BREAKING NEWS
Search

இவர்கள் தெரிந்தே தவறு செய்பவர்கள்!

இவர்கள் தெரிந்தே தவறு செய்பவர்கள்!

ஒரே பொய்யை திரும்பத் திரும்ப வேறு வேறு விதமாகக் கூறி ஒரு மனிதரை அவமதிப்பதைப் போன்ற பாவம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது!

3 படம் வெளியாகி, தியேட்டர்களைவிட்டுப் போயும்விட்டது. ஆனால் அந்தப் படத்தின் நஷ்டத்தை வைத்து லாபம் தேட முயற்சிக்கும் சிலர் மட்டும் ஓய்வதாகத் தெரியவில்லை. இந்தப் படம் வெளியான மூன்றாவது நாளே, நஷ்டம் நஷ்டம் என்று புலம்ப ஆரம்பித்தவர், படத்தை தெலுங்கில் விநியோகித்த நட்டி குமார்.

ரஜினிகாந்த் தலையிட்டு, இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இது ரஜினி படமா… ரஜினி நடித்தாரா… குறைந்தபட்சம் இந்தப் படத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது அவர் பேசினாரா என்பதையெல்லாம் கிஞ்சித்தும் யோசிக்காத மீடியா, ‘ஆஹா கிடைச்சதுடா ரஜினி மேட்டர்… இன்னிக்கு சேல்ஸ் / பேஜ் வியூ அமோகம்,” என்ற ஒரே நினைப்போடு பரபரப்பைக் கிளப்பின.

‘3 பட நட்டத்தை ரஜினிகாந்த் ஈடுகட்டப் போகிறார்… மகள் – மருமகனுக்கு ரஜினி பெய்ல் அவுட் தருகிறார்’ என்றெல்லாம் ஆங்கில / தமிழ் மீடியா தொடர்ந்து எழுத, உடனடியாக, ‘தனக்கும் 3 படத்துக்கும் எந்த வகையிலும் சந்பந்தமில்லை. இதுதொடர்பாக தன்னை இணைத்து செய்தி வெளியிட வேண்டாம். விநியோகஸ்தர்கள் தன்னை

த் தொடர்பு கொள்ள வேண்டாம்,” அறிக்கை வெளியிட்டிருந்தார் ரஜினி.

அதன் பிறகு சில பத்திரிகைகள் எழுதிய கதைகள் அபார கற்பனைகளுக்கு அப்பாற்ப்பட்டவை.

‘ரஜினி கண்ணீர் விட்டார்,’ என்ற தலைப்பில் வார, வாரமிருமுறை பத்திரிகைகள் அடுத்து போஸ்டர் அடிக்க ஆரம்பித்தன. என்னவென்று பார்த்தால், பாபா படத்தின் போது, நியாயத்துக்குப் புறம்பாக தன்னிடம் பணம் பெற்றவர்களைப் பற்றி ஒரு விநியோகஸ்தரிடம் ரஜினி வருத்தத்துடன் குறிப்பிட்டதை, ‘கண்ணீர் விட்டார்’ என்று கதை பண்ணியிருந்தார்கள் (பத்திரிகைகள் வெளியிட்ட அத்தனை செய்திகளும் தவறு. ரஜினி கண்ணீர்விட்டதாக நான் கூறவே இல்லை என நம்மிடம் சத்தியம் அடித்தார் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம்).

ஒரு மனிதன் வருதப்பட்டுப் பேசக் கூடாதா… தனக்கு நேர்ந்த அநியாயத்தைச் சொல்லும்போது மகிழ்ச்சிப் பொங்கவா கூறுவார்… என்னங்கடா நியாயம் இதெல்லாம்!!

சரி… 3 விவகாரத்துக்கு வருவோம்…

ரஜினி அறிக்கை வெளியானதும் சுதாரித்துக் கொண்ட நட்டி குமார், “நான் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. ரஜினி மகள் படம் என்பதால் வாங்கி வெளியிட்டோம். அதனால் அவர் தலையிட்டால் நன்றாக இருக்கும் என்றுதான் சொன்னேன்,” என்று சமாளித்தார்.

ஆனால் அத்துடன் அவர் நிற்கவில்லை. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரிராஜாதான் காரணம் என ஹைதராபாத் போலீசில் புகார் தந்தார்.

3 பட விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத ரஜினி பெயர் தேவையின்றி மீடியாவில் அடிபட்ட போது கமுக்கமாகவே இருந்த படத்தின் தயாரிப்பாளரும் தனுஷின் அப்பாவுமான கஸ்தூரி ராஜா, நிலைமை விபரீதமாவதை உணர்ந்து நட்டி குமாருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தார் (நியாயமாக இதை அவர் முன்னதாகவே செய்திருக்க வேண்டும்!).

இந்த நிலையில் மீண்டும் ரஜினி பெயரை இழுக்க ஆரம்பித்துள்ளார் நட்டி குமார்.

அவர் கூறுகையில், “ரூ 6 கோடி கூட தேறாத 3 படத்தை ரூ 80 கோடி வரை விற்றுள்ளனர். இதில் தெலுங்கு உரிமை ரூ 5 கோடி. தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்ட 3 படத் தயாரிப்பாளர்கள், ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர். கொலவெறி பாட்டை செலவே இல்லாமல் மலிவாக எடுத்துவிட்டனர்.

இந்தப் படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்த வருவதாக வாக்குறுதியளித்த தனுஷும் ஐஸ்வர்யாவும் வராமல் ஏமாற்றிவிட்டனர். எனவேதான் இத்தனை பெரிய நஷ்டம். மகள் ஐஸ்வர்யாவுக்கு வங்கியில் இருந்த கடனை ரஜினிகாந்த் அடைத்ததாக நான் கேள்விப்பட்டேன். எனவே 3 பட நஷ்ட விவகாரத்தில் ரஜினி தலையிட்டு சரிசெய்ய வேண்டும்,” என்றார்.

ஏன் சினிமா உலகில் மட்டும் இந்த அளவு மூடத்தனமாக இருக்கிறார்கள்?

3 என்ற படத்தின் எந்த நிலையிலும் சம்பந்தப்படாத ரஜினி என்பவரை தொடர்ந்து சிக்கலுக்குள்ளாக்க முயற்சிப்பது எந்த வகை நியாயம்?

இதே 3 படம் நன்றாக ஓடி லாபம் சம்பாதித்திருந்தால், என்ன செய்திருப்பார்கள் நட்டி குமார்கள்? அதிகபட்ச லாபத்தை, ரஜினி மீதுள்ள மரியாதை காரணமாக அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கா அனுப்பி வைத்திருப்பார்கள்?

அல்லது, 3 படத்தில் கொலைவெறி பாடலை சிம்பிளாக எடுத்தே சிறப்பாக ஓட வைத்துவிட்டார்கள். எனவே அவர்களுக்கு வசூலில் ஒரு பகுதியைத் தருகிறேன், என்று கொடுத்திருப்பாரா?

இவ்வளவு விவரமான ஆசாமி, படத்தை வாங்கும் முன்பே ஒரு முறை பார்த்து, நிறைகுறைகளை அலசி, டிஜிட்டல் படத்துக்கு எதற்காக இவ்வளவு பணம்… நான் தரமாட்டேன்… எனக்குப் படம் வேண்டாம் என ஒதுங்கியிருக்கலாமே…

உண்மையில் இந்த நட்டிகுமாருக்கு புகார் கூறும் அருகதையே இல்லை. 3 பட தெலுங்கு உரிமைக்கு இவர் ரூ 2.5 கோடிதான் கொடுத்துள்ளார். மீதி 2.5 கோடிக்கு இவர் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டதாம். தெலுங்கு டிவி உரிமையையும் தன்னிச்சையாக விற்று காசு பார்த்துவிட்டார். எனவே இவர் நஷ்ட ஈடு கேட்பதே தவறு!

ஒரு படம் நன்றாக இருக்கிறதா.. ஓடுமா என்றுகூட கணிக்கத் துப்பில்லாமல் படத்தை வாங்கி வியாபாரம் செய்வதும், அதில் லாபம் வந்தால் தலை கால் புரியாமல் ஆடுவதும், நஷ்டம் வந்தால் உடனே பணத்தைத் திருப்பிக் கொடு என குதிப்பதும் தென்னிந்திய சினிமாவின் சாபக்கேடாகிவிட்டது. அதிலும் குறிப்பாக ரஜினி படம் என்றாலே இப்படி ஒரு டெக்னிக்கை இவர்களை கையாள ஆரம்பித்துள்ளனர்.

சினிமாவை அரசு ஒரு தொழிலாக அறிவிக்க வேண்டும், வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும் என்று கூவும் சினிமாக்காரர்கள், தொழில்முறையிலா நடந்து கொள்கிறார்கள்?

வங்கியில் கடன் வாங்கி படத்தை எடுத்துவிட்டு, அந்தப் படம் படுத்ததும் கடன் கொடுக்க மாட்டேன் என்று கூற முடியுமா? அல்லது லாபம் வந்துவிட்டது என்பதற்காக இரண்டு மடங்கு வட்டியைத் தருகிறார்களா?

நட்டி குமார் போன்ற மோசடிப் பேர்வழிகள் ரஜினி பெயரை தொடர்ந்து உபயோகிப்பது, அறியாமையில் அல்ல… வேண்டுமென்றேதான். தொடர்ந்து இப்படியான செய்திகளை பரப்புவதன் மூலம், அந்த நல்ல மனிதரை இதில் தலையிட வைக்க வேண்டும் என்பது இவர்களின் சூழ்ச்சி.

தெரிந்தே தவறு செய்யும் இதுபோன்ற நபர்களை திரையுலக அமைப்புகள் கண்டித்து ஒதுக்கி வைக்க வேண்டும். வெட்டிப் பஞ்சாயத்து, சம்பள பாக்கியை வசூலிப்பது போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், இதுபோன்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் சினிமா வர்த்தகத்தை முறைப்படுத்த முடியும்!

-என்வழி ஸ்பெஷல்

(குறிப்பு: ஜென் தத்துவங்களை நன்கு படித்து, அதன்படி முடிந்தவரை வாழ முயற்சிப்பவர் ரஜினி. அவமரியாதை எனும் பரிசை ஏற்காதவரை, அது அளித்தவருக்கே சொந்தம் என்ற நமது முந்தைய கதை, இந்தக் கட்டுரைக்கு எத்தனை பொருத்தமாக உள்ளது பாருங்கள்!)
2 thoughts on “இவர்கள் தெரிந்தே தவறு செய்பவர்கள்!

  1. raja

    //ரூ 6 கோடி கூட தேறாத 3 படத்தை ரூ 80 கோடி வரை விற்றுள்ளனர்.

    இது தெரிந்திருந்தும் ஏன் பாஸ் படத்தை அவ்வளவு விலை கொடுத்து வாங்குனீங்க …

  2. HOTLINKSIN.COM

    பத்திரிகைகளிடம் தர்மம் இல்லாத காரணத்தால்தான் இது போன்ற செய்திகள் வெளிவருகின்றன…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *