BREAKING NEWS
Search

தமிழ் எம்பிக்களை அவமதிக்கும் வட இந்திய கட்சிகளும், ஊடகங்களும்!

தமிழ் எம்பிக்களை அவமதிக்கும் வட இந்திய கட்சிகளும், ஊடகங்களும்!

rajya-sabha2-pti1ட்சி வேறுபாடின்றி தமிழ் எம்பிக்களை எந்த அளவு கேவலமாகப் பார்க்கிறார்கள் வட இந்திய அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் என்பதை இன்றைய ராஜ்ய சபை நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொனியை பார்க்கும் போது புரிந்தது.

இத்தனை நாட்கள் எப்படியோ… இன்றுதான் தமிழக எம்பிக்களின் சூடு சொரணையை கொஞ்சமாவது இந்திய மேல் சபையில் பார்க்க முடிந்தது.

சபை தொடங்கியதும் அவைத் தலைவர்  ஹமீத் அன்சாரி உள்ளே நுழைய, அவரை முற்றுகையிட்ட அ.தி.மு.க. எம்.பி.க்கள், சுட்டுக் கொல்லப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரனின் புகைப்படம் அடங்கிய பதாகையை உயர்த்திக் காட்டி கடும் வாக்குவாதத்தை தொடங்கினர்.

அவர்களை அமைதிப்படுத்த அன்சாரியால் முடியவில்லை. பிற்பகல் வரை சபையை ஒத்தி வைத்தார். ஆனால் அப்படியும் கூட பாராளுமன்றத்தில் தங்கள் பரப்புரையைத் தொடர்ந்தனர் காங்கிரஸ் தவிர்த்த தமிழக எம்பிக்கள். மதியம் 2.30 மணிக்குப் பிறகு அவை தொடர்ந்தபோதும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தமிழர் விரோதப் போக்கை அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து உரத்த குரலில் பேசினர்.

அப்போது கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி வீரர்களை திரும்ப வரவழைத்த வீரப் பிரதாபத்தை வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் பீத்திக் கொண்டிருந்தார்.

இப்போது திமுக எம்பிக்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாகப் பதிவு செய்தனர். அவர்களை அடக்குவதாக நினைத்து, திமிர்த்தனமாக கத்தினார் சபாநாயகர் பொறுப்பை கவனித்த காங்கிரஸின் ரேணுகா சௌத்ரி.

அவ்வளவுதான்… அவரை கிட்டத்தட்ட முற்றுகையிட்டு, அவரது மைக்குகளையும் உடைத்தெறிந்த திமுக, அதிமுக எம்பிக்கள், ‘விலங்குகளைப் போல எங்களை நடத்த முயல வேண்டாம் (You cannot treat us like animals)’ என்று கோஷம் எழுப்பினர். இனியொரு முறை இந்த இருக்கையில் ரேணுகா சவுத்ரி அமரவே கூடாது என அவர்கள் எழுப்பிய முழக்கம், ரேணுகாவை அவையைவிட்டே ஓட வைத்தது. பின்னர் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் தலையிட்டு சமாதனப்படுத்த முயன்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் எம்பிக்கள் பாராளுமன்றம் முடங்கும்படி போர் முழக்கமிட்டது, வட இந்திய கட்சிகளுக்கு புதிய அனுபவம்தான். தனி ஈழம் அமையும் மட்டும் இந்த போர் முழக்கம் பாராளுமன்றத்தை அதிர வைக்க வேண்டும்.

அது என்னமோ… தமிழ், ஈழம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பற்றிய எந்த ஒரு வார்த்தையையும் மகா எரிச்சலுடன் பார்க்கின்றன(ர்) காங்கிரஸ்- பாஜக-திரிணாமூல் போன்ற கட்சிகளும், கிட்டத்தட்ட 98 சதவீத வட இந்திய ஊடகங்களும்.

தமிழரின் தனித்துவமும், கட்சி உணர்வுகளையும் தாண்டி சில நேரங்களில் எதற்கும் பணிய மறுக்கும் அவர்களின் அடிப்படைக் குணமும் வட மாநில அரசியல்வாதிகளுக்கு, குறிப்பாக கோஷ்டி சேர்த்தும், ஜால்ரா மட்டுமே தட்டியும் பழக்கப்பட்ட காங்கிரஸ்காரர்களுக்கு பிடிக்காததில் ஆச்சர்யமில்லை.

வட இந்திய மீடியாக்களும் அவர்களின் மனதையே பிரதிபலிக்கின்றன. குறிப்பாக இன்று தமிழக எம்பிக்கள் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்ததை, ‘திமுக, அதிமுக எம்பிக்களின் ரவுடித்தனம்’ என எழுதியுள்ளன. சேனல்காரர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி தமிழக எம்பிக்களை (தமிழக எம்பிக்கள் என்றால் அதில் காங்கிரஸ் எம்பிக்கள் சேர்த்தியில்லை என்று புரிந்து கொள்ளவும்!) அவமதிக்கும் வகையிலேயே கமெண்ட் அடித்து வருகின்றன தங்கள் செய்திகளில்.

தலைமீது இடியே இறங்கினாலும், ஜனவரி 26-க்கும் ஆகஸ்ட் 15-க்கும் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ என பாடி ஆரஞ்சு மிட்டாய் தின்ற தமிழனை, “இத்தனை எரிச்சலும் வெறுப்பும் கொண்ட உறவு எதற்கு… ஏன் தமிழ் நாட்டின் மீது மட்டும் வலிந்து திணிக்கிறார்கள் இறையாண்மையை? எனது தேசம் எது? நான் இந்தியனா, தமிழனா? தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும்… அது தமிழ்நாடா.. தமிழ் ஈழமா?” என்ற கேள்விகளை, எந்த அரசியல்வாதியின் தூண்டுதலுமின்றி… எந்த பிரச்சார அவசியமும் இன்றி கேட்க வைத்திருப்பது காங்கிரஸ் அரசின் மகத்தான சாதனைதான்!

-என்வழி செய்திகள்
6 thoughts on “தமிழ் எம்பிக்களை அவமதிக்கும் வட இந்திய கட்சிகளும், ஊடகங்களும்!

 1. Kumar

  என்னையா இது,திமுக மாதுய அரசுல வெளியில் வந்துடுச்சுன்னு என்ன வேணாலும் சொல்வீங்களா?.நாற்பது தொகுதியும் கொடுத்து கிட்டத்தட்ட பத்து அமைச்சர் பதவி கொடுத்தப்ப இதே திமுகவும்,பாமகவும் என்ன பண்ணிச்சு தமிழ்நாட்டுக்கு.ஒரு நீர் சேமிப்புக்கு அணைக்கு மதிய அரசுலேருந்து அனுமதி வாங்கினாகளா?.என்ன பண்ணிச்சு இந்த திமுகவும்,பாமகவும்?.முதலில் இவர்கள் தமிழ்நாட்டில் இருபதற்கு தகுதியானவர்களா?.மக்கள் முட்டாள் அல்ல.செரியன அடி 2011 கொடுத்தார்கள்.இப்போ புதுசா எல்லா தப்பு காங்கிரஸ் தான் செஞ்சுதுன்னு வேஷம் போட ஆரம்பிச்சுட்டாங்க.மக்களே உஷாரா இருங்க.

 2. Ananth

  தமிழ் அரசியல் வாதிகள் மற்ற சமுதாய பிரச்சனைகளுக்கும் போராடியிருந்தால் , மரியாதை கண்டிப்பாக இருந்திருக்கும். இவர்கள் அதை பதவி, பணதிர்ர்க்காக மட்டுமே பார்த்திருக்கிறார்கள் . சமுதாய நலனுக்காக போராடும் வாய்ப்பாக என்று பார்க்கிறார்களோ, அன்று தான் மரியாதை மக்களால் கொடுக்கப்படும். முதலில் அரசியல் எழுச்சி தமிழ் நாட்டில் வர வேண்டும் .

 3. Krishna

  வட இந்தியர்கள் மட்டும் தான் நம்மை அவமதிக்கிரார்களா? தென் இந்தியாவில் இருக்கும் கர்நாடகம் நாம் கேட்கும் அளவுக்கு காவிரி நீரை திறந்து விட்டு நம்மை கொவ்ரவிக்கிரார்களா? அல்லது பாலாறு அணைக்கு குறுக்கே அணை கட்டும் வேலையை நிறுத்தி ஆந்திரா தான் நம்மை மதிக்கிறதா? அல்லது முல்லைபெரியாரில் புதிய அணை கட்டமாட்டோம் என்று கேரளம் நமக்கு சத்தியம் செய்து கொடுக்கிறதா?

  தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் மதுவிலக்கு இல்லை என்பதால் இங்கும் மதுவிலக்கை ரத்து செய்ததாக சொன்ன அன்றைய முதல்வர் கருணாநிதி, மற்ற மாநிலங்களில் ஹிந்தி எதிர்ப்பு இல்லாததால் தமிழகத்திலும் ஹிந்தியை அனுமதிக்கிறோம் என்று யேன் சொல்லவில்லை? ஹிந்தியை அனுமதித்த கன்னடர்களுக்கு கன்னட மொழி மேல் பற்றே இல்லையா? சொல்லப்போனால் 1994-ல் தூர்தர்ஷனில் கன்னட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு நேரத்தை வெறும் 10 நிமிடங்கள் குறைத்ததற்கு பெங்களூரில் பெரிய ரகளையே செய்தார்களே?

  மற்ற மாநிலத்தவர் எல்லோரும் ஹிந்தியை ஏற்றுக்கொள்ளும் போது தமிழர்கள் மட்டும் தமிழுக்கு ஆபத்து என்று சொன்னால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? தமிழ் அவ்வளவு weak மொழியா என்று கேட்கமாட்டார்களா? அப்புறம் தமிழர்களுக்கு எப்படி மற்ற மாநிலங்கள் மரியாதை கொடுக்கும்?

  நண்பர் அனந்த் சொல்வது போல் நாம் மற்ற மாநிலங்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறோமா? தனி தெலுங்கானா கேட்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் என்று இருந்தார்களே? ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, சீமான், நெடுமாறன், ராமதாஸ் போன்றவர்கள் குறைந்த பட்சம் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழக்கும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தம் பார்க்கவாவது செய்தார்களா?

  “தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும்… அது தமிழ்நாடா.. தமிழ் ஈழமா?” என்ற கேள்விகளை, எந்த அரசியல்வாதியின் தூண்டுதலுமின்றி… எந்த பிரச்சார அவசியமும் இன்றி கேட்க வைத்திருப்பது காங்கிரஸ் அரசின் மகத்தான சாதனைதான்!”

  உண்மை தான் – ஆனால் இது காங்கிரசின் சாதனை மட்டுமல்ல, திமுகவின் சாதனையும் தான். ஒரு காலத்தில் மாநில சுயாட்சி, தன்னாட்சி, தனியாட்சி என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த திமுக, இன்று மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக பறிக்கும் மத்திய அரசின் அயோக்கியத்தனத்தை எப்போதாவது எதிர்த்தார்களா? அவதிப்படுவது ஜெயலலிதா ஆட்சி தானே என்று மெளனமாக இருந்து அதை ரசிக்கத்தானே செய்தார்கள்?

  இரு கழகங்களும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக கஜானாவையே காலி செய்துவிட்ட இன்றைய சூழலில் தனி நாடு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்து தமிழர்கள் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற நாட்டு மக்கள் போல் பட்டினி கிடந்து சாக வேண்டியது தான்.

 4. குமரன்

  ///இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் எம்பிக்கள் பாராளுமன்றம் முடங்கும்படி போர் முழக்கமிட்டது, வட இந்திய கட்சிகளுக்கு புதிய அனுபவம்தான். தனி ஈழம் அமையும் மட்டும் இந்த போர் முழக்கம் பாராளுமன்றத்தை அதிர வைக்க வேண்டும்.////

  ஆம் தனி ஈழம் அமையும் வரை நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இதே போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.

  ஈழத்தில் புலிகள் வலுவாக இருந்தவரைதான் சோனியா கருணாநிதியை மதித்தார். வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தல் இது தெளிவாக விளங்கும்.

  கருணாநிதிக்கு அவர் கேட்டபதவிகளைக் கொடுத்துக் கொள்ளையடிக்க விட்டுவிட்டு, சோனியா ஈழப் படுகொலையை நிகழ்த்தினார். அது முடிந்தபின்னால் அவரைப் பொறுத்த மட்டும், கருணாநிதி சப்பிப் போட்ட மாங்கொட்டை, நக்கிப்போட்ட கறிவேப்பிலை, இன்னும் சொல்ல இருக்கிறது, அவையடக்கம் தடுக்கிறது.

  கருணாநிதி கொள்ளை அடித்துக் கொள்ளலாம், சோனியா தமிழினத்தைப் படுகொலை செய்து கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தத்தால் விளைந்ததுதான் கூட்டணி.

  சோனியா என்ற இத்தாலியிருந்து வந்த முசோலினியின் பெண் அவதாரத்தையும், அவரது அடிவருடிகளையும் குறிப்பாக சல்மான் குர்ஷித்தையும் தமிழ்நாட்டுக்குள்ளேயே நுழைய விடக் கூடாது.

  இனப்படுகொலைகாரன் ராஜபக்ஷே மட்டும் இல்லை, சோனியாவும்தான்.

 5. Manoharan

  நம் எம்.பி.க்கள் தமிழகம் சார்ந்த மற்றும் ஈழ பிரச்சனைகளுக்கு ஒரு சேர இது போன்று தொடர்ந்து குரல் கொடுத்தால் மற்றவர்கள் நம்மை பார்த்து பயப்படும் காலம் வரும். வரும் தேர்தலில் தமிழக கட்சிகளுக்கே நாம் வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் பாஜகவை பிரச்சாரம் செய்யக் கூட விடக் கூடாது.

 6. Krishna

  மக்களவையில் இரு கழக உறுப்பினர்களும் இலங்கை பிரச்சினையை பற்றி வலுவான கருத்துக்களை தெரிவித்தார்கள். அதில் குறிப்பிடத்தக்கது தயாநிதி மாறனின் பேச்சு தான். மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். அன்றைய தினம் கூட்டத்தொடர் முடிந்ததும் மற்ற எம்பிக்கள் “இந்த மனிதர் தானே சில நாட்களுக்கு முன் சன் ரைசர்ஸ் அணிக்கு இலங்கை வீரர்களான சங்கக்கரா, பெரேரா போன்றவர்களை ஏலத்தில் எடுத்தார்? அதற்குள் இப்படி பல்டி அடிக்கிறாரே” என்று கிண்டல் செய்தார்கள் என்று சில பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். அப்புறம் தமிழக எம்பிக்களை யார் மதிப்பார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *