BREAKING NEWS
Search

சென்னை மெட்ரோ ரயில்.. சாமானியர்களுக்கு எட்டா ரயில்!

மெட்ரோ ரயில்.. சாமானியர்களுக்கு எட்டா ரயில்!

Metro-1

மெட்ரோ ரயில் வருது… போக்குவரத்து நெரிசல் தீரப் போகுது… புறநகர்வாசிகள் சென்னை நகருக்குள் சீக்கிரம் போய் வரலாம் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டிருக்க, ‘ஓ இப்படியெல்லாம் கூட கனவு காண்பீங்களா.. இருக்குடி உங்களுக்கு’ என்று ஒரு பெரிய இடியை இறக்கியிருக்கிறார்கள். அதுதான் அசாதார பயணச்சீட்டுக் கட்டணம்!

ஏற்கெனவே ஜெயலலிதா முதல்வரான பிறகு போக்குவரத்துக் கட்டணங்களை 200 சதவீதம் உயர்த்தினார். விளக்கம்? வழக்கம்போல முந்தைய அரசு மீது பழிபோட்டு, நட்டக் கணக்குதான். இன்றைய நிலவரப்படி சென்னையிலிருந்து தமிழகத்தின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் ரயிலில் செல்வது மட்டுமே சிக்கனமானது. அரசுப்  பேருந்துப் பயணம், மாநகரப் பேருந்துப் பயணம் மற்றும் தனியாரின் தொலைதூரப் பேருந்துப் பயணம் போன்றவை ரயில் கட்டணங்களைக் காட்டிலும் முறையே இரண்டு, நான்கு மடங்கு அதிகம்!

இந்த நிலையில் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் வந்துவிடும் என்ற நப்பாசையுடன், டேக் டைவர்ஷன்களையும் ஒன்வேக்களையும், மணிக் கணக்கில் நீண்ட சாலை நெரிசல்களையும் சகித்துக் கொண்டு சாமானிய மக்கள் காத்திருந்தனர்.

fare2_2455681a

நேற்று அந்த மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம், ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வரை ஆரம்பமானது. சென்னைவாசிகள், குறிப்பாக அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை அனுபவித்த பலரும் சற்றே உரிமையுடன் அந்த மாநகர ரயிலேற டிக்கெட் எடுத்தனர். பயணச் சீட்டுக் கட்டணம் அதிரவைத்தது… 10 கிலோ மீட்டர் தூரம், மொதம் ஏழு நிறுத்தங்கள்… பயணக் கட்டணமோ ரூ 40.

முதல் இரு நிறுத்தங்களுக்குத்தான் ரூ 10 கட்டணம். மூன்றாவது நிறுத்தத்துக்கு ரூ 20, நான்காவது ரூ 30, 5, 6, 7வது நிறுத்தங்களுக்கு ரூ 40 கட்டணம் என நிர்ணயித்திருக்கிறார்கள். 5 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு சென்று வரை ரூ 400 தேவை. கால் டாக்சியில் இதைவிட குறைந்த கட்டணம்தான். ஷேர் ஆட்டோவென்றால் இந்த 5 பேர் மொத்தமாக ரூ 125 கொடுத்தால் போதும். மாநகரப் பேருந்தென்றால் இதுவே ரூ 60 க்குள் முடிந்துவிடும்.

மெட்ரோ ஸ்டேஷனுக்காக மெனக்கெட்டு வந்து, இரண்டு மாடிகள் ஏறி காத்திருந்து ரயில் பிடித்து கோயம்பேட்டில் இறங்குவதற்கு ஆகும் நேரம்தான் கால் டாக்சி அல்லது ஷேர் ஆட்டோவுக்கே ஆகிறது எனும்போது எந்த வகையில் மெட்ரோ ரயில் உசத்தியாகிறது?

டெல்லி, புனே, பெங்களூர் என எந்த மெட்ரோ ரயிலை எடுத்துக் கொண்டாலும் கட்டணம் குறைவுதான். டெல்லி மெட்ரோ ரயில் கட்டணத்தை விட 250 மடங்கு சென்னை மெட்ரோவில் கட்டண உயர்வு அதிகம். டெல்லியில் 23 கிமீ தூரத்துக்கு ரூ 19 மட்டுமே வசூலிக்கிறார்கள். புனேயில் 15 ரூபாய். ஆனால் சென்னையில் மிகக் குறைந்த 10 கிமீ தூரத்துக்கே இப்படியென்றால், இன்று இரு கட்டங்களாக செயல்படப் போகும் மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு ரூ 100 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலைதான் உள்ளது. ஆலந்தூரிலிருந்து வண்ணாரப்பேட்டைக்கு செல்ல ரூ 100 அல்லது அதற்கும் கூடுதலாக வசூலிக்கப்படும் ஆபத்து உள்ளது.
selfies_metro
இந்த ரயில் சேவை சாமானியர்களுக்கு உகந்ததாக மாற வேண்டும் என்றால், பயணக் கட்டணம் பாதியாகக் குறைய வேண்டும். அது ஒன்றைத் தவிர வேறு வழியில்லை. அல்லது  இந்த மெட்ரோ ரயில் குறிப்பிட்ட சிலரைத் தவிர யாருக்கும் பயன்படக் கூடாது என்ற எண்ணத்தில் ஜெயலலிதா அரசு தொடங்கி வைத்திருந்தால்… இதற்கான வரவேற்பு முதல் நாள் செல்ஃபி கூத்தோடு முடிந்துவிடும்!

-வினோ
என்வழி ஸ்பெஷல்
3 thoughts on “சென்னை மெட்ரோ ரயில்.. சாமானியர்களுக்கு எட்டா ரயில்!

 1. chozhan

  மும்பை மெட்ரோ கட்டணம் எவ்வளவு என்று தெரியுமா?

 2. குமரன்

  டில்லி மெட்ரோ ரயில் பயணத்தின் பின் எனது எண்ணம் இதுதான்: மெட்ரோ ரயில் நமது சாதாரண இந்தியக் குடிமகன்களுக்கானது அல்ல. பளபள என்று தரை, எஸ்கலேட்டர் ஏற்ற இறக்கம், கம்ப்யூட்டர் கன்ட்ரோலில் உள்செல்/ வெளிச்செல் வாயில்கள், குறைந்த அளவிலான வேலையாட்கள், எல்லாப் பணிகளும் தானியங்கிகளை சார்ந்த சூழல், அதிகப் படிப்பறிவு இல்லாத அடித்தட்டு மக்களால் இவற்றில் எந்த சேவையையும் பெறவியலாத நிலை, இவற்றை எல்லாம் ஒருசேரப் பார்த்தால் இந்தத் திட்டம் உயரத்தில் போகும் உயர்வருமான மக்களுக்கு மட்டுமே. அவர்களாவது, தமது ஒரு ஆள் பயணக் கார்களை விட்டுவிட்டு இந்த ரயிலில் செல்வது என்று செயல்படுத்தினால், கீழே உள்ள தரைச் சாலைப் பயணம் நமக்கெல்லாம் சுலபமாக அமையும்.

  மெட்ரோ ரயில் வெளி நாட்டு மோகத்தில் அலைபவர்களுக்கு வரப் பிரசாதம்.

  நமது சாதாரண இந்தியனுக்குச் சாபக்கேடு.

 3. குமரன்

  என் தலைஎழுத்து எல்லாத் தட்டு மக்களோடும் பயணம் செய்கிறேன்! அது ஒரு வரப்பிரசாதம் என்றும் தோன்றுகிறது. என் மக்களிடம் இருந்து எண்ணப் பிரிக்க இந்த விஞ்ஞான உலகின் பல்வேறு முனைப்புகளாலும் முடியவில்லை என்பது சும்மாவா?

  விமானத்தில் ஒரு நகரில் இருந்து இன்னொரு நகருக்குச் சென்று, நடந்து பிரதான சாலைக்கு வந்து, டவுன் பஸ்ஸில் பயணிக்கும்போது, மக்களுடன் பழகும் வாய்ப்பு நமக்கு அறிவை, அதிலும் நல்லறிவைப் போதிக்கிறது என்ற எண்ணம் என்னை இந்த நிலையில் வைக்கிறது.

  நேற்று ஒரு மேல்தட்டுப் பெண்மணி தனது சீனப் பயணத்தின் அனுபவங்களைச் சொல்லி, நமது பாரதத்தில் பீஜிய்ங்க் போல ஷாங்காய் போல கட்டமைப்பு வசதி இல்லை, சாலைகள் அங்கே கிராமத்துக்குக் கூட ஆறு-லேன் வசதியுடன் அமைத்து விட்டார்கள். நியூ யார்க் நகரின் போக்குவரத்தைப் போலப் பன்மடங்கு போக்குவரத்தைத் தாங்கும் வகையில் இந்த நகரங்களின் கட்டமைப்பு அமைந்துள்ளது என்று ஆதங்கப் பட்டார். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை, ஒருபடி மேலே போய், நாங்கள் இவ்வளவு வரி கட்டுகிறோம், எங்களுக்காக இந்த நாடு என்ன செய்தது? கோபத்துடன், சிலபலப் பெரும் பணக்காரர்கள் இந்த நாட்டை விட்டே போய்விடப் போகிறோம் என்றார். எனக்கும் கோபம் வந்தது. பொரிந்துவிட்டேன். உங்கள் உரிமைகளை நான் இந்தியன் என்று கேளுங்கள், ஏற்கிறேன். வரி கட்டுகிறேன் எனக்கு இதெல்லாம் வேண்டும் நான் வரி கட்டுவதால், என் பெரிய கார் சாலையில் செல்லவும் பார்க் செய்யவும் இடம் தேவை என்று கேட்காதீர்கள், சாலையில் நடந்து போகும் சாமானியனுக்கு இருக்கும் அதே உரிமைதான் உங்களுக்கும் உள்ளது. அவன் இப்போது தடையில்லாமல் வசதியாக சாலையில் நடக்கக் கூட முடியவில்லை, நீங்கள் ஆதங்கப்படுவது சரியாக இருந்தாலும் ஆத்திரப்படுவது சரியில்லை என்றேன். முழுமையாக சொன்னது அனைத்தையும் பதியமுடியவில்லை.ஆனால் நமது அடித்தட்டு இல்லை, சாதாரண நடுத் தட்டு மக்களின் அன்றாட அத்தியாவசியத்தைக் கூட சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் நமது அரசுகள் கொடுக்கவில்லையே? இதற்கான முயற்சிகளை நமது அறிவுஜீவிகளான அதிகாரிகள் எடுப்பதே இல்லையே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *