BREAKING NEWS
Search

லிங்கா விவகாரம்… சிங்காரவேலன் கும்பலை கேள்விகளால் திணறடித்த செய்தியாளர்கள்!

லிங்கா விவகாரம்… சிங்காரவேலன் கும்பலை கேள்விகளால் திணறடித்த செய்தியாளர்கள்!

lingaa-movie-stills-18

லிங்கா விவகாரம் தொடர்பாக நேற்று விநியோகஸ்தர்கள் சிலர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினர் சிங்காரவேலன் தலைமையில் வந்த விநியோகஸ்தர்கள்.

லிங்கா நஷ்ட ஈடு கோரியும், லிங்கா தொடர்பான உண்மைகளைச் சொல்லவும் இந்த பிரஸ் மீட் என்று நேற்று அறிவித்திருந்தனர். இதில் லிங்காவின் அனைத்து விநியோகஸ்தர்கள், வெளியிட்ட தியேட்டர்காரர்கள் பங்கேற்பார்கள் என்று கூறியிருந்தனர்.

ஆனால் வழக்கம் போல, லிங்கா விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்து அந்தப் படத்துக்கும் ரஜினிக்கும் எதிராகப் பேசிய சிங்காரவேலன் குழுவினர் மட்டுமே பங்கேற்றனர். தியேட்டர்காரர்கள் ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு, அவர்கள் வரமாட்டார்கள்.. நாங்கள்தான் பேசுவோம் என்றனர்.

உங்கள் போராட்டம் நஷ்ட ஈடு கேட்டு நடத்தப்படும் போராட்டமாகத் தெரியவில்லையே… ரஜினியின் இமேஜை அவமதிக்கும் போராட்டமாகத்தானே தெரிகிறது.. ஏன் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்கள் சங்கங்கள் உங்களுக்கு உதவ முன்வரவில்லை? என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் மழுப்பினர்.

படம் வெளியான முதல் வாரத்திலிருந்து இப்படி பிரச்சாரம் செய்ததன் நோக்கம் என்ன? உண்மையான விநியோகஸ்தர்கள் இப்படிச் செய்வார்களா? என்று இன்னொரு நிருபர் கேட்டார். அதற்கும் பதில் இல்லை.

திரும்பத் திரும்ப,  நாங்கள் சொல்வதைக் கேட்டு எழுதுங்கள். அதற்காகத்தான் உங்களை அழைத்தோம் என்றனர். நீங்கள் சொல்வதை மட்டும் எழுத நாங்கள் வரவில்லை. கேள்விக்கு சரியான பதில் சொல்ல வேண்டும் என்றனர் பத்திரிகையாளர்கள்.

லிங்கா பிரச்சினையில் அரசியல்வாதிகள் எதற்காக வருகிறார்கள்…? நீங்கள் முறையாக வேந்தர் மூவீஸ், அடுத்து ஈராஸ் நிறுவனத்தைத்தானே அணுகியிருக்க வேண்டும்… எடுத்தவுடன் ரஜினியை இழுப்பதில் என்ன நியாயம்? உலகிலேயே சினிமா நஷ்டத்துக்கு பணத்தைத் திருப்பித்தந்த ஒரே நடிகர் ரஜினிதான். அவரைப் போய் இப்படி அவமானப்படுத்துகிறீர்களே என்றபோது, மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தனர்.

லிங்காவை மொத்தமே 40 லட்சம் பேர்தான் பார்த்திருப்பதாக ஒரு அறிக்கை தந்தனர். சென்னையில் மட்டுமே 40 லட்சம் பேர் பார்த்த படமாச்சே… தமிழகத்தின் பிற பகுதிகளில் பார்த்தவர்களையும் சேர்த்தால் கோடியைத் தாண்டுமே என்று நிருபர்கள் கேட்டபோது, சென்னை நகரில் பார்த்தவர்களை இதில் சேர்க்கவில்லை என்றனர்.

தமிழக வசூலில் சென்னை மட்டும் சேராதா.. சென்னையில் வசூலானது என்ன கணக்கு?

எந்த அடிப்படையில் வசூல் தொகை கணக்கிடப்பட்டுள்ளது? முதல் வாரம் முழுவதும் சராசரியாக தியேட்டர்களில் ரூ 250 வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களும் சில அரங்குகளில் ரூ 300 வரை விலை வைத்து விற்றனர். ஆனால் நீங்கள் எந்த அடிப்படையில் கணக்கு காட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த விவரங்களை மெயிலில் அனுப்புகிறோம் என்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் ஒரு கட்டத்தில், கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயரையும் ஊடகத்தின் பெயரையும் சொல்லிவிட்டுத்தான் கேள்வி கேட்க வேண்டும் என்று வற்புறுத்தியபோது, விநியோகஸ்தர்களுக்கும் செய்தியாளர்கள் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. பின்னர், தான் அப்படிக் கூறியதற்காக மன்னிப்புக் கேட்டார் சிங்கார வேலன்.

lingaa-10

லிங்கா நஷ்ட ஈடு கேட்கும் நீங்கள், இதில் அரசியல்வாதிகளை உள்ளே இழுப்பது ஏன்? என்ற போது, “இது ரஜினியை அவமானப்படுத்த அல்ல, அரசியல் தூண்டுதல் இல்லை என்று முதலில் சொன்னார்கள். ஆனால் அது எவ்வளவு பெரிய பொய் என்பதை அவர்களே சில நிமிடங்களில் காட்டிவிட்டனர்.

‘ரஜினி வீடு அருகே மெகா பிச்சைப் போராட்டம் நடத்துவோம். ரஜினியை நம்பினால் பிச்சைதான் எடுக்க வேண்டும்.. அவர் படங்களை வாங்க வேண்டாம்.. எங்கள் போராட்டத்தை  ஒரு பெரிய அரசியல்வாதி தொடங்கி வைக்கப்போகிறார்’ என்று சிங்காரவேலன் கும்பல் அறிவித்தபோது, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

குறிப்பு: இவ்வளவு கேள்வி கேட்டு திணறடித்த செய்தியாளர்களில் பெரும்பாலானோர், கடைசியில் அவர்கள் கொடுத்த பிச்சைப்போராட்ட பிரஸ் ரிலீஸைத்தான் வெளியிட்டனர். பிரஸ் மீட்டில் கேள்விகளால் அவமானப்பட்டு, அம்பலமான விநியோகஸ்தர் கும்பலின் மோசடி குறித்து எதுவும் எழுதவில்லை. அதுதான் சினிமா பத்திரிகையாளர்களின் ‘பத்திரிகா தர்மம்!’

-என்வழி




11 thoughts on “லிங்கா விவகாரம்… சிங்காரவேலன் கும்பலை கேள்விகளால் திணறடித்த செய்தியாளர்கள்!

  1. Saravanan

    ஏன் விநியோகஸ்தர் மூலமாக படத்தை விற்க வேண்டும்? விநியோகஸ்தர்களுக்கு அடுத்த முறை படம் தர கூடாது.

  2. arulnithyaj

    அண்ணே பத்திரிகை தர்மம் இருக்கா?, பத்திரிகை பதிப்பித்தவர் owner. என்று சொல்லி பிழைப்புக்காக, பணத்துக்காக, சாதி பாசத்துக்காக ஆட்சியாளர்களின் தவறுகளை சொல்லாமல் இன்னமும் முன்னாள் ஆட்சியாளர்களின் தப்பை சொல்லிக்கொண்டு இருக்கும் கூட்டம் தான் இன்று முக்கால் வாசி பத்திரிக்கைகளை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். பார்ப்போம் அண்ணா இன்னமும் எவ்வளுவு நாளைக்குதான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று. நிச்சயம் ஒரு புரட்சி எழும். அந்த தீ தலைவரிடம் இருந்தே வரும் நிச்சயம் அதற்கு வெகு நாள் காத்திருக்க வேண்டியது இல்லை

  3. Rajagopalan

    Jaya TV on their part spoiled
    Jaya Tvs didnt do proper publicity.
    For “I”, they are promoting , but for Linga, nothing.
    Also Vendhar Movies, Eros etc nobody is coming with any statements.
    But all fans are just putting comments in facebook, twitter…
    Rajini fans are not active like before . This has to be accepted….

    See all these Kosu fans… How they are promoting the kosu movie…

  4. Rajagopalan

    I dont know how many of you have read todays Dhina Malar..
    There is a article regarding the issues surrounding Lingaa.
    In that , they had put as , Rajini is not going to act in movies after Lingaa.
    After seing that, iam totally mood out…
    Please Thalaiva do something ….

  5. குமரன்

    ///இவ்வளவு கேள்வி கேட்டு திணறடித்த செய்தியாளர்களில் பெரும்பாலானோர், கடைசியில் அவர்கள் கொடுத்த பிச்சைப்போராட்ட பிரஸ் ரிலீஸைத்தான் வெளியிட்டனர். பிரஸ் மீட்டில் கேள்விகளால் அவமானப்பட்டு, அம்பலமான விநியோகஸ்தர் கும்பலின் மோசடி குறித்து எதுவும் எழுதவில்லை. அதுதான் சினிமா பத்திரிகையாளர்களின் ‘பத்திரிகா தர்மம்!’///

    நாடு குட்டிச்சுவர் ஆனதற்கு இவர்கள் போன்றவர்கள்தான் காரணம்

    இந்தப் பத்திரிகையாளர்கள் வாங்கியது லஞ்ச்சம்தானே. இது ஊழல்தானே? இதை எப்படி ஒழிப்பது?

    ஜன நாயகத்தின் தூண்களான பாராளுமன்றம், அதிகாரக்கட்டமைப்பு, நீதித் துறை, பத்திரிகைத் துறை என்ற நான்குமே இப்படி செல்லரித்துப் போய்க் கிடக்கிறதே?

    இதில் பாராளுமன்றம், அதிகாரக் கட்டமைப்பு, நீதித்துறை இவற்றின் ஊழல் பற்றி மட்டுமே எழுதியும், தொலைக்காட்சி உள்ளிட்ட உடகங்களில் பரப்புரை செய்தும் வருகின்ற ஊடகத் துறையின் ஊழலை எப்படி வெளிப்படுத்துவது?

    அண்மையில் 325 தொலைபேசி இணைப்புகளை திருட்டுத் தனமாகத் தன்வீட்டில் நிறுவி அதிலிருந்து சண் டிவிக்குத் தொடர்பு கொடுத்து கோடிக்கணக்கில் அரசுப்பணத்தைப் பகற்கொள்ளை அடித்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனுக்கு ஆதரவாக எல்லாத் தொலைக் காட்சி ஊடகங்களும் தொடர்ந்து அவரது பேட்டியை ஒளிபரப்பி அவரைக் கைது செய்யாமல் பார்த்துக் கொண்டனர் என்றால் எந்த அளவுக்கு இவர்கள் நாட்டைக் கெடுப்பவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

  6. raja paris

    லிங்கா பிரச்னை: விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்: நடிகர் சங்கம் மவுனம்

    ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமல்ல தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் தவறாமல் வாக்களித்திருக்கிறார். சங்கத்தின் முக்கிய நடவடிக்கைகளில் பங்கேற்று இருக்கிறார். ஆனால் இந்த பிரச்னை பற்றி இதுவரை நடிகர் சங்கம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. “சின்ன பிரச்னைகளுக்கு கூட தினமும் அறிக்கை வெளியிடும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இந்த பிரச்னையில் மவுனமாக இருப்பது ஏன் என்றும் புரியவில்லை” என்கிறார்கள் மற்ற முன்னணி நடிகர்கள்.

  7. Arun

    இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் வீடியோ வடிவம் இருந்தால் அதை தயவு செய்து போஸ்ட் செய்யவும், அசிங்காரவேலன் கூட்டத்தினரின் திருட்டுத்தனத்தை ஆதாரத்தோடு பரப்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *