BREAKING NEWS
Search

இடிந்தகரையில் பெருங்கொடுமை.. மக்கள் மீது தடியடி -கண்ணீர்புகை-அரசின் கள்ள மவுனம்!

இடிந்தகரையில் பெருங்கொடுமை.. மக்கள் மீது தடியடி -கண்ணீர்புகை-அரசின் கள்ள மவுனம்!

இடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே இருதினங்களாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக்காரர்களை இன்று போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கலைத்தனர். பதிலுக்கு மக்களும் தாக்குதலில் இறங்கினர்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் நேற்று 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். பல ஆயிரம் பேர் குவிந்து விட்டதைத் தொடர்ந்து பெரும் பதட்டம் ஏற்பட்டது. போலீஸாரும் ஆயிரக்கணக்கில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர், டிஐஜி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மக்களுடன் பேசிப் பார்த்தனர். ஆனால் பயனில்லை. இதையடுத்து நேற்று இரவு முழுவதும் விடிய விடிய போராட்டம் நீடித்தது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என்பது கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பாளர்கள் கருத்து. இதனை வலியுறுத்தி கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீஸார் அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகினர். தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் அறிவுறுத்தலின் பேரில் மக்களுக்கு கலெக்டர் இறுதிக் கோரிக்கையை விடுத்தார். அனைவரும் சட்டவிரோதமாக கூடியுள்ளீர்கள். உடனடியாக அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரித்தார்.

கூடங்குளம் கடற்கரையில் இரவு முழுக்க முற்றுகையில் மக்கள்…

இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களும் மணலை வாரி போலீஸார் மீது சரமாரியாக வீசினர். செருப்புகளையும் எடுத்து வீசினர். கட்டைகளும் வீசப்பட்டன. இதையடுத்து போலீஸார் கடற்கரையில் கூடியிருந்தர்களை தடியடி நடத்தி விரட்டிச் சென்றனர். இதில் பலர் கீழே விழுந்தனர். தொடர்ச்சியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன.

இதையடுத்து ஏராளமானவர்கள் கடலுக்குள் இறங்கி போலீஸாரை நோக்கி கடுமையாக திட்டி கூச்சலிட்டனர். பலரை போலீசே கடலில் தள்ளிய கொடுமையும் நடந்தது.

இருந்தாலும் மக்கள் உறுதியுடன் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.

தன் சொந்த மக்களை மிகக் கொடூரமான முறையில் போலீஸ் அடக்குவதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி கள்ள மவுனம் சாதித்து வருகிறது ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு.

-என்வழி செய்திகள்
2 thoughts on “இடிந்தகரையில் பெருங்கொடுமை.. மக்கள் மீது தடியடி -கண்ணீர்புகை-அரசின் கள்ள மவுனம்!

 1. senthilbabu

  இதுதான் உதய குமாரின் அற வழி போராட்டமா? அதையும் கொஞ்சம் சிந்தியுங்கள் ….
  _____
  உதயகுமாரும் போராட்டக்காரர்களுமா கல்லெடுத்து வீசினார்கள்…? துப்பாக்கி சூடு நடத்தினார்கள்…? அப்பாவிகளை கடலுக்குள் தள்ளி கண்ணீர்புகை குண்டடித்தார்கள்?

  உதயகுமார் போராட்டம் அறவழியில்தான் அமைந்தது. அவர்கள் மீது வன்முறையை கொடூரமாக ஏவியது அரசுதானே… தமிழ்நாட்டில் மட்டும் ஏன் எப்போதும் ஏறுக்கு மாறாகவே யோசிக்கிறார்கள்? மக்களை விட அணுஉலைக்காக வெளிநாட்டுக்காரனிடம் வாங்கிய கமிஷன் பெரிதாகப் போய்விட்டதே… கடந்த இரண்டு நாட்களும் நடந்தது உங்களுக்கு தெரியவில்லையா… வேற்றுக்கிரகத்திலா இருந்தீர்கள்?!

  -வினோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *