BREAKING NEWS
Search

நித்தியானந்தாவுக்கு தண்டனை கிடைச்சா ஆதீனம் பதவியிலிருந்து தூக்கிடுவேன்! – மதுரை ஆதீனத்தின் தடாலடி பேட்டி

நித்தியானந்தாவுக்கு தண்டனை கிடைச்சா ஆதீனம் பதவியிலிருந்து தூக்கிடுவேன் – மதுரை ஆதீனம் தடாலடி

மதுரை: அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்தக் கோர்ட்டில் நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவர் இளைய ஆதீனமாக தொடர முடியாது. நீக்கிவிடுவேன் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.

இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தில் செய்தியாளர்களை வரவழைத்துப் பேசினார் மதுரை ஆதீனம். அப்போது நக்கீரன் வார இதழுக்கு அவர் அளித்த பேட்டி…

கேள்வி: நீங்கள் நித்தியின் பிடியில் சிக்கியது எப்படி?

ஆதீனம்: நான் நித்தியின் பிடியில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுவது கற்பனை. என்னை அரசாங்கத்தாலேயே கட்டுப்படுத்த முடியாது. அப்படியிருக்க, நித்தியா என்னைக் கட்டுப்படுத்துவார்? அதற்கு நான் அனுமதிக்கவும் மாட்டேன்.

கேள்வி: நீங்கள் நித்தி வந்ததிலிருந்து வசியம் செய்யப்பட்டவர் போல் தன்னிலை மறந்தவராக  இருப்பதாக வைஷ்ணவியே சொல்லியிருக்கிறாரே?

ஆதீனம்: (லஜ்ஜையாய் சிரித்தபடியே) வைஷ்ணவி அப்படியா சொல்லுச்சு? அதெல்லாம் இல்லை. நான் எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறேன். என்னை நித்தி வசியமும் பண்ணவில்லை. எனக்கு மையும் போடவில்லை. என்னை யாராலும் வசியம் செய்ய முடியாது. எனக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. வசிய மைகள் என்னை நெருங்காது.

கேள்வி: நித்தியோடு பேட்டியில் நீங்கள் அமரும் போதெல்லாம் டல்லாகத் தெரிந்தீர்கள். இப்போது உங்களிடம் காணப்படும் புத்துணர்ச்சி அவருடன் இருக்கும் போது எங்கே போகிறது?

ஆதீனம்: உண்மையைச் சொல்லட்டுமா? நித்தியோடு பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது எல்லோரும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பற்றியே கேள்வி கேட்கிறார்கள். அப்போதெல்லாம் எனக்கு சங்கடமாக இருக்கும். அப்படி இருக்கும்போது எப்படி உற்சாகம் என்னிடம் தென்படும்?

கேள்வி: ரஞ்சிதா வீடியோ விவகாரம் பற்றிப் பேசிய காஞ்சி மடாதிபதி மீது, அவரைக் கொண்டே வழக்குப் போட்டிருப்பது சரியா?

ஆதீனம்: இன்னொரு உண்மையைச் சொல்லட்டுமா? அந்த காஞ்சி மடாதிபதி  ராதாவோடு ஓடிய சர்ச்சை ஒரு காலத்தில் வந்தது. (குபீரென சிரித்துவிட்டு) அப்போது அந்த மடாதிபதியிடம் நான் பேசியதோடு அவருக்கு சில ஆலோசனைகளையும் சொன்னேன். அப்படிப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார், நித்தி-ரஞ்சிதா விவகாரம் பற்றி வாய் திறந்திருக்கக் கூடாது.

கேள்வி: மதுரை ஆதீன மடத்தில் சைவ வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்தானே ஆதீனமாக இருக்க முடியும்?

ஆதீனம்: நித்தி சைவ வேளாளர் இல்லைதான். அவர் தொண்டை மண்டல முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இதே மடத்தில் இந்த சமூகத்தைச் சேர்ந்த ஆதீனங்கள் சிலர் இங்கே இருந்திருக்கிறார்கள். எனவே இந்தவகையில் குற்றச்சாட்டு வைக்கக் கூடாது.

கேள்வி: நித்தி நியமனம், மரபு மீறல் என ஏனைய 18 ஆதீனமட கர்த்தர்களும் ஒட்டுமொத்தமாய் குற்றம் சாட்டுகிறார் களே?

ஆதீனம்: இளைய ஆதீன நியமனத்தில் என்னைத் தவிர யாரும் முடிவு எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் யாரும் தலையிடவும் கூடாது. நித்தி நியமனத்தில் ஆதீன மரபுகள் ஒருபோதும் மீறப்படவில்லை. அவருக்கு முறைப்படி தீட்சை கொடுத்துதான் இளைய ஆதீனமாக நிய மித்தேன். மற்ற ஆதீனங்கள் இது குறித்து தங்களிடம் ஆலோசிக்க வருமாறு திருவாவடுதுறை ஆதீனம் மூலமாக என்னை அழைத்தனர். நான் நித்தியோடுதான் வருவேன். தனியாக வரமாட்டேன் என்றேன். இதற்கு அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

ஆதீனங்களுடன் ஆலோசிக்கும் மரபை நித்திக்காக நான் கைவிட்டுவிட் டேன். பல ஆதீனங்களுக்கு பிரச்சினைகள் வந்த போதெல்லாம் நான் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறேன். அதே போல் நானும் பலரது ஆலோசனைகளைக் கேட்டவன்தான். நித்தி விவகாரத்தால் அவர்களது மன வருத்தத்தை இப்போது சம்பாதித்திருக்கிறேன்.

கேள்வி: ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் கொண்ட மதுரை ஆதீன மடத் துக்குள் முதல் முறையாக போலீஸ் புகுந்து ரெய்டு நடத்தியிருக்கிறதே. இது நித்தியால் தானே?

ஆதீனம்: (ஒரு கணம் இறுக்கமாக யோசித்துவிட்டு). ஆமாம். வருத்தமாகத்தான் இருக்கு. ஆதீனத்தில் புலித்தோல் இருக்கு. மான் தோல் இருக்கு. யானைத் தந்தம் இருக்குன்னு கோர்ட்டில் வழக்குப் போட்டுட்டாங்க. கோர்ட் உத்தரவால் மரபை மீறி, போலீஸ் ஆசிரமத்துக்குள் நுழைஞ்சிடிச்சி. இங்கே மானுமில்லை. மான் தோலுமில்லை. புலியும் இல்லை. புலித் தோலும் இல்லை. யானையும் இல்லை யானைத் தந்தமும் இல்லை. சோதனையில் எதையும் எடுக்கவில்லையே.

கேள்வி: மடத்தின் வீடியோ பதிவு ஒன்றில் ஒரு பெண் எதையோ கடத்துவதுபோல் இருக்கிறதே. அது மரகதலிங்கம் என்கிறார்களே?

ஆதீனம்: மடத்தில் மரக்கட்டை லிங்கம் தான் இருக்கிறது. மரகதலிங்கம் இருந்ததாகச் சொல்வது கற்பனை. வெளிநாட்டு பக்தர் தன் லக்கேஜோடு ஊருக்குப் போகிற காட்சிதான் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

கேள்வி: இவ்வளவு ஜாலி மூடில் இருக்கிறீர்களே… நித்தி எங்கே?

ஆதீனம்: (பலமாக சிரித்தபடி..) அவர் கொடைக்கானலில் ஏதோ கிளாஸ் எடுக்கிறார். எங்கே போகப்போறார்? திரும்பி வந்துடுவார். அவர் திரும்பி வந்தாலும் நான் இப்படித்தான் உற்சாகமா இருப்பேன்.

கேள்வி: சமீபத்தில் திருவண்ணாமலை குரு பௌர்ணமி விழாவில் பேசிய நித்தி, “என் மீதான பாலியல் புகார்களையெல்லாம் துணிச்சலாக சந்திப்பேன். இதற்கு எனக்கு ஆதீனப் பதவி கூடத் தேவையில்லை’ என்று கூறியிருக்கிறாரே?

ஆதீனம்: அப்படியா? அது அவர் முடிவு. அவர் மீதான செக்ஸ் புகார் வழக்குகளை எல்லாம் அவரே சந்தித்துக்கொள்வார். இதில் ஆதீனம் தலையிடாது. (அவரிடம் ஒருவகை இறுக்கம் நிலவுகிறது)

கேள்வி: நித்தி ஒரு மோசடிப் பேர்வழி. சர்வதேச ஃபிராடு என்றெல்லாம் அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியா நீதிமன்றம் அறிவித்திருக்கிறதே? 19-ந் தேதி அவருக்கான தண்டனையை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறதே?

ஆதீனம்: ஜூலை 19-ல் தீர்ப்பு வரட்டும். அன்று உங்களை மீண்டும் அழைப்பேன். தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால் அவரை நீக்குவது பற்றி முடிவு செய்து அறிவிப்பேன். ஏனென்றால் தண்டனைக்கு ஆளாகிறவர்கள் இளைய ஆதீனப் பதவியில் தொடர முடியாது. எனவே எந்த முடிவுக்கும் தயங்கமாட்டேன்.

கேள்வி: அடிப்படையில் நீங்கள் திமுககாரர். கலைஞர் அனுதாபி. ஆனால் ஆட்சி மாறும் போதெல்லாம் நீங்கள் அதிமுக விசுவாசியாக ஆகிவிடுகிறீர்களே?

ஆதீனம்: நான் தி.மு.க.காரன்தான். ஆட்சி மாறினால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நான் விசுவாசி. இதில் தப்பில்லை. அப்படித்தானே ஆதீனம் இருக்கமுடியும். எந்த ஆட்சியையும் ஆதீனம் பகைத்துக்கொள்ள முடியாது. எனவே கலைஞரும் எனக்கு நண்பர். ஜெ.வுக்கும் நான் நெருக்கமானவன்.

கேள்வி: இப்போது உங்கள் நண்பர் எம்.நடராஜனுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? அவர் கைதானபோது கூட நீங்கள் பார்க்கவில்லையே?

ஆதீனம்: அவரைப் பற்றி இப்போது உள்ள சூழலில் பேசாமல் இருப்பதே நல்லது. பேசினால் எனக்கு சிக்கல் வந்துவிடும். இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்கறீங்களேப்பா. ஆளை விடுங்கள்.

-என்வழி
2 thoughts on “நித்தியானந்தாவுக்கு தண்டனை கிடைச்சா ஆதீனம் பதவியிலிருந்து தூக்கிடுவேன்! – மதுரை ஆதீனத்தின் தடாலடி பேட்டி

 1. குமரன்

  ///அவரைப் பற்றி இப்போது உள்ள சூழலில் பேசாமல் இருப்பதே நல்லது. பேசினால் எனக்கு சிக்கல் வந்துவிடும். இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்கறீங்களேப்பா. ஆளை விடுங்கள்.///

  செம காமெடி. கவுண்டர் இந்த வசனத்தைச் சொல்வது போல கற்பனை செய்து பாருங்கள்.

 2. enkaruthu

  நித்தியானந்தா: நான் ஆதினம்.
  கௌண்டர்: நான் மட்டும் என்ன ஆன்னு தினமும் சோறு திங்கிரவன்தான்.அதனால் என்னையும் ஆதினம் என்று சொல்லாலாமா.

  நித்தி:தினமும் நாங்கள் காலையில் எழுந்தவுடன் ஆனந்த எல்லை நோக்கி போகிறவர்கள்.

  கௌண்டர்: ஆனந்தத்தை நோக்கி போறியா இல்லை ஆனந்தியை நோக்கி போறியா .காலையில் எழுந்தவுடன் பாத்ரூமை நோக்கிதாண்டா எலோரும் போவார்கள் இவன் மட்டும் ஆனந்தத்தை நோக்கி போவானாம் அடிச்சு விடுறான் பாரு.

  நித்தி:காமத்தால் ஆண்டவனை அடையலாம்.

  கௌண்டர் :டேய் பன்னாட அதற்க்கு உன் மனைவியைத்தான் use பண்ணி கடவுளை அடைந்திருக்கவேண்டும். அடுத்தவன் மனைவியை use பண்ணி அல்ல.

  நித்தி: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.

  கவுண்டர்:நீ ஒன்னும் சொல்ல வேணாம் .நீ யாரென்று எனக்கு தெரிந்துவிட்டது.இதற்க்கு மேல் நீ பேசின செருப்ப எடுத்து பிய்ய பிய்ய அடித்துவிடுவேன்.ஒழுங்கா ஓடி போயிரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *