BREAKING NEWS
Search

தைரியமாகச் சொல் நீ, ஊடகன்தானா?

இது ஊடகங்கள் கிழிபடும் காலம்!

மீபத்திய இரு நிகழ்வுகள் ஊடக உலகின் முகத்திரையைக் கிழித்துத் தொங்கவிட்டன. ஒன்று மழை வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களைப் பாராட்ட வந்த இளையராஜாவிடம் ‘பீப் பாடல்’ பற்றிக் கேட்டதும், அதற்கு அவர் “அறிவிருக்கா உனக்கு?’ என்று திருப்பிக் கேட்டது.

அடுத்து, யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை விஜயகாந்திடம் கேட்டு தூ என வாங்கிக் கட்டிக் கொண்டது.

இந்த இரு சர்ச்சைகளிலும் பொதுமக்களின் ஆதரவு ஊடகர்களுக்கு சுத்தமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். முன்பு சமூகத்தின் கண்ணாடியாக மரியாதையுடன் பார்க்கப்பட்ட ஊடகன் ஏன் இன்று மக்களின் வெறுப்புக்குரியவனாகிவிட்டான்..?

இதோ ஒரு வாசகனின் பதில்…

illaya

ரு ஊடகனுக்கு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் வெகு எளிதாக சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும். மற்ற எவரை விடவும் அவனுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பு உண்டு.

டிசம்பர் 29 ஆம் தேதி வெளியான தமிழ் இந்து நாளிதழின் தலையங்கத்தில், “ஊடகர் என்பவர் ஒரு தொழில் நிறுவனத்தின் பிரதிநிதி மட்டும் அல்ல, அவர் மக்களின் பிரதிநிதியும் கூட. மக்களின் குரலே ஊடகர் குரலாகவும் கேள்வியாகவும் வெளிவருகிறது. அப்படித்தான் வெளிவர வேண்டும்” என்று எழுதி இருந்தார்கள்.
“த்தூ” என்று விஜயகாந்த் துப்பும் வரை, நானும் மேலே சொன்ன கருத்தியல் கற்பனையில்தான் மூழ்கி இருந்தேன்.

ஆனால் அன்று சமூக வலைதளங்களில் விஜயகாந்தை ஆதரித்தும் ஊடகங்களை கண்டித்தும் பலதரப்பட்ட மக்கள் பதிவேற்றி இருந்த கருத்துகள் என் முகத்தில் சாணியை கரைத்து ஊற்றியது போல் இருந்தது.

ஊடகங்களின் மேல் ஏன் இத்தனை கோபம் மக்களுக்கு?

ஆழமாக சிந்தித்தேன். இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல என்று என் மனது உணர்ந்தது. இதுவும் கடந்து போம் என்று உதறிவிட்டு அடுத்த அடி எடுத்து வைக்கக்கூடிய அசம்பாவிதம் அல்ல இந்த நிகழ்வு என்று என் மனசாட்சி படபடத்தது.
ஏனென்றால், உண்மையில் இது விஜயகாந்த் சம்மந்தப்பட்ட விஷயம் கிடையாது. அவர் அந்தளவுக்கு தமிழக மக்களின் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தலைவரும் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால், விஜயகாந்த் அளவுக்கு சமூக வலைத்தளங்களில் பதிவர்களால் கழுவிக் கழுவி ஊற்றப்பட்ட வேறெந்த அரசியல் தலைவரும் இருக்க முடியாது. சர்தார்ஜி ஜோக்குகளை மிஞ்சும் அளவுக்கு விஜயகாந்த் ஜோக்குகள் வாட்சப்பிலும் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பிரபலம்.

vijaykanth

விஜயகாந்தை கூட்டணிக்கு அழைப்பவர்கள் சற்று தள்ளி நின்றே பேசுங்கள் என்று அன்புமணி ராமதாஸே கலாய்க்கிறார் என்றால், தேமுதிக தலைவருக்கு சமூகத்தில் உள்ள மதிப்பு என்ன மரியாதை என்ன என்பதை சுலபமாக ஊகிக்க முடியும்.
இப்படி கேப்டனை மூத்திர சந்துக்குள் இழுத்து அடித்து துவைக்கும் பொதுமக்கள், ஒரே நாளில் அவருக்கு ஆதரவாகவும் ஊடகத்துக்கு எதிராகவும் திரும்பினர் என்றால் அதற்கு ஒரு வலுவான பின்னணி இருந்தே ஆக வேண்டும், இல்லையா?

அதுதான் மெதுவாகவும் ஸ்டெடியாகவும் தமிழக ஊடகங்கள் மீது கடந்த பத்தாண்டு காலத்துக்கு மேலாக மக்கள் மனதில் படிந்து மடிந்து வளர்ந்து வந்த வெறுப்பு, கோபம், அதிருப்தி, எரிச்சல், ஆவேசம்.

அறுபது, எழுபதுகளில் ஒரு சில ஊடகங்களும் ஊடகர்களுமாவது ஜனநாயகத்தின் நான்காவது தூணாக துணிவோடும் நேர்மையோடும் சுயநலம் இல்லாமல் செயல்பட்டது நிஜம்.

பணம் என்றைக்குமே மனிதனுக்கு தவிர்க்க முடியாத ஒரு தேவையாக இருந்தாலும், பிறவி எடுத்ததன் பயனே பணம் சம்பாதிப்பதுதான் என்ற எண்ணம் பரவலாக உருவானது அதன் பிறகுதானே. சமூகத்தின் ஏனைய பிரிவுகளை போலவே ஊடகமும் அப்போது திசை மாற தொடங்கியது.

ஊடகன் விருப்பம், ஊடக முதலாளியின் ஆசை, ஆட்சியாளரின் கெட்ட நோக்கம், அதிகார வர்க்கத்தின் பேராசை ஆகியவை ஊடகத்தின் செயல்பாட்டை நிர்ணயிக்கும் சக்திகளாக உருமாற்றம் பெற்றன. அப்படி கட்டமைக்கப்படும் சுயநல விருப்பங்கள் மீது பொதுநல போர்வை போர்த்தி மக்களின் மீது திணிக்கப்படுகின்றன.

இவர்கள் அத்தனை பேரும் உணர மறந்த உண்மை ஒன்றே ஒன்று:
மக்கள் முட்டாள்கள் அல்ல.

ஒரு ஊடகன் அல்லது ஒரு ஊடகம் ஓர் செய்தியை ஏன் சொல்கிறது, ஏன் மறைக்கிறது, ஏன் பெரிது படுத்துகிறது, ஏன் இருட்டடிப்பு செய்கிறது, ஏன் பூசி மெழுகுகிறது, ஏன் எதிர்க்கிறது, ஏன் நியாயப்படுத்துகிறது… என்று எல்லா ஏன்களுக்கும் பதில் அறிந்திருக்கிறார்கள் பொதுமக்கள்.

ஊடகத்தின் கயமைத்தனம் அவர்களை வெறுக்க வைக்கிறது. போலித்தனம் எள்ளி நகையாட தூண்டுகிறது.

உள்ளதை உள்ளபடி உள்நோக்கம் இல்லாமல் நமக்கு செய்தியாக தரக்கூடிய நேர்மைத் துணிவுள்ள ஒரு ஊடகமாவது வராதா? என்று அவர்களை ஏங்க வைக்கிறது.

இந்த சைக்கிள் கேப்பில் “நடுநிலை” என்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் பல ஊடக நிறுவனங்களின் சாயம் சீக்கிரமே வெளுத்து விடுகின்றன.

நடுநிலை என்பதே மோசடி நிலைதானே. “நீங்கள் நன்மையின் பக்கமா? தீமையின் பக்கமா?” என்று கேட்பவரிடம் ”நான் நடுநிலை” என்று சொல்லிப்பாருங்கள். உங்களை அட்டைப்பூச்சியை போல் பார்ப்பார்.

ஒன்று மக்களின் பக்கம், அல்லது மக்களின் எதிரிகள் பக்கம். இதில் நடுநிலை எங்கிருக்கிறது?

உண்மை என்ன என்றால் ஒவ்வொரு செய்தியின் பின்னாலும் ஊடகனுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.

நடுநிலை தொப்பி போட்டு நமது எம்ஜிஆருக்கு போட்டியாக எழுதி வரும் தினமணியின் இணைய தளத்தில், ஜெயாவை ஆதரித்து ஆசிரியர் வைத்யநாதன் எழுதிய தலையங்கங்களின் கீழே தினமணி வாசகர்கள் புரட்டி எடுக்கிறார்கள். கண்டன சத்தத்தில் ஜால்ரா சத்தம் அடியோடு அமுங்கி விடுகிறது. எத்தனை பேரின் கருத்துகளைை நீக்க முடியும்?

”ஊடகர் குரல் மக்களின் குரலாக வெளிவர வேண்டும்” என்று சொல்லும் தமிழ் இந்துவின் பத்திரிகை தர்மம் எப்படி?

அதன் வாசகர் வாக்கெடுப்பு பகுதியில் வெளியான ஒரு சேம்பிளை பாருங்கள், புரியும்:

“சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி குறித்து எழும் கருத்துகளில் முதன்மை வகிப்பது…
• விடாப்பிடி சட்டப் போராட்டத்தின் வெற்றி
• பொய் வழக்குக்கு கிடைத்த தோல்வி
• தொண்டர்களின் விசுவாசமான பிரார்த்தனை”

-இப்படி கேள்விக்குறியாக வளையும் அதிமுக அமைச்சர்களே கூசும் அளவுக்கு இந்து பத்திரிகை சொம்பு அடிக்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு பத்திரிகையாக சொல்லிக் கொண்டே போனால் அறம், அறம் என்று சொல்லி பிழைப்பு நடத்தும் ஊடக அணுகுமுறை ஜேப்படி திருடனுக்கே கோபமூட்டும்.

அரசியல் ஒரு சாக்கடை; அதை தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறிவந்த அறிவுஜீவி சோவின் நோக்கம் காவி என்பது மக்களுக்கு தெரிய வந்தபோது துக்ளக்கை விஜயகாந்த் செய்தார்கள்.

வெகுஜன நடுநிலை பத்திரிகையாக இருந்த துக்ளக் இன்று ஜாதி அபிமானிகள் சிலர் மட்டுமே வாங்கும் அளவுக்கு சுருங்கிப் போனது.

நேர்மையான அரசியல் விமர்சகன் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட மனுஷ்ய புத்திரன் திமுகவில் ஐக்கியமானதும் அவருடைய பல வருட சாயம் வெளுத்தது.

நமது எம்ஜிஆர், முரசொலி ஊடகர்கள் எவ்வளவோ மேல். கட்சி சார்பற்றவர்களாக, வர்க்க சார்பற்றவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் ஊடக பிழைப்புவாதிகளே மிகவும் ஆபத்தானவர்கள்.

காட்சி ஊடகங்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை விளக்கத் தேவையில்லை. தினம் தோறும் பார்க்கிறோம். தொலைக்காட்சி செய்திகளை மக்கள் நம்பும் காலம் மலையேறி விட்டது.

பெரும்பாலான சேனல்கள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இயங்குகின்றன. அல்லது அரசியல் சக்திகளை பகைத்துக் கொள்ள விரும்பாத பிசினஸ் புள்ளிகளின் பிளாட்பாரமாக இயங்குகின்றன. அவற்றில் உண்மை செய்திகளை எதிர்பார்ப்பதைக்கூட விட்டுவிட்டனர் மக்கள்.

சார்பு நிலை இல்லை என பறைசாற்றிக் கொள்ளும் சேனல்களும் உண்மையை சொல்வதாக அர்த்தமில்லை. பாண்டே போன்ற ஊடக புதுப் புலிகள் எதிர்க்கட்சிகளிடம் அரங்கமே அதிரும் அளவுக்கு உறுமுவதும் அம்மாவின் அடிமைகளிடம் மியாவ் சத்தத்துடன் அடங்கிப் போவதும் தமிழ்நாடே தினமும் கண்டுகளிக்கும் காட்சியல்லவா.

மகாராஷ்ட்டிர (முன்னாள்) முதல்வர் அசோக் ராவ் சவான் பற்றி சட்டமன்ற தேர்தல் சமயத்தில் “ஆற்றல் மிக்க இளம் தலைவர்” என்று தலைப்பிட்டு லோக்மத் எனும் மராட்டிய இதழ் லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டது. சவான் பற்றி பல்வேறு சிறப்பிதழ்களையும் வெளியிட்டது. இவை எதுவும் விளம்பரம் என்று குறிக்கப்படாமல், செய்தியை போலவே வெளியிடப்பட்டது பின்னர் அம்பலமாகி நாறியது. (கவரேஜ் நியூஸ்).

கவர் வாங்கிக்கொண்டு செய்தி போடும் போக்கு பெரும்பாலான ஊடகங்களில் மலிந்து கிடக்கிறது. தமிழ்நாட்டில் அதுபோல் யாரேனும் ஆய்வு செய்தால் இன்னும் மோசமான மேலிடத்து கவர் செய்தி கலாசாரத்தை அம்பலப்படுத்த முடியும்.

நம்மிடம் ஊதியத்துக்கு வேலை பார்க்கும் ஊடகன் என்ன கவர் வாங்குவது, அதை நாமே வாங்குவோம் என்று ஊடக முதலாளி (சில நிறுவனங்களில் அவருக்கே தெரியாமல் நிர்வாகி) சிந்தித்ததன் விளைவுதான் ஸ்பான்சர் பக்கங்கள்.
இதில் செய்தி, விளம்பரம், விற்பனை, நிர்வாகம் ஆகிய அனைத்து பிரிவுகளுக்கும் சதவீத பங்கு உண்டு.

இது வாசகனுக்கு தெரியும்போது அவன் விஜயகாந்தாக மாறுவதில் என்ன விந்தை?

kevin-carter-vulture copy

தென்னாப்ரிக்காவை சேர்ந்த கெவின் கார்ட்டர் எனும் ஊடகர் சூடான் செல்கிறார். பஞ்சம் பட்டினியால் உறைந்து போன அந்த மண்ணில் எலும்பும் தோலுமாக சிறுமி ஒருத்தி தவழ்ந்து போகிறாள். பட்டினி எந்த நேரமும் அவள் உயிரை குடிக்கக்கூடும். அந்தக் கணத்துக்காக சற்று தொலைவில் ஒரு கழுகு காத்திருக்கிறது. அதற்கும் பசி.
இரண்டையும் கவனிக்கிறார் கெவின். கேமராவின் சட்டகத்தினுள் இருவரும் வரும் வரை காத்திருந்து போட்டோ எடுக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் படம் வெளியாகிறது. உலகமே கண்டு கண்ணீர் வடிக்கிறது. அந்தப் படம் 1994-ம் ஆண்டுக்கான புலிட்சர் விருது பெறுகிறது.

படத்தில் இருக்கும் அந்தச் சிறுமி என்ன ஆனாள்?

உலகெங்கும் பலரும் திரும்பத் திரும்ப இந்த கேள்வியை கேட்கிறார்கள்.

கழுகின் கூரிய அலகில் சிறுமியை காப்பாற்றாமல் போட்டோ மட்டும் எடுக்க உனக்கு எப்படி மனம் வந்தது? என்று கெவினை விமர்சிக்கிறார்கள்.

மனதுக்குள் சுனாமியாய் சுழன்றடித்த அந்த கேள்வியின் தாக்குதல் தாளாமல் கெவின் தற்கொலை செய்கிறார். போட்டோ வெளியானது 1993 மார்ச். விருது கிடைத்தது 1994 ஏப்ரல். கெவின் இறந்தது அதே ஆண்டு ஜூலை.

சாவதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தின் முதல் வரி:

I AM REALLY REALLY SORRY.

கெவின் கார்ட்டருக்கு கொஞ்சம் மனசாட்சி இருந்தது.

ஊடகனே உனக்கு?

சுய பரிசோதனை செய்து கொள்ள இதைவிட நல்ல சந்தர்ப்பம் உனக்கு கிடைக்கப் போவதில்லை.

நன்றி, விஜயகாந்த்.

அஹமத்

Reviews

 • 10
 • 10
 • 10
 • 10
 • 10
 • 10

  Score
3 thoughts on “தைரியமாகச் சொல் நீ, ஊடகன்தானா?

 1. குமரன்

  உண்மையை வெகு நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார்.

  பத்திரிகைகளில் வந்த செய்தி அப்பட்டமான உண்மை என்று கருதிய காலம் மலை ஏறிவிட்டது. அண்மைக் காலத்து விஞ்ஞான வளார்ச்சி பொய்யைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. வலைத்தளங்களும், கைபேசிகளிம், முகநூல், டுவிட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவையும் கிராமத்து மக்களிடையே கூடத் தகவலை உடனுக்குடன் பரிமாறும் வசதியை ஏற்படுத்திவிட்டது. அங்கும் கூட, நம் மக்களில் சிலர் ஆர்வக் கோளாறால்/ சமுதாயச் சிந்தனை இல்லாமையால், வதந்திகளையும் போலி-உண்மை-கண்டுபிடிப்புகளையும் பரப்பும் அளவுக்கு இருப்பது வருத்தம் தந்தாலும், இதுவும் கடந்துபோகும், இவர்களும் மக்களால் இனம் காணப்பட்டு ஒதுக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  ஜெயலலிதா வெள்ள நிலையை வானிலிருந்து ஆய்வு செய்து, வாட்ஸ்அப்பில் ‘மக்களிடம் உடனிருப்பேன்’ என்றால் அதையும் மக்கள் அப்பாவியாக நம்பி விடுவார்கள் என்று எண்ணினால், அது தவறு என்று மக்கள் நிரூபிக்கிறார்கள்.

  ஏழை சொல் அம்பலம் ஏறாது. நம்மால் என்ன செய்ய முடியும் என்று தன் வேலையைப் பார்த்துப் போன சாதாரண மனிதன் இன்று தன் எண்ணத்தை எளிதாகப் பதியும் வசதியும், அனானியாகப் பதியும் வசதியும் வந்ததால், ஒவ்வொரு குடிமகனும் கருத்துச் சுதந்திரத்தை அடைந்திருக்கிறான். (கொன்சம் யோசித்தால், இந்தக் கட்டுரையை எழுதியவரும் கூட, நானும் கூட அப்படித்தான் இருந்திருப்போம்) இன்று நம் அனைவரது கருத்தும் அம்பலம் – அது சிறியதானாலும் – ஏறுகிறதே!

  இனியும் நம் மக்களிடம் போலியும் புரட்டும் எடுபடாது. இச் சூழலில் கவர் வாங்கிக் கட்டுரை எழுதும் ஊடகர்கள் திருந்துவதைத் தவிர வேறு வழி இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *