட்டது.

  19. தினகர்

    “இவங்களுக்கு இந்த வழக்கு எல்லாம் பத்தாது.”

    மொத்தமா புடிச்சு உள்ளே போடுங்கன்னு தானே வந்தாங்க.. புடிச்சு வழக்கை போடவேண்டியது தானே?. அரசுக்கு ஏன் அந்த தைரியம் இல்லை..?

  20. Ganesh Shankar

    இப்போது கருணாநிதியின் நிலைமை மோசம்.
    தனது தொண்டர்களை ஊக்கபடுத்த எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பதால் இதை போல் எதாவது செய்து கொண்டு இருக்கிறார்.
    இதனால் மகளுக்கு எந்த நன்மையும் இல்லை.ஒரு வீர பாண்டி ஆறுமுகம் மீது பழி விழுந்தவுடன்,இது போன்று எதாவது செய்து கட்சியை காப்பற்றி கொள்ள பார்க்கிறார்.
    இதற்கும்,பொது மக்களுக்கும் எந்த சம்பதமும் இல்லை.இவர்கள் ஒன்று பொது மகளுக்காக போராட வில்லை.அதனால் இதை எல்லாம் நாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

    இவர் மட்டும் இல்லை,எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் இதை போல் எதாவது செய்வார்கள்.
    இதில் இவர் போடும் நாடகம் என்றுமே கொஞ்சம் எல்லாரையும் விட தூக்கலாக இருக்கும்.அவ்வளவு தான்.
    ஓரளவுக்கு மக்கள் நலனுக்கான கட்சியாக இருந்தால் மக்கள் சிறிது வருத்தப் படுவார்கள்.
    ஆனால்,போடப்படும் வழக்குகளே இவர்கள் மக்களுக்கு எதிராக செய்தது ஆதனால்,இதை எல்லாம் பெருசாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை.

  21. மிஸ்டர் பாவலன்

    மதிப்பிற்குரிய நண்பர் கணேஷ் ஷங்கர் எழுதியது:

    //ஆனால்,போடப்படும் வழக்குகளே இவர்கள் மக்களுக்கு எதிராக செய்தது ஆதனால்,இதை எல்லாம் பெருசாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை.//

    தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சி காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர்
    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குமுதத்தில் அளித்த பேட்டியின் நிறைவான
    கேள்வி பதில் (11.7.2012 இதழ்):

    கேள்வி: அ.தி.மு.க.-வின் ஓராண்டு கால சாதனைகள்?

    பதில்: தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை திருப்திகரமா இருக்கு.
    நிலமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை
    வாங்கித் தருவதில் காட்டும் அக்கறையைப் பாராட்டலாம். (குமுதம்)

    நண்பர்கள் குமரன், கிருஷ்ணன், கணேஷ் ஷங்கர் அவர்களே:

    தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சித் தலைவரே இப்படி certificate கொடுப்பது
    பற்றி உங்கள் கருத்து?

    -== மிஸ்டர் பாவலன் ===-

  22. தினகர்

    அம்மா திமுக அனுதாபிகளுக்கும் , கட்சிக்காரர்களுக்கும் திமுக போராட்ட வீரியத்தை பார்த்து ரொம்பவே வருத்தமாக இருக்கு போலிருக்கு. ஏதேதோ சொல்லி தங்களை தாங்களே சமாதானம் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் சொல்வதைப்போல் இது குறித்து கவலைப்படவேண்டியதில்லை என்றால் ஏன் மாங்கு மாங்கு என்று மறுப்பு கருத்து எழுதுகிறார்கள். உள்ளே கொஞ்சம் உதறல் இருப்பதால் தானே?

    இந்த ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை அடுத்து வரும் ஆட்சியில் நடக்கட்டும்..

  23. kanalmeegam

    திமுகவின் அறப்போராட்டம் மாபெரும் வெற்றி. ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொண்டர்களும் பொது மக்களும் சிறையை நோக்கி களம்புகுந்துள்ளனர். முன்பு அதிமுக சொம்புகள் இதுபோல திமுக ஆட்சியில் சிறைநிரப்பும் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட சொம்புகள் வெறும் பத்தாயிரம் மட்டுமே. திமுகவின் அறப்போராட்டத்தில் தொண்டர்கள் அதிமுக சொம்புகளை விட பத்து மடங்கு கூடுதலாக ஒரு இலட்சம் பங்கேற்றுள்ளனர். ஜெயாவும் அதிமுக சொம்புகளும் இதைகண்டு அதிர்ச்சி! சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட வாரியாக எத்தனை திமுகவினர் கைதாகியுள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. இதோ அப்பட்டியல் ஈரோடு மாவட்டத்தில் 5000 பேரும், விழுப்புரத்தில் 20,000 பேரும், திண்டுக்கல்லில் 25,000 பேரும், திருவண்ணாமலையில் 5000 பேரும், திருவள்ளூரில் 5000 பேரும், திருச்சியில் 7000 பேரும், கிருஷ்ணகிரியில் 5000 பேரும், தேனியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். அதேபோல கடலூரில் 10,000 பேரும், தஞ்சையில் 15,000 பேரும், நாகையில் 10,000 பேரும், கன்னியாகுமரியில் 2000 பேரும், வேலூரில் 15,000 பேரும் கைதாகியுள்ளனர். திருப்பூரில் 10,000, தர்மபுரியில் 10,000, தூத்துக்குடியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 20,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மு.க.அழகிரியின் கோட்டையாக கூறப்படும் மதுரையில் 10,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடந்த போராட்டத்தில் மு.க.அழகிரி மட்டும் பங்கேற்கவில்லை.தலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.மத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *