BREAKING NEWS
Search

முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் மரணம்!

கவிஞர் நா முத்துக்குமார் அகால மரணம்!

362cd8cc-3c61-4e82-92dc-a6b4e4eae84f

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை வென்றவர் கவிஞர் முத்துக்குமார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம் ஆண்டு  பிறந்தவர் நா முத்துக்குமார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்தவர், ஆரம்ப நாட்களிலிருந்தே எழுவதில் நாட்டம் கொண்டார். பிரபல இயக்குநர் மறைந்த பாலு மகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் மூலம் வீரநடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்கள் அத்தனைப் பேருடனும் பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ் என அத்தனைப் பேருடனும் மிகவும் நட்பாகவும் இணக்கமாகவும் இருந்தவர் நா முத்துக்குமார்.

குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷுக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்… ‘ பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார்.

அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே… பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார்.

தொடர்ந்து பத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் முதன்மை பாடலாசிரியராகத் திகழ்ந்தார் நா முத்துக்குமார்.

முதல் நிலைப் பாடலாசிரியராக இருந்தாலும், இரு தேசிய விருதுகள் பெற்றாலும் மிக எளிமையாகவும், சிறந்த மனிதராகவும் திகழ்ந்தார். தமிழ் சினிமாவில் எந்த சிறு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத கவிஞர் என்றால் அவர் முத்துக்குமார்தான்.

சிவாஜி படத்தில் அவர் எழுதிய ‘அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா’ வரிகளை மிகவும் ரசித்துப் பாராட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.

சிறந்த கவிஞர் மட்டுமல்ல, வசீகரமான எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். கிராமம் நகரம் மாநகரம், அணிலாடும் முன்றில், சில்க் சிட்டி, வேடிக்கைப் பார்ப்பவன், பால காண்டம் போன்றவை அவர் எழுதிய புத்தகங்கள்.

இவை தவிர பட்டாம்பூச்சி விற்பவன், தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, ஆனா ஆவன்னா, என்னைச் சந்திக்க கனவில் வராதே, குழந்தைகள் நிறைந்த வீடு போன்றவை அவர் எழுதிய கவிதைத் தொகுப்புகள்.

சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றவர், அங்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்று தன் பொறுப்பை நிறைவேற்றினார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

நா முத்துக்குமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மனைவி பெயர் தீபலக்‌ஷ்மி. மகன் ஆதவன். மகள் யோகலட்சுமி. மகள் பிறந்த சில மாதங்கள்தான் ஆகின்றன.

-என்வழி




One thought on “முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் மரணம்!

  1. Rajagopalan

    I dont know what to say..
    He is too young to die..
    Feeling like scolding the god for taking him away..
    RIP Mr Muthukumar.
    Something is happening to tamil industry.
    4th death within 10 days…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *