BREAKING NEWS
Search

கவிஞர் மகுடேசுவரன் பார்வையில் சூப்பர் ஸ்டாரின் லிங்கா!

லிங்கா விமர்சனம்!

-கவிஞர் மகுடேஸ்வரன்

lingaa rev
ணை கட்டுமானத்தின் பின்னே ஆயிரக்கணக்கான தியாகங்களும் கண்ணீரும் உயிர்வேட்கையும் இருக்கின்றன. நிச்சயமாய் அது தனியொருவரால் இயல்வதன்று. ஆனால், ஏதோ ஒரு தனிச்சிந்தை அந்தக் கனவை நனவாக்கும் வெறியோடு செயலாற்றியிருக்க வேண்டும். ஐயன் பென்னிகுக் அத்தகையவர். மேட்டூரில் காவிரியின் குறுக்கேயுள்ள அணையின் பழம்பெயர் ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’. அதில் உள்ளவரான ஸ்டான்லியைப் பற்றியும் அகழ்ந்தெடுக்கலாம். சோலையாறு, பரம்பிக்குளம், காடம்பாறை, ஆழியாறு அணைத்தொடர்களின் பின்னுள்ள கனவும்கூட பொள்ளாச்சி மகாலிங்கத்தின் முன்னோர்கள் கண்ட கனவுகளோடு தொடர்புடையது என்பார்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டவரான காளிங்கராயன், பவானி ஆற்றிலிருந்து எடுப்பித்த கால்வாயின் பின்னுள்ள கனவும் உழைப்பும்கூட அத்தகையதே.

வரலாற்றில் உறைந்திருக்கும் இந்தப் பழைமையுணர்வைத் தீண்டும் ஒரு கதைக்களத்தைத் தேர்வு செய்தமைக்காகவே ரஜினிகாந்த் பாராட்டுக்குரியவர் ஆகிறார். இந்த வயதிலும் அவர் அயரா உழைப்பினராயிருப்பது நம்போன்றவர்க்குப் பாடம்.

இணையத்தில் நம்மவர்கள் உருட்டுவதுபோல் எல்லாம் இல்லை. நல்ல வேகத்தில் அலுக்காமல் நகரும் திரைக்கதைதான். இறைத்த பணம் அத்தனையும் திரையில் தெரிகிறது. பாடல்களின் அரங்கக் களேபரமும் கூட்டு நடனங்களும் நட்சத்திரப் படங்களுக்கேயுரிய களிகள். தமிழ்ப்படங்களில் அப்படியானவற்றைப் பார்த்து நாளாயிற்றுதான். ரஜினியின் நடன அடவுகள் நடைவகையாய்ப் போனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தற்காலப் படமாக்கு முறைகளில் தோற்றப்போலிகளையும் வரைகலைகளையும் பயன்படுத்தி சண்டைக் காட்சிகளையும் நன்கு அமைத்துள்ளனர்.

முற்றலான முகங்கள்கொண்ட பேருடல் நாயகியர் இருவர் ஏற்கும்படியான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். தென்னகச் சந்தையை மனத்திற்கொண்டு மொழிக்கு நால்வர்வீதம் நடிப்புக் கலைஞர்கள் தோன்றுகின்றனர். இசைகோத்தவர் வழமையான ஒன்றைத் தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பெரிய ஆள் என்று நினைக்கிறேன், படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துகிறார்.

வரலாற்றில் நிகழ்ந்ததைப் படக்காட்சியாய்த் தருவது எளிமையன்று. தரவுகள் ஒவ்வொன்றும் மிகச்சரியாய் இருக்கவேண்டும். ‘மூளையை யூஸ் பண்ணு’ என்று 1939-இல் பேசுவதுபோல் வசனம் எழுதக் கூடாது. வெள்ளைக்காரன் காலத்தில் நடக்கும் ஆட்சியர் கூட்டத்தின் பின்னணியில் மொழிவாரி மாநிலங்களாய்ப் பிரிக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வரைபடத்தை மாட்டிவைக்கக் கூடாது.

மற்றபடி, ஒரு நட்சத்திரப் படம் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். லிங்கா – பொழுதாற்றும் நோக்கில் தாராளமாகப் பார்க்கலாம்!
3 thoughts on “கவிஞர் மகுடேசுவரன் பார்வையில் சூப்பர் ஸ்டாரின் லிங்கா!

 1. குமரன்

  கல்லணையைக் கட்டிய கரிகால்வளவன் எத்தனைக் கனவுகளோடும், எத்தனை அர்ப்பணிப்பு உணர்வோடும் கட்டியிருப்பான் என்பதைக் கதைக்களமாகப் படித்திருக்கலாமோ?

  படம் வந்தவுடனே பலவித விமரிசனங்கள் வருவது இயல்பே, அதிலும் ரஜினி என்ற மாபெரும் பிம்பத்தின் படம் என்றால் அப்படி விமரிசனங்கள் வருவது இயல்பே. எது எப்படி ஆயினும் படத் தயாரிப்பாளரோ, வினியோகிப்போரோ,வெளியீட்டாளரோ, திரையரங்கு நடத்துவோரோ மூன்று/ நான்கு நாட்களிலேயே எவரும் லாபம் அடைந்திருப்பது என்பது மன நிறைவே.

  ரசிகர்கள் ஒரு கிளைமேக்ஸ் காட்சியின் தொய்வுக்காக, ஏனைய பகுதிகளின் சுவையை நிச்சயம் மறக்கமாட்டார்கள்.

  “மற்றபடி, ஒரு நட்சத்திரப் படம் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கிறது. அப்படித்தான் இருக்கவும் வேண்டும். லிங்கா – பொழுதாற்றும் நோக்கில் தாராளமாகப் பார்க்கலாம்!”

 2. M.MARIAPPAN

  திரு குமரன் கிளைமாக்ஸ் காட்சி ஒன்னும் பெரிய மேட்டரே இல்லை . ஜாக்கி ஜான் செய்தால் மட்டும் கை தட்டி ரசிக்கிறார்கள்,தலைவர் 65 வயதிலும் பழைய ஸ்டைலில் பைக்கில் வருகிற அழகே தனி . படத்தில் ரசிக்க கூடிய visayam எவ்வளோவோ உள்ளது . so டோன்ட் ஒரி be ஹாப்பி . endrum தலைவரின் வெறியன் .

 3. மிஸ்டர் பாவலன்

  //முற்றலான முகங்கள்கொண்ட பேருடல் நாயகியர் இருவர் ஏற்கும்படியான நடிப்பை வழங்கியிருக்கின்றனர். ///

  “கலைச் செல்வி” த்ரிஷா அனுஷ்காவின் ரோலை இளமையாகவும்,
  புதுமையாகவும் செய்திருப்பார் என்பது தான் பாவலனின் கருத்து!
  அவரை பேரழகி என்பார்களே தவிர பேருடல் என யாரும் சொல்ல
  மாட்டார்கள்.. டைட்டில் காட்சியிலே த்ரிஷா பேர் போடும் போது
  கரவொலி கடலலை போல் எழும் என்பது உவமை அணி எனக் கொள்க..

  -=== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *