BREAKING NEWS
Search

இசைஞானி இளையராஜாவால் இயக்குநரானேன்! – மணிவண்ணன்

இசைஞானி இளையராஜாவால் இயக்குநரானேன்! – மணிவண்ணன்

_MG_6329

சென்னை: என்னை இயக்குநராக்கியது இசைஞானி இளையராஜாதான், என்றார் இயக்குநர் மணிவண்ணன்.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிப்பட இயக்குநராக, சிறந்த நடிகராக திகழ்பவர் மணிவண்ணன். கோபுரங்கள் சாய்வதில்லை தொடங்கி, நூறாவது நாள், 24 மணி நேரம், ஜல்லிக்கட்டு, முதல் வசந்தம், வாழ்க்கைச் சக்கரம், இங்கேயும் ஒரு கங்கை, விடிஞ்சா கல்யாணம், பாலைவன ரோஜாக்கள், தீர்த்தக்கரையினிலே என ஏராளமான படங்களை இயக்கியவர்.

1994-ல் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை பிரமாண்ட வெற்றிப் படமாகவும், அரசியல் எள்ளலுக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாகவும் திகழ்கிறது.

இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை நாகராஜசோழன் எம்ஏ, எம்எல்ஏ  என்ற தலைப்பில் இயக்கி வருகிறார். இயக்குநராக இது அவருக்கு 50 வது படம்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது. ஏராளமானோர் திரண்டு வந்து விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது இயக்குநர் மணிவண்ணனின் பேச்சு. இதுவரை இப்படியொரு பேச்சைக் கேட்டதில்லை எனும் அளவுக்கு அரசியல் நையாண்டியும் உணர்ச்சிமயமானதாகவும் அமைந்தது அவரது பேச்சு.

மணிவண்ணன் பேசியதாவது:

“நானெல்லாம் இயக்குநராவேன்னு எங்க டைரக்டர் பாரதிராஜா நம்பவே இல்ல. ஏன்னா அவருக்கு அவரைத் தவிர யாருமே இயக்குநர் இல்லேன்னு நினைப்பு. இதுல அவர் எங்கே எனக்கு வாய்ப்புக்கு சிபாரிசு செய்யப் போகிறார்…

இளையராஜாவால் இயக்குநர் ஆனேன்…

அப்போல்லாம், பாரதிராஜா படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும்போது, அவருக்கு பாடலுக்கான சூழ்நிலையை சொல்வது, பாடல் வரிகளை எழுதி வாங்குவது என அத்தனை வேலைகளையும் நான்தான் செய்து வந்தேன். ஒரு முறை அவர்தான் என்னை தயாரிப்பாளர் கலைமணிக்கு அறிமுகப்படுத்தி, நம்ம பையன்தான். நல்ல திறமை இருக்கு. ஒரு வாய்ப்பு கொடுங்கன்னு சொல்லி கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். இளையராஜாவாலதான் நான் இயக்குநரானேன்.

ஆனா இன்னிக்கு அந்த இசைஞானியை இந்தப் படத்துல பயன்படுத்த முடியல. காரணம் பட்ஜெட். இந்தப் படத்து பட்ஜெட் அதுக்கு இடம் கொடுக்கல. ஜேம்ஸ் வசந்தனைப் பயன்படுத்தியிருக்கேன்.

அமைதிப் படை 2-ம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். ஆமா.. இது அரசியல்படம்தான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், ஆனால் சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் வசனங்களும் அப்படித்தான்.

ஒரு ஆசியரைப் பற்றி படமெடுத்தால் பள்ளி, மாணவர்கள், ஆசிரியர்களைப் பற்றி சொல்வது போல,  ஒரு விவசாயியைப் பற்றிய படத்தில் விவசாயம், விவசாயி நிலையைச் சொல்வதுபோலத்தான் இதுவும்.

யாருக்கும் பயப்படவில்லை

அரசியலையும் அரசியல்வாதிகளையும் விமர்சிப்பதால் அச்சுறுத்தல் வருமே என்றெல்லாம் நான் பயப்படவில்லை. காரணம் இழப்பதற்கு எதுவுமில்லை, உயிரைத் தவிர. என்ன போயும் போயும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் மூலம் அது போகுமே என்ற வருத்தம்தானே தவிர வேறொன்றுமில்லை.

அப்படி எனக்கு என்ன நேர்ந்தாலும், என் உடலை புலிக்கொடி போர்த்தி எடுத்துச் செல்லுமாறு என் தம்பி சீமானை கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால்… மவனே… என் வீட்டு மீது ஒரு கல் விழுந்தாலும், இந்த தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் மேடை போட்டுப் பேசமுடியாத நிலை ஏற்படும். புலிப்படை அதைப் பார்த்துக் கொள்ளும்.

50 நாளில் நேர்த்தியாக படமெடுக்கலாம்…

சரியாக திட்டமிட்டுப் படமெடுத்தால் ஒரு நல்ல, பெரிய படத்தை வெறும் 50 நாட்களில் எடுத்து முடிக்கலாம்.

நான் இளைஞன் என்ற ஒரு படத்தில் நடித்தேன். பெரிய பெரிய செட் போட்டிருந்தார்கள். பின்னி மில் முழுக்க செட்கள்தான். நானும் அந்தப் படப்பிடிப்புக்கு போவேன். நாள் பூரா சும்மாதான் உட்கார்ந்திருப்பேன். எப்போதாவது கூப்பிடுவார்கள். சார், டிபன் சாப்பிடுங்க என்பார்கள். இப்படித்தான் அந்தப் படப்பிடிப்பு போனது. படம் வெளியான பிறகு, அந்தப் படம் முழுக்க தேடிப் பார்த்தேன். அந்த செட்களில் ஒன்றைக் கூட பார்க்க முடியவில்லை!

-இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

-என்வழி சினிமா செய்திகள்
2 thoughts on “இசைஞானி இளையராஜாவால் இயக்குநரானேன்! – மணிவண்ணன்

  1. srikanth1974

    திரு.மணிவண்ணன் அவர்களுக்கு ‘ சார் உண்மையாகவே உங்களைப் பாராட்டனும் காரணம் உங்களின் ராசா மகன் படத்திற்குப் பிறகு வேறு உங்கள் படம் எதற்கும் நான் இசையமைக்க மாட்டேன் என்றுக் கூறிய இசைஞானியை இன்று நீங்கள் பாராட்டுகிறீர்கள் .அவரால்தான் நான் இயக்குநர் ஆனேன் என்று தங்களின் விசுவாசத்தையும் வெளிப்படுத்துகிறீர்கள் உங்களின் இந்த பெருந்தன்மைக்கும்,உயர்ந்த குணத்திற்கும்,என்றைக்கும் நீங்க நல்லா இருக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.ஆனால் இதெல்லாம் திரு.இளையராஜா அவர்களுக்கு என்றுமே புரியாது.

  2. Karthik

    வாழ்க மணிவண்ணன், சீமான் மற்றும் நாம் தமிழர்…. நம்மவர் சீமான் அண்ணனுக்கு தனது ஆதரவுகளை தெரிவித்து புலிப்படையை மேலும் வலுவடைய செய்ய வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *