BREAKING NEWS
Search

காலத்தை வென்றவன் நீ!

காலத்தை வென்றவன் நீ!

என்றும் மக்கள் தலைவர்.. புரட்சித் தலைவர்!

என்றும் மக்கள் தலைவர்.. புரட்சித் தலைவர்!

காணும் பொங்கலும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளும் ஒன்றாக வருவது என்ன பொருத்தம் பாருங்கள்.

கிராமத்தில் மாட்டுப் பொங்கல் கொண்டாடிய மக்கள் மறுநாள் அந்த மாட்டை வண்டியில் பூட்டி அருகிலுள்ள நகரத்துக்கு சென்று முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்து, ஆங்காங்கே நிழல் கண்ட இடத்தில் கட்டுச்சோற்றை காலி செய்து இளைப்பாறி, குதூகலமாக பாடிச் சிரித்து இருள் கவியுமுன் வீடு திரும்பும் பழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் என பாடிக் கொண்டு முண்டாசு கட்டிய எம்.ஜி.ஆர் சென்னையில் மாட்டு வண்டி ஓட்டி வரும் காட்சி  பசுமையாக மனதில் நிழலாடுகிறது.

குடும்ப தலைவன் வண்டியோட்ட, மனைவியும் குழந்தைகளும் பட்டணத்தின் கட்டடங்களையும் காட்சிகளையும் இளம்பெண்களின் ஆடைகளையும் வாய்பிளந்து பார்த்து  அமர்ந்திருக்கும் காட்சிகளும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வரை சென்னை சாலைகளில் கண்டு ரசித்தவைதான்.

மாட்டு வண்டி திரும்புவதற்காக எதிரில் வரும் கார்களுக்கு STOP பிளேட் காட்டி தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளையும், திடீர் மரியாதையால் மெய்சிலிர்த்து விரைப்பாக எழுந்து நின்று அவருக்கு சல்யூட் வைத்த குழந்தைகளையும், பொறுமையாக காத்திருக்கும் கார்கள் ஒன்றினுள் அமர்ந்து இந்தக் காட்சியை புன்சிரிப்புடன் உள்வாங்கும் ஐ.ஜி.யையும் கடற்கரை சாலையில் பார்த்ததுண்டு.

puratchi thalaivar-2

ஏழைப் பங்காளர்…

நகரமும் அதை சுற்றி பசுமை நிறைந்த கிராமங்களும் தனித்தன்மை மாறாமல் சார்ந்தும் சேர்ந்தும் இயங்கிய காலம் அது. மனிதர்களிடம் எளிமை இருந்தது. விட்டுக் கொடுத்தும் அனுசரித்தும் செல்லும் பெருந்தன்மை இருந்தது. ஒருவருக்கொருவர் உதவும் மனம் இருந்தது.  சட்டத்தையும் விதிகளையும் மதிக்கும் கட்டுப்பாடு இருந்தது. அனைத்திலும் உயர்ந்த மனிதாபிமானம் இருந்தது. அந்த உன்னத மனித குணங்களை ஒவ்வொரு திரைப்படத்திலும் உயர்த்திப் பிடித்த எம்.ஜி.ஆர் அப்போது இருந்தார்.

சினிமா எனும் வெகுஜன ஊடகத்தின் அசாதாரணமான சக்தியை முழுவதுமாக அறிந்திருந்தார் அவர். அவர் அரசியலில் ஈடுபட்டதையும், கட்சி தொடங்கி முதல்வர் ஆனதையும், மக்கள் நல அரசு என்ற வாசகத்துக்கு புது அர்த்தம் கொடுத்ததையும் இறுதி மூச்சு வரையில் வெல்ல முடியாத தலைவனாக விளங்கியதையும் விட்டுத் தள்ளுங்கள்.

அந்த சாதனைகள் ஆயிரக்கணக்கான ஆவணப் பதிவுகளாக அரசுக் கோப்புகளில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படங்கள் மூலமாக அவர் தமிழ் சமுதாயத்தில் தூவிய நல்ல விதைகள் அவர் காலத்திலேயே செடியாகி காயாகி கனியாகி வளர்ந்து அடுத்த தலைமுறைகளுக்கு நிழல் தரும் விருட்சங்களாக விசுவரூபம் எடுத்த கதைதான் இதுவரையிலும் சரியாக பதிவு செய்யப்படவில்லை.

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…

அவரது கதாபாத்திரங்கள் தவறு செய்வதில்லை, குடிப்பதில்லை, குற்றம் புரிவதில்லை, அநீதிக்கு அடிபணிவதில்லை,  தீயசக்திகளை விட்டுவைப்பதில்லை. அவ்வாறான பாத்திரப் படைப்பை தேர்வு செய்வதே பெருமைக்குரிய விஷயம். சுயநல நோக்கத்தில் திட்டமிட்டு ஒரு சுய பிம்பம் உருவாக்க அப்படி செய்தார் என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ஒரு கலைஞன் தான் விரும்பும் பாத்திரத்தை தேர்வு செய்ய சகல சுதந்திரமும் இருக்கும்போது, அந்த தேர்வுக்கு உள்நோக்கம் கற்பிப்பதில்  எந்த அர்த்தமும் இல்லை. ஏனைய கலைஞர்களும் அவ்வாறு நல்லவனாக ‘வேஷம்’ போடக்கூடாது என்று தடை ஏதும் கிடையாதே.

அவரது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அந்தக் காலத்திலேயே மட்டமாக வர்ணிக்கப்பட்டனர். அந்த குஞ்சுகள்தான் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பீ, நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, தூங்காதே தம்பி தூங்காதே, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே, தாயில்லாமல் நானில்லை, வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்… போன்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை திரும்பத் திரும்ப கேட்டும் பாடியும் வளர்ந்தன.

தான் தலைவராக ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர் காமராஜ் வழியில்.. புரட்சித் தலைவர்.. சத்துணவு நாயகன்!

தான் தலைவராக ஏற்றுக் கொண்ட பெருந்தலைவர் காமராஜ் வழியில்.. புரட்சித் தலைவர்.. சத்துணவு நாயகன்!

பள்ளியில் ஆசிரியர்கள் போதித்த நல்லொழுக்கம், வீட்டில் அப்பா அம்மா சொல்லித் தந்த நல்லது கெட்டது ஆகியவற்றுடன் தியேட்டரில் எம்.ஜி.ஆர் வலிந்து திணிக்காமல் தேன் தடவி ஊட்டிய நல்ல பண்புகளையும் உண்டு உணர்ந்து வளர்ந்தன. பள்ளிக்கூடம் செல்லாத பாமரர் வீட்டு குழந்தைகள் மட்டுமல்ல, மேல்தட்டு குடும்பங்களில் செல்லமாக வளர்க்கப்பட்ட குழந்தைகளும்  எம்.ஜி.ஆர் என்ற நடிகர் சினிமா வழியாக நடத்திய பாடங்களை மனப்பாடமாக்கி ரத்தத்தில் சேர்த்தன.

காதல் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்ற போதிலும் எம்.ஜி.ஆர் படங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் தவறாமல் அழைத்துச் சென்றதன் காரணம் இதுவே.  வாத்தியார் என்ற பட்டம் அவரது கழுத்தில் மாலையாக வந்து விழுந்த காரணமும் அதுதான். ஆசிரியர்களுக்கே ஆசானாக திகழ்ந்தவர் அவர். இந்த தகவல்கள் மிகையற்ற உண்மைகள்.

அந்த தலைமுறை இன்று 40+, 50+ வயதுகளில் இருந்தாலும் அன்று அவரால் மனதில் பதிக்கப்பட்ட நல்லியல்புகள் சேதமின்றி செயல்களில் வெளிப்படுவதை பார்க்கலாம்.  ஆட்டோ டிரைவர்கள் வில்லன்களாக பார்க்கப்படும் இந்த நாளில், எம்.ஜி.ஆர் ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ என்றால் கண்ணை மூடிக் கொண்டு ஏறி அமரும் பயணிகள் அதிகம். எம்.ஜி.ஆர் பாடல்களை ரிங்டோனாக வைத்திருக்கும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஓடும் ரயிலில் பிச்சை எடுப்பவர்கள் அவரது பாடல் வரிகளை கடூரமாக உச்சரித்தால்கூட அலுமினிய குவளையில் நாணயங்கள் கொட்டுவதை பார்க்கலாம்.

தலைவர்களில் முதல்வர்!

தலைவர்களில் முதல்வர்!

தலைமுறைகளை தாண்டியும் அவரது ஈர்ப்பு விசை இயங்குவதை எவரால் மறுக்க முடியும்? பேரியக்கமாக சித்தரிக்கப்படும் அதிமுக என்ற கட்சி அவர் விட்டுச் சென்ற எத்தனையோ அசையும் அசையா சொத்துகளில் ஒன்று. அவ்வளவுதான். எல்லா கட்சிகளிலும் மதங்களிலும் ஏன் மொழிகளிலும்கூட எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வாசிக்குமுன் எம்.ஜி.ஆர் படத்தின் முன் கண்மூடி ஒரு நிமிடம் நின்று செல்லும் நீதிபதி ஒருவரையும் அறிவோம்.

டிசம்பர் 24, ஜனவ்ரி 17 தேதிகளில் ஊரை வலம் வந்தால் எத்தனை இடங்களில் வீட்டு முன் ஸ்டூல் போட்டு அதில் எம்.ஜி.ஆர் படத்துக்கு 2 முழம் பூச்சரம் சூட்டி விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள்  என்பதை எண்ணிப் பார்க்கலாம். அவர்கள் கட்சிக்காரர்கள் அல்ல. வாத்தியாரின் மாணவர்களாக தங்களை கண்ணாடியில் பார்க்கும் சாமானியர்கள்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்தப் பெருங்கூட்டம் இருக்கும் வரை, எத்தனை வில்லன்கள் வந்தாலும்  இந்த நாடு நாசமாகி விடாது என்ற நம்பிக்கை மேலோங்குகிறது.

maxresdefault

‘பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர் எல்லாம்
மனிதர்கள் அல்ல என்றாராம்
இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்
வாழ்பவன் மனிதன் என்றாராம்..’

எம்.ஜி.ஆர் சமாதியை வலம் வரும் ஏழை – பணக்காரன், பாமரன் – படித்தவன், ஆண் – பெண்,  சிறுவன் – முதியவர்  கூட்டத்தை பார்த்து வியக்கும்போது அந்தப் பாடல் ஒலிக்கிறது.

(ஜனவரி 17, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள்)

குறிப்பு: இரு தினங்களுக்கு முன் வெளியிட்டிருக்க வேண்டிய கட்டுரை இது. ஆனால் பொங்கல் விடுமுறை, சொந்த ஊர்ப் பயணம் போன்ற காரணங்களால் தள்ளிப் போய்விட்டது. ஆனால், இது புரட்சித் தலைவர், மனிதருள் புனிதர், எட்டாவது வள்ளலின் நூற்றாண்டு விழாவை எதிர்நோக்கும் ஆண்டு என்பதால், எப்போது வெளியிட்டாலும் எவர்கிரீன் கட்டுரைதான்!

என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!

என் சொந்த ஊரில் புரட்சித் தலைவருக்கு நான் எடுத்த பிறந்த நாள் விழா!

தலைமுறைகளைத் தாண்டிய தலைவர்!

தலைமுறைகளைத் தாண்டிய தலைவர்!

-என்வழி

 
4 thoughts on “காலத்தை வென்றவன் நீ!

 1. murugan

  மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
  உனக்கு மாலைகள் விழ வேண்டும்
  ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று
  போற்றி புகழ வேண்டும் !!!

 2. srikanth1974

  இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
  இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்

  இவருக்கென்றே எழுதிய பொருத்தமான பாடல் வரிகள்.

 3. rajeshviswa

  dear vino sir

  You have any news about thalivar , how is he , linga issue have affect him , kindly update linga issue

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *