BREAKING NEWS
Search

பிரசன்னா.. செல்லமே.. ஏன் இந்த அவசரம்!

பிரசன்னா..  செல்லமே.. ஏன் இந்த அவசரம்!

11990594_699298483537647_8678813458303858851_n

ண்ணாடிப் பேழைக்குள் படுத்திருக்கிறான் பிரசன்னகுமார்… பலகோடி மக்களைச் சிரிக்க வைத்த மகா கலைஞன் விவேக்கின் ஒரே மகன்.

அப்போதுதான் பள்ளியிலிருந்து திரும்பியவன் போல, இதழ்க்கடையில் விகசிக்கும் சிறு புன்னகையுடன் அவன் படுத்திருக்கிறான்.

அவனைப் பார்க்கிற அத்தனை முகங்களிலும் அழுகை அரங்கேறுகிறது.

காரணம்… அவன் விவேக் என்ற நாடறிந்த கலைஞனின் மகன் என்பதால் அல்ல. 13 வயதில் அகால மரணம் தழுவிய நம் வீட்டு குழந்தை என்ற உணர்வினால்.

அடுத்த நிமிடம்.. அவன் வயதொத்த பத்துக் குழந்தைகள் வருகிறார்கள். மரணம் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகள். தன் நண்பன் மரணித்துவிட்டான் என்ற உண்மை உணரா குழந்தைகள். சற்றே தயக்கம், இதழ்களில் சிறு வெள்ளந்திப் புன்னகையுடன் அந்த சவப் பெட்டியை நெருங்கிய அந்தத் தளிர்கள், மாலையும், வெள்ளுடுப்பும் சூடி மூச்சின்றிப் படுத்திருக்கும் தங்கள் நண்பனைப் பார்த்ததும்… அழக் கூடத் தெரியாமல் கண்ணீருடன் ஓடிய அந்தக் காட்சி.. ஈரக் குலையை அறுத்தெறிந்தது!

அந்தக் காட்சியின் துயரம் நீங்கும்முன், விவேக்கை நெருங்கியபோது, கண்களில் கண்ணீரின்றி, வெறுத்த சிரிப்புடன், ‘வாங்க சங்கர்… அவனைப் பாருங்க.. அவ்ளோதான்.. எல்லாம் முடிஞ்சிடுச்சி’ என்று கையைப் பற்றினார். நொறுங்கினேன். துயரத்தின் உச்சத்தைத் தாண்டிய வெறுமையிலிருந்தார் அவர்.

அங்கே விவேக் என்ற பிரபலத்தின் குழந்தை தெரியவில்லை. ஒரு பச்சிளம் பாலகன்.. மரணம் என்பதை உணரக்கூட முடியாத ஒரு இளம்தளிர்தான் தெரிந்தது.

எத்தனை கனவுகள் அவனுக்குள் இருந்திருக்கும்? அவன் தந்தைக்கும் தாய்க்கும் எத்தனை எதிர்ப்பார்ப்புகள் இருந்திருக்கும்?

நண்பர்களே… பெற்றவர்களின் மறைவை ஏதோ ஒரு விதத்தில் சமாதானப் படுத்திக் கொள்ளலாம்.. ஆனால் வாழ்க்கையையே தொடங்காத இந்தத் தளிர்களின் மரணத்தை எப்படித் தாங்கிக் கொள்வது?

கிராமங்களில் சிறுதெய்வங்கள் உண்டு. அவர்கள் வேறு யாருமில்லை.. அகாலத்தில் மறைந்தாலும், நம் வாழ்க்கையை கடைசி வரை முன்னெடுத்துச் செல்பவர்கள்.

அப்படியொரு தெய்வம்தான் பிரசன்னகுமார். அந்த தெய்வம் உங்களுக்குச் சொல்லிச் சென்ற செய்தி உறைக்கிறதா?

எதிலும் அலட்சியம் வேண்டாம்.. அதிலும் குழந்தைகள் உடல் நலத்தில் ஒரு மணித் தியாலம் கூட அலட்சியம் வேண்டாம். விழிப்போடு இருங்கள். சின்ன உடல்நலக் குறைவையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

எந்த சோகமும் பொருட்டில்லை.. புத்திர சோகத்தோடு ஒப்பிடுகையில்!

ஆழ்ந்த இரங்கல்கள் விவேக்!

 

-எஸ் ஷங்கர்
9 thoughts on “பிரசன்னா.. செல்லமே.. ஏன் இந்த அவசரம்!

 1. குமரன்

  புத்திர சோகம் கொடியது.

  ராமாயணத்தில் தசரதன் ராமனைக் காட்டுக்குப் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்துக்கு அனுப்பிவிட்டு அனுபவித்த புத்திரசோகத்தை வால்மீகியும் கம்பரும் வெகுவாக உணர்ச்சி பூர்வமாகக் கூறுகின்றனர்.

  இங்கோ, பதிமூன்றே வயதுப் பாலகனை நிரந்தரமாகப் பறிகொடுத்த தீரோனாப் புத்திரசோகத்தை விவேக்கும், அவரது மனைவியும் அனுபவிப்பது வெகு வருத்தத்தைத் தருகிறது.

  மக்களைச் சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் வண்ணம் தகவல்களை வெகுஜன ஊடகமான திரைப்படங்களில் கொடுத்துப் பெரும் சேவை செய்த விவேக் இனி சார்லி சாப்ளினைப் போல தனது தனிப்பட்ட சோகத்தைத் தன்னுள்ளே விழுங்கித் தமது மக்கள் சேவையைத் தொடரவேண்டும் என்பது விதியோ? சார்லி சாப்ளின் என்ற மகத்தான கலைஞனைப் போன்றவர்தாம் விவேக் என்றாலும், இந்தச் சோகம் இல்லா வாழ்வை இறைவன் அவருக்கு அருளி இருக்கக் கூடாதா என்றே மனம் ஏங்குகிறது.

  பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு நிச்சயம். இறக்கும் ஒவ்வொரு உயிரும் மீண்டும் பிறக்கிறது. புனரபி ஜனனம், புனரபி மரணம் என்றார் ஆதி சங்கரர். பிறந்தால் இறப்பு, இறந்தால் பிறப்பு என்ற சுழலில் இருந்து மீளவே ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான், ஆனால் அது வாய்ப்பது சிலருக்கே.

  இருப்பினும் கூல, முதலில் வருவது முதலில் செல்வதுதான் இயற்கையான ஒன்று. தாயும் தகப்பனும் தவிக்க, மகன் மரணம் அதுவும் சிறுவயதில், இந்த வாழ்வின் எந்தப் பலனையும் அனுபவிக்காமல் மரணம் என்பது தாங்கொணாத் துயரம், அது பெற்றோருக்கும், உற்றோருக்கும் மட்டுமல்ல, இப்படிப்பட்ட செய்தியைக் கேட்கும் ஒவ்வொரு மனிதருக்குமே இது தாம்கொணாத் துயரம்.

  “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்த” அந்தப் பாலகனுக்கு ஒருக்காலும் பிறவித் துன்பங்கள் வரமாட்டா என்ற வள்ளுவன் வாக்கு பலிக்கும்.

  காய்தலும் உவத்தலும் அற்ற அந்தப் பேரருளாளன் விவேக்குக்கும், அவரது மனைவிக்கும் மன அமைதியையும், திட சிந்தைனையும், தரவேண்டும் எனத் தொழுவோம்.

 2. kumaran

  ஆழ்ந்த இரங்கல் (உங்கள் எழுத்து என் கண்களில் கண்ணீர் )

 3. enkaruthu

  செவ்வாய்த கிரகத்தில் மக்களை வாழ வைக்கிறேன் என்று சொல்லும் இந்த உலக விஞ்ஞான உலகம் நம் பூமியில் உள்ள கொசுவை முற்றிலும் அழிக்க ஒரு ஆரோக்கியமான வழியை கண்டு பிடிக்க முடியவில்லை.இங்கே பூமியில் சுத்த தண்ணீர் இல்லை இவர்கள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கா என்று ஆராய்ச்சி செய்கிறார்களாம்.பாவம் எவ்வளவு ஆசையை மனதில் விவேக் வைத்திருந்திருப்பார்.

 4. chenthil UK

  மிகவும் துயரமான நிகழ்வு … அழ்ழ்ந்த அனுதாபம் … 🙁 இயற்கையின் நிகழ்வு நிலையற்றது என்பதை பயத்துடம் மீண்டும் நிரூபிகிரது

 5. anbudan ravi

  ஈரல் குலைகளை அருத்தெரிந்ததை போன்ற உணர்வு இந்த செய்தியை படித்ததும்…..மக்களை சிரிக்க சிந்திக்க வைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு இப்படி ஒரு ஆயுள் தண்டனை …..என்ன ஆறுதல் கூறினாலும் ஜீரணிக்க முடியாத இழப்பு இது.

  அன்புடன் ரவி.

 6. MK

  திரு விவேக் அவர்களே,
  தங்கள் அருமை மகனின் இழப்பு ஈடு செய்யவே இயலாது.
  வார்த்தைகள் வர மறுக்கிறது.
  கண்ணீர் அஞ்சலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *