BREAKING NEWS
Search

சாதித்தார் நாரிமன் ‘அண்ணாச்சி’! – கதிர் சிறப்புக் கட்டுரை

சாதித்தார் நாரிமன் ‘அண்ணாச்சி’!

– கதிர்

kathir001ஃபாலி எஸ் நரிமன் நமது அண்ணாச்சி. நமது என்றால் அதிமுகவினரின் என்று பொருள் கொள்ளலாம்.

ராம் ஜெத்மலானி என்ற மிகப் பெரிய சட்ட மேதைக்கு பதிலாக எதார்த்தவாதியான நமது அண்ணாச்சி மட்டும் ஆஜராகி இருந்தால் ஜெயாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்திருப்பார் என்று சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்.

அதை அதிமுக தரப்பில் யாரும் வாசித்தார்களா என்பது தெரியாது. பொதுவாக அவர்கள் வாசிப்பில் கொஞ்சம் வீக். ஆனால், ஜெத்மலானிக்கு பதில் ஃபாலி எஸ் நரிமன் ஆஜராவார் என்று அறிவிப்பு வந்தபோது அங்கேயும் வாசிப்பாளர்கள் இருக்கலாம் என்று தெரிந்தது.

ஜெத்மலானி சட்டத்தை கரைத்து குடித்தவர். அந்த ஞானத்தைக் காட்டியே நீதிபதிகளை மிரள வைப்பவர். அவர் வாதத்தை கேட்பவர் 100 சதவீதம் சரி என்று சரண்டர் ஆகலாம். அய்யய்யோ, இப்படிக் கூடவா இன்டர்ப்ரட் செய்வார்கள் என்ற அதிர்ச்சியில் வாதத்தை அப்படியே நிராகரிக்கலாம்.

தனி நீதிபதி குன்ஹா தீர்ப்புக்கு எதிராக கர்நாடகா ஹைகோர்ட்டில் ஜெத்மலானி எப்படி வாதிட்டார் என்பது வரலாறு. திரும்பச் சொல்லத் தேவையில்லை. நீதிபதி ஆசனத்தில் நீங்கள் அமர்ந்திருந்தாலும் சரி, நான் உட்கார்ந்தாலும் சரி, முதலாவதாக என்ன எதிர்பார்ப்போம்? குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்டவர் நம் முன்னால் எப்படி ஆஜர் ஆகிறார் என்று பார்ப்போம்.
அவர் தேவையில்லை. அவர் சார்பில் ஆஜராகும் வக்கீல் எப்படி நிற்கிறார், என்ன மாதிரி வாதத்தை முன் வைக்கிறார், என்ன கோரிக்கை – பிரேயர் – வைக்கிறார் என்பதில் இருந்து கட்சிக்காரரின் மனநிலையை மதிப்பிடுவோம்.

பாரம்பரியம் மிகுந்த ஒரு பத்திரிகை குழுமத்தின் அதிபர் நீண்டகாலம் அதன் ஆசிரியராகவும் இருந்தார். சம்மன் வரும்போதெல்லாம் கோர்ட்டில் ஆஜராகி விடுவார். கை கட்டி, வாய் பொத்தி, மெய் வளைத்து அவர் நிற்பதைப் பார்த்தால் தீபாவளி இனாம் வாங்க தலை சொறிபவர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால், ’எவ்வளவு பெரிய பத்திரிகை குழுமத்தின் ஆசிரியர், நீண்ட பாரம்பரியம் கொண்ட குடும்பத்தின் வாரிசு, நீதிக்குத் தலை வணங்கி கைகட்டி நிற்கிறாரே, பரவாயில்லை’ என்று நீதிபதி நினைப்பார்.

சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிப்பவர் என்ற முதல் எண்ணத்தை நீதிபதி மனதில் உருவாக்கி விட்டால், வழக்கின் அடுத்தடுத்த  கட்டங்களைத் தாண்டுவது அத்தனை கஷ்டம் அல்ல. இதுதான் எதார்த்தம். பெங்களூர் நீதிமன்றம் ஒன்றில் நேரடியாகவே உணர்ந்திருக்கிறேன்.

நானாவது ஜேனலிஸ்ட் திமிருடன் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு நின்றிருந்தேன். எனது இம்மிடியட் பாஸ் ஆஜானுபாகு தேகத்தை சுருக்கி, கைகட்டி, தலைகுனிந்து நின்றிருந்தார். வழக்குத் தொடர்ந்த அரசியல்வாதி எங்கள் சமரசத்தை நிராகரித்தபோது, அவரிடம் நீதிபதி கேட்டார்: ‘அவ்வளவு பெரிய கம்பெனியில் டாப் பொசிஷனில் இருப்பவர்கள் இவ்வளவு இறங்கி வருகிறார்கள். உனக்கு என்ன வந்தது? இன்னும் முரண்டு பிடித்தால் அவர்கள் சுப்ரீம் கோர்ட் வரை போவார்கள். பரவாயில்லையா?’

இந்த சந்தர்ப்பத்தில் கன்னடர்களை பற்றி என்ன சொன்னாலும் பிரச்னையாகும். அதைப் பிறகு பார்க்கலாம். சீனியர் வக்கீல் நரிமன் எந்த அளவுக்கு சுப்ரீம் கோர்ட்டின் மனம் குளிர நடந்து கொண்டார் என்பதைக் கவனித்தால், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி என்ற புதிருக்கு விடை கிட்டும்.

‘ஒரிஜினல் வழக்கையே 14 ஆண்டுகள் இழுத்தடித்த கில்லாடிகள். இப்போது உங்களுக்கு ஜாமீன் கொடுத்தால் அப்பீல் விசாரணையை 20 ஆண்டுகளுக்கு மேல் இழுக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?’ என்று கேட்டார் தலைமை நீதிபதி.
இதற்கு நரிமன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் இன்னொரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, ‘சொத்து குவிப்பு வழக்கு 14 ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடிக்கப் பட்டதால் என் கட்சிக் காரருக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது’ என்று கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெத்மலானி வாதம் செய்திருந்தார்.

வாய்தா மேல் வாய்தா வாங்கி கேசை இழுத்தடித்தது யார் என்பது அந்த நீதிபதிக்கு மட்ட்ட்டும் தெரியாது என்று ஜெத்மலானி நம்பியதன் விளைவு அந்த வாதம். நீதிபதி சந்திரசேகரா அந்த வாதத்தால் எந்தளவு கடுப்பானார் என்பது நமக்கு தெரியாது. ஆனால், நரிமன் மனம் திறந்து உண்மையை ஒப்புக் கொண்டார்.

‘மரியாதைக்குரிய நீதிபதிகளே, இந்த வழக்கை நாங்கள் ஒரு விளையாட்டாகக் கருதவில்லை. இதற்கு முன்னால் அப்படி கருதி இருக்கலாம், அதனால் தேவையில்லாத தாமதம் உண்டாகி இருக்கலாம். ஆனால், இப்போது நான் சொல்கிறேன், இந்த வழக்கின் அப்பீல் விசாரணைக்கு வரும்போது என் கட்சிக்காரர் முழுமையாக ஒத்துழைப்பார். தாமதப்படுத்த மாட்டார்’ என்று அவர் உறுதி அளித்தார்.

நீதிபதிகளுக்கு இந்த உத்தரவாதம் மகிழ்ச்சி அளித்திருக்க வேண்டும். ‘டிசம்பர் 18 வரை நாங்கள் ஜாமீன் தருகிறோம். அதற்குள் நீங்கள் அப்பீல் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் தாக்கல் செய்துவிட்டால், சீக்கிரம் விசாரணையை முடிக்குமாறு நாங்கள் கர்நாடகா ஹைகோர்ட்டுக்கு ஆணைப் பிறப்பிக்கிறோம்’ என்று சொன்னார்கள்.

Fali Nariman_0
‘நிச்சயமாக அப்படியே செய்கிறோம், யுவர் ஹானர். அதுவரை நீங்கள் என் கட்சிக்காரரை அவர் வீட்டிலேயே அடைத்து வைக்க உத்தரவிட்டால் கூட அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அவர் யாரையும் சந்திக்க மாட்டார், யாருடனும் ஆலோசனை நடத்த மாட்டார் என்று வேண்டுமானாலும் உத்தரவாதம் தருகிறேன்’ என்று நரிமன் தொடர்ந்து வாலன்டியராக சொன்னபோது நீதிபதிகளே பேஜாராகி விட்டார்களோ என்னவோ தெரியவில்லை.

‘இல்லை, இல்லை. அப்படியெல்லாம் நாங்கள் உத்தரவு போட மாட்டோம். ஒன்று ஜாமீன் தருவோம் அல்லது தர மாட்டோம். வீட்டுக்குள் அடைத்து வைத்து ஒருவரின் உரிமையை பறிக்கும் வேலையெல்லாம் செய்ய மாட்டோம்’ என்று விளக்கினர்.

ஜெயாவின் வக்கீல் தனது உபாயம் பலிப்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்திருக்க வேண்டும். ’அப்படியானால் என்ன கண்டிஷன் போட்டாலும் ஏற்றுக் கொள்கிறோம். நீங்கள் சொன்ன மாதிரியே டிசம்பர் 18க்குள் அப்பீல் மனு பேப்பர்களை மொத்தமாக தாக்கல் செய்து விடுகிறோம் வாய்தா கேட்கவே மாட்டோம். சீக்கிரமாக விசாரித்து முடிக்க நீங்கள் ஹைகோர்ட்டுக்கு ஆணையிடலாம்’ என்றார்.

வழிக்கு வந்து விட்டார்கள் என்ற திருப்தி நீதிபதிகளுக்கு ஏற்பட்டிருக்கலாம். ‘அப்படியே செய்கிறோம். ஆனால், நினைவிருக்கட்டும், சொன்ன தேதிக்கு மேல் ஒரு நாள் கூட அதிகமாக அவகாசம் தரவே மாட்டோம். அதனால் உங்கள் வாக்குறுதியை அப்படியே செயலில் காட்டுங்கள்’ என்றார் தலைமை நீதிபதி.

அந்த நேரத்தில்தான் குறுக்கிட்டார் சுப்பிரமணியம் சாமி. ஒரிஜினல் வழக்கை தாக்கல் செய்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு இந்த வழக்கின் விசாரணையில் பங்கேற்க உரிமை இருக்கிறது.

‘ஜெயல்லிதாவின் கட்சிக்காரர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை. நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் தாறுமாறாக விமர்சனம் செய்கிறார்கள். கன்னடக்காரன் என்பதால் தண்டித்து விட்டார் என்று குன்ஹாவை குற்றம் சொல்கிறார்கள். எல்லாம் கோர்ட் அவமதிப்பு. நிறைய வன்முறை நடக்கிறது. எனக்கே ஆபத்து இருக்கிறது. யாரும் எதிர்க் கருத்து சொல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது,’ என்று முறையிட்டார்.

சாமி சுட்டிக் காட்டிய விஷயங்கள் ஏற்கனவே கோர்ட்டின் கவனத்துக்கு வந்திருப்பதாக நீதிபதிகள் கூறினர். ’நாங்களும் வேறு மாநிலத்து ஆட்கள்தான். ஜாமீன் கொடுக்காவிட்டால் எங்களையும் அப்படி அதிமுகவினர் விமர்சனம் செய்வார்களா?’ என தலைமை நீதிபதி கேட்டதும் நரிமன் சமாதானம் செய்தார்.
’அதெல்லாம் உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் அறியாமல் செய்த குற்றம். அதற்கும் என் கட்சிக்காரருக்கும் சம்பந்தமே இல்லை. யாரும் அம்மாதிரியான செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று என் கட்சிக்காரர் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன். சட்டம் ஒழுங்குக்கு ஒரு பங்கமும் வராதபடி தமிழக அரசு பார்த்துக் கொள்ளும்’ என்று இன்னொரு உத்தரவாதம் அளித்தார்.

’இந்த உறுதியைக் காப்பாற்ற வேண்டும். சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏதேனும் ஏற்பட்டு, அதற்கு மனுதாரரே காரணம் என தெரியவந்தால் நாங்கள் சீரியசான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்’ என்று நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.
சாமிக்கு இந்த ஜாமீன் உத்தரவால் ஏமாற்றமா இல்லையா என்பதை நம்மால் அறிய முடியவில்லை. ஏனென்றால், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கத்தான் அவர் இன்று ஆஜரானார் என்ற போதிலும், ஜாமீன் வழங்கப்படலாம் என்பதை அவர் அறிந்திருந்ததாகவே தோன்றியது. ஆனாலும் விடவில்லை.

‘இது இடைக்கால ஜாமீன்தான். அதுவும் டிசம்பர் 18 வரை 61 நாட்களுக்குதான். அப்பீல் மனுவோடு அவர் 35,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் அது சுலபமான காரியமில்லை. தவிர, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எது நடந்தாலும் உடனே ஜாமீன் ரத்து ஆகிவிடும். அதிமுகவினர் என்னை மிரட்டுகிறார்கள். என் மீது தாக்குதல் நடந்தாலும் ஜெயா ஜாமீன் ரத்தாகி விடும்’ என்று ஒரு எதிர்பார்ப்பு இருப்பது போல பேட்டி அளித்தார்.

லாலு பிரசாத், சவுதாலா ஆகிய முன்னாள் முதல்வர்கள் ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைக்காமல் பல மாதங்கள் சிறையில் வாடிய நிலையில், ஜெயலலிதாவுக்கும் அப்படித்தான் நேரும் என பலர் நம்பினார்கள். குன்ஹா அளித்த தண்டனையை நிறுத்தி வைப்பதா வேண்டாமா என்று கர்நாடகா ஹைகோர்ட் முடிவு எடுக்காமல் விட்டதால்தான், இந்த வழக்கில் தலையிடவும் ஜாமீன் வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஹைகோர்ட் எதிர்பாராமல் வழங்கிய வாய்ப்பு என நம்ப இடமில்லை. முக்கிய தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நமக்கேன் வம்பு என கீழ்கோர்ட் ஒதுங்கி மேல் கோர்ட் உத்தரவுக்கு வழி விடுவதுண்டு. இதுவும் அந்த ரகமாக இருக்கக் கூடும். ஆனால், அப்பீல் விசாரணையில் வாய்தா கேட்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள நிபந்தனை மிகவும் முக்கியமானது.

டிசம்பர் 18க்குள் கர்நாடகா ஹைகோர்ட்டில் அப்பீல் மனுவை ஜெயலலிதா முழுமையாக தாக்கல் செய்தால், அன்றிலிருந்து 3 மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பு வழங்க சுப்ரீம் கோர்ட் ஆணையிடும். அதாவது இன்று தொடங்கி 5 மாதங்களுக்குள் ஜெயா வழக்கில் இறுதித் தீர்ப்பு வந்துவிடும். தாமதப்படுத்த வழியே இல்லை.

seeks-compensation

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற ஒரு வாசகம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அது வாதிக்கு மட்டுமல்ல, பிரதிவாதிக்கும் பொருந்தும். ஜெயா மட்டும் இவ்வளவு வாய்தா கேட்காமல் இருந்திருந்தால், முன்பே தீர்ப்பு வந்திருக்கும். அப்போது இருந்த சட்டப்படி, அவர் தண்டனை பெற்றிருந்தாலும் பதவியாவது பறிபோகாமல் இருந்திருக்கும். ஒரே ஆண்டில் நிலைமை மாறிவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(1), 8(2), 8(3) ஆகியவற்றின் கீழ் தகுதி இழப்பவர்களின் வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம்தான் உத்தரவு பிறப்பித்தது. அதன் பேரில் இம்மாதியான வழக்குகளில் தினம் தோறும் விசாரணை நடத்தி, சீக்கிரம் முடிக்க வேண்டிய பொறுப்பு அரசு வழக்கறிஞர்களைச் சாரும் என்று உள்துறை அமைச்சகம் மே மாதம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அப்படி கையாளப்படும் முதல் வழக்காக ஜெயலலிதா கேஸ் அமைந்ததை இயற்கை என்பதா கேட்டுப் பெற்ற வரம் என்பதா, தெரியவில்லை.

என்னதான் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும், தண்டனை வழங்கிய கோர்ட்டின் திருப்திக்கு ஏற்ப ஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால்தான் கைதி எண் 7402 சிறையில் இருந்து வெளியே வர முடியும். பரப்பன அக்ரஹார சிறை அதிகாரி ஒருவரை கேட்டபோது, சனிக்கிழமை மாலை அது நடக்கக்கூடும் என்றார்.

இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை அவர் சிறை சென்ற அன்று அல்லது மறுநாள் வந்திருந்தால், தமிழகம் விரும்பத் தகாத விளைவுகளைச் சந்தித்து இருக்காது. அவர் வெளியே வந்த பிறகும் அதிமுக அரசும் அவரது கட்சியினரும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொருத்தே ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் அமையும்.

குறிப்பு: நாரிமனை ஏன் அண்ணாச்சி என கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் என்பதற்கு, இந்தக் கட்டுரைக்கு முன்பாக அவர் எழுதிய இன்னொரு கட்டுரையை வாசித்துவிடுங்கள். அதன் சுட்டி இதோ..

நன்றி: தமிழ் ஒன்இந்தியா.
3 thoughts on “சாதித்தார் நாரிமன் ‘அண்ணாச்சி’! – கதிர் சிறப்புக் கட்டுரை

 1. குமரன்

  ///அதை அதிமுக தரப்பில் யாரும் வாசித்தார்களா என்பது தெரியாது. பொதுவாக அவர்கள் வாசிப்பில் கொஞ்சம் வீக். ///

  சேச்சே, அவர்கள் எப்போதும் எதிலும் அடக்கி வாசிப்பதில்லை!

 2. குமரன்

  ஜெயாவின் வழாக்கம் எப்போதுமே பணிவாக, அடக்கமாகக் கேட்பது இல்லை, மிரட்டிப் பணிய வைப்பதுதான் அவரது வழக்கம்.

  எனவே அப்போது ஜெத்மலானி கேட்டது அதிகாரப் பிச்சை.

  கைதான உடன் அதிமுகவினரின் நடவடிக்கைகள், ஜெயாவின் மன நிலையையும், வழக்கமான நடத்தையும் சார்ந்தே இருந்தன. அந்த 20 நாட்களும், தொடர்ந்து இதே போன்ற நடத்தையில்தான் அதிமுகவினர் அனைவரும் இருந்தனர். ஜெயாவின் முழு சம்மதத்துடன் தான் இத்தனையும் நடந்தன என்று நம்ப இடம் இருக்கிறது. எவரையும் தான் சந்திக்கவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்திய ஜெயா, சசியுடனும் இளவரசியுடனும் தொடர்ந்து பேசி வந்து, அவர்கள் மூலம் அதிமுகவினருக்குக் கட்டளைகளை அனுப்பினார் என்பது தெரிகிறது.

  அதிமுகவினர் இந்த 20 நாட்களில் ஒட்டிய போஸ்டர்கள் அரசியல் அராஜகத்தின் உச்ச கட்டம். ஒரு மாதிரி இதோ:

  நீதிபதி குன்ஹாவைக் குறித்து:

  “பொறுமையைக் காக்கவேண்டிய எருமை நீதிபதியே
  சட்ட திட்டத்தை சரியாகப் படிக்கத் தெரியாத சனியனே
  தமிழ்நாட்டு மக்கள் கண்களை கடலாக மாற்றிய கருமாந்திர நீதிபதியே
  அம்மாவுக்கு தவறான தீர்ப்பு கூறிய திருட்டு முண்டமே ”

  மத்தியில் பா.ஜ.கவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது, தமக்குக் கிடைக்கும் 30+ சீட்டுகளை வைத்து மத்திய அரசை மிரட்டிப் பணிய வைத்துத் தமக்கு வேண்டிய தீர்ப்பை நீதிபதி தரவைத்து விடலாம் என்று கனவு கண்ட ஜெயாவுக்குத் தமிழக மக்கள் 37 சீட்டைத் தந்தாலும், இந்திய மக்கள் பா.ஜ.கவுக்கு அறுதிப் பெரும்பான்மை தந்து ஜெயாவின் வழக்கமான பிளாக் மெயில் அரசியலுக்கு வைத்த ஆப்பு, அந்த ஆண்டவன் போட்ட கட்டளை ஆகும்.

  ஜெயா எப்படியோ அப்படித்தான் அவரது தொண்டர்களும் நீதிமன்றத்தை மிரட்டிப் பணியவைக்க முடியும் என்று திடமாக இன்னமும் நம்புகிறார்கள்.

  கட்டுரையாளரின் சுட்டியில் இருக்கும் இன்னொரு கட்டுரையில் சொன்னபடி
  “இப்படிப்பட்ட சூழ்நிலையில், தவறுகளுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் புதிய தவறுகள் புரிந்து அதிலிருந்து விடுபட முனைவது பலன் அளிக்காது. நேர்வழிக்கு மாற்றுப்பாதை நிச்சயமாக கிடையாது!”

  ஒரு குற்றவாளி, தண்டனைக் கைதி ஜாமீன் கேட்கும்போது எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி உச்ச நீதிமன்றத்தில் நாரிமன் மூலம் நடந்து கொண்டதால் ஜாமீன் கிடைத்தது.

  உயர் நீதிமன்றத்தில் ஜெயாவின் வழக்கமான ஆவணப்போக்கே கடைப்பிடிக்கப் பட்டது.

  தான் ஒரு தண்டனைக் கைதி என்ற சட்டபூர்வமான உண்மையை ஜெயா உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *