BREAKING NEWS
Search

ஆயிரம் பதில்களை விட சிறந்தது எனது மவுனம்… சிஏஜி மக்களுக்கு தவறான தகவல் தருகிறது – மன்மோகன் சிங்

ஆயிரம் பதில்களை விட சிறந்தது எனது மவுனம்… சிஏஜி மக்களுக்கு தவறான தகவல் தருகிறது – மன்மோகன் சிங்

 
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான தணிக்கை குழு அறிக்கை முற்றிலும் தவறானது. ஆதாரம் இல்லாதது என்று பிரதமர் மன்மோகன்சிங் பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்பட்டது.

சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் ஏல முறையை கடைபிடிக்காததால், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த காலகட்டத்தில், நிலக்கரி துறையை பிரதமர் மன்மோகன்சிங் கவனித்து வந்ததால், இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான பாஜக பாராளுமன்றத்தை முடக்கி வருகிறது.

இதனால், குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக, கடும் அமளிக்கிடையே, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

முதலில், அறிக்கையை வாசிக்க தொடங்கிய பிரதமர், அமளி காரணமாக, ‘அறிக்கையை தாக்கல் செய்வதாக’ அறிவித்து விட்டு அமர்ந்தார்.

அந்த அறிக்கையில், “கணக்கு தணிக்கை அறிக்கை பற்றி பொதுவாக பொது கணக்கு குழுவில்தான் விரிவாக விவாதிக்கப்படுவது வழக்கம். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகம் பதில் அளிக்கும். இந்த வழக்கமான நடைமுறையில் இருந்து நான் விலகி இருக்கிறேன்.

நானே பொறுப்பு

காரணம், குற்றச்சாட்டின் தன்மை மற்றும் தணிக்கை குழு கூறிய காலகட்டத்தின் ஒரு பகுதியில் நான்தான் நிலக்கரி துறையை கவனித்து வந்தேன். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்.

சுரங்க ஒதுக்கீட்டால் தனியார் நிறுவனங்கள் பலன் அடைந்ததாக தணிக்கை குழு கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் கூட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களில் தணிக்கை குழுவின் மதிப்பீடு நிறைய கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

சராசரி உற்பத்தி செலவு மற்றும் பொதுத்துறை நிறுவனமான ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிர்ணயித்த விற்பனை விலை ஆகியவற்றின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் அடைந்ததாக கூறப்படும் லாபத்தொகை மதிப்பிடப்பட்டுள்ளது. இது திசைதிருப்பும் வேலை. இந்த மதிப்பீடு தவறானது. அடிப்படை ஆதாரமற்றது.

தனியாருக்கு ஒதுக்கப்பட்ட 57 சுரங்கங்களும் ஆட்கள் எளிதில் செல்ல முடியாத கடினமான உட்புறப்பகுதிகளில் அமைந்துள்ளன. ஆனால், கோல் இந்தியா லிமிடெட் வெட்டி எடுக்கும் சுரங்கங்கள், நல்ல உள்கட்டமைப்பு உள்ள இடங்களில் அமைந்திருக்கும்.

வரி விதிப்போம்

எனவே, தனியாருக்கு ஒதுக்கப்பட்ட சுரங்கங்களை, கோல் இந்தியா லிமிடெட் நிர்ணயித்த விலையுடன் முடிச்சு போட்டு கணக்கு பார்ப்பது சரியல்ல. அதுமட்டுமின்றி, உற்பத்தி செலவானது, ஒவ்வொரு நிலக்கரி சுரங்கத்துக்கும் வேறுபடும்.

மேலும், நிலக்கரி சுரங்க உரிமை பெற்ற தனியார் நிறுவனங்கள் சம்பாதிக்கும் லாபத்தின் ஒரு பகுதியை வரி விதிப்பு மூலமாக மத்திய அரசு பெற்றுக்கொள்ளும். புதிய சுரங்க மசோதாவின்படி, சுரங்க நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 26 சதவீதத்தை சுரங்கம் அமைந்துள்ள பகுதியின் மேம்பாட்டுக்கு ஒதுக்கியாக வேண்டும்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நிலக்கரி சுரங்கங்களை நியமன முறையில் ஒதுக்கீடு செய்யும் முறை, கடந்த 1993-ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கிறது. அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள், தணிக்கை குழு விமர்சித்த இதே முறைப்படிதான் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தன. வருவாய் திரட்டும் வழிமுறையாக சுரங்க ஒதுக்கீட்டை அந்த அரசுகள் கருதவில்லை.

இந்நிலையில், தேவையான சட்ட திருத்தம் மூலம் போட்டி ஏல முறையை அமல்படுத்த எனது தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டது. அப்போது, நிலக்கரி வளம் மிகுந்த மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களை எதிர்க்கட்சிகளே ஆண்டு வந்தன.

அந்த அரசுகள், போட்டி ஏல முறைக்கு மாறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஏல முறைக்கு மாறினால், நிலக்கரி விலை உயர்வதுடன், தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும், குத்தகையை தேர்வு செய்யும் தங்களது உரிமை நீர்த்துப்போய்விடும் என்றும் அந்த அரசுகள் கருதின. எனவேதான், எதிர்ப்பு தெரிவித்தன.

பா.ஜனதா முதல்வர்கள் கடிதம்

குறிப்பாக, கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே (பா.ஜனதா), ஏல முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எனக்கு கடிதம் எழுதினார். ஏல முறையானது, சர்க்காரியா கமிஷன் சிபாரிசுகளுக்கு எதிரானது என்று வலியுறுத்தினார் அவர்.

அதுபோல், சத்தீஷ்கார் மாநில முதல்வர் ரமன்சிங்கும் (பா.ஜனதா), நியமன முறையே நீடிக்க வேண்டும் என்று எனக்கு கடிதம் எழுதினார். அந்த முறையை மாற்றுவதாக இருந்தால், மத்திய-மாநில அரசுகள் இடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தியே மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநில அரசுகளும் ஏல முறைக்கு மாற எதிர்ப்பு தெரிவித்து முறைப்படி கடிதம் எழுதின. மற்றொரு புறம், ஏல முறையை அமல்படுத்தினால், மின்சார உற்பத்தி செலவு அதிகரித்து விடும் என்று மத்திய மின்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்தது.

கூட்டு முடிவு

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய சட்ட அமைச்சகம் செய்த சிபாரிசுப்படி, நிர்வாக உத்தரவு மூலமாக, ஏல முறையை அமல்படுத்தி இருக்கலாமே என்று தணிக்கை குழு கூறியுள்ளது. சட்ட அமைச்சகத்தின் கருத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் படித்து விட்டு தணிக்கை குழு இந்த கருத்தை தெரிவித்து இருப்பதாக கருதுகிறேன்.

கருத்தொற்றுமை ஏற்படுத்துவதற்காக, நிலக்கரி வளம் மிகுந்த மாநில அரசுகளுடன் கடந்த 2005-ம் ஆண்டு ஜுலை 25-ந் தேதி பிரதமர் அலுவலகம் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில், ஏல முறைக்கு அந்த அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், ஏல முறைக்கு மாறுவதற்கான சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என்றும், அதுவரை நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை நிறுத்தி வைக்க இயலாது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், ஏல முறை அமலுக்கு வரும் வரையில், நடைமுறையில் உள்ள முறைப்படியே நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதாவது, இது மத்திய-மாநில அரசுகளின் கூட்டு முடிவு.

கருத்து வேறுபாடுகள் கொண்ட மாநில அரசுகளுடன் கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டிய சிக்கலான விஷயம் இது. ஆனால், மத்திய அரசு வேகமாக செயல்படவில்லை என்று தணிக்கை குழு விமர்சிக்கிறது. நமது பாராளுமன்ற ஜனநாயகத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கலை கணக்கிட்டால், சொல்வது எளிது, செய்வது கடினம்.

ரத்து நடவடிக்கை

சுரங்க உரிமம் பெற்றும், இன்னும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை தொடங்காத நிறுவனங்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

சட்டரீதியான ஒப்புதல் பெறுவது தொடர்பான நடைமுறைகள் காரணமாக, இந்த நிறுவனங்கள் இன்னும் உற்பத்தியை தொடங்காமல் இருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.

சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, சி.பி.ஐ.யும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

எனது மவுனம்…

பின்னர் பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் அவர் பேசுகையில், “தூண்டி விடப்படும் பிரச்சினைகளில் மவுனத்தை கடைபிடிப்பதே எனது கொள்கை.  அதற்காக கேள்விகளை நான் புறம்தள்ளுவதாக நினைக்க வேண்டாம்.

ஓராயிரம் பதில்களை விட எனது மவுனமே சிறந்தது. அது எண்ணற்ற கேள்விகளின் மதிப்பை காப்பாற்றுகிறது. (‘Hazaron jawabo se achchi hai khamoshi meri, na jaane kitne sawalo ki aabru rakhe – An Urdu quote’. Meaning: My silence is better than a thousand answers, it keeps intact the honour of innumerable questions)

ஆனால், இந்த தருணத்தில், நான் பாராளுமன்றத்திலும், மக்களிடமும் பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

என் பக்கம் வலிமை

ஆனால், பாராளுமன்றம் செயல்பட அனுமதிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. சபை நடவடிக்கைகளை சீர்குலைக்க பா.ஜனதா விரும்புகிறது.

இந்த பிரச்சினையில் எங்கள் பக்கம் வலிமையும், நம்பகத்தன்மையும் இருக்கிறது என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திறந்த விவாதத்துக்கு பாஜ தயாரா?

நான் மீண்டும் பா.ஜனதாவுக்கு அழைப்பு விடுக்கிறேன். பாராளுமன்றத்துக்கு வந்து விவாதம் நடத்த தயாரா? என்று கேட்கிறேன். அதன் மூலம் எந்த பக்கம் உண்மை இருக்கிறது என்று நாடு தெரிந்து கொள்ளட்டும்.

தணிக்கை குழுவின் கருத்துகள் தவறானவை. மதிப்பீட்டு முறையே தவறு. பொது கணக்கு குழு விசாரணையின்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்,” என்றார்.

-என்வழி செய்திகள்
6 thoughts on “ஆயிரம் பதில்களை விட சிறந்தது எனது மவுனம்… சிஏஜி மக்களுக்கு தவறான தகவல் தருகிறது – மன்மோகன் சிங்

 1. palPalani

  /*
  நான் மீண்டும் பா.ஜனதாவுக்கு அழைப்பு விடுக்கிறேன். பாராளுமன்றத்துக்கு வந்து விவாதம் நடத்த தயாரா? என்று கேட்கிறேன்.
  */

  சிறந்த பொருளாதார மேதைன்னு சொன்னாங்க… அரசியல்வாதி மாதிரி பேசுறாரு?

  /*
  அதன் மூலம் எந்த பக்கம் உண்மை இருக்கிறது என்று நாடு தெரிந்து கொள்ளட்டும்.
  */
  என்ன உண்மை தெரியட்டும்னு சொல்றாரு? யாரு முதலாவது? யாரு இரண்டாவதுன்னா?

 2. குமரன்

  ///Hazaron jawabo se achchi hai khamoshi meri, na jaane kitne sawalo ki aabru rakhe – An Urdu quote’. Meaning: My silence is better than a thousand answers, it keeps intact the honour of innumerable questions///

  இந்த விவாதத்தில் வெளிவந்த முத்து இது. உயரிய/ முதல் நிலையில் இருப்பவர்கள் சில விவகாரங்களில் மவுனத்தைக் கடைப்பிடித்தால் அதற்கு ஒரு காரணம் நிச்சயம் இருக்கும். மவுனத்தாலேயே ஐந்து வருஷம் மைனாரிடியை வைத்து ஆட்சி செய்தவர் நரசிம்ம ராவ், அதுவும் மிகக் கடினமான பொருளாதார/ அரசியல் கால கட்டத்தில் என்பது இங்கு நினைவு கொள்ளத் தக்கது.

 3. arokiaraj

  Congress is totaly waste.They are always tellig by the name of gandi,and steeling money from india.By the year of 1984 rajeiv account at Swiss account 92,000 Cores?
  As per the Wikileaks
  All of the Congress persons in india are Criminals

 4. shanmugasundharam

  இவர் கிட்ட யாரு 1000 பதில் கேட்டாங்க.
  ஜஸ்ட் வாய தொறந்து சிரிச்சாலே போதும்.
  கடவுள் கண் தொறந்த அதிசியம் போல , மன்மோகன் வாய் தொறந்தார் நு உலகம் பேசும்…
  எனக்கு தெரிஞ்சு எந்த கடவுளும் கண் தொறக்கல.

 5. தேவராஜன்

  மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்,
  எப்போது மவுனத்தைக் கலைக்க வேண்டும் என்ற ஒரு விஷயமும் இருக்கிறது. லட்சம் பேர் கொல்லப்படும்போது மவுனமாக இருப்பது மனிதாபிமானமா? நல்ல ஆட்சியாளரின் அழகா?

  மவுனம் காப்பதின் சிறப்பு சூழ்நிலையைப் பொறுத்து. நிலக்கரி முறைகேட்டுக்கு சீறும் உங்கள் குரல், கொஞ்சம் எங்கள் இன மக்கள் வெந்து கரியாகிக் கொண்டிருந்தபோது சீறி இருக்கலாமே!

 6. NAREN

  never ever seen joker …:) பேச வேண்டிய நேரத்துல பேசறது கிடையாது … பதவிய காப்பாதிக்க மட்டும் இவர் பேசுவார் … காரிய கோமாளி ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *