BREAKING NEWS
Search

காமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்! – கருணாநிதி

காமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்! – கருணாநிதி

kamaraj-1

பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க!

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா இன்று!

மறைந்த தலைவர்கள், மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை; மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

முதன் முதலாக தமிழகத்திலே காமராஜர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்த சென்னை மாநகராட்சியைச் சேர்ந்ததாகும்.

காவேரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா அவர்கள்தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் காமராஜர் அவர்கள்தான்.

தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் பிரதமர் வாஜ்பய் அவர்களிடம் வலியுறுத்தி, வாதாடிப் பெற்று குமரிக் கடற்கரையில், காமராஜருக்கு, ஏற்றமிகு மணி மண்டபம் ஒன்றை நான் எழுப்பியதை எவர்தான் மறந்திட இயலும்?

சென்னை கடற்கரை சாலை, கழக ஆட்சியில் காமராஜர் சாலை ஆயிற்று. மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் பெயர் தாங்கி நிற்பதற்கு காரணம் கழக ஆட்சி!

விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியது, சென்னையில் அவர் உடலை அடக்கம் செய்ய கிண்டியில், அண்ணல் காந்தி அடிகளின் பெயரால் உள்ள மண்டபத்திற்குப் பக்கத்திலேயே இடம் தேடி அங்கே எழிலார் நினைவகம் அமைத்தது போன்றவை கர்ம வீரர் காமராஜர் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய தொண்டுக்கு கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எளிய காணிக்கைகளாகும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும், அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட”திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி அதை நடைமுறைப்படுத்தியதும், காமராஜரின் ஊழியராகப் பணியாற்றிய வைரவன் என்பவரை சென்னை காமராஜர் நினைவகத்தில் வழிகாட்டியாக அரசு ஊதியத்தில் அமர்த்தியதும், அவர் குடியிருக்க அரசு குடியிருப்பில் வீடு வழங்கியதும் கழக ஆட்சிதான். காமராஜரின் சகோதரியார் திருமதி நாகம்மாள் அவர்களை என் சகோதரியாராகவே கருதி, அந்த வழியே செல்லும் போதெல்லாம் அவரைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

என் அருமை அன்னையார் அஞ்சுகம் அம்மையார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 27-1-1963 அன்று இயற்கையெய்தியபோது அவரது உடல் என் வீட்டிற்கு வந்து சேருவதற்கு முன்பே, அப்போது முதல் அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் எனக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்காக, நான் வந்து சேரும் முன்பே என் இல்லத்திற்கு வந்து காத்திருந்தது என்னால் என்றைக்கும் மறக்க முடியாத மனிதாபிமானம் மிக்க நிகழ்ச்சியாகும்.

மு.க. ஸ்டாலின் திருமணத்தின்போது நேரில் சென்று அவரை அழைத்தேன். உடல் நலிவைக் காரணம் காட்டி வரஇயலாதே என்று வருத்தப்பட்டார். அவர் வரவேண்டும் என்பதற்காகவே திருமண மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி, அவர் வரும் கார், மேடைக்கே வந்து அவர் மேடையிலேயே இறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவரும் வந்திருந்து வாழ்த்தியது எனக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் என்றும் பசுமையான நினைவில் பதிந்திருக்கும் நிகழ்ச்சியாகும்.

காமராஜர் பிறந்த நாளையொட்டி 15-7-1976இல் நான் எழுதிய ஒரு கவிதை :-

“பெருந்தலைவ;
இன்றைக்கு உன்றன் பிறந்தநாள் –
கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா!
விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்தாய்
சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!
சிறையின் கொடுமையும் சித்ரவதையும்
சிரித்த முகத்துடன் ஏற்ற தியாகி
ஆயிரம் உண்டு கருத்து மோதல் – எனினும்
அழியாத் தொண்டு மறந்திடப்போமோ?

தமிழ்நிலம் மணக்க வந்த திருவே!
அமிழ்தெனும் பொதுப்பணியின் உருவே!
கருத்திருக்கும் உன்றன் உடல் என்றாலும் – நெஞ்சில்
கருத்திருக்கும் காலமெல்லாம் உழைப்பதற்கு!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும் –
கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்.

கட்சிகளை நோக்கி, நீ கடுமொழிகள் தொடுத்திடுவாய் – பிற
கட்சித் தலைவர்க்கோர் இன்னலென்றால் துடித்திடுவாய்!
பெரியாரின் கல்லறையில் உன் கண்ணீர்!
பேரறிஞர், மூதறிஞர் மறைந்த போதும் உன் கண்ணீர்!
பெற்ற தாய்தனை நான் இழந்தபோதும்
உற்றார் உறவுபோல் நீ வந்து உகுத்தாய் கண்ணீர்!
பெருமகனே! உனக்காக எம் கண்ணீர்
பேராற்றுப் பெருக்கெனவே பாய்ந்த தன்றோ?

தனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு
தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்
குமரிமுதல் இமயம்வரை உன்கொடி பறக்கக்
கோலமிகு தமிழகத்தின் புகழ் பொறித்தாய்.
“குணாளா! குலக்கொழுந்தே!”” என்று பண்பின்
மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.
பச்சைத் தமிழன் எனப் பகுத்தறிவுத் தந்தை
இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.
கருப்புக் காந்தியென உன்னை – இந்தக்
கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுததன்றோ!

வாழ்க்கையின் ஓரத்தில் நீ எம்மிடம் வாஞ்சையும் காட்டினாய்! உன்
வாழ்வையே ஒரு பாடமாய் அனைவர்க்கும் நிலை நாட்டினாய்!
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள் –
என்றைக்கும் அது சிறந்த நாள்!

திரு. ராஜாராம் நாயுடு அவர்கள் ஒருமுறை மேலவையில் என்னிடத்திலே ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில் பெருந்தலைவர் காமராஜர், “நான் ஊட்டிக்குச் செல்கிறேன், ஊட்டிக்குச் சென்றால் அங்கே அரண்மூர் அரண்மனையில் ஓரிரு வார காலம் தங்க நேரிடும். அதற்கான அனுமதியை எனக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்குச் சொல்ல வேண்டுகிறேன்” என்று எழுதியிருந்தார். அதிலே கடைசியாக, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அப்படி இடம் ஒதுக்கப்படுவது இயற்கை, அவ்வாறு ஒதுக்கவும் என்று எழுதப்பட்டிருந்தது. நான் உடனே ராஜாராம் நாயுடுவிடம், “காமராஜருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலே இடம் ஒதுக்க முடியாது, தலைவர் என்ற முறையிலேதான் அவருக்கு இடம் தர முடியும், அவ்வாறே அவர் அங்கே தேவைப்படுகின்ற நாள் வரை தங்கலாம்” என்று கூறினேன். அந்த அளவிற்கு அவரிடம் பற்றும் பாசமும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் நாங்கள்.

தி.மு.கழக அரசு பதவிக்கு வந்த பிறகு கடுமையான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருடைய அந்தரங்கச் செயலாளர்கள் “பெருந்தலைவர் அவர்கள் ஏ.சி. இல்லாமல் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை இப்போது அவருக்குள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி. ஏற்பாடு செய்து கொடுங்கள்” என்று சொன்னார்கள். உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, “அவர்கள் செல்கின்ற எல்லா விருந்தினர் மாளிகைகளிலும் ஏ.சி. வசதி செய்து கொடுங்கள். அவர் அதிகாரத்தில் இல்லையே என்று பார்க்காதீர்கள், நாமெல்லாம் அதிகாரத்திலே வருவதற்கு அவர் வழி விட்டவர், வழி காட்டியவர், எனவே நீங்கள் யாரும் இதில் சுணங்காதீர்கள்” என்று உத்தரவு பிறப்பித்தேன்.

ஆம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு நேரமாகி விட்டது என்று அந்த ஊர் காங்கிரஸ் கட்சித் தோழர்கள் பெருந்தலைவரைப் பார்த்து அழைத்த நேரத்தில், உடனே காமராஜர் கோபத்தோடு, “சும்மா இரு அய்யா, கருணாநிதியை திட்டத்தானே கூப்பிடுகிறே, அவர் தான் ஊருக்கு ஊர் ஏ.சி. வச்சிக் கொடுத்திருக்கிறார், ஏ.சி.யை அனுபவித்துவிட்டுப் போய் அவரைத் திட்டச் சொல்றே, சரி, வாய்யா வாய்யா” என்று சொன்னாராம் (கைதட்டல்) இப்படி ஒரு மானசீகமான பாசம் அவருக்கு என்மீது; எனக்கு அவர் மீது.

kamaraj-karu

ஒருமுறை காங்கிரஸ் கட்சி மாணவர்கள் சட்டக் கல்லூரியிலே கறுப்புக் கொடி காட்டப் போகிறோம் என்று சொன்னவுடன் காமராஜர் சொன்னாராம்:

“வேலை கிடையாதா உங்களுக்கு? அவன் என்னாட்டம் பின்தங்கிய சமுதாயத்திலே பிறந்தவன், அவனும் போயிட்டா வேறு யாரு இருக்கா? நான்தான் இப்போது முதல் அமைச்சரா இல்லை, பின் தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த அவனுக்கு கறுப்புக் கொடி காட்டப் போறீங்களா? கறுப்புக் கொடிகளையெல்லாம் சுருட்டி வச்சிட்டு வீட்டுக்குப் போங்க” என்று சொன்னவர் பெருந்தலைவர் காமராஜர்.

காமராஜருக்கான இறுதிச் சடங்குகளை நிறைவேற்றிய போது ஒரு காங்கிரஸ் தலைவர் மேலவையிலே, “ஒரு அண்ணனுக்கு ஒரு தம்பி இவ்வளவு ஈ.மச் சடங்குகளைச் செய்திருப்பாரா என்று என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு சடங்குகளை, அவ்வளவு காரியங்களை பெருந் தலைவர் காமராஜருக்காக முதல் அமைச்சர் கருணாநிதி செய்தார்” என்று என்னைப் பாராட்டினார்.

காமராஜர் பிறந்த நாளை தமிழகமெங்கும் நினைவுகூர்ந்திடும் வகையில் “கல்வி வளர்ச்சி நாள்” என்ற பெயரில் அனைத்துக் கல்விக் கூடங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவித்து, அதனை அடுத்து வருகின்ற ஆட்சியினர் மாற்றி விடக் கூடாதே என்பதற்காகவே சட்டமாகவே இயற்றினேன்.

இவைகள் எல்லாம் – இந்தப் பாராட்டுக்கள் எல்லாம் – இந்தச் சிறப்புக்கள் எல்லாம் – இந்தப் புகழுரைகள் எல்லாம் நான் அரசியலிலே காமராஜரை எதிர்த்துப் பேசிய பேச்சுக்கள், நான் ஈடுபட்ட செயல்கள் இவைகளுக்கெல்லாம் ஒரு பரிகாரமாக என்னை மாற்றுகின்ற அளவிற்கு இருந்தன என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க!

-என்வழி செய்திகள்
4 thoughts on “காமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம்! – கருணாநிதி

 1. Venkatesh

  காமராஜரை கலைஞர் அவதூறு பேசியதையும் மறக்க முடியாது… அதேபோல கர்மவீரர் இறந்த உடன், அவருக்கான நினைவிடத்தை தாமதமின்றி அமைக்க, கிண்டியில் உள்ள காட்டை சீர்திருத்தும் வேலையில் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இறங்கியவரும் கலைஞர்தான் என்பதையும் மறக்க முடியாது.

 2. srikanth1974

  உத்தமர்களின் தியாகத்தை அவர்கள்
  செத்தப் பிறகுதான் இந்த உலகம் புரிந்துக்கொள்கிறது.
  என்று புரட்சித் தலைவர் நல்ல நேரம் திரைப்படத்தில் சொன்னதுதான்
  நினைவிற்கு வருகிறது.

 3. குமரன்

  கருணா நிதி செய்ய வேண்டிய பரிகாரங்கள் எண்ணில் அடங்காதவை உள்ளன !!

 4. Babu

  காமராஜரை எதிர்த்துப் பேசியதற்கு, ஈடுபட்ட செயல்களுக்கு நான் செய்த பரிகாரம் ………. தலைவரே நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் நிறைய இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *