BREAKING NEWS
Search

‘…அதுவரை, திருட்டு விசிடியில தாராளமா படம் பாருங்க, தப்பில்ல!’

‘..அதுவரை, திருட்டு விசிடியில தாராளமா படம் பாருங்க, தப்பில்ல!’

– முத்துராமலிங்கன்

 

BL13_BP_3LINGA_2242009f

ருடம் 2025. நாள்.பிப்ரவரி 20.

‘லிங்கா’ நஷ்ட ஈடு வட்டியுடன் எங்களுக்கு வந்து சேரும் வரை ஒரு வேளைவிட்டு ஒரு வேளை பிச்சை எடுத்து சாப்பிடுவோம்’.

’லிங்காவுக்கு நஷ்ட ஈடு கேட்டு லதா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்க்கு தனது ‘சொந்த’ லெட்டர் பேடில் அறிக்கை.

’லிங்கா’ தொடர்பாக நடக்கிற குழப்பங்களைப் பார்த்தால் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் இப்படி செய்திகள் வந்தாலும் ஆச்சரியமில்லை.

நடிகர்கள், தயாரிப்பாளர்களிடம் விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்கும் போதெல்லாம் ஒரு அநீதியை அநியாயமாக, அல்லது வசதியாக மறைத்து விட்டு தெருவில் இறங்கி பிச்சைக்காரர்கள் வேடம் கூட அணிய தயாராக இருந்து சண்டை போடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் திருட்டு விசிடி ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுகையிலும் தங்களுக்கென்று வருகிறபோது கமிஷனர் ஆபிஸ் வரை சென்று புகார் கொடுத்து போஸ் கொடுக்கையிலும், சினிமாவுக்கு எதிராக நீண்டநெடுங்காலமாக நடந்து வரும் ஒரு பெரும் குற்றத்தை, வழிப்பறியை விட கீழத்தனமாக நடக்கும் ஒரு மோசடியை வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

அது தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தும் முதல் தரமான சினிமா அழிப்பு வேலைகள்!!

என்னைக் கேட்டால் இவர்களே சினிமாவின் முதல் எதிரி என்பேன். அரசு விதித்திருக்கும் டிக்கெட் தொகை என்னவென்று எந்த தியேட்டர் உரிமையாளருக்காவது தெரியுமா என்றால் சத்தியமாக தெரியாது. அது அவர்களுக்குத் தேவையுமில்லை. ஏனெனில் அதை அவர்கள் அமல்படுத்தப் போவதில்லை.

டிக்கெட் ரேட்டில் தொடங்கி, கேண்டீன் ஸ்நாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் விலைகள் பார்க்கிங் என்று இவர்கள் அடிக்கிற கொள்ளை, ரோட்டில் செல்லும் பெண்களின் கழுத்தில் சங்கிலி அறுக்கிறார்களே அந்தக் கொள்ளைக்கு எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாதது.

அரசு விதிப்படி, சகல வசதிகளும் கொண்ட மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களே டிக்கட் விலையை அதிகபட்சமாக 120 ஆக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் ஒரு புதுப்பட ரிலீஸ் அன்று முன்னணி நடிகர்களின் பட 10 ரூபாய், 35 ரூபாய், 50 ரூபாய் டிக்கட்டுகளை ‘சி’ செண்டர் தியேட்டர்களில் கூட 200 ரூபாய்க்கு கம்மியாக வாங்க முடியாது (லிங்காவுக்கு முதல் வாரம் முழுக்க சி சென்டர் அரங்குகளில் கூட சராசரி டிக்கெட் விலை ரூ 250!). அப்படி 250 ரூபாய் கொடுத்து உள்ளே போனால் ஒழுங்கான டாய்லெட் வசதி இருக்காது. பார்க்கிங் சார்ஜ் 30 ரூபாயாக இருக்கும். உங்கள் வாகனம் காணாமல் போனால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல’ என்ற போர்டு கண்டிப்பாக இருக்கும். கேண்டீன்களில் விலையோ வாங்கிச் சாப்பிடும் வயிறு பற்றியெரியும் பெருங் கொள்ளையாக இருக்கும்.

தற்போது ‘நான்ஸ்டாப் நான்சென்சாக’ பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கும் ‘லிங்கா’வை எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை தியேட்டர்களில் அதுவும் ரசிகர் மன்றங்களுக்கே டிக்கட் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது!

40 லட்சம் பேர்தான் படம் பார்த்தார்கள் என்கிறவர்கள், ஒரே ஒரு டிக்கட் கூட ஆயிரம் ரூபாய்க்கு விற்கவில்லை என்று போலிக் கண்ணீர் வடிப்பது ஏன்?. விநியோகஸ்தருக்கும் போகாத, தியேட்டர் உரிமையாளருக்கும் போகாத அந்த எக்ஸ்ட்ரா தொகையை கவுண்டரில் டிக்கட் விற்றவர் எடுத்துக்கொண்டு போய் விட்டாரா?

‘சாஃப்ட்வேர் துறையினர் காலாட்டிக் கொண்டே சினிமா விமரிசனம் எழுதுகிறார்கள்’ என்று நான் கடந்த வாரம் எழுதியிருந்தபோது, ‘முதல்ல தியேட்டர்ல நடக்கிற அநியாயத்தை எழுதிட்டு அப்புறம் எங்ககிட்ட வாங்க பாஸ்’ என்று பலர் அறச் சீற்றம் கொண்டு பொங்கியிருந்தார்கள். உண்மையிலேயே நியாயமான சீற்றம்தான் அது.
இன்று ஒரு மல்டி ப்ளக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க மூன்று பேர் சென்றாலே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு இல்லாமல் செல்லமுடியாது. தியேட்டர்களுக்குள் நாம் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு எவ்வளவோ காலமாகி விட்டது. கேண்டீனில் தண்ணீர் பாட்டிலைக் கூட 40 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்துவிட்டார்கள் எனும்போது மற்ற பொருட்களின் விலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.

பார்க்கிங் கொடுமைதான் உச்ச பட்சம். மணிக்கு 20 ரூபாய் (சில மால்களில் இது 60 ரூபாய்) வார இறுதி நாட்கள் என்றால் இருமடங்கு. ஸோ நீங்கள் ‘என்னை அறிந்தால்’ மாதிரி ஒரு மூணு மணி நேரப்படத்தை ஒரு மல்டி ப்ளக்ஸில் சனி, ஞாயிறில் பார்க்கச் சென்றீர்களானால் ஒரு டூ வீலருக்கு பார்க்கிங் கட்டணத்துக்கு மட்டும் 150 ரூபாய் வரை மொய் அழ வேண்டும். இந்தக் காசில் 30 ரூபாய் வீதம் ஐந்து 5.1 டிவிடி வாங்கிவிட முடியும் எனும்போது, ஒரு நடுத்தர வருமானமுள்ள, மானமுள்ள மனிதன் என்ன முடிவை எடுப்பான்?

மாநகராட்சிகளில் துவங்கி ஊராட்சிகள் வரை எங்காவது அரசு நியமித்த கட்டணங்கள் அமலில் உள்ளனவா என்றால், இல்லை என்று யார் தலையில் வேண்டுமானாலும் அடித்துச் சத்தியம் செய்யலாம்.

அரசுக்கு சினிமா மூலம் வரவேண்டிய தொகையை ஈட்டித்தரவேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகளும், தியேட்டரில் அதிக டிக்கெட் விற்றால் நடவடிக்கை எடுக்கவேண்டிய பறக்கும் படையும் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்று பறந்து பறந்து பார்ப்பார்களே தவிர தியேட்டர்களில் நடக்கும் கொள்ளைகளை சற்றும் கண்டுகொள்வதேயில்லை.

இந்த மோசடிகள் போதாதென்று படம்பார்க்கும் ஆடியன்ஸ்களின் எண்ணிக்கையில் பாதியைக்கூட தயாரிப்பாளர்க்கு சொல்வதில்லை. 100 பேர் படம் பார்த்தால் அவர்கள் கணக்கில் அது நாற்பதாகவோ, நாற்பத்தைந்தாகவோதான் இருக்கும் (என் படத்துக்கே, என் கண்ணெதிரில் இது நடந்ததுங்க!). புதிய தயாரிப்பாளர்களுக்கு இவற்றில் பாதி துயரங்கள் தெரியாமல் இருக்கலாம்.

மூத்த தயாரிப்பாளர்கள் அனைவருக்குமே இந்த தியேட்டர் தில்லுமுல்லுகள் குறித்து சகலமும் தெரியும். இதை விட்டுவிட்டு, ‘சின்னப் படங்களுக்கு ஆட்களே வருவதில்லை. தியேட்டர்களில் படம் பார்க்காமல் திருட்டு விசிடியில் படம் பார்க்கிறார்கள்’ என்று புலம்பி ஒப்பாரி வைத்து என்ன பிரயோசனம்?.

என்னைக் கேட்டால் இவ்வளவு ஆபாசமான நடவடிக்கைகளிலிருந்து தியேட்டர்க்காரர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளமாட்டார்கள் என்றால்… அதுவரை திருட்டு விசியிலேயே படம் பாருங்கள் என்றுதான் சொல்லுவேன்.

ஏனெனில் திருட்டுவிசிடிகாரர்களை திருடர்கள் என்று முத்திரை குத்தி, அவர்களை ஒழிக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறோம், ஆனால் தியேட்டர்க்காரர்களோ நல்லவர்கள் போல் வேடம் பூண்டு சினிமாவைக் காயடிக்கிறார்கள்.
திருட்டு விசிடிக்காரர்கள் எதிரிகள். தியேட்டர்க்காரர்கள் நம்பிக்கை துரோகிகள். எப்போதுமே எதிரிகளை துரோகிகள் ஆபத்தானவர்கள்!!

குறிப்பு: நியாயமாக டிக்கெட் விற்று, சரியாக டிசிஆர் கணக்கு காட்டும் தியேட்டர், மல்டிப்ளெக்ஸ்காரர்கள் இந்தக் கட்டுரை குறித்து வருந்தத் தேவையில்லை!

தொடர்புக்கு: muthuramalingam30@gmail.com

Courtesy: Oneindia Tamil
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *