BREAKING NEWS
Search

அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம் – செல்போன் பேசியபடி ஓட்டிதால் விபரீதம்!

அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம் – செல்போன் பேசியபடி ஓட்டிதால் விபரீதம்!

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர போக்குவரத்துக்கழக பஸ் கவிழ்ந்தது. இதில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

பலருக்கு காயம் பலமாக இருப்பதால், உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

ஓட்டுநர் செல்போன் பேசியபடி பஸ்ஸை ஓட்டியதாலும், அப்போது திடீரென சீட் கழன்றதாலும் கட்டுப்பாடு இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அண்ணா சாலையில் ஜெமினி அருகே உள்ளது அண்ணா மேம்பாலம். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் இந்த மேம்பாலமும் ஒன்று. எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள பகுதி இது.

1973ம் ஆண்டு கட்டப்பட்ட  இந்தப் பாலம்தான் சென்னை மாநகரின் முதல் மேம்பாலமும் கூட. அண்ணா சாலை, உத்தமர் காந்தி சாலை என அழைக்கப்படும் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்தை முறைப்படுத்தும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் ஒரு விபத்துகூட நடந்ததில்லை.

இன்று பிற்பகல் இந்த மேம்பாலத்தின் வழியே சென்று கொண்டிருந்த 17 எம் என்ற மாநகரப் பேருந்து, பாலத்திலிருந்து ஜிஎன் ஷெட்டி சாலைக்கு திரும்பும் போது,  திடீரென கட்டுப்பாடு இழந்து தாறுமாறாக ஓடி தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்தது.

இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இவர்களில் பலருக்கும் காயம் பலமாக இருந்தது. காயமடைந்த அனைவரும் அருகிலிருந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் அந்தப் பகுதியே பரபரப்பாகியது. விபத்தை நேரில் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து பேருந்தையும் பயணிகளையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அமைச்சர் வளர்மதி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் அங்கே வந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.

விபத்து குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

விபத்துக்கான காரணம்

விபத்து எப்படி நடந்தது என்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பேருந்தை ஓட்டியவர் பெயர் பிரகாஷ். செல்போன் பேசிக் கொண்டே பேருந்தை ஓட்டியதாகவும், அப்போது அவர் அமர்ந்திருந்த இருக்கை திடீரென கழன்று விட்டதால் அவரால் பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அவரது இரு கால்களும் முறிந்துள்ளது.

-என்வழி செய்திகள்




3 thoughts on “அண்ணா மேம்பாலத்திலிருந்து மாநகர பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம் – செல்போன் பேசியபடி ஓட்டிதால் விபரீதம்!

  1. சுதந்திரன்

    ஏற்கெனவே செல்போன் பேசிக்கிட்டே ரயிலை ஓட்டி விபத்துக்குள்ளாக்குனாங்க, இப்போ பேருந்தும் வந்துடுச்சு. அடுத்து விமானம்னு வந்துட கூடாது சாமி.

    — சுதந்திரன்

  2. JB

    //அடுத்து விமானம்னு வந்துட கூடாது சாமி//

    அந்த உயரத்தில் cell signal கிடைக்காதே?

  3. anbudan ravi

    இனிமேல் அரசாங்கம் ஓட்டுனர்கள் கைத்தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது என்று தடை கொண்டு வரும்….சிறு நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும்…பின்பு அனைவரும் மறந்துவிடுவார்கள். ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்தான் எல்லோருக்கும் மூளையில் உரைக்கும்…பின்பு எல்லாம் காற்றில் பறந்துவிடும். கூலிக்கி மாரடிக்கும் எண்ணம் இருக்கும்வரை எதுவும் சரி இருக்காது.

    அன்புடன் ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *