BREAKING NEWS
Search

ரஜினி படத் தலைப்புகளைப் பயன்படுத்துவது தப்பா? – பிரபல இயக்குநர்கள் கருத்து

ரஜினி படத் தலைப்புகளைப் பயன்படுத்துவது ஏன்? –  பிரபல இயக்குநர்கள்


கோடம்பாக்கத்தில் புதிய படங்களுக்கு ரஜினி படத்தின் தலைப்புகளைச் சூட்டுவது அல்லது புகழ்பெற்ற அவரது கேரக்டர் பெயரைச் சூட்டுவது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது.

இது ரஜினிக்கே கூட சற்று சங்கடமான விஷயம்தான் என்றாலும், ரசிகன் என்ற பெயரில் உரிமையெடுத்துக் கொள்வதால், அவர் இதுவரை ஆட்சேபணை சொல்லாமல் இருந்து வருகிறார்.

ரஜினியின் பழைய படம் படிக்காதவன். அந்தப் படத்தின் வசூல், அதற்குக் கிடைத்த வெற்றி எல்லாமே தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவை. பூந்தமல்லி என்ற புறநகரில் கூட 100 நாள் கண்ட படம்.

ஆனால் அந்தத் தலைப்பைப் பயன்படுத்தி, தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை எடுத்தார்கள். இன்றைக்கு படிக்காதவன் என்றதும், தனுஷ் படம்தானே என இளம் தலைமுறையினர் கேட்பது ரஜினி ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல மாப்பிள்ளை. இந்தப் படமும் ரஜினி நடித்ததுதான். நல்ல வசூலைக் குவித்த வெற்றிப்படம். ஆனால் அதே படத்தை அந்த தலைப்புடனே தனுஷ் நடித்தார். அந்தப் படத்தின் நிலை ரசிகர்கள் அறியாததல்ல. மிகப் பெரிய தோல்விப் படங்களுள் ஒன்றாகிவிட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் தலைப்பும் ரஜினி படத்துடையதே. இப்படி பல உதாரணங்கள்.

ஏற்கெனவே எம்ஜிஆர் படத் தலைப்புகளை ஆளாளுக்கு இப்படித்தான் கெடுத்து வைத்தனர். அடுத்து ரஜினி படத் தலைப்புகளுக்கு வந்திருக்கின்றனர்.

இன்றைய இயக்குநர்களில் ரஜினி படத் தலைப்புகள், கதை, பாடல்களை அதிகமாக பயன்படுத்தியவர் சுராஜ்தான். ரஜினியின் படத் தலைப்புகளை அதிகம் பயன்படுத்தியிருப்பவர்களில் முதலிடம் தனுஷ் – சுராஜுக்குதான்!

தனது அடுத்த படத்துக்குக் கூட அவர் மூன்று முகத்தில் ரஜினியின் புகழ்பெற்ற பெயரான அலெக்ஸ் பாண்டியன் என்பதையே தலைப்பாக்கியிருக்கிறார்.

அவரிடம், நீங்கள் இப்படிச் செய்வது ரஜினியின் புகழ்பெற்ற படங்களை பின்னுக்குத் தள்ளுவது போல் இல்லையா… இன்றைய தலைமுறையினருக்கு அந்தப் படம் குறித்து தெரியாமலே போக வாய்ப்பிருக்கிறது அல்லவா? என்று கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், “நான் ரஜினியின் தீவிர ரசிகன். என் புதுப்படங்களுக்கு தலைப்பு தேர்வு செய்யும் போதெல்லாம் ரஜினி பட தலைப்புகள்தான் நினைவுக்கு வரும். இதனை அவருக்கு செய்யும் மரியாதையாகவே நான் பார்க்கிறேன். அதேநேரம், இதுபோல செய்வதால் பழைய படங்கள் குறித்து தெரியாமல் போகும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

அலெக்ஸ் பாண்டியன் என்பது மூன்று முகம் படத்தில் உள்ள ரஜினியின் பாப்புலரான கேரக்டர். இதனைப் பயன்படுத்துவதால், எந்த பாதிப்பும் இருக்காது.

மூன்று முகம் படத்தில் அலெக்ஸ்பாண்டியன் என்பது ரஜினியின் போலீஸ் கெட்டப் பெயர். கார்த்தி அதுபோன்ற கேரக்டரில் இதில் வரவில்லை.

இருந்தாலும் ரசிகர்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் ரஜினி சார் பெயருக்கு புகழ்சேர்க்கும் வகையில்தான் என் படம் இருக்கும்,” என்றார்.

இயக்குநர் கேயார்

ரஜினியின் படத் தலைப்புகளைப் பயன்படுத்துவது குறித்து ரஜினிக்கு நெருக்கமான தயாரிப்பாளர் – இயக்குநர் கேயார் கூறுகையில், “எனக்கு இதில் உடன்பாடில்லை. ரஜினியின் பெரும் புகழ்பெற்ற படங்களை, அவற்றின் தலைப்புகளை யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்துவது சரியல்ல. அப்புறம் ரஜினி படங்களுக்கென்று இருக்கும் ஐடென்டிட்டி பாதிக்கும் அல்லவா… யாராவது ஒரு இளைஞரிடம் மாப்பிள்ளை என்று கேட்டால், தனுஷ் படம் என்றுதான் சொல்வார். இது தவறுதான்.

நண்பர் ரஜினி பெருந்தன்மையானவர். அவர் யாருக்கும் தடை சொல்ல மாட்டார். ஆனால் ஒரு இயக்குநராக, அடுத்தவர் படைப்புக்கு மரியாதை தருவது இளம் இயக்குநர்கள் கடமை,” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ்

“பழைய படத்தின் தலைப்புகளை புதுப்படத்துக்கு வைப்பதே தவறு, புகழ்பெற்ற படங்களை அவமதிப்பதற்கு சமம் என்பதுதான் என் கருத்து,” என ஆரம்பித்தார் இயக்குநர் கே பாக்யராஜ்.

அவர் மேலும் கூறுகையில், “எங்க டைரக்டர் பாரதிராஜா இயக்கி நான் ஹீரோவா நடித்த படம் புதிய வார்ப்புகள். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என பாராட்டுப் பெற்ற படம். சமீபத்தில் என் மகனை வைத்து நான் எடுத்த படத்துக்கு புதிய வார்ப்புகள் என்ற பெயரைத்தான் முதலில் வைத்தேன். ஆனால் பிறகு யோசித்துப் பார்த்ததில் எனக்கே குற்றவுணர்ச்சி தாங்கவில்லை. அதனால் அந்தப் பெயரைப் பயன்படுத்தவில்லை. என் படம்தான். நான் வைத்தால் எங்க டைரக்டர் ஒண்ணும் சொல்லப் போறதில்லை. ஆனால் அது சரியல்ல. முதலில் வந்த படைப்புக்கு மரியாதை செய்யும் வகையில் அந்தத் தலைப்பை கெடுக்காமல் விட்டுவிடுவதே நல்லது,” என்றார்.

இயக்குநர் சுந்தர் சி

இயக்குநர் சுந்தர் சி சொல்லும் பதில் கொஞ்சம் வித்தியாசமானது. இவரும் தனது ஒரு படத்துக்கு முரட்டுக்காளை எனப் பெயர் சூட்டியவர்தான்!

“ஒரு விஷயம் எத்தனை பேர் வாயால் உச்சரிக்கப்படுகிறதோ, அந்த அளவு ரீச் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். ரஜினி சார் மாஸ். அவர் படத் தலைப்பு, காட்சிகளை இமிடேட் பண்ணும் ஆசை எல்லோருக்குமே இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அவர் பெயரை கெடுக்காத அளவுக்கு, பயன்படுத்திக் கொள்ளலாம். ரஜினி சார் பெயர், படத் தலைப்பை தப்பான ஒரு படத்துக்கு பயன்படுத்தினால் அது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதற்கு சமம். பெயரைப் பயன்படுத்துமுன் இந்த நினைப்பு முக்கியம். அவர் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக இஷ்டப்படி பயன்படுத்தக்கூடாது,” என்றார்.

அட, இதுகூட நல்லாருக்கே!
-என்வழி ஸ்பெஷல்




8 thoughts on “ரஜினி படத் தலைப்புகளைப் பயன்படுத்துவது தப்பா? – பிரபல இயக்குநர்கள் கருத்து

  1. r.v.saravanan

    முதலில் வந்த படைப்புக்கு மரியாதை செய்யும் வகையில் அந்தத் தலைப்பை விட்டுவிடுவதே நல்லது,”

  2. kabilan

    வினோ அன்ன இதெல்லாம் விடுங்க இந்த சக்தி சிதம்பரம்னு ஒரு நாயே இருக்கே,அது தலைவர் படங்களான ராஜாதி ராஜா ,குரு சிஷ்யன் பெயரை பயன் படுத்தி உள்ளது .இரண்டுமே தமிழ் சினிமாவின் தரத்தை குறைக்கும் கிழ்த்தரமான படங்கள்.தலைவருக்கு இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் .மாப்பிள்ளை மாதிரி ஒரு கேவலமான ரீமேக் படத்தை யாருமே எடுக்க மாட்டாங்க.தனுஷுக்கு அறிவே இல்ல. அஜித் தலைவர் படத்தை எடுத்து பெருமை சேர்த்தார்.வெற்றிமாறன் பொல்லாதவன் titleku பெருமை சேர்த்தார் .இந்த சுந்தர் க எல்லாம் ஏன் தலைவர் படத்தை ரீமேக் பண்றனு தெரியல

  3. JB

    நீங்கள் சேரன் interview வாசித்தீர்களா? சிவாஜி படத்தை ரீமேக் செய்ய தில் இருக்கா என்று பேசிய போது, அவர் சொன்னது இது.

    “பில்லா, மாப்பிள்ளை போன்ற படங்களை ரீமேக் செய்கிறார்கள் இன்றைக்கு. அவர்களுக்கு தில் இருந்தால் சிவாஜி நடித்த ஏதாவது ஒரு படத்தையாவது ரீமேக் பண்ணி நடிக்க முடியுமா?”

    கேட்ட கேள்வி தப்பு இல்லாவிடிலும், ஏதோ பில்லா, மாப்பிள்ளை எல்லாம் சாதாரண படங்கள். அதனால் அது இலகுவாக இருக்கும் என்று ரீமேக் செய்தார்கள். சிவாஜி படங்களை ரீமேக் செய்வது கஷ்டம் என்பதால் யாரும் செய்யவில்லை என்று பேசியமாதிரி இருக்கிறது.

    சிவாஜியின் நடிப்பு அபாரமானது. ஆனால் ரஜினியின் நடிப்பை குறைத்து சேரன் எடை போட்டு பேசி இருக்கிறார். இதே சேரன்தான் ரஜினி பற்றியும் அவர் படங்களை பற்றியும் பெரிதாக பேசியவர். தனது படங்களிலேயே ரஜினியின் சிகரட் styleஐ copy அடித்தவர்.

    ரொம்பதான் இவருக்கு.

  4. மிஸ்டர் பாவலன்

    கொடியது கேட்கின் கோச்சடையானே!
    கொடிது கொடிது தமிழ்ப் படம் எடுப்பது கொடிது!
    ஹிட் படம் எடுப்பினும் அதில் கதை பாட்டு
    இசை நடிப்பு சகலமும் காப்பி அடித்தல் கொடிது!
    கொடிது கொடிது தலைவர் படம் பெயர் காப்பி அடித்தல் கொடிது
    அதனினும் கொடிது குருவி தலைவர் ஆக நினைப்பது கொடிது
    மேலும் எஸ். ஏ. சி. ஸ்டீல் பேர்க் ஆக நினைப்பதும் கொடிது
    கொடிது கொடிது அலெக்ஸ் பாண்டியன் பெயரில் படமும் கொடிது
    மாப்பிள்ளை பெயரில் மனீஷா தனுஷ் படமும் கொடிது
    அதனினும் கொடிது ரஜினி விருது குருவிக்குக் கொடுத்தது கொடிது
    காப்பி அடித்தே ஹிட் பாட்டும் பெயரும் பொருளும் பெறுவது கொடிது
    ரீமிக்ஸ் செய்து பாட்டைக் கெடுக்கும் இசை மேதைகளும் கொடிது
    அவ்வை பாட்டை காப்பி அடிக்கும் மிஸ்டர் பாவலனின் பாட்டும் கொடிது
    “உன் வாழ்க்கை உன் கையில்” தத்துவம் மறப்பதும் கொடிது
    சுயமாய் சிந்தித்து பண்புடன் சூப்பர் ஸ்டார் நம் தலைவர் வழி நடப்பின்
    வானவர் நாடு வழி திறந்திடுமே!!!

    (கந்தன் கருணை பாடல் மெட்டில் எழுதியது)

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  5. மிஸ்டர் பாவலன்

    //சிவாஜியின் நடிப்பு அபாரமானது. ஆனால் ரஜினியின்
    நடிப்பை குறைத்து சேரன் எடை போட்டு பேசி இருக்கிறார். //

    புன்னகை அரசி கே.ஆர். விஜயா தயாரிப்பில் வந்த
    “நான் வாழ வைப்பேன்” படத்தின் க்ளைமாக்சைப்
    பார்த்தால் சிவாஜி படத்தில் ஒரு guest role பாத்திரத்திலேயே
    சூப்பர் ஸ்டார் எப்படி அவர் நடிப்பைக் காட்டினார் எனத்
    தெரியும்! கமல் ஹாசன் கூட அந்த அளவிற்கு நடித்ததில்லை!

    -=== மிஸ்டர் பாவலன் ===-

  6. naren

    டைட்டில் காபி அடிக்க யோசிக்குற நேரத்துல, நல்ல கதைகளை உக்காந்து யோசிக்கலாம் …..

  7. muthu.T

    தலைவர் படங்களின் பெயர்கள் அவருடைய மணி மகுடத்தில் பதிக்கப் பட்டிருக்கும் வைரக்கற்கள். அதை கூழாங் கற்களாக நினைத்து உருட்டி விளையாடக்கூடாது. இதை தொடர்ந்து அனுமதிப்பது நல்லதல்ல.

  8. சுதந்திரன்

    ஒரு படத்தின் தலைப்பு என்பது அந்த படத்திற்கான முகவரி. அந்த படத்திற்கு எது சரியான தலைப்பாக இருக்கலாம் என்பது சம்பந்தப்பட்ட டைரக்டர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஏற்கெனவே வந்த படத்தின் தலைப்பாக அது இருக்கும் பட்சத்தில் அதையே முடிவு செய்வது தவறே அல்ல.
    ஒரு படம் வெளிவந்து ஐந்து வருடங்களுக்குள் அதே தலைப்பை பயன்படுத்த கூடாது என்பது சட்டம். அந்த சட்டத்தை மீறாதவரை எந்த தலைப்பையும் பயன்படுத்தலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *