BREAKING NEWS
Search

மிரட்டும் தங்கம் விலை – கிராம் ரூ 3000ஐத் தாண்டியது!

மிரட்டும் தங்கம் விலை – கிராம் ரூ 3000ஐத் தாண்டியது!


சென்னை: தங்கத்தின் விலை தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் கிராம் ரூ 3022-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்தியாவிலும் தங்கத்தில் விலை ஒரு நிலையில் இல்லாமல் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

பெண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டமாகி வருகிறது.

தற்போது பண்டிகை மற்றும் திருமண சீஸன் என்பதால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 904 ஆக இருந்தது. எனவே தங்கம் விலை நேற்று ரூ. 24 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூ. 256 குறைந்ததால், ரூ. 23,648 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இன்று தங்கம் விலை  அதிரடியாக உயர்ந்தது.

நேற்று ஒரு கிராம் ரூ. 2956-க்கு விற்ற தங்கம் கிராமுக்கு ரூ. 66 உயர்ந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் இன்று ரூ. 3022 க்கு விற்பனையாகிறது.

சவரனுக்கு ரூ. 528 அதிகரித்துள்ளதால் சென்னை நகைக்கடைகளில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 24,176 ஆக விற்பனை ஆனது.

இந்த சீசனில் இன்றுதான் தங்கம் விலை ரூ. 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயரக்கூடும் என்று கூறப்படுகிறது. தங்கம் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பத்து மக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. .

தங்கம் விலையைப் போலவே வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்தது. இன்று பார் சில்வர் ரூ. 2735 உயர்ந்து ரூ. 64,505 ஆக இருந்தது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 69 ஆக விற்பனையாகிறது.

-என்வழி செய்திகள்
2 thoughts on “மிரட்டும் தங்கம் விலை – கிராம் ரூ 3000ஐத் தாண்டியது!

 1. குமரன்

  நேற்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சக்கரவர்த்தி கூறியது பத்திரிகைகளில் வந்தது. இதை அவர் சில மாதங்களாகவே கூறிவருகிறார்.
  பார்க்க பிசினஸ் லைன் செய்தி:
  http://www.thehindubusinessline.com/markets/gold/article3666589.எசே

  அவர் சொல்வதுபோல தங்கத்தை கோவில்களுக்கு நன்கொடையாகவும், வரதட்சினையாகவும்/ சீதனமாகவும் கொடுக்கும் வழக்கத்தை இந்தியர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படியே கொடுத்தாலும் 22 காரட் தங்கத்திற்கு பதிலாக 2 காரட் தங்கத்தை கோவில் காணிக்கையாகச் செலுத்தலாம்.

  வரதட்சினை அல்லது சீதனமாக கொடுப்பதையும் ஒருவர் எவ்வளவு சாதாரணமாக தங்கம் அணிய முடியுமோ அந்த அளவுக்கும் அதற்கு மேல் சிறிதளவும் மட்டுமே கொடுக்கலாம். எனக்குத் தெரிந்து சில சாதியினரிடம் தங்கம் எத்தனை கிலோ திருமணத்தின்போது சீதனமாகத் தந்தார்கள் என்று கேட்கும் அளவுக்கு (உண்மையாகவே) இருக்கிறது. குறிப்பாக காரைக்குடி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், கரூர் பகுதிகளில் இந்த நிலை நிலவுகிறது. இதை நம் மக்கள் உணர்ந்து திருந்துதல் நாட்டுக்கு நல்லது. ஆனால் மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

  //India’s imports mainly consist of oil and gold, both of which are used for consumption or unproductive purposes, he added. //

  மேற்கண்ட செய்தியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். இந்த இரு வகைகளில்தான் நாட்டில் விலை கண்ட படி ஏறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த இரு வகைகளிலும் நாம் கடந்த சுமார் ஆறு ஆண்டுகளில் வரைமுறை இல்லாமல் இறக்குமதி செய்கிறோம், அதனாலேயே நமது ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டே வருகிறது.

  இரு தினகளுக்கு முன்னர் வால் ஸ்ட்ரீட் டெய்லி என்ற பத்திரிக்கை இன்னும் வருகின்ற ஐந்தாண்டுகளில் இந்திய ரூபாய், கனடிய டாலர், சீன யுவான் ஆகிய நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு இணையாகப் பார்க்கையில் சுமார் 25 சதவிகிதம் உயரும் என்று கருத்துத் தெரிவித்துக் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.

  ஆனால் இது நிறைவேற வேண்டுமானால், நாம் நமது எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் இறக்குமதியைக் குறைக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *