BREAKING NEWS
Search

மீண்டும் மகேந்திரன் – இளையராஜா!

மீண்டும் மகேந்திரன் – இளையராஜா!

ilayaraja-mahendiran

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குநர் மகேந்திரன்.

மகேந்திரனும் இளையராஜாவும் இணைந்த படங்கள் தமிழ் சினிமாவின் குறிஞ்சி மலர்கள்.  கதை, இசை, நடிப்பு என அனைத்திலும் க்ளாஸிக் எனும்படி மெச்சத்தக்கதாய் வந்த படங்கள் அவை.

இருவரும் முதலில் இணைந்த படம் ரஜினி – ஷோபா நடித்த முள்ளும் மலரும். அந்தப் படம் இன்றும் தமிழ் சினிமா படம் எடுக்க வரும் அத்தனைப் பேருக்கும் ஒரு பாடமாய் திகழ்கிறது.

ஒரு நல்ல சிறுகதையை அழகிய காவியமாக்கியவர் மகேந்திரன். அதற்கு துணை நின்றது இளையராஜா இசை. அதுதான் உதிரிப்பூக்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்தப் படத்துக்கு நிகரான காவியத்தை தமிழ் சினிமாவில் பார்க்க முடியுமா.. தெரியவில்லை.

ரஜினி இரு வேடங்களில் நடித்த ஜானியை யாராலும் மறக்க முடியுமா? முப்பது ஆண்டுகள் கழித்துப் பார்த்தாலும் கேட்டாலும் தித்திக்கும் காட்சிகள், இன்னிசை…

இன்னும்… பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என இருவரும் இணைந்த படங்களின் இனிமை கண்ணுக்குள் நிற்கிறது.

ஆனால் மகேந்திரன் கடைசியாக இயக்கிய சாசனம் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் மகேந்திரன்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் பிரசாத் லேபுக்கு வந்த இயக்குநர் மகேந்திரன் இளையராஜாவை நேரில் சந்தித்து, தன் படத்துக்கு இசையமைக்குமாறு கேட்க, மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார் ராஜா.

ilayaraja-mahendran

இதுகுறித்து இயக்குநர் மகேந்திரன் கூறுகையில், ‘எனது படங்களில் இரண்டறக் கலந்தது இளையராஜா இசை. இந்தப் படத்திலும் அவரது இசைக்கு முக்கியப் பங்குண்டு. இந்த மாத இறுதியில் பாடல் பதிவு நடக்கிறது,’ என்றார்.

இந்தப் படமும் புதுமைப் பித்தனின் ஒரு சிறுகதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. கோவைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறு நகரத்தில் கதை நடப்பதாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நடுத்தர குடும்பங்களின் பிரச்சினையை தன் பாணியில் சொல்லப் போவதாகவும் மகேந்திரன் தெரிவித்தார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி லோகநாதனின் மகன் பி சஞ்சய் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. மார்ச்சில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இந்தப் படம் குறித்து இளையராஜாவும் மகேந்திரனும் வரும் திங்கள் கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார்கள்.

-என்வழி




2 thoughts on “மீண்டும் மகேந்திரன் – இளையராஜா!

  1. anbundan ravi

    ஜானி மற்றும் உதிரிப்பூக்கள் பாடல்களை இனி இளையராஜாவே நினைத்தாலும் அம்மாதிரி மெட்டுக்கள் போட முடியாது. ஒவ்வொன்றும் முத்துக்கள். இப்புதுபடத்தின் பாடல் வெளியீட்டிற்காக ஆவலுடன் தவம் கிடப்போம்.

    அன்புடன் ரவி.

  2. மிஸ்டர் பாவலன்

    உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து மகேந்திரன் ஒரு படம்
    எடுத்திருந்திருக்கலாம்..

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *