BREAKING NEWS
Search

தலைவர் ரஜினி அரசியல்… மொத்த மீடியாவும் வாழ்த்து!

மீடியாவின் வாழ்த்து மழையில் தலைவர்!

சென்னை: தலைவர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள், பத்திரிகையாளர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

டிசம்பர் 31-ம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை அதிரடியாக அறிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அன்று முதல் தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் எழுச்சி காணப்படுகிறது.

ரஜினியின் அரசியல் பயணத்தில் தங்களை இணைத்துக் கொள்ள பல லட்சம் பேர் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இவர்கள் வசதிக்காகவே www.rajinimandram.org என்ற இணையதளத்தையும், செயலியையும் ரஜினிகாந்த் ஜனவரி முதல் தேதி அறிவித்தார்.

அடுத்த நாளே தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பத்திரிகைகளின் ஆசிரியர்கள், மூத்த செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், செய்தி சேனல் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களையும் சந்தித்தார்.

சென்னை ராடிசன் ப்ளூ ஓட்டலில் நடந்த இந்த சந்திப்பில் 500-க்கும் மேற்பட்ட மூத்த பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சில நிமிடங்கள் சுருக்கமாகப் பேசிய ரஜினி, “நான் அரசியல் கட்சி தொடங்கப் போறதாக அறிவிச்சு இருக்கேன். அதுக்கு உங்க ஆலோசனைகளும் ஒத்துழைப்பும் வேணும். சுதந்திரப் போராட்டம் போல இப்போ இன்னொரு புரட்சிக்கு நான் தயாராகப் போறேன். சுதந்திரப் போராட்டத்துல தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்திருக்கு. அதைப் போல இன்னொரு புரட்சி, போராட்டம் இப்போ நடக்கப் போகுது. அதுக்கு தமிழ்நாடு எனக்கு நிச்சயம் ஒத்துழைப்பு கொடுக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. தமிழ்நாட்டில் இப்போ ஒரு மாற்றம் தேவை என்பது உங்களுக்கும் தெரியும். பார்ப்போம்… இன்னும் போகப் போக நிறைய பேசலாம்!” என்றார்.

பிறகு பத்திரிகையாளர்கள் உட்கார்ந்த இடத்துக்கே சென்று ஒவ்வொருவருக்காக கைகொடுத்து நலம் விசாரித்தார். ‘இதெல்லாம் இருக்கட்டும் சார்… குடும்பத்தைப் பாருங்க.. அவங்களை சந்தோஷமா வெச்சுக்கோங்க. அப்போதான் நாம சந்தோஷமா இருக்க முடியும்’ என ஒரு பத்திரிகையாளருக்கு அறிவுரைத்தார்.

அதன் பின், ஒவ்வொருவரையாக அருகே அழைத்து நிறுத்தி புகைப்படமும் எடுத்துக் கொண்டார் ரஜினி.

புகைப்படம் எடுத்து முடித்ததும், செய்தியாளர்கள் அனைவரும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து தெரிவித்து அவருக்கு மலர்ச்செண்டு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைப் பெற்றார் ‘தலைவர்’ ரஜினிகாந்த்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *