BREAKING NEWS
Search

ஆன்மீக மடங்கள்னாலே ஆயிரம் அசிங்கக் கதைகளப்பா!

 அருணகிரி – நித்தியானந்தன் மோதல்: மடத்திலிருந்து நித்தி அன்ட் கோவைத் துரத்தத் தயாராகும் மதுரை ஆதீனம்!


மதுரை: நித்தியானந்தனை மீறி எதுவும் பேச முடியாத அளவுக்கு அவரது அடியாட்கள் தன்னை கிட்டத்தட்ட சிறை வைத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மதுரை ஆதீனம் அருணகிரி.

மேலும், மதுரை ஆதீன மடத்தின் விதிகளுக்குப் (??) புறம்பாக நித்தியானந்தனும் அவரது ஆதரவாளர்களும் தான்தோன்றித்தனமாக நடந்து வருவதால் கடும் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ள அருணகிரி, நித்தி அன்ட் கோவை மடத்திலிருந்து வெளியேற்றத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விரைவிலேயே அருணகிரி – நித்தியின் ஆன்மீக பேரங்கள், அசிங்கக் கதைகள் பல வெடித்துக் கிளம்பும் சூழல் உருவாகியுள்ளது.

1500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் இளைய வாரிசாக என்று நித்தியானந்தன் நியமிக்கப்பட்டாரோ அன்று முதலே மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிக்குத் தலைவலிதான். இப்போது அது திருகுவலியாக மாறியுள்ளதாக கூறுகிறார்கள் விஷயம் புரிந்தவர்கள்.

நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்கள் என்ற பெயரில் மடத்திற்குள் குவிந்துள்ள 100க்கும் மேற்பட்டோரும் நடந்து கொள்ளும் விதம் ஆதீனத்தை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாம்.

நித்தியானந்தாவை இளைய வாரிசு என்று ஆதீனம் அறிவித்த பின்னர், அவருக்காக ஆதீன மடத்திற்குள் ஒரு ஆபீஸ் போட்டுக் கொடுத்தனர். மேலும் அவரது 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஆதரவாளர்களும் உள்ளேயே தங்கிக் கொள்ள, படுக்க, சாப்பிட வசதியும் செய்து கொடுத்தார் ஆதீனம்.

இந்தக் கும்பல் வந்த பிறகு படிப்படியாக ஆதீன நிர்வாகத்தையே தங்களது பிடிக்குள் கொண்டு வந்து விட்டனர். இவர்களின் அடாவடி ஆதிக்கத்தால், மதுரை ஆதீன மடத்தில் நீண்ட காலமாக வேலை செய்து கொண்டிருந்த சிலர் அங்கிருந்து விரட்டப்பட்டனர் அல்லது விலகிப் போயினர். மதுரை ஆதீனத்தின் அந்தரங்க உதவியாளரும் சகல அதிகாரமிக்கவருமாகப் பார்க்கப்பட்ட வைஷ்ணவியை நித்தியானந்தன் ஆட்கள் தாக்க, அதிலிருந்தே பிரச்சினை வெடித்துவிட்டதாம்.

அதிலிருந்து அருணகிரிக்கும் நித்தியானந்தனுக்கும் உறவு நிலை சரியில்லை என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, பெங்களூரிலிருந்து துரத்தப்பட்ட நித்தியானந்தா, கொடைக்கானலில் முகாமிட்டு ஏதோ செய்து கொண்டிருக்கிறார். அங்கேயே புதிய மடம் அமைக்க இடமும் பார்த்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆட்கள், ஏதோ சினிமாவில் வரும் அடியாள் கூட்டம் போல நடக்க ஆரம்பித்திருப்பதால் மதுரை ஆதீனம் கடும் கோபமடைந்துள்ளாராம்.

மதுரை ஆதீனத்திற்கு்ச சொந்தமான குடியிருப்புகள் சூடம் சாமியார் சந்தில் உள்ளது. இங்கு நித்தியானந்தாவின் ஆட்கள் சிலர் போயுள்ளனர். கைகளில் உருட்டுக் கட்டை மட்டும்தான் இல்லை, டாடா சுமோவில் வரவில்லை. மற்றபடி சினிமாவில் வரும் வில்லன்களைப் போல உடனே இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்று அங்கு குடியிருந்து வருபவர்களை இந்தக் கும்பல் மிரட்டியதாம்.

இதனால் வெகுண்ட அந்த மக்கள் மதுரை ஆதீனத்திடம் இதைக் கொண்டு போனார்கள். இதைக் கேட்டு ஆதீனம் கடும் அதிர்ச்சி அடைந்தாராம். மேலும், மதுரை ஆதீன மடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதீனத்தின் தந்தை படம், அவரது படம் உள்ளிட்டவற்றை  நித்தியானந்தா கும்பலைச் சேர்ந்தவர்கள் கழற்றிப் போட்டு விட்டனராம். நித்தியானந்தன் வழக்கம் போல அசிங்கமாக சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோக்களை மாட்டி வைத்துள்ளனராம். இதுவும் ஆதீனத்தை கடுப்பாக்கியதாம்.

இது போதாதென்று நித்தியானந்தனின் ஆள் ஒருவர், தனது விசிட்டிங் கார்டில் ஆதீனத்தின் படத்தைப் போடாமல் நித்தியானந்தாவின் படத்தை மட்டும் போட்டு வைத்திருக்கிறாராம். இதைப் பார்த்தும் டென்ஷனாகி விட்டாராம் ஆதீனம். என்ன நடக்கிறது இங்கே என்று அவர் நித்தியானந்தன் தரப்பைப் பார்த்து கோபத்துடன் கேட்டதாக கூறுகிறார்கள்.

இதையெல்லாம் விட நித்தியானந்தனுக்கு ஆண்மை உள்ளதா என்பதைக் கண்டறிய கர்நாடகத்தில சோதனை நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர். இதை மதுரை ஆதீனத்திற்கே நேரில் வந்து கொடுத்துள்ளனர். அதை நித்தியானந்தனின் ஆள் ஒருவர் வாங்கியுள்ளார். ஆனால் இது எதுவுமே மதுரை ஆதீனத்திற்குத் தெரிவிக்கப்படவில்லையாம். எதேச்சையாக பேப்பரைப் படித்த போதுதான் இதெல்லாம் மதுரை ஆதீனத்திற்குத் தெரிய வந்ததாம். இதனால் மேலும் கோபமாகி விட்டாராம் மதுரை ஆதீனம்.

நித்தியானந்தனை விட அவரது கூடவே இருக்கும் ஆட்கள் படு மோசமாக இருப்பதாக மதுரை ஆதீனம் கருதுகிறாராம். எனவே இந்தக் கும்பலை ஒட்டுமொத்தமாக ஆதீன மடத்தை விட்டு விரட்டியடிக்க அவர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நித்தியானந்தன் மீதும் அவர் சமீப காலமாக சீற்றமடைந்து வருவதாகவும் தெரிகிறது.

விரைவில் கைலாயம் போகப் போகிறாராம் நித்தியானந்தன். அங்கு போய் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. 15 நாட்கள் டேரா போட்டிருப்பாராம். நீங்களும் வாங்களேன் என்று ஆதீனத்தையும் அழைத்தாராம் நித்தியானந்தன். ஆனால் நான் வரவில்லை என்று பட்டென்று கூறி விட்டாராம் ஆதீனம். இதனால் நித்தியானந்தன் அதிருப்தியில் உள்ளாராம்.

இதெல்லாவற்றையும்விட மிகப்பெரிய அதிருப்தியை மதுரை ஆதீனத்துக்கு உண்டாக்கியிருக்கும் சமாச்சாரம், அவரை வேவு பார்க்க எப்போதும் ஒரு குழுவையே நித்தியானந்தன் நியமித்திருப்பதுதானாம்.

நித்தியானந்தனின் பிஆர்ஓ அனுமதியில்லாமல் மதுரை ஆதீனம் யாருடனும் பேச முடியாதாம். அப்படிப் பேசினாலும், இந்த பிஆர்ஓதான் பக்கத்திலிருந்தபடி அவரைக் கண்காணித்து, உடனுக்குடன் நித்தியானந்தனுக்கு தகவல் சொல்கிறாராம். இதனை சமீபத்தில் அருணகிரி வெளிப்படையாகவே கூறி வருத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்க நீதிமன்றத்தில் நித்தியானந்தனுக்கு தண்டனை என அறிவிக்கப்பட்டால் போதும், உடனே நித்தியை ஆதீனத்திலிருந்து விரட்டிவிடுவார் அருணகிரி என்று அவர் ஆதரவாளர்கள் சொல்ல, ‘ஹாங்… விரட்டுவார் விரட்டுவார்… கைமாறிய கோடிகள் கொஞ்சமா… அதையெல்லாம் உடனே எடுத்து வைக்கச் சொன்னா என்ன பண்ணுவார் அருணகிரி?” என பதிலுக்கு எகத்தாளமாகக் கேட்கிறார்களாம்.

ஆன்மீக மடங்கள்னாலே ஆயிரம் அசிங்கக் கதைகளப்பா.. இந்தப் போலிகளால் உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் ஏக சங்கடமப்பா!

-என்வழி செய்திகள்
17 thoughts on “ஆன்மீக மடங்கள்னாலே ஆயிரம் அசிங்கக் கதைகளப்பா!

 1. குமரன்

  மதுரை ஆதீனம் நித்தியானந்தாவின் “சிறைக்குள்” இருந்து விடுதலை ஆகும் வழி தென்படவில்லை. தான் இமய மலைக்குச் செல்லும்போது மதுரை ஆதீனம் மதுரையில் இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் நித்தியானந்தா மதுரை ஆதீனத்தைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் திருவண்ணாமலையில் தனது ஆட்களிடம் விட்டுவிட்டுப் போகக் கிளம்பிவிட்டாராம், அண்மைத்தகவல் சொல்கிறது!

 2. மு. செந்தில் குமார்

  ஆன்மீக மடங்கள்னாலே ஆயிரம் அசிங்கக் கதைகளப்பா.. இந்தப் போலிகளால் உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் ஏக சங்கடமப்பா!

 3. மிஸ்டர் பாவலன்

  //இந்தப் போலிகளால் உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் ஏக சங்கடமப்பா!//

  சமஸ்க்ருதத்தில் ‘ஏகம்’ என்றால் ‘ஒன்று’ என்று பொருள்.

  ‘ஏகம்’ –> ஹிந்தி – ‘ஏக்’ (ஒன்று)

  ஏக் தோ தீன் சார் பான்ச் சே சாத் ஆட் நௌ தாஸ் கியாரா …பாரா தேரா…

  -== மிஸ்டர் பாவலன் ==-

 4. Krishna

  இது போன்ற “ஆன்மீகவாதி”களிடம் பலர் ஏமாறுவது வேதனை அளிக்கிறது. இது தெரிந்து தான் திருமூலர் திருமந்திரத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்:

  குருட்டினை நீக்கும் குருவினை கொள்ளார்
  குருட்டினை நீக்கா குருவினை கொள்வர்
  குருடும் குருடும் குருட்டாட்டமாடி
  குருடும் குருடும் குழி விழுமாறு

 5. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  பாஷா படப் பாடலை விட்டு விட்டேர்களே.

  ஒரே சந்திரன் ஒரே சூரியன் என்ற பொருளில் வருமே.

 6. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  “ஏகம்” அல்லது “ஏகன்” பற்றிய தகவல்கள் “ஏகத்துக்கும்” இருக்கின்றன. இந்த இடத்தில் சொல்வழக்கில் “ஏகம்” என்பது “அதிக அளவில்” அதாவது “அநேகம்” என்று எதிர்மறையான பொருள் வந்தது சுந்தரத் தமிழின் விந்தையான (திரு)விளையாடல்!

  பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக வருவது மாணிக்க வாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

  இதில் ஒரு பகுதியே சிவபுராணம் ஆகும். சிவ புராணம் என்றால் வழக்கமாக வரும் கதை போன்றதல்ல சிவபுராணம். அது தத்துவ ரீதியான பாடல் ஆகும். “சிவம்” என்கின்ற “முழுமுதல் இறை”யின் தத்துவத்தை விளக்கும் பாடல்.

  சிவ புராணத்தில் பாடும்போது மாணிக்கவாசகப் பெருமான் கூறுவார் :

  “ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க ”

  “ஏகன்” என்பதும் “அநேகன்” என்பதும் அந்த சிவனையே குறிப்பான.

  இது உயரிய தத்துவம் ஆகும்.

  ஏக இறைவனே அநேக இறை மூர்த்தங்களாக, அநேக உயிர்களாக பரிணமிக்கிறான். நாம் காணும் அனைவரும் அனைத்தும் அந்த ஏகனின் பல தரப்பட்ட பல முனைப்பட்ட பரிமாணங்களே.

  இஸ்லாம் இறைவனை ஏகனாகவே கருதுகிறது என்பதை இங்கே கவனத்தில் கொள்க. இந்த ஒரு தடத்தில் இஸ்லாமுக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் அத்வைதத்துக்கும் விசிஷ்டாத்வைதத்துக்கும் தத்துவ ரீதியான ஒற்றுமை உண்டு.

  இதைத்தான் திருக்கார்த்திகைப் பெருவிழா அன்று திருவண்ணாமலையில் திருவிழாவாகவே காண்கிறோம். காலை பரணி தீபத்தின்போது சந்நிதியில் பரணி தீபம் என்ற சிறு குண்டத் தீபத்தில் இருந்து ஏற்றப் படும் ஐந்து தீபங்கள், அநேகன் என்ற பரிமாணத்தைக் குறிக்கும். அவை மூலவர் சன்னிதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே வைக்கப்படும். மாலை அந்த ஐந்து தீபங்களும் இறை சந்நிதியில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே தீபமாகக் கொண்டுவரப்பட்டு “மகாதீபம்” என்ற பெருங்குண்டத்தில் ஏற்றப் படும்.

  மகாதீபம் ஏற்றப் படும் அதே வேளையில் மலை மீது அகண்ட குண்டத்தில் மலைதீபம் ஏற்றப் படும். அதே வேளையில் நகரெங்கும், உலகெங்கும் அன்பர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

  இங்கே “ஏகன்” “அநேகன்” ஆகுதலும் “அநேகன்” “ஏகன்” ஆகுதலும் அதே “ஏகன்” மீண்டும் “அநேகன்” ஆகுதலும் தீபஜோதி வடிவில் மாறி மாறி நிகழ்ந்து …. உயரிய இறைதத்துவத்தை ஆண்டாண்டு தோறும் மீண்டும் மீண்டும் பன்னெடுங்காலமாக நிறுவி வருகின்றன.

  இறைவனில் இருந்து உருவான பல்லுயிரும் மீண்டும் இறைவனில் கலத்தலும், பின்னர் மீண்டும் உருவாகி பல்கிப் பெருத்தலும், மீண்டும் இறையிலேயே கலத்தலும் மாறி மாறி தொடர்ந்து நடக்கின்றன.

  உபரித்தகவல்கள்:

  1 . “ஏகன்” என்ற பெயரில் அஜீத் படம் ஒன்று உண்டு!
  ௨. “திருவிளையாடல்” திரைப் படத்தில் வரும் முதல் பாடலில் ஆரம்ப வரிகளான
  “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
  இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க”
  எனத் துவங்கி …
  “சிவன் சேவடி போற்றி”
  என்பது வரை வரும் வரிகள் சிவபுராணத்தில் இருப்பனவே.

 7. மிஸ்டர் பாவலன்

  மதிப்பிற்குரிய அறிஞர் குமரனின் வல்லிய விளக்கத்திற்கு
  மிக்க நன்றி. “ஏகன் அநேகன் இறைவன்” என்ற சிவபுராண
  வரிகளை சுட்டிக் காட்டி அதற்கு திருவண்ணாமலை தீபம்
  உதாரணம் தந்து – விளக்கை வைத்து விளக்கியதால் –
  விளக்கம் என்ற சொல்லிற்கே புதிய விளக்கம் தந்துள்ளார்.

  சைவ சமய சித்தாந்தத்தில் எவ்வளவோ அறிய தத்துவங்கள்,
  பாடல்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கீழே தந்துள்ளேன்.
  எளிய தமிழாக இருப்பதால் பொழிப்புரை எழுதவில்லை. நன்றி.

  சித்தாந்த சாத்திரம் – சங்கற்பநிராகரணம்

  சத்தாய் எவையும் தானே அவித்தை
  தொத்தாது உயர்ந்த தொல்சுடர் மூவா
  இன்ன தன்மையன் ஏகன் அநேகன்
  கன்னர் பெருஞ்சுவை தன்னிற் பிறவாப்
  பெற்றியின் இருந்து பொற்பணி இயல்பினின்
  வான்வழி அனல்நீர் மண்மருந் தன்ன
  மான தாது ஆரைங் கோசத்
  தொகுதி யாக்கப் பகுதிய தொருபுடை
  சுத்தி வெள்ளி ஒத்தன மித்தையிற்
  ……
  -=== மிஸ்டர் பாவலன் ===

 8. குமரன்

  ///எளிய தமிழாக இருப்பதால் பொழிப்புரை எழுதவில்லை. !!!!!!!!! /////

  ///அவித்தை தொத்தாது,
  பெற்றியின்,
  அனல்நீர் மண்மருந் தன்ன,
  மான தாது ஆரைங் கோசத் தொகுதி ,
  பகுதிய தொருபுடை,
  சுத்தி வெள்ளி ஒத்தன மித்தையிற் ////

  இதுவா எளிய தமிழ்?!
  பாவலனுக்கு எளியதாக இருக்கலாம்,
  எம்போல எளியவருக்கு அல்ல!

 9. குமரன்

  எப்போதும் ….

  “எள்ளிய” தமிழை
  எடுத்தாளும் பாவல

  இப்போது …..

  தெள்ளிய தமிழில்
  எடுத்தியம்பும் !

  படிக்கலாம்!

 10. மிஸ்டர் பாவலன்

  நண்பர் குமரன் கேட்டதற்கு இணங்கி பொழிப்புரை:

  முதலில் பாடல்:

  சத்தாய் எவையுந் தானாய் அவித்தை
  தொத்தா துயர்ந்த தொல்சுடர் மூவா
  இன்ன தன்மையன் ஏகன் அநேகன்
  கன்னற் பெருஞ்சுவை தன்னிற் பிறவாப்
  பெற்றியி னிருந்து பொற்பணி யியல்பினின்
  வான்வளி அனல்நீர் மண்மருந் தன்ன
  மான தாது ஆறைங் கோசத்
  தொகுதி யாக்கைப் பகுதிய தொருபுடை
  சுத்தி வெள்ளி யொத்தென மித்தையிற்
  தானென லாகுந் தன்மைத்து ….
  (சித்தாந்த சாத்திரம்)

  சத்தாய் – சத்தியமாய், உண்மையாய்
  எவையும் தானாய் – எல்லாம் சிவமாய் (சர்வம் சிவ மயம்)
  அவித்தை தொத்தாது உயர்ந்த தொல்சுடர் =
  – உண்மையற்றவை சிறிதும் தொடராத படிக்கு உயர்ந்து புகழ் உடைய
  பிரகாசமான ஒளி போன்றாய்
  (குமரன் திருவண்ணாமலை ஜோதி பற்றி எழுதியதை படிக்கவும்)

  மூவா இன்ன தன்மையன் –
  என்றும் பழமை இல்லாத இளமையான தன்மையான சிவ பெருமான்
  (சிவ பெருமான் ஜீவியமாவனவர் என்பது பொருள்)
  ஏகன் அநேகன் – திருவண்ணாமலை ஜோதி போல் ஒன்றானவன்
  பலரானவன் (அண்டம் எங்கும் சிவ மயமே)
  கன்னற்பெருஞ்சுவை தன்னிற்பிறவாப் பெற்றியினிருந்து –
  கன்னல் என்றால் கரும்பு என்று பொருள்.
  கரும்பின் பெரும் சுவை அந்தக் கரும்புக்குத் தோன்றாத இலைய்பு போலத்
  தன்னிடத்தில் உண்டாகிய இன்பத்தைத் தான் அறியாதது போலக்
  காட்சி அளிக்கும் சிவபெருமான் (பற்றற்றவர் சிவன் என்பது பொருள்,
  இது அவர் பிரபஞ்ச லீலையைக் குறிக்கிறது)
  பொற்பணி இயல்பினில் –
  – பொன்தானே பல ஆபரணங்களா யிருந்த தன்மைபோல;
  வான் வளி அனல் நீர் மண்மருந்தன்ன மானதாது ஆறைங்
  கோசத் தொகுதி யாக்கைப் பகுதியது ஒருபுடை –
  பரப்பிரமந்தானே ஆகாசமும், வாயுவும், அக்கினியும்,
  அப்புவும், பிருதிவியும், அவுஷதிகளும் உணவுகளும்,
  இதனாலுண்டாகப்பட்ட தாதுக்களாறும், அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமயமென்கிற ஐங்கோசங்களும்
  ஒரு பட்சம் இவையெல்லாமாகக் கூடியிருக்கிற சரீரத்தின் பகுதியதாயிருக்கும்.இவ்வாறு தோன்றப்பட்ட பிரபஞ்சம் நித்தியமோ, அநித்தியமோ? அநித்தியம் என்றால் அது நித்தியமாய்த் தோன்றுவானேன்
  எனக் கேட்கலாம்? அதற்கு பதில் கீழே!
  சுத்தி வெள்ளி யொத்தென மித்தையில் =
  சுத்தியானது வெள்ளியை யொத்துத் தோன்றிற்றென்று சொல்லலாம், மதிப்பிரமையினாலே அநித்திய மாயுள்ள
  பிரபஞ்சமும் நித்தியமாய் தோன்றும். ஆனால் அந்தப் பரப்பிரமும் இந்தப்
  பிரஞ்சமுந் தன்னில் வேறோவென்னில்;
  தானென லாகுந் தன்மைத்து —
  அந்தப் பரப்பிரமந்தானே இந்தப் பிரபஞ்சமென்று சொல்லுந் தன்மையை
  உடையதாயிருக்கும்.

  -== மிஸ்டர் பாவலன் ==-

 11. மிஸ்டர் பாவலன்

  ஒரு எளிய பாடல் கீழே தருகிறேன். சைவ நெறி பற்றிய Basic
  Knowledge – அடிப்படை அறிவு – இருந்தால் பொருள் உடனே புரிபடும்.

  “பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
  நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்
  துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்
  சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே.”

  நன்றி!

  -== மிஸ்டர் பாவலன் ===-

 12. மிஸ்டர் பாவலன்

  நேரம் இருப்பதால் திருமந்திரத்தின் பொருள் தருகிறேன்:

  “பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்
  நன்மார்க்க சாதன மாஞான சாதனம்
  துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
  சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே. ”

  பொழிப்புரை:

  சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே –
  சுத்த சைவநிலையை அடைய வேண்டுவார் கொள்ளத்தக்க
  முதற் சாதனங்கள்
  இவை என்ன என்ன என்பதை திருமூலர் பரிந்துரைக்கிறார்:
  பொன்னால் சிவசா தனம் – என்றால் என்ன பொருள்?
  பொன்னாற் பொதியப்பட்ட உருத்திராக்கங்களின் மாலை
  (ருத்த்ராக்ஷ மாலை மிகவும் விசேஷமானது. இவை நல்ல
  vibrations கொடுக்கும்)
  பூதி சாதனம் – விபூதி என்னும் இரண்டுமாம்

  ஆக – ருத்திராக்ஷ மாலை, விபூதி – என்ற இரு பொருள்களும்
  சுத்த சைவ நெறி அடைய விரும்புவோருக்கு இன்றி அமையாதவை
  என எடுத்துரைக்கிறார் தெய்வத் திருமூலர்.

  மார்க்கம் என்றால் ‘வழி’ என்று பொருள்.
  புது டெல்லி போன்ற இடங்களில் ‘Rafi marg’ என நீங்கள் பார்த்திருக்கலாம்.

  நன்மார்க்க சாதனம் – நன்மையைத் தருகின்ற சாதனம் – எது?
  ருத்திராக்ஷ மாலை, விபூதி இவை இரண்டும்.

  மாஞான சாதனம் – பெரிய ஞான சாதனமும் – எது?
  ருத்திராக்ஷ மாலை, விபூதி இவை இரண்டும்.

  துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனம்
  – தீய நெறிகள் (துன்மார்க்கம்) பிறக்காதவாறு தடுக்கும் சாதனம் – எது?
  ருத்திராக்ஷ மாலை, விபூதி இவை இரண்டும்.

  (Durmaga Chara – என ஒரு தியாகராஜர் கீர்த்தனை ஸ்ரீரஞ்சனி ராகத்தில்
  உள்ளது. இதை பாம்பே ஜெயஸ்ரீ சிறப்பாகப் பாடி கேட்டிருக்கிறேன்.)

  எனவே – சைவர்களை – சிவனை அடைவதற்கு, சிவநெறி பெருகுவதற்கு
  திருமூலர் சுட்டிக் காட்டும் இரு சாதனங்கள் – ருத்த்ராக்ஷ மாலை,
  விபூதி.

  “மந்திரம் ஆவது நீறு” என்பார் திருஞான சம்பந்தர். நன்றி.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 13. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களுக்கு நன்றி.
  ‘நன்னெறிக்குய்ப்பது நாதன் நாமம் நமச் சிவாயமே’ என்ற சொற்றொடரை நினைவூட்டும் வண்ணம் விளக்கங்கள் அமைந்தன.

  பிறிதொரு பார்வையில், இந்தக் கட்டுரையில் உள்ள படத்தில் காவியும் பொன்கொண்டு பூட்டிய உருத்திராக்க மாலைகளும், திருநீறும் அணிந்தவண்ணம் காட்சிதரும் இருவர். அவர்கள் செயல்களோ வருத்தம் தருவனவாக அமைந்துள்ளன.

  சிவத்தை அடையும் வழியான உருத்திராக்க மாலையும் திருநீறும் திருமந்திரத்தில் சொல்லப்பட்டாலும் கூட…

  இவை அணிவது மட்டும் அல்லாது நன்னடத்தையும் அவசியம் தேவை என்பதை உணர்த்தும் வண்ணமே இந்தக் கட்டுரையில் நம்மை அந்த ஈசன் இந்த கலந்தாய்வுக்கு இட்டுச் சென்றான் என்றே தோன்றுகிறது.

 14. குமரன்

  திருமூலரின் பாடலின் கடைசி வரியான ………

  ///சன்மார்க்க சாதன மாம்சுத்த சைவர்க்கே.///

  என்பதில் உள்ள “சுத்த” என்ற சொல்லே “நன்னடத்தையை உடைய” சைவர்க்கே என்ற பொருளில் அமைந்தது என்றே கருதுகிறேன்.

 15. மிஸ்டர் பாவலன்

  //“சுத்த” என்ற சொல்லே “நன்னடத்தையை உடைய” சைவர்க்கே என்ற பொருளில் அமைந்தது என்றே கருதுகிறேன்.// (குமரன்)

  திரு. குமரன் அவர்களே.. திருமந்திரத்தில் திருமூலர் “நால்வகைச் சைவம்”
  எனக் குறிப்பிட்டு (ஐந்தாவது திருமந்திரத்தில்), அவற்றை “சுத்த சைவம்”,
  “அசுத்த சைவம்”, “மார்க்க சைவம்”, “கடுஞ்சுத்த சைவம்” என விளக்குகிறார்.
  நான் குறிப்பிட்ட “பொன்னால் சிவசா தனம்பூதி சாதனம்” பாடல் அவரது
  ‘மார்க்க சைவம்’ பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது. ஒரு நல்ல விரிவுரை
  நூல் (commentary) படித்த பின் தான் இதைப் பற்றி நான் எழுத முடியும்.
  சுவாமி சித்பவானந்தா ஒரு நூல் வெளி இட்டிருப்பது நினைவு.

  ‘சுத்த’ என்ற சொல்லை மொழிபெயர்க்காமல், இந்த நாலு பிரிவுகளையும்
  (classification) படித்த பின் ஒரு நிலைக்கு வர நான் விரும்புகிறேன். நன்றி.

  -== மிஸ்டர் பாவலன் ===-

 16. மிஸ்டர் பாவலன்

  முதலில் இந்தப் பதிவுகளை அனுமதித்து வெளியிட்டு வரும் நண்பர்
  டாக்டர் வினோவிற்கு மிக்க நன்றி.

  ///‘நன்னெறிக்குய்ப்பது நாதன் நாமம் நமச் சிவாயமே’ என்ற சொற்றொடரை நினைவூட்டும் வண்ணம் விளக்கங்கள் அமைந்தன.///

  எல்லா மதங்களும் ‘நன்னெறி’யை போதிப்பதாகவே அமைந்துள்ளன.
  சைவ நெறி நன்னெறிக்கு பாதையை காட்டுகிறது. நாம ஜெபம் மிகவும்
  பயன் தரும். இத்துடன் மார்க்க சைவத்தில் உருத்திராட்ச மாலையும்,
  விபூதி இவை இன்றியமையாதவை என சுட்டிக் காட்டுகிறது. ஜபம்
  செய்யும் போது உருத்திராட்ச மாலையுடன் செய்வது விசேஷம்.
  திருநீறு சைவர்களுக்கு முக்கியமான ஒன்று. மடத்தில் வாங்குவது நன்று.

  //பிறிதொரு பார்வையில், இந்தக் கட்டுரையில் உள்ள படத்தில் காவியும் பொன்கொண்டு பூட்டிய உருத்திராக்க மாலைகளும், திருநீறும் அணிந்தவண்ணம் காட்சிதரும் இருவர். அவர்கள் செயல்களோ வருத்தம் தருவனவாக அமைந்துள்ளன. ///

  “பதர்களைப் பற்றி எழுத வேண்டாம்” என்பதால் நான் சில கட்டுரைகளைப்
  படித்தவுடன் ஒதுக்கி விடுகிறேன்.

  ///சிவத்தை அடையும் வழியான உருத்திராக்க மாலையும் திருநீறும் திருமந்திரத்தில் சொல்லப்பட்டாலும் கூட…///

  குமரன் அவர்களே.. சைவர்கள் அனைவரும் அறிந்தவை தான் இவை.
  திருமந்திரத்தில் அவற்றின் சிறப்பு வலியுறுத்தப்பட்டு உள்ளது.
  மார்க்க சைவர்களுக்கு இவை அவசியம் வேண்டும். (சுத்த சைவர்கள்,
  கடுஞ்சுத்த சைவர்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்).

  ///இவை அணிவது மட்டும் அல்லாது நன்னடத்தையும் அவசியம் தேவை என்பதை உணர்த்தும் வண்ணமே இந்தக் கட்டுரையில் நம்மை அந்த ஈசன் இந்த கலந்தாய்வுக்கு இட்டுச் சென்றான் என்றே தோன்றுகிறது.///

  மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
  பழித்தது ஒழித்து விடின். (குறள் 280 )

  பரிமேலழகர் உரை:

  மழித்தலும் நீட்டலும் வேண்டா – தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா.

  உலகம் பழித்தது ஒழித்து விடின் – உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின்.

  (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.).

  மணக்குடவர் உரை:

  தவத்தினர்க்குத் தலையை மழித்தலும் நீட்டலும் வேண்டா;
  உலகத்தார் கடிந்தவையிற்றைத் தாமுங்கடிந்து விடுவாராயின்
  . இது வேடத்தாற் பயனில்லை: நல்லொழுக்கமே வேண்டுமென்றது.

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 17. குமரன்

  மிஸ்டர் பாவலன் அவர்களே

  தங்கள் கருத்துக்களுக்கு நன்றி. படிக்கப் பயன் பெரும் வண்ணம் உள்ளன.

  இன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் திருவண்ணாமலை தீபம் பற்றி நான் கூறிய கருத்தை ஒட்டி நிகழ்வுகள்!

  ஒரு ஜோதியில் இருந்தி ஏழு ஜோதிகளை ஏற்றி மீண்டும் ஒரே ஜோதியாக ஏற்றும் நிகழ்வு.

  இங்குமா ஏகன் அநேகன்? !!! நாம் இது குறித்து இங்கே கருத்துப் பரிமாறும் நேரத்தில் இது போன்ற உலகளாவிய நிகழ்வு ஆச்சரியம் தரும் விஷயம் அல்லவா?

  what a coincidence!

  செய்தி இதோ ….

  ///ஹம்ப்டன் கோர்ட் அரண்மனையில் இருந்து ஒலிம்பிக் ஜோதியை தேம்ஸ் நதிக்கு எடுத்து வந்து விட்டார், கடந்த காலத்தில் படகுச் சவாரிப் போட்டியில் தங்கம் வென்ற பிரிட்டிஷ் வீரர் Matthew Pinsent. ஜோதியை இவர் நதியில் எடுத்து வந்தது, பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்குச் சொந்தமான சொகுசுப் படகு ‘குளோரியானா’வில்!

  அரச சொகுசுப் படகை ஆண்களும் பெண்களுமாக 16 படகு செலுத்துவோர், தேம்ஸ் நதியில் செலுத்தியபடி, டவர் பிரிஜ்ஜை அடைவார்கள். இந்த 16 பேரில், ஒலிம்பிக்ஸ் படகு செலுத்தும் போட்டியில் பிரிட்டிஷ் குழுவில் இடம்பெற்ற James Cracknell, Jonny Searle ஆகியோரும் அடக்கம்.

  பிரிட்டிஷ் வீரர் Matthew Pinsent, தம்மிடமுள்ள ஜோதியால் சொகுசுப்படகில் உள்ள கால்ட்ரனில் (அகன்ற வாய் உடைய ஒருவகை இரும்பு பாத்திரம்) சம்பிரதாயபூர்வமாக தீ மூட்டினார்.

  இந்த தீயில் இருந்து 7 இளம் ஆண்களும் பெண்களும் தமது கைகளில் உள்ள ஜோதியை பற்ற வைத்துக் கொள்வார்கள்.

  இந்த 7 இளம் ஆண்களும் பெண்களும், தேம்ஸ் நதியில் பயணித்து, இறுதி இடத்தில் ஜோதியை கொண்டுபோய் சேர்க்கப் போகிறார்கள்.

  இந்த 7 பேரில், 22 வயதான இளம்பெண் Amber Charles, ஜோதியின் தேம்ஸ் நதி ஊர்வலத்தின் இறுதிக் கட்டத்தில் ஜோதியை சொகுசுப் படகில் இருந்து எடுத்துக் கொண்டு சிட்டி ஹாலை சென்றடைவார். அதுதான், ஜோதி ஓட்டத்தின் இறுதி இடம்.

  ஒலிம்பிக்ஸின் துவக்க விழா ஷோ ஆரம்பிக்கும் நேரம்வரை ஜோதி, சிட்டி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும்.

  துவக்க விழா ஷோவில், இந்த ஜோதியால் ஒலிம்பிக்ஸ் கால்ட்ரனில் தீ மூட்டப்படும். ஒலிம்பிக்ஸ் போட்டி முடியும்வரை தீ எரிந்து கொண்டிருக்கும்.///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *