BREAKING NEWS
Search

‘மடைதிறந்து….’ – இது மணிவண்ணன் பாட்டு!

‘மடைதிறந்து….’ – இது மணிவண்ணன் பாட்டு!

999406_562004880504672_2023300094_n

நிறைய பேருக்கு தெரியாத இன்னொரு விஷயம்… மணிவண்ணன் ஒரு தேர்ந்த கவிஞர் என்பது.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒரு வெள்ளைத் தாளில் ஆறிலிருந்து பத்து வரிகளுக்குள், தன் மணிமணியான கையெழுத்தில் நறுக்குத் தெறித்த மாதிரி கவிதைகள் எழுதி வைப்பார். அதை தொகுக்கும் திட்டமும் அவருக்கிருந்தது.

சினிமாவில் அவர் தனது ஆரம்ப நாட்களிலேயே ஒரு அற்புதமான பாடலை எழுதியுள்ளார். அந்தப் பாட்டுதான் ‘மடை திறந்து தாவும் நதியலை நான்….’ இதுகுறித்து அவரே ஒரு முறை என்னிடம் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள அட்லாண்டிக் ஓட்டல் அன்றைக்கு ரொம்ப பிரபலம். இங்குதான் நிழல்கள் பட கம்போஸிங் நடந்ததாம். பாடலுக்கான சூழலை ஏற்கெனவே இளையராஜாவிடம் சொல்லிவிட்டிருந்தார் பாரதிராஜா. பாட்டெழுத கவிஞர் வாலி வரவேண்டும். ஆனால் தாமதமாகிவிட்டது.

மணிவண்ணன் கவிதை எழுதுவது ராஜாவுக்குத் தெரியும். எனவே, “வாய்யா மணி, இந்த ட்யூனுக்கு நீயே எழுது பார்க்கலாம்,” என்றாராம்.

அடுத்த நிமிடம் விறுவிறுவென ‘மடை திறந்து தாவும் நதியலை நான்…’ என பல்லவியை எழுதியிருக்கிறார். அடுத்து முதல் சரணத்தையும் எழுதிக் கொண்டிருந்தபோது, வாலி வந்துவிட்டார்.

உடனே, தான் எழுதியதை அப்படியே சுருட்டிக் கொண்டு அமைதியாக ஒதுங்கிக் கொண்டார் மணி. ‘என்ன ராஜா… ட்யூன் ரெடியா… பாட்டு கூட எழுதிட்டீங்க போல..’ என்றாராம் வாலி.

‘அது ஒண்ணுமில்லண்ணா… நீங்க எழுதுங்க…’ என்று மீண்டும் ட்யூனை வாசித்தார் ராஜா.

வாலி எழுத ஆரம்பித்தார். பல்லவியை வாசித்துக் காட்ட ராஜாவுக்கு பிரமிப்பு. மணிவண்ணனுக்கோ இன்ப அதிர்ச்சி.

ஆம்.. வாலி எழுதியது,

“மடை திறந்து தாவும் நதியலை நான்…
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்…”

-அப்படியே நிறுத்திவிட்டு, மணிவண்ணனை அழைத்து, அவர் எழுதிய காகிதத்தை வாலியிடம் கொடுத்தார் ராஜா.

வாலி அடுத்த நொடி, ‘ஆஹா.. பிரமாதமா எழுதியிருக்கேய்யா… இதையே பயன்படுத்திக்கலாமே ராஜா… நல்லாருக்கு,” என்று கூறிவிட்டார்.

ஆனால் மணிவண்ணன், ‘இல்ல வேணாங்கணா… நீங்க எழுதினதாவே இருக்கட்டும். உங்க வரிகளையே பயன்படுத்தலாம்..’ என, வாலி பிடிவாதமாக, மணிவண்ணன் எழுதிய முதல் சரணத்தை அப்படியே வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்.

இரண்டாவது சரணத்தை மட்டும் அவர் எழுதினார். பாடலுக்கு மணிவண்ணன் பெயரையே போடச் சொல்லி வற்புறுத்தினார் வாலி. ஆனால் அதை கடைசி வரை மறுத்துவிட்டு, கவிஞர் பெயரிலேயே வரட்டும், அதுதான் இயக்குநருக்கும் பிடிக்கும் என்று கூறினார் மணிவண்ணன்.

அதன் பிறகு மணிவண்ணனின் பல படங்களுக்கு பாடல் எழுதினார் வாலி!

அதேபோல மணிவண்ணன் சொந்தக் குரலில் பாடல்களும் பாடியுள்ளார். அப்படி அவர் பாடியவற்றின் எண்ணிக்கை மட்டும் 16. அவற்றில் பூமணி, ஆனந்தப் பூங்காற்றே போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் புகழ்பெற்றவை.

-என்வழி ஸ்பெஷல்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *