BREAKING NEWS
Search

கோஹ்லி, ஷேவாக் ரன் குவிப்பில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!

இந்தியா – இலங்கை கிரிக்கெட் 2012: கோஹ்லி, ஷேவாக் ரன் குவிப்பில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!


ஹம்பன்தோட்டா:  இலங்கை ஹம்பன்தோட்டாவில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி மற்றும் ஷேவாக்கின் அசத்தலான ரன்குவிப்பில் இந்திய அணி வெற்றி அபார பெற்றது.

5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்பதற்காக டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஹம்பன்தோட்டாவில் சனிக்கிழமை நடந்தது.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோனி முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். ஷேவாக்கும், கவுதம் கம்பீரும் இந்திய அணியின் இன்னிங்சை தொடங்கினர். கம்பீர் (3 ரன், 6 பந்து) குலசேகரா லெக்-சைடில் வீசிய பந்தில் போல்டானார்.

ஷேவாக்குடன், துணை கேப்டன் விராட் கோஹ்லி கைகோர்த்தார். அதிரடிக்கு பெயர் போன ஷேவாக், இந்த முறை நிதானத்தைக் கடைப்பிடித்தார். வசதி பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினர்.

ஷேவாக்குக்கு அதிர்ஷ்டமும் துணையாக நின்றது. ரன் கணக்கை தொடங்கும் முன்பே கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஷேவாக் 24 ரன்களில் இருந்த போது, 2-வது முறையாக கண்டத்தில் இருந்து தப்பினார். அவர் அடித்த ஷாட்டை, குலசேகரா பாய்ந்து விழுந்து பிடித்தார். ஆனால் அது கேட்ச்சா? அல்லது தரையில் பந்து பட்ட பிறகு பிடித்தாரா? என்பதில் சந்தேகம் எழுந்தது. டி.வி. ரீப்ளேயிலும் ‘கேட்ச்’, துல்லியமாக தெரியவில்லை. 3 நிமிடங்கள் நீடித்த குழப்பத்திற்கு பிறகு சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக நடுவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. இலங்கையின் பீல்டிங் நேற்று மோசமாக இருந்தது. இதனை இந்திய பேட்ஸ்மேன்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விளாசினர்.

16-வது சதத்தை நெருங்கிய ஷேவாக் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஷேவாக் 96 ரன்களில் (97 பந்து, 10 பவுண்டரி) வெளியேறினார். அவர் 90-களில் ஆட்டம் இழப்பது இது 5-வது முறையாகும். ஷேவாக்-கோஹ்லி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது.  ஷேவாக்குக்கு பிறகு வந்த ரோகித் ஷர்மா 5 ரன்களில் (8 பந்து) நடையை கட்டினார்.

கோஹ்லி சதம்

இதையடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். சிறிது நேரத்தில் விராட் கோக்லி தனது 12-வது சதத்தை பூர்த்தி செய்தார். இலங்கைக்கு எதிராக அவரது 4-வது சதமாகும். கோக்லி 106 ரன்களில் (113 பந்து, 9 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் இறுதி கட்டத்தில் கூட்டணி அமைத்த சுரேஷ் ரெய்னாவும், கேப்டன் டோனியும் அணியின் ஸ்கோரை மளமளவென அதிகரிக்க செய்தனர். இவர்களின் துரிதமான ஆட்டம் இந்திய அணி 300 ரன்களை கடக்க உதவியது. அத்துடன் இந்த இன்னிங்சில் ஒரு சிக்சர் வீதம் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய இருவரும் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தனர். ரெய்னா தனது பங்குக்கு 50 ரன்களும் (45 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 35 ரன்களும் (29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. கடைசி 6 ஓவர்களில் மட்டும் 64 ரன்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திரட்டினர். குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்தனர்.

10 ஓவர்களில் 83 ரன்களை வாரிக் கொடுத்தார் மலிங்கா. விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

ஆரம்ப அதிர்ச்சி…

அடுத்து 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி இலங்கை அணி ஆடியது. தில்ஷனும், தரங்காவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஆபத்தான பேட்ஸ்மேன் தில்ஷன் 6 ரன்களில் (6 பந்து) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பின்னர் இலங்கை அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. ரன் ரேட் தேவையும் அதிகமாகி கொண்டே போனதால் இலங்கை அணி நெருக்கடிக்குள்ளானது.

தரங்கா 28 ரன்களிலும், சன்டிமால் 13 ரன்களிலும் வீழ்ந்தனர். கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவும் (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. மேத்யூஸ் (7 ரன்), திரிமன்னேவும் தலா 7 ரன்களில் சாய்ந்தனர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் சங்கக்கரா மட்டும் நங்கூரம் போல் நிலைத்து நின்று போராடினார். தனது 14-வது சதத்தையும் தொட்டார். கடைசி 10 ஓவர்களில் இலங்கைக்கு 112 ரன்கள் தேவைப்பட்ட போது, சங்கக்கராவுடன், ஆல்-ரவுண்டர் திசரா பெரேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்தியாவின் பீல்டிங்கும் படுமட்டமாக இருந்தது.

இந்தியா வெற்றி

இலங்கை அணியின் ஸ்கோர் 269 ரன்களை எட்டிய போது, சங்கக்கரா (133 ரன், 151 பந்து, 12 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அத்துடன் இலங்கையின் வெற்றி நம்பிக்கை தகர்ந்து போனது. 50 ஓவர்களில் இலங்கை அணியால் 9 விக்கெட்டுக்கு 293 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. சங்கக்கரா சதம் அடித்தும் அந்த அணி தோற்பது இது 6-வது முறையாகும். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் (செவ்வாய்கிழமை) நடக்கிறது.

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா 314 / 6

கோஹ்லி 106, ஷேவாக் 96, ரெய்னா 50, டோனி 35

திசரா பெரேரா 3 விக்கெட்டுகள்

இலங்கை 293 /9

சங்கக்கரா 133, பெரேரா 44

இர்பான் பதான், உமேஷ் யாதவ், அஸ்வின்  தலா 2 விக்கெட்டுகள்

-என்வழி கிரிக்கெட் செய்திகள்
One thought on “கோஹ்லி, ஷேவாக் ரன் குவிப்பில் இந்தியாவுக்கு முதல் வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *