BREAKING NEWS
Search

‘மீன் பிடிக்க’வும் கற்றுக் கொடுங்கள் முதல்வரே!

‘மீன் பிடிக்க’க் கற்றுக் கொடுங்கள் முதல்வரே!

jj-cm

ன்றைய நிலவரப்படி சென்னையில் வசிக்க ஒரு சிறு அறையும், நாளொன்றுக்கு 30 ரூபாயும் இருந்தால் போதும். காலையில் 5 ரூபாய்க்கு சிற்றுண்டி, பிற்பகல் 8 ரூபாயில் பிரமாதமான மதியச் சாப்பாடு, இரவு ஏதாவது சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை. காரணம், அம்மா உணவகங்கள். சும்மா சொல்லக் கூடாது, தரமான – சுவையான உணவு வகைகள், சுத்தமான தயாரிப்பு.

கூலித் தொழிலாளர்கள் முதல் ஐடி பணியாளர்கள் வரை பேதமின்றி அம்மா உணவகங்களில் குவிந்து கிடக்கின்றனர். ஆனால் வெளியில்…ஒரு சாப்பாடு விலை சராசரியாக ரூ 100-ஐத் தாண்டிவிட்டது.

ரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடைக்கிறது. ஆனால் ஓரளவு தரமான அரசிக்குக் கூட கிலோ ரூ 40 வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. காய்கறிகள் விலையோ கற்பனைக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது. விளைவிக்கும் விவசாயிகள் நஷ்டம் நஷ்டம் என்று கூறி விவசாயத்தைக் கைவிட்டு, நிலத்தை ப்ளாட் போடக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் இலவசங்கள், மலிவு விலை உணவுகள்.. காய்கறிகள்… இன்னொரு பக்கம் அசாதாரண வெளிச்சந்தை விலையேற்றம்… அருகி வரும் விவசாயம்!

எத்தனை முரண்பாடுகள்? இதற்குக் காரணம் என்ன?

நமது சமூகக் கட்டமைப்பு சிதைந்து வருவதுதான். படித்தவர்கள் யாரும் கிராமத்திலேயே இருக்கக் கூடாது என்ற சிந்தனை வளர்ந்துவிட்டது. படித்தால் என்ன.. கிராமங்களிலிருந்தபடி விவசாயம் செய்யலாமே என்றால், அதனை பிற்போக்குத்தனம் என்று கூப்பாடு போட கோஷ்டி கோஷ்டியாய் அலைகிறார்கள்.

எல்லாவற்றுக்குமே அரசை / அரசியலைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளும் மனநிலைக்கு பழகிவிட்டார்கள் தமிழக மக்கள். தன் பங்கு என்ன, தான் செய்ய வேண்டியது என்ன என்பதை யோசிக்கவும் மறுக்கிறார்கள்.

இந்த சூழலில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அளிக்கும் சலுகைகளும் இலவசங்களும், மேலும் மேலும் புதிய இலவசங்களுக்கு அவர்களை ஏங்க வைத்துள்ளன.

இலவச ரேஷன் அரிசி… அடுத்து அம்மா உணவகம் வந்துடுச்சி… இப்போ அம்மா மலிவு விலை காய்கறியும் வந்துடுச்சி… மலிவு விலை மினரல் வாட்டரும் கொடுத்துட்டாங்க…. அப்படியே மலிவு விலை டாஸ்மாக், மலிவு விலை பெட்ரோல் பங்க்கையும் ஆரம்பிச்சிட்டா வாழ்க்கை தொல்லையில்லாம ஓடிடும் என சீரியஸாகவே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

malivu-vilai-unavagam

எடுக்கிற முடிவில் உறுதியாக இருப்பவர் என்ற பெயரைச் சம்பாதித்துள்ள முதல்வர், இந்த மாதிரி குறுகிய கால பலன்கள் தரும் திட்டங்களை முதலில் விட்டொழிக்க வேண்டும்.

தமிழகத்துக்கு இப்போதைய இன்றியமையாத தேவை, விவசாயத்துக்குப் பாதுகாப்பும், தண்ணீர் மேலாண்மையும்தான்.

ஆண்டில் 9 மாதங்கள் மழையில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த மூன்று மாதங்களில் கிடைக்கும் மழை நீர் மற்ற 9 மாதங்களுக்கும் பலன் தரும் அளவுக்கு திட்டமிடல் அவசியமாகிறது.

கருணாநிதி முதல்வராக இருந்த 1996-2001 ல் காவிரிப் பாசன மாவட்டங்களில் முழுமையாக ஆறு, கால்வாய் மற்றும் ஏரிகளை மராமத்து செய்தார். அதன் பலன் இன்றும் தொடர்கிறது. ஏனோ மற்ற மாவட்டங்களில் அதைச் செய்யவில்லை.

முதல்வர் ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்திலாவது, தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை முழுவதுமாக மராமத்து செய்ய திட்டங்களை வகுக்க வேண்டும். ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகள், தூர்ந்து அல்லது அழிக்கப்பட்டுவிட்ட நீர்வழித் தடங்களை சீரமைக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் காலத்துக்குப் பிறகு இந்தப் பணி அப்படியே முடங்கிக் கிடக்கிறது. அதனை முழுவீச்சில் ஜெயலலிதா செய்வாரேயானால்…. அம்மா உணவகங்களுக்கோ, மலிவு விலை காய்கறி கடைகளுக்கோ கூட அவசியமிருக்காதே.

இன்னொரு பக்கம், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மக்கள் முன்னெடுக்க, அதன் பலன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும். கோவையில் கிலோ 4 ரூபாய்க்கு வாங்கும் தக்காளியை கோயம்பேட்டில் ரூ 60 க்கு விற்கிறார்கள் என்றால் இடையில் எத்தனை சதவீதம் கொள்ளை லாபம் அடிக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

மன்னார்குடியில் ரூ 22-க்குக் கிடைக்கும் நல்ல பொன்னி அரசி, சென்னையில் ரூ 48-க்கு விற்கப்படுகிறதென்றால்…  இடையில் புகுந்து இவ்வளவு விலையை உயர்த்தும் காரணிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து களைவதுதானே அரசின் பொறுப்பு?

அந்த தலையாய பணியை விட்டுவிட்டு, தயிர் சாதம் விற்றுக் கொண்டிருப்பது,  விவசாயத்தை மியூசியத்தில்  கொண்டுபோய் வைத்துவிடாதா?

அம்மா உணவகங்களும், மலிவு விலை காய்கறிக் கடைகளும் குறுகிய கால நோக்கில் நல்ல விஷயங்கள்தான். தேர்தல் ஆதாயங்களுக்கு வண்ணமிகு பிரச்சாரமாக அமையக் கூடியவைதான். அவை ஒரு பக்கம் தொடரட்டும். அதே நேரம் ஒழுங்கற்றுக் கிடக்கும் இந்த சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சீரமைப்பதுதான் அரசின் பிரதான பொறுப்பு. அது.. தேர்தல் லாபங்களைத் தாண்டி, சரித்திரமாய் நிற்கும் சாதனை.

முதல்வர் கவனம், இந்த சாதனையை நோக்கித் திரும்பினால் தமிழகம் பேறு பெறும்!

விதுரன்
-என்வழி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *