BREAKING NEWS
Search

இன்று மாலை ரஜினியைச் சந்திக்கிறார் நரேந்திர மோடி!

இன்று மாலை ரஜினியைச் சந்திக்கிறார் நரேந்திர மோடி!

rajinikanth

சென்னை: இன்று சென்னை வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழகத்தில் நேரடி அரசியலில் இல்லாவிட்டாலும், கடந்த 20 ஆண்டுகளாக ரஜினியின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு கட்சிகளும் போட்டி போடுகின்றன.

அதிமுகவும் திமுகவும் இந்த விஷயத்தில் நேரடியாக போட்டி போடவில்லை என்றாலும், மறைமுகமாக ரஜினியை தங்கள் நெருங்கிய நண்பராகக் காட்டிக் கொள்வதில் முனைப்பாக உள்ளனர்.

காங்கிரஸ் பாஜக தலைவர்கள் ரஜினியைச் சந்தித்து ஆதரவு கேட்பதில் தீவிரமாக உள்ளனர். குறிப்பாக நரேந்திர மோடி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ரஜினியைச் சந்திக்கத் தவறுவதில்லை.

தமிழக பாஜக தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன் போன்றவர்கள், ஒவ்வொரு பேட்டியிலும் ரஜினியின் ஆதரவு எங்களுக்கே என்று கூறி வருகின்றனர்.

rajini-modi

இந்த நிலையில், இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்துக்காக நரேந்திர மோடி இன்று  தமிழகம் வருகிறார். பிரச்சாரத்தைத் தொடங்கும் முன் நரேந்திர மோடி போயஸ் கார்டன் சென்று ரஜினியைச் சந்தித்துப் பேசுகிறார்.

தமிழக பா.ஜ.க பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதரராவ் நேற்று கூறுகையில், “தமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ரஜினியைச் சந்தித்துப் பேசுவார்,” என தெரிவித்தார்.

இன்று வெளியாகியுள்ள மோடியின் பயணத் திட்டத்திலும் இந்த சந்திப்பு  உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமர் வேட்பாளரே ரஜினியைத் தேடி வந்து சந்திப்பது வட இந்திய ஊடகங்களில் மிகப் பெரிய செய்தியாக இடம்பெற்றுள்ளது.

-என்வழி

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *