BREAKING NEWS
Search

ஆழ்துளைக் குழியில் 86 மணி நேரம் போராடி இறந்த குழந்தை!

பரிதாபமாக முடிந்து போன மஹியின் 86 மணி நேர உயிர்ப் போராட்டம்

குர்காவ்ன்: 86 மணி நேரத்திற்கும் மேலாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி மஹியை கடைசியில் உயிரற்ற நிலையில்தான் படையினர் மீட்டெடுத்தனர்.

ஹரியானா மாநிலம் குர்காவ்ன் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மஹி கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறிக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகே அவளின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்தனர். ஆனால் மீட்பு படையினர் இரவு 12.30 மணிக்குதான் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். சிறுமி கிட்டத்தட்ட 2 மணிநேரமாக தன்னைக் காப்பாற்றுமாறு அழுதாள். அதன் பிறகு அழைத்தாலும் பதில் சொல்ல மறுக்கிறாள் என்று சிறுமியின் தந்தை தெரிவித்தார்.

மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக மற்றொரு பெரிய சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க இரவு பகலாக போராடினர். சிறுமி சுவாசிக்க குழிக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வந்தது. மேலும் சிறுமியைக் கண்காணிக்க குழிக்குள் கேமரா அனுப்பப்பட்டது. ஆனால் அதில் சிறுமியின் செயல்கள் தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையே சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு தோன்றிய அப்பகுதியைச் சேர்ந்த ரோடாஷ் தாயல் என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறு தோன்றியது தொடர்பாக விசாரணை நடத்துமாறு குர்கான் மாவட்ட நீதிபதி பி.சி. மீனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று சோர்ந்து காணப்பட சிறுமி, வெள்ளிக்கிழமை மேலும் பலகீனமானாள். இதனால் சிறுமி உயிருடன் மீட்கப்படுவாளா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும் மீட்பு படையினர் மண் சரிவு ஏதும் ஏற்படாமல் இருக்க மிகவும் எச்சரிக்கையுடன் சிறுமி அருகே செல்ல முயன்றனர்.

நேற்று முழுவதும் சிறுமிக்கு அருகே செல்ல முயற்சித்தனர். அவர்கள் முயற்சிக்கு இன்று தான் பலன் கிடைத்தது.

சிறுமி மீட்கப்பட்டாள். ஆனால் அந்த சந்தோஷம் நீண்டநேரம் நீடிக்கவில்லை. அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தும்விதத்தில் சிறுமியின் உயிரற்ற உடலை மீட்புப் படையினர் தூக்கி வந்தனர்.

மஹியின் மரணம், அந்தப் பகுதியை மட்டுமலேல, கடந்த நான்கு தினங்களாக அவள்  உயிர்ப்போராட்டத்தைப் பார்த்து வந்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துவிட்டது.

இந்த மாதிரி போர்வெல்களை அமைக்கும்போது அவற்றை மூடி வைக்க வேண்டும் அடிப்படை விஷயம் தெரிந்தும் அலட்சியம் காட்டும் மக்களை என்னவென்பது?

-என்வழி செய்திகள்




One thought on “ஆழ்துளைக் குழியில் 86 மணி நேரம் போராடி இறந்த குழந்தை!

  1. VAI. GOPALAKRISHNAN

    மிகவும் சோகமான நிகழ்ச்சி. நெஞ்சை உலுக்கிவிட்டது.

    தொலைகாட்சி வழியாக இதைப்பற்றிய செய்திகள் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வந்ததால் பலருக்கும் இது பற்றி தெரியவந்து அனைவரையுமே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இனி இதுபோல மீண்டும் ஒரு சோகம் நிகழாமல் ஏதாவது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *