BREAKING NEWS
Search

இன்று தமிழகம் முழுவதும் மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டன மறியல் போராட்டம்!

இன்று தமிழகம் முழுவதும் மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டன மறியல் போராட்டம்!

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது போலீஸ் அராஜகமாகத் தாக்கி வருவதைக் கண்டித்து மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று கண்டன மறியல் போராட்டம் நடத்துகின்றன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் போராட்டம் நடக்கிறது.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் தமிழகம் முழுவதும் பரவ ஆரம்பித்துள்ளது. இதுவரை இல்லாத அளவு உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் போராட்டத்தில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் போலீசின் அடக்குமுறையையும் மீறி மக்கள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் அதிகார வர்க்கத்தின் இந்த மக்கள் விரோத போக்கைக் கண்டித்து, இன்று செவ்வாய்க்கிழமை முழுவதும் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலை நகர்களிலும் கண்டன மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர் மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

மக்களுக்கு கேடான கூடங்குளம் அணு உலை மூட வலியுறுத்தி கடத்த ஓராண்டுகாலமாக மாபெரும் மக்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் அறவழியில் நடத்து வந்தது.

மக்கள் கருத்தை பொருட்படுத்தாமல், அடக்கு முறையின் மீது நம்பிக்கை வைத்து, மத்திய மாநில அரசுகள் அலட்சியம் செய்து எரிபொருள் நிரப்ப நாள் குறித்தனர்.

இந்நிலையில் அறவழியில் முற்றுகை போராட்டம் நடத்திட பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடங்குளம் நோக்கி நேற்று (09.09.2012) புறப்பட்டனர். அவர்களை துணை ராணுவத்தினரும் தமிழக காவல் துறையினரும் தடுத்து மறித்தனர். அவர்கள் மறித்த இடத்தில் அமர்ந்து முழக்கம் எழுப்பி கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர் மக்கள்.

அம் மக்களை இன்று (10.09.2012) துணை ராணுவத்தினரும் தமிழக காவல் துறையினரும் தடியால் அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்தி களித்தனர்.

பெண்கள், குழதைகள் என்று பார்க்காமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் ஒரு குழந்தையும், அந்தோணி என்பவரும் இறந்துபோனார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். உயிர் தப்பிக்க கடலில் இறங்கிய மக்களை அங்கும் துணை ராணுவத்தினரும் தமிழக காவல் துறையினரும் விரட்டியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.

கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட எராளமான கிராமங்களில் காவல்துறையின் வேட்டை நடந்து கொண்டுள்ளது. இன்னும் என்ன விபரீதம் நடக்குமோ என்ற பீதி மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் காட்டுமிராண்டிதனமான அடக்குமுறையைக் கண்டித்தும் துணை ராணுவத்தினரையும் தமிழக காவல் துறையினரையும் அப்பகுதியில் இருந்து திரும்பப் பெற வலியுறுத்தியும் 11.09.2012 காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

சென்னையில் 11.09.2012 காலை 9 மணிக்கு அண்ணாசாலையில், அண்ணாசிலை அருகே மறியல் போராட்டம் நடக்க உள்ளது. கீழ்க்காணும் அமைப்புகளும், ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் இதில் காலத்து கொள்ள உள்ளன.

கலந்து கொள்ளும் கட்சிகள்:

திராவிடர் விடுதலை கழகம்
தமிழ் தேச பொதுவுடைமை கட்சி
தமிழக வாழ்வுரிமை கட்சி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தமிழர் முன்னேற்றக் கழகம்
மே 17 இயக்கம்
காஞ்சி மக்கள் மன்றம்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
தமிழ் நாடு மக்கள் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம்
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி
தமிழக ஒடுக்கபட்டோர் விடுதலை இயக்கம்
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு
தமிழ் தேசிய விடுதலை இயக்கம்
மற்றும் பல…

விசிக ஆர்ப்பாட்டம்

அமைதியான வழியில் போராட்டம் நடத்திய கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களையும் ,அதரவு அளித்த பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் இன்று காலை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தன்முனைப்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-என்வழி செய்திகள்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *