BREAKING NEWS
Search

எம்எஸ்வியின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சி – ஒரு பார்வை

எம்எஸ்வியின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சி – ஒரு பார்வை

எம்எஸ்வியின் நேரடி இசைக் கச்சேரியை ஒரு முறைமட்டுமே, அதுவும் மிகச் சிறிய வயதில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது நேரடி கச்சேரி பார்க்கும் கேட்கும் வாய்ப்பு.. அதுவும் ரஜினி, இளையராஜா அமர்ந்து கேட்கும் நிகழ்ச்சி என்பதால் ஏக எதிர்ப்பார்ப்புடன் 1 மணிநேரம் முன்கூட்டியே போய்விட்டோம்.

பேச்சுக் கச்சேரி முடிந்து இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.. முதல் பாட்டு. எம்எஸ்வியுடன் இரு பாடகர்கள் இணைந்து பாடினார்கள். எம்எஸ்வி குரல் ரொம்பவே தளர்ந்திருந்தது. இந்த மூப்பிலும் அத்தனை பெரிய ஆர்க்கெஸ்ட்ராவுடன் மேடையேறியதே பெரிய சாதனைதான்.

அடுத்த பாடல், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம். ஆர்கெஸ்ட்ரேஷன் பரவாயில்லை. ஆனால் குரல்கள் சுத்தமாக மேட்ச் ஆகவில்லை.

எவர்கிரீன் மாலைப் பொழுதின் மயக்கத்திலே… பாடலை பி சுசீலா பாடினார். இத்தனை வயதில் அத்தனை உச்ச குரலில் பாடுவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனாலும் பாடி முடித்தார். இந்தக் கலைஞர்களுக்கு மட்டும் மூப்பு கொடிதினும் கொடிதுதான்!

அடுத்த பாடல் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்… இதில்தான் கச்சேரி களைகட்டியது.

அடுத்து ஏஎல் ராகவன் – அனுராதா ஸ்ரீராம், அன்று ஊமைப் பெண்ணல்லோ.. பாடினார்கள். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் புதிதாகவே இருக்கிறது ஏஎல் ராகவன் குரல். இவர்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பது பெரிய தவறு…

சொதப்பிய எஸ்பிபி…

நிகழ்ச்சி போகப் போக கல்யாணக் கச்சேரி கேட்ட எஃபெக்டுக்குப் போனது தெரிந்தோ என்னமோ, முழுவதுமாக கேட்கப் போவதாகக் கூறியிருந்த ஜெயலலிதா, 6 வது பாடலிலேயே கிளம்பிவிட்டார்!

ஏழாவது பாடல் எஸ்பிபி பாடியது.

நிகழ்ச்சியின் சொதப்பல் மன்னன் பட்டம் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கே சொந்தம். கம்பன் ஏமாந்தானை முன்னுக்குப்பின் பாடி, இஷ்டத்துக்கும் இழுஇழுவென இழுத்து… கடவுள் அமைத்த மேடை பாட்டின் நடுவில் இவரது கொர் டர் புர் சவுண்ட்.. சகிக்கலடா சாமி!

அவருக்கு அடுத்த சொதப்பல் பாடகர் ஸ்ரீனிவாஸ். குரலில் மட்டுமல்ல, உடல்மொழியில் கூடவா ஹரிஹரனை ஜெராக்ஸ் எடுக்க வேண்டும்?

சின்மயி எடுபடவே இல்லை.. ப்ச்!

அப்புறம் யாரோ ஒன் பெண்மணி.. பாட்டு என்ற பெயரில் அவர் பாடியதை.. வாந்தியெடுக்கிற மாதிரியே இருக்கு என பக்கத்திலிருந்த பிரவீண் சொல்ல.. அட, ஆமா!

ட்ரம்ஸ் சிவமணி, கைக்கு எட்டிய கருவிகளின் மீதெல்லாம் தட்டி, மெல்லிசையை முடிந்த வரை கர்ணகடூரமாக்கினார். கொஞ்சம் கேட்க முடிந்ததென்றால் வயலின்கள், ட்ரம்பெட் மற்றும் தபேலாக்காரர்களின் புண்ணியம்தான்.

ஒரு கட்டத்துக்கு மேல் எம்எஸ்வியும் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டார். முதுமை அவரை அங்கு ரொம்ப நேரம் இருக்கவிடவில்லை!

அசத்திய வாணி ஜெயராம்!

நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியின் பெஸ்ட் வாணி ஜெயராம். What a stunning voice.. pleasant surprise… இதைக் கேட்க முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைகள் அரங்கில் இல்லாமல் போய்விட்டார்கள். மல்லிகை என் மன்னன் மயங்கும், அந்தமானைப் பாருங்கள் அழகு… அழகோ அழகு!

‘பாரதி கண்ணம்மா…’வில் வழக்கம் போல எஸ்பிபி சொதப்ப, அதை அந்தம்மா மேட்ச் பண்ண விதமிருக்கே… இந்தம்மாவுக்கு கொடுங்கப்பா நல்லதா ஒரு பட்டம்!

முதல்வர் ஜெயலலிதா தாளமிட்டு, கைத்தட்டி ரசித்த பாட்டு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்… காரணம் அதை கிருஷ்ணராஜ பாடிய ஒழுங்கு… மீட்டருக்கு இப்படியோ அப்படியோ ஒரு சென்டிமீட்டர் கூட கூடாமல் குறையாமல் அழகாகப் பாடி மனசை அள்ளினார். ஆனால் அவருக்கு அதன்பிறகு வாய்ப்பு தரவில்லை (நல்லா பாடறவனை என்னைக்கு மதிச்சிருக்கு இந்த ஊரு!!)

அதேபோல, உன்னிமேனன், ஜெயச்சந்திரன் இருவருமே எக்ஸ்ட்ரா இழுவை ஏதுமின்றி கச்சிதமாகப் பாடி கைத்தட்டல் அள்ளினார்கள்.

இதுதான், இந்த ஒழுங்குதான் எஸ்பிபி, ஜோசுதாஸ் போன்றவர்களிடம் மேடைக் கச்சேரிகளின்போது பார்க்க முடியாத விஷயம். ஓவராக உணர்ச்சி வசப்பட்டு, ஓவராக சீன்போட்டு, கேட்க வந்தவனை கடுப்பேத்துவதில் கில்லாடிகள் இருவரும்…

ரிக்கார்டிங் ஆகட்டும்… கச்சேரியாகட்டும்… இளையராஜா ஏன் இவர்களிடம் இத்தனை கண்டிப்பாக இருக்கிறார் என்பது புரிந்தது!!

-என்வழி ஸ்பெஷல்
4 thoughts on “எம்எஸ்வியின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சி – ஒரு பார்வை

 1. Manoharan

  யேசுதாஸ் ஒழுங்கோடுதானே பாடுகிறார்.

 2. ravi

  எஸ்பிபி ஒழுங்காகப் பாட வில்லை என்று கூறியதை ஜீரணிக்கவே முடியவில்லை. உச்சரிப்பு, குரல் வளம் மற்றும் லயம் எல்லாம் நிறைந்த பாடகர் அவர்.

 3. anbudan ravi

  எஸ்பிபி பற்றிய கூறியது மிகச்சரி. அவர் பாடி இருக்கலாம்….ஆனால் அந்த பாடலுக்கு உயிரே அசலாக இருப்பதுதான்….அதை மேடையில் இவர் மாற்றி புதிது புதிதாக ராகங்களை சேர்த்து கொடூரமாக்குவதை இசை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள்….ஏதோ ஒன்று இல்லையே என்று ஏங்க வைத்துவிடும். ஆனால் தலைவருக்கு முதல் பாடல் இந்த மேதை பாடினால்தான் அரங்கம் கலை கட்டும்.

  அன்புடன் ரவி.

 4. venkatesh

  I Agree with Vino on SPB. My Mom used to tell me about 20 to 25 years back he always make his own modulation and lot of deviations from the original song. He thinks that he has the liberty where MSV might be a soft person to allow. Definetly not Illayaraja. Gangai amaran once questioned in the stage where SPB gave some invalid reasons.

  Hari haran also does the same thing when it was questioned he told that people can listen to audio if they want to hear the original version.. In stage he also try his own versions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *