BREAKING NEWS
Search

‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்!’

‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்!’

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை ஒரு பொருp8ட்டாகவே கருதவில்லை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன். அவரைக் கொல்லும் நோக்கம் புலிகளுக்கு இல்லை. ராஜீவ் கொலை முழுக்க முழுக்க அரசியல் ஆதாயங்களுக்காக நடந்தது, என்று புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அகமத்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 24 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் அவரைக் கொன்றவர்கள், கொல்ல சதி செய்தவர்கள் யார் யார் என்ற விவரம் முழுமையாக வெளியாகவில்லை.

விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும், இந்தக் கொலையின் பின்னணியில் சந்திராசாமி, சுப்பிரமணியசாமி, எம்எல் பொதேதார் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்களின் கைகள் உள்ளதாக பல ஆண்டுகளாக சந்தேகம் நிலவி வருகிறது.

இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என சேர்த்துள்ளனர். ஆனால் பிரபாகரனுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ ராஜீவ் காந்தியைக் கொல்லும் நோக்கம் கிடையாது. அதற்கு அவசியமும் இல்லை என இப்போது ஒரு புதிய கோணத்தைக் காட்டியுள்ளார் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அகமத்.

அஸாஸினேஷன் ஆப் ராஜீவ் காந்தி – ஆன் இன்சைட் ஜாப் என்ற புத்தகத்தில் அவர் ராஜீவ் கொலையை புதிய கோணத்தில் அணுகியுள்ளார். அதற்கு ஆதாரமாக பல்வேறு ஆவணங்கள், சாட்சிகளையும் அதில் முன்வைத்துள்ளார்.

‘ராஜீவ் காந்தி கொலை ஒரு ‘ஒப்பந்தக் கொலை’. அரசியல் ஆதாயத்துக்காக நடந்தது. இந்தக் கொலை செய்தவர்களுக்கு இது உண்மையான நோக்கம் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்படுவதன் மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள்தான் இந்தக் கொலையைத் தூண்டியவர்கள்.” -இதுதான் இந்தப் புத்தகத்தின் மையக் கரு.

பிரபாகரனுக்கு தெரியாமலேயே…

இதுகுறித்து அவர் ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்…

“இந்தக் கொலை பிரபாகரனுக்குத் தெரிந்தும் இருக்கலாம் அல்லது அவருக்குத் தெரியாமலேயேகூட நடந்திருக்கலாம். ஆனால் இந்தக் கொலையினால் விடுதலைப் புலிகள் பலனடையவில்லை. அவர்கள் ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக்கூட கருதவில்லை. இந்தக் கொலைக்கான பின்னணிகள் வேறு…

‘ராஜீவ் கொலையினால் பலனடைந்தவர்கள் அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசா, இந்தியாவில் பிரதமராகப் பதவிஏற்க வந்த நரசிம்ம ராவ் போன்றவர்களில் யாராவது ஒருவருக்கு பின்னணியில் இருப்பவர்கள்தான்.

”இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன்.

இவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன், ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ், பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.

‘பிரபாகரனுக்கு ராஜீவ் பற்றி பயம் இல்லை!

”1989-ம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கிடம் தோல்வியுற்ற ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலையில் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர்தான் அனுதாப அலை ஏற்பட்டது. அப்படியும் காங்கிரஸால் 240 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது. மற்ற கட்சிகளின் ஆதரவுடன் நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.

இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் காங்கிரசால் ஆட்சிக்கு நிச்சயமாக வந்திருக்க முடியாது. இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ கொலைக்கான காரணமாக வைத்தது, ‘ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனக்கும் தன்னுடைய எல்.டி.டி.இ இயக்கத்தையும் அழித்துவிடுவார் என்று பிரபாகரன் பயந்தார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்’ என்பதுதான்.

ஆனால் இது எவ்வளவு மடத்தனமானது என்பதை அறியலாம். ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வரக்கூடிய சூழ்நிலையும் இல்லை. அப்படியே வந்தாலும் படைகளை இலங்கைக்கு அவரால் அனுப்பவும் முடியாது. முன்பு அவர் அமைதிப்படையை (ஐ.பி.கே.எஃப்.) அனுப்பியது, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே உடனான உடன்பாட்டின் அடிப்படையில். பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரேமதாசா தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.
p9
ராஜீவ் காந்தி பதவியில் இருந்தவரை படைகளை திரும்பப் பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருந்தார். ஆனால், இலங்கையில் ஜனாதிபதியாக வந்த பிரேமதாசாவுக்கு இந்தியப் படைகள் இலங்கையில் இருப்பதில் மிகவும் அதிருப்தியடைந்து, திரும்ப அனுப்புவதில் மும்முரமாக இருந்தார். இதனால் ராஜீவ் பதவி விலகும்முன்பு 1989 செப்டம்பர் மாதம் பிரமேதாசாவுடன் மற்றொரு ஒப்பந்தம் போட்டு படைகளை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதே வருடம் டிசம்பர் மாதம் ராஜீவ் காந்தி அதிகாரத்தையும் இழந்தார்.

சிவராசன் ஏன் தப்பிக்கவில்லை?

”1990-ம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். அதில்  விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்தக் குழுவில் சிவராசன் ஈடுபட்டு இருப்பது பற்றி சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தப்பிச் சென்றனர். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டு இருந்தால் அடுத்த நிமிடமே இங்கிருந்து தப்பியிருப்பார்கள். ஏன் போகவில்லை?

1991 மே 21-ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது. கிட்டத்தட்ட ஜூன் 23-ம் தேதி வரை சிவராசன் சென்னையில்தான் இருந்தார். சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் மிகப்பெரிய தூரம் கிடையாது. புலிகள் சாலையில் பறப்பதைவிட படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால் அவர் அப்படி போகவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆட்டோவில்தான் சென்னைக்கு எல்லோரும் ஒன்றாகத் திரும்பிவந்துள்ளனர் இந்த அமெச்சூர் சதிக்காரர்கள். மறுநாள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நளினியை சிவராசன் அவரது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் விட்டுள்ளார்.

இடையில் சுபா, நளினி, பத்மா ஆகியோருடன் சிவராசன் திருப்பதிக்கும் சென்று வந்துள்ளார். இவர்கள் என்ன பக்தி புலிகளா? 24-ம் தேதி செய்தித்தாளில் மனித வெடிகுண்டு தாணுவின் புகைப்படம் வெளி வந்துவிடுகிறது. அது தடயவியல் வல்லுநர் சந்திரசேகர் லீக்-அவுட் செய்ததால் வந்தது. அதன் பிறகு சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் தானே சென்றிருக்க வேண்டும். எதற்காக டெல்லி செல்ல நினைத்தார்?

ராஜீவ் கொலையில் புலிகள் தொடர்பு சந்தேகத்துக்குரியதே!

ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு ஒருநாள் முன்பு சிவராசன், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த கனகசபாபதி என்பவரை டெல்லிக்கு அனுப்பி வாடகை வீடு பார்க்கச் சொல்லியிருந்தார். மற்றொரு குற்றவாளியான ஆதிரையையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார். இவர்கள் எதற்காக டெல்லி சென்றனர்? அப்போது இருந்த பிரதமரைக் கொல்லவா? அல்லது செங்கோட்டையைத் தகர்க்கவா?

இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காரணம் இந்த விவகாரத்தில் புலிகளின் தொடர்புகள் சந்தேகத்துக்குரியவை என்பதை விளக்கத்தான்!

-நன்றி: ஜூனியர் விகடன்
One thought on “‘ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்!’

  1. chozhan

    இவ்வளவு நாள் எங்கு இருந்திர்கள், சு.சாமியை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் ராஜீவ் கொலையின் உண்மை தெரியும். சட்டத்தை ஏமாற்றி ஒரு கிரிமினல் சுதந்திரமாக உலவ முடியும் என்பது இந்தியாவில் மட்டும் நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *