BREAKING NEWS
Search

அய்யோ ராமா ராமா… இந்த ரீமேக் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?

அய்யோ ராமா ராமா… இந்த ரீமேக் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?


நேற்று முன்தினம் சுந்தர் சி – சினேகா நடித்த முரட்டுக்காளை படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, பல காட்சிகளில் மனசுக்குள் இப்படித்தான் சொல்லிக் கொண்டேன்… சில காட்சிகளில் வாய்விட்டே சத்தமாக சொன்னேன். முன் சீட்டிலிருந்த பெண் நிருபர்கள் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு!

1980-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி – ரதி நடிப்பில், ஏவிஎம் தயாரிப்பாக வந்து, வசூலில் புதிய சாதனையை நிகழ்த்திய படம் முரட்டுக் காளை. பாரம்பரியமிக்க ஏவி எம் நிறுவனத்தை உயிர்ப்பித்த படம். தமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஆக்ஷன் படங்களில் க்ளாஸிக் எனும் அளவுக்கு திகட்டாத பொழுதுபோக்குப் படமாகத் திகழ்ந்தது.

இளையராஜா இசையில் அத்தனை பாடல்களும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கும். பொதுவாக எம்மனசு தங்கம்.. பாடல் மாஸ் என்றால், புதுவண்ணங்கள் கொஞ்சிடும், எந்தப் பூவிலும் வாசம் உண்டு, மாமே மச்சான்… பாடல்கள் க்ளாஸ்!

ரஜினியும் ஜெய்சங்கரும் சுருளி ராஜனும் நடிப்பில் பின்னியிருப்பார்கள். அழகுக்கு ரதி, இயல்பான நகைச்சுவைக்கு ரஜினி, ராஜப்பா, ஒய்ஜி மகேந்திரன் கூட்டணி. கிராமத்து அழகையும், ஆக்ஷன் காட்சிகளில் வேகத்தையும் பாபுவின் காமிரா வழி பார்த்து கிறங்கிப் போனார்கள் தமிழ் ரசிகர்கள். குறிப்பாக கிராமப் புறங்களில், காளையனும் அவரது தம்பிகளும்  அந்த ஊர்க்காரர்களாகவே பார்க்கப்பட்டார்கள்.

இந்தப் படத்தை சுந்தர் சியை வைத்து ரீமேக் செய்கிறார்கள் எனும் போதே, கொஞ்சம் சுருக் என்றது.

ஆனால் சுந்தரோ, “நான் ரஜினி சாரோட தீவிர ரசிகன். ஒரு ரசிகனுக்குள்ள உரிமையில், நான் பலமுறை பார்த்து ரசித்த அவரது இந்த முரட்டுக் காளையை ரீமேக் செய்கிறேன் (ப்ரிவியூ ஷோ முடிந்து வெளியில் வந்தபோதும் இதைத்தான் சொன்னார் மனிதர்!) என்று கூறி இரண்டாண்டுகளுக்கு முன் படத்தை ஆரம்பித்தார்.

ஆட்சி மாறிய இந்த ஓராண்டு காலமும் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். இப்போது வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஒரிஜினலில் உள்ளது போலவே ஜெராக்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். அட, க்ளைமாக்ஸில் போலீசாக வரும் அசோகனுக்கு எப்படி கட்டு போட்டிருப்பார்களோ, அதே மாதிரிதான் இந்த புதிய படத்தில் வரும் போலீசுக்கும் போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால், ஒரு காட்சி கூட ரசிக்கும்படி இல்லை என்பதுதான் கொடுமை. காட்சிக்குக் காட்சி ரீமேக் செய்ததில் தப்பில்லை… ஆனால் பொருத்தமற்ற நடிகர்கள், குறிப்பாக ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் விவேக்கின் பாத்திரம்… ஆரம்பத்திலிருந்து கடும் எரிச்சலைத் தருகிறது.

ரஜினியின் முரட்டுக் காளையில் ஜெய்சங்கர் பாத்திரம் அத்தனை அழுத்தமாக இருக்கும். ஆனால் இதில் சுமன் ஏதோ ஒப்புக்கு வருகிறார்.

அதேபோல சுருளிராஜன் பாத்திரம். அதை அவர் எத்தனை லாவகமாக, ஒரு சாணக்கியனைப் போல கையாண்டிருப்பார்..! அந்த வேடத்தில் இதில் விவேக் நடித்துள்ளார் திருநங்கையாக. அவர் பேசும் எந்த வசனமாக இருந்தாலும், அதில் ஆபாச இரட்டை அர்த்தம் தெறித்து முகத்தை அசிங்கப்படுத்துவது போல ஒரு உணர்வு.

ஹீரோவாக வரும் சுந்தர் சி, நாயகி சினேகா மட்டும் கொஞ்சம் பரவாயில்லை. அதேபோல தம்பிகள் பாத்திரத்தில் வரும் நால்வரையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. குறிப்பாக ஜீவாவும், சங்கரும் இயல்பாக நடித்துள்ளனர்!

ரஜினி படத்தில் வரும் ஜல்லிக்கட்டுக்கு பதில், இந்தப் படத்தில் ரேக்லா ரேஸ். ரயில் சண்டைக் காட்சியை அதேமாதிரி எடுக்க வேண்டுமா… கொஞ்சம் வித்தியாசப்படுத்தியிருக்கலாமே.

பொதுவாக எம்மனசு பாடலை அப்படியே இசையைக் கூட மாற்றாமல் தந்ததற்காக ஸ்ரீகாந்த் தேவாவுக்கு நன்றி. ஆனால், மற்ற பாடல்கள் கர்ண கடூரம்! ஒளிப்பதிவு பரவாயில்லை.

விவேக், சுமன் காட்சிகளை நாகரீகமாக, விறுவிறுப்பாக எடுக்கத் தவறியது இயக்குநரின் தவறுதான்.

தயவு செய்து இனி எம்ஜிஆர், ரஜினி, சிவாஜி படங்களை ரீமேக் செய்யும் எண்ணத்தை நல்ல ரப்பர் வைச்சு அழிச்சிடுங்கப்பா… புண்ணியமா போகும்!

-என்வழி ஸ்பெஷல்
8 thoughts on “அய்யோ ராமா ராமா… இந்த ரீமேக் கொடுமைக்கு ஒரு முடிவே இல்லையா?

 1. பாவலன்

  ///தயவு செய்து இனி எம்ஜிஆர், ரஜினி, சிவாஜி படங்களை ரீமேக் செய்யும் எண்ணத்தை நல்ல ரப்பர் வைச்சு அழிச்சிடுங்கப்பா… புண்ணியமா போகும்!///

  வழக்கம் போல்..உங்கள் இறுதி வரிகள் (concluding lines) அருமையாக உள்ளன.

  நண்பர்களே..சுந்தர்,சி. அவர்கள் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை
  remake செய்யப் போவதாகவும், காப்பிரைட் வாங்கி வைத்திருப்பதாகவும்
  படித்தேன். நான் அதிகம் தடவை பார்த்த தமிழ் படம் அது தான்!
  சுந்தர், சி. அதை விட்டு வைத்தால் நல்லது!!! நன்றி.

  -பாவலன்

 2. கணேசன் நா

  //தயவு செய்து இனி எம்ஜிஆர், ரஜினி, சிவாஜி படங்களை ரீமேக் செய்யும் எண்ணத்தை நல்ல ரப்பர் வைச்சு அழிச்சிடுங்கப்பா… புண்ணியமா போகும்!//

  வழி மொழிகிறோம்.

 3. மு. செந்தில் குமார்

  நண்பர் ஒருவர் இந்த படத்தை பார்த்துவிட்டு “கொடுமைட சாமி” என்றார் அப்பொழுதுதான் இப்படி ஒரு படம் வந்ததே தெரியும்.

 4. RAJAN

  தயவு செய்து இனி எம்ஜிஆர், ரஜினி, சிவாஜி படங்களை ரீமேக் செய்யும் எண்ணத்தை நல்ல ரப்பர் வைச்சு அழிச்சிடுங்கப்பா… புண்ணியமா போகும்!

  கமலை மறந்துடிங்க

 5. குமரன்

  கடைசி வரி .. உண்மையிலேயே முதல் வரி !

 6. r.v.saravanan

  தயவு செய்து இனி எம்ஜிஆர், ரஜினி, சிவாஜி படங்களை ரீமேக் செய்யும் எண்ணத்தை நல்ல ரப்பர் வைச்சு அழிச்சிடுங்கப்பா… புண்ணியமா போகும்!

  ரீபீட்

 7. பாவலன்

  நண்பர்களே.. சமீபத்தில் Mackenna’s Gold (1969) என்ற ஆங்கிலப் படம்
  பார்த்தேன். இன்று computer graphics அது இது இன்று படங்கள் வரும்
  நிலையில் மிகக் குறைந்த technology வசதியை வைத்துக் கொண்டு
  மாபெரும் படமாக இது வந்தது. ஹீரோ Mackenna (Gregory Peck),
  வில்லன் Omar Sharif வித்தியாசமான நடிப்பில் அசத்தி இருப்பார்கள்.
  சற்று நீளமான படம் என்பதால் பொறுமையாக பார்க்க வேண்டும்! நன்றி.

  -பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *