BREAKING NEWS
Search

மல்லாந்து படுத்திருப்பவன் காறித்துப்புகிற கதை – ஈழ விவகாரம் குறித்து ஜெ-வுக்கு கருணாநிதி பதிலடி!

மல்லாந்து படுத்திருப்பவன் காறித்துப்புகிற கதை – ஈழ விவகாரம் குறித்து ஜெ-வுக்கு கருணாநிதி பதிலடி!

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சினையில் தன்னைக் குற்றம்சாட்டும் அதிமுக மற்றும் சிலருக்கும் சேர்த்து மிக காட்டமான அறிக்கையை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி புதன்கிழமை விடுத்துள்ளார்.

மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்புகிற கதை என்ற தலைப்பில் வந்துள்ள அந்த அறிக்கை:

அதிமுக செயற்குழுவில் தீர்மானம் என்ற பெயரில் திட்டியுள்ளனர்..

“அ.தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தாங்கள் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக – தி.மு.கவையும் என்னையும் திட்டுவதுதான் நோக்கம் என்ற அடிப்படையிலே வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் என் மீதான தாக்குதல்தான்! 2009இல் இலங்கையில் இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, மத்திய அரசை நான் வலியுறுத்தவில்லையாம்! அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு நான்தான் காரணமாம்!

ஜெயலலிதா செய்தது என்ன?

2006ஆம் ஆண்டு மே திங்கள் வரை ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தாராம்?

16-4-2002 அன்று சட்டப் பேரவையிலே ஜெயலலிதாவே முன்மொழிந்த தீர்மானம் வருமாறு :

“விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்” என்பதாகும். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா இது?

யுத்தத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்…

17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை.

ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டாரே, இதுதான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றிய லட்சணமா?

ஜெயலலிதா இப்படியெல்லாம் சொன்னதால் அல்லவா, இலங்கை ராணுவத்தினர் இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்தனர். எனவே இலங்கைத் தமிழர்கள் அழிவிற்கு யார் காரணம்? ஜெயலலிதாவா? நானா?”

நான் செய்தது என்னென்ன?

போர் உச்சத்தில் இருந்தபோது நான் ஒன்றுமே செய்யவில்லையா?

“இனக்கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்த போது நான் எதுவும் செய்யவில்லையாம்.. ஜெயலலிதாதான் செய்தாராம்..? என்ன ஆதாரம்?

14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்,
24-10-2008 அன்று மனிதச் சங்கிலி,
12-11-2008 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம்,
4-12-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரோடு சந்திப்பு,
27-12-2008 அன்று தி.மு. கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்,
28-3-2009 அன்று பிரதமருக்கும், சோனியா விற்கும் கடிதம்,
7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் ஆகியோருக்கு தந்தி,
9-4-2009 அன்று சென்னையில் பேரணி,
21-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி ஆகியோருக்கு மீண்டும் தந்தி,
23-4-2009 அன்று தமிழகத்தில் “பந்த்”,
24-4-2009 அண்ணா அறிவாலயத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் சந்திப்பு,
27-4-2009 அன்று உண்ணாவிரதம்

– இவை எல்லாம் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது நான் எடுத்த நடவடிக்கைகள்!

ஆனால் என்னைக் குற்றஞ்சாட்டி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா செய்தது என்ன?

14-10-2008 அன்று கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ‘கண்துடைப்பு நாடகம்’ என்று கூறி அதனைப் புறக்கணித்தார்.

‘கருணாநிதி புலிகளைக் காக்க நாடகமாடுவதாக’ குற்றம்சாட்டிய ஜெ

15-10-2008 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ‘இலங்கையில் தற்போது நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகள் என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான யுத்தம். இந்த யுத்தத்தில் அங்கு வசிக்கும் அப்பாவித் தமிழர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல விடாமல் விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன.

போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இது
ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்று அல்ல,’ என்று என்னைத் தாக்கி அறிக்கை விட்டதைத் தவிர வேறு எதையும் ஜெயலலிதா செய்யவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக எதுவுமே செய்யாத ஜெயலலிதா, தற்போது அவரது கட்சியின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம்
என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

ஏன் உண்ணாவிரதம் வாபஸ்?

அந்தத் தீர்மானத்தில் போர் முடிந்து விட்டதாக பொய்யான தகவலைக் கூறி நான் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றதாக சொல்லியிருக்கிறார்.

நான் உண்ணாவிரதம் இருந்த 27- 4-2009 அன்று மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆங்கிலத்தில் வெளியிட்ட அறிக்கையில், “நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான்வழித் தாக்கிடும் போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.”

இவ்வாறு இலங்கை அரசு அறிவித்துள்ளதாகவும், மேலும் “குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும்” என்றும், “போர் முனையில் சிக்கிக் கொண்டுள்ள தமிழ் மக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்” என்றும் “போர் முனையிலிருந்து வெளி வந்தோரின் துயரங்களைத் தணிப்பது மட்டுமன்றி; போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கியிருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங் களுக்குக் கொண்டு செல்வதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்” என்றும், இலங்கை அரசு கூறியிருப்பதாகத் தெரிவித்த பிரணாப் அவர்கள், அந்த அறிக்கையில், “போர்ப் பகுதியிலிருந்து வெளிக் கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் அவர்கள் 100கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும், அதை எப்படி நம்பாமல் இருப்பது? அவ்வாறு நம்பி நான் எடுத்த முடிவுக்கு களங்கம் கற்பிக்க முயலுகிறார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த ஒன்றிலிருந்தே ஜெயலலிதாவின் தீர்மானம் எத்தகைய இட்டுக்கட்டிய ஒன்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்டன் பாலசிங்கத்தை சிகிச்சைக்காக அனுமதிக்க மறுத்தவர் ஜெ..

இது மாத்திரமல்ல, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதுதான் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மிகவும் பாடுபட்டவரும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த அருமை நண்பர் ஆண்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி ஓர் பிரச்சினை எழுந்தது. அப்போது பிரதமர் வாஜ்பாய்-யிடம் அது பற்றி கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் பாலசிங்கத்துக்கு சிகிச்சை பெறுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றுதான் கூறினார்.

அப்போது தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா, வாஜ்பாயின் கருத்தைக் கடுமையாக எதிர்த்தார். “தமிழகம் உள்பட இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற, மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்றே கூறினார். தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகச் செயல்படுபவர் கள்மீது புதிய “பொடா” சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

12-4-2002 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விடுதலைப் புலிகள் பிரச்சினை தொடர்பாக இரண்டு முறை விரிவாகப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின் போது அவர் கூறியதாவது :

“விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான சமரசப் பேச்சுவார்த்தையில் இந்தியா பங்கேற்காது எனப் பிரதமர் கூறியுள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் அதேசமயம் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பால சிங்கத்துக்கு இந்தியாவில் சிகிச்சை அளிப்பது குறித்து மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்படும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளதை எதிர்க்கிறேன். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் எந்த இடத்திலும் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பது அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் தமிழகத்தை மத்திய அரசு நிர்ப்பந்திக்காது என்ற நம்பிக்கை உள்ளது.”

இப்படியெல்லாம் பேட்டி கொடுத்தவர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்பவராம்! ஆனால் நான் இலங்கைத் தமிழர்கள் அழிவிற்குக் காரணமானவனாம்!

புலிகளை ஆதரித்தால் பொடா பாயும் என அறிவித்தாரே…

ஜெயலலிதாவிடம் செய்தியாளர்கள், “விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்” என்று ம.தி.மு.க., பா.ம.க., போன்ற சில கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்களே என்று கேட்டபோது,

“விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேச துரோகக் குற்றம் செய்ததாகக் கருதப்பட வேண்டும். எனவே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது புதிய “பொடா” சட்டத்தின்கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். இச்சட்டத்தின்கீழ் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கும் உள்ளது” – என்று பதிலளித்தார்.

நானாக இதை இட்டுக்கட்டிக் கூறவில்லை. தினமணி நாளிதழ் 13-4-2002-ல் முதல் பக்கத்தில் வந்துள்ள தலைப்புச் செய்தியே இதுதான்!

இத்தகைய முரண்பாடுகளுக்கு சொந்தக்காரர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா; இவர் நம்மைப் பார்த்து “கபட நாடகம்” ஆடுவதாகச் சொல்வது, மல்லாந்து படுத்திருப்பவன் காறித் துப்பிய கதையாகவே ஆகிவிடும்.”

-இவ்வாறு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் கருணாநிதி.

-என்வழி செய்திகள்




34 thoughts on “மல்லாந்து படுத்திருப்பவன் காறித்துப்புகிற கதை – ஈழ விவகாரம் குறித்து ஜெ-வுக்கு கருணாநிதி பதிலடி!

  1. தினகர்

    கலைஞரே, இது எல்லாமும் உங்களை மதிப்பவர்களுக்கு கூட ஒரு வேளை தெரியாமல் இருக்கலாம், ஆனால் எதிர்ப்பாளர்களுக்கும், திட்டுபவர்களுக்கும் நன்றாகவே தெரியும். என்ன செய்வது, திட்டித்தீர்ப்பது என்பது ஏற்கனவே னதில் திட்டமிடப் பட்டதல்லவா?

  2. தினகர்

    கலைஞருக்கே பதில் சொல்ல முடியாதவங்க, குஷ்பு கேக்கிற கேள்விக்கா பதில் சொல்லப்போறாங்க?

    http://www.youtube.com/watch?v=v0Xb6AC7ufs&feature=plcp

    வேகத்தைப் பார்த்தா, முறத்தால் புலியை விரட்டிய அக்மார்க் தமிழச்சியாக குஷ்பு மாறிட்டாங்கன்னு சொல்லலாம்.

  3. Rav

    ஈழம் பற்றி பேசினால் புலிகள் பற்றி பேசுவதே கலைஞருக்கு வாடிக்கை ஆகிவிட்டது. ராஜீவ் காந்தியை கொன்ற காரணத்தினால் புலிகளை அதிலிருந்து எதிர்த்து வருபவர் ஜெயலலிதா, ஆதலால், அவரை மேற்கோள் காட்ட ஆயிரம் வார்த்தைகள் இருக்கும், அதனால், ஆட்சியில் இருந்த ஒருவர் மத்தியின் ஆட்சியை நிலைக்க வைக்கும் ஒருவர் செய்தது சிறிதென்றும் செய்யாதது பலவென்றும் அனைவரும் சொல்வர். உலகெங்கும் உள்ள ஈழ தமிழர் திட்டுவது கலைஞரையா அல்லது புரட்சி தலைவியையா?

  4. குமரன்

    கருணாநிதியை ஈழ விஷயத்தில் குறை சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

  5. தினகர்

    “ஈழம் பற்றி பேசினால் புலிகள் பற்றி பேசுவதே கலைஞருக்கு வாடிக்கை ஆகிவிட்டது”

    இரண்டும் இரண்டற கலந்தது என்பது கூட அறியாதவரை என்னவென்று சொல்வது.. ?

  6. Kumar

    அந்த ஆளும் எழவு வீட்டில் அரசியல் பண்ணுவதை விட மாட்டார், நீங்களும் அந்த ஆள் பண்ணுற அரசியலை neglect பண்ண மாட்டீங்க….இந்த ஆளுக்கு ஆதரவா எப்படியும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் போஸ்ட் வந்துடும்….

    அழகிரி பையன் abscond ஆயட்டானே அதை பத்தி ஒரு போஸ்டும் காணோம்…..

    Don’t we have any alternate for Jaya and Karuna? There are other better leaders in Tamilnadu than these two…

    Vino, Jaya and Karuna has their own media for their false propaganda…as I request several times, please support leaders like Vaiko, Tamilaruvi Maniyan, Nallakannu, Collector Sagaayam etc….

    Tamilnadu needs a leader like Vaiko as CM, neither Karuna nor Jaya.

  7. Kumar

    “வேகத்தைப் பார்த்தா, முறத்தால் புலியை விரட்டிய அக்மார்க் தமிழச்சியாக குஷ்பு மாறிட்டாங்கன்னு சொல்லலாம்…..”

    இதை விட கேவலமா தமிழ்நாடு பெண்களை அசிங்கபடுத்த முடியாது…. பெரியார், அண்ணா தோற்றுவித்த ஒரு இயக்கம் இப்படி கூத்தாடிகள் கிட்ட எல்லாம் அல்லல் படுறது போதும்…அய்யா தினகர் உங்களுக்கு புண்ணியமா போகும் நீங்க அதுக்கு ஜால்ரா அடிக்காதீங்க…..

  8. மிஸ்டர் பாவலன்

    //வேகத்தைப் பார்த்தா, முறத்தால் புலியை விரட்டிய அக்மார்க் தமிழச்சியாக குஷ்பு மாறிட்டாங்கன்னு சொல்லலாம்…..”// (தினகர்)

    // இதை விட கேவலமா தமிழ்நாடு பெண்களை அசிங்கபடுத்த முடியாது…. பெரியார், அண்ணா தோற்றுவித்த ஒரு இயக்கம் இப்படி கூத்தாடிகள் கிட்ட எல்லாம் அல்லல் படுறது போதும்…அய்யா தினகர் உங்களுக்கு புண்ணியமா போகும் நீங்க அதுக்கு ஜால்ரா அடிக்காதீங்க…..// (குமார்)

    கற்பு பற்றி குஷ்பூ தமிழ்நாடு பெண்களை அவமதிக்கும் வகையில்
    கருத்து சொல்லப் போக பின் கோர்ட், கேஸ் என வந்து அதன் பின்
    தி.மு.க. கட்சியில் சேர்ந்தவர் தான் குஷ்பூ. அவரை சங்க கால
    மறப்பெண்களுடன் ஒப்பிடுவது மிகவும் வேதனையாக உள்ளது.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  9. குமரன்

    குடுத்துடுங்கப்பா குஷ்புவுக்கு ஒரு பட்டம் ….

    உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவி !!!!

  10. karthik

    //வேகத்தைப் பார்த்தா, முறத்தால் புலியை விரட்டிய அக்மார்க் தமிழச்சியாக குஷ்பு மாறிட்டாங்கன்னு சொல்லலாம்.

    அடக் கொடுமையே.. அப்படியா ?

  11. karthik

    //கலைஞருக்கே பதில் சொல்ல முடியாதவங்க, குஷ்பு கேக்கிற கேள்விக்கா பதில் சொல்லப்போறாங்க?

    பாஸ்.. என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவர்.. கலைஞர் ஒன்னும் குஷ்புவிற்கு குரஞ்சவர் இல்ல..

  12. தினகர்

    ”தமிழ்நாடு பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து சொல்லப் போக பின் கோர்ட், கேஸ் என வந்து அதன் பின் தி.மு.க. கட்சியில் சேர்ந்தவர் தான் குஷ்பூ. அவரை சங்க கால மறப்பெண்களுடன் ஒப்பிடுவது மிகவும் வேதனையாக உள்ளது.”

    எந்த கோர்ட்டிலாவது அவருக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்களா?. குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லையென்றாலும் ’குற்றவாளி தான் ‘என்று முடிவு செய்து விடுவீர்களா?

    அவரது பேச்சு, வெகு இயற்கையாக மனதில் இருந்து வெளி வந்ததாக இருந்ததால் குறிப்பிட்டேன். ஒரு வேளை அவர் திமுகவில் சேர்ந்து விட்டார் என்பதால் உங்களுக்கு தவறாக தெரியலாம். இயற்கையாக எதார்த்தமாக, இதயத்திலிருந்து பேசுபவர்களின் செயலகளை நம்பலாம். ஆனால் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று சொல்பவர்களை/ எழுதுபவர்களை நம்ப முடியாது

  13. karthik

    கருணாநிதி அவர்களே… போரட்டங்களை பட்டியல் இடுவது வேறு.. பட்டியல் இடுவதற்காக போராடுவது என்பது வேறு.. உங்களது எந்தவகை என்பது உங்களுகே தெரியும்.. ( அது சரி 100 வருடங்களுக்கு அப்றோம் வரும் மடையர்களுக்கு இது தெரியவா போகிறது.. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே.. )

    உங்க லிஸ்ட்ல ஹைலைட்டே இது தான்..
    27-4-2009 அன்று உண்ணாவிரதம்.. ..

    அப்புறம் இதையும் சேர்த்துகொங்க..
    28 -4 -2009 அன்று தமிழர் மீது குண்டு மழை

    ===========================

    //
    14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்,
    24-10-2008 அன்று மனிதச் சங்கிலி,
    12-11-2008 அன்று சட்டப் பேரவையில் தீர்மானம்,
    4-12-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரோடு சந்திப்பு,
    27-12-2008 அன்று தி.மு. கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்,
    28-3-2009 அன்று பிரதமருக்கும், சோனியா விற்கும் கடிதம்,
    7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம் ஆகியோருக்கு தந்தி,
    9-4-2009 அன்று சென்னையில் பேரணி,
    21-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி ஆகியோருக்கு மீண்டும் தந்தி,
    23-4-2009 அன்று தமிழகத்தில் “பந்த்”,
    24-4-2009 அண்ணா அறிவாலயத்தில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துடன் சந்திப்பு,
    27-4-2009 அன்று உண்ணாவிரதம்

  14. தினகர்

    “இது ரொம்ப ஓவர்.. கலைஞர் ஒன்னும் குஷ்புவிற்கு குரஞ்சவர் இல்ல..”

    கண்டிப்பாக, இன்றைய அரசியல்வாதிகளில் எல்லாரையும் விட மேலானவர் கலைஞர்.

    அரசியலில் யார் பேச்சுக்கு, யார் மறுப்பு தெரிவிப்பது என்று ஒரு மரபு இருக்கிறது. அந்த கோணத்தில் பார்த்தால் நான் சொல்ல வந்தது புரியும். அவ்வளவு பெரிய தலைவர் சொன்ன கருத்துக்கே மறுப்பு சொல்ல முடியாமல் இருக்கும் போது, அடுத்த கட்ட தலைவருக்கு பதில் சொல்வார்களா?

  15. Krishna

    ஆண்டன் பாலசிங்கத்தையும் பார்வதி அம்மாளையும் ஒப்பிடுவது என்பது ஒரு அபத்தமான ஒப்பீடு. பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் active member. தடை செய்யப்பட இயக்கத்தை சேர்ந்த எந்த நபரையும் உலகில் உள்ள எந்த நாடும் அனுமதிக்காது, இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தடை சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால் தடை நீடிக்கும் வரை அதை மதித்து தான் ஆக வேண்டும்.

    ஆனால் பார்வதி அம்மாளோ பிரபாகரனின் தாய் என்பதை தவிர அவருக்கு விடுதலை புலிகளுடன் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த போது அவர் தன் கணவருடன் திருச்சியில் தான் வசித்துக்கொண்டிருந்தார். அவர் சில ஆண்டுகளில் எந்த காரணத்துக்காகவோ இலங்கை சென்று விட்டார். எனவே அவர் மீண்டும் இந்தியா வருவதற்கு எந்த தடையும் இருக்க முடியாது. எனவே, இந்த ஒப்பீடு அபத்தமான ஒன்று.

  16. Krishna

    கருணாநிதியின் உண்ணாவிரத முடிவுக்கு பின் வந்த அறிவிப்பை பார்த்து தான் பதுங்கியிருந்த தமிழர்கள் வெளியே வந்து குண்டடி பட்டு இறந்தார்கள். இதை பற்றி புலியை முறத்தால் துரத்திய குஷ்பூ ஏன் எதுவும் தெரிவிக்கவில்லை?

  17. தினகர்

    ”பாலசிங்கம் விடுதலைப்புலிகளின் active member. தடை செய்யப்பட இயக்கத்தை சேர்ந்த எந்த நபரையும் உலகில் உள்ள எந்த நாடும் அனுமதிக்காது, இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தடை சரியா தவறா என்பது வேறு விஷயம். ஆனால் தடை நீடிக்கும் வரை அதை மதித்து தான் ஆக வேண்டும்.”

    தடை போட்டது மத்திய அரசு. அவர்களே சொல்லவில்லை. அதற்குள் இந்தம்மா எதற்கு கூப்பாடு போட வேண்டும். மத்திய அரசுக்கு கெடு வைக்க வேண்டும். அப்புறம் நான் தான் தமிழர்களுக்கு எல்லாம் செய்தேன் என்று பொய்யான ஒப்பாரி வைப்பது எப்படி நியாயம்.

    ஆண்டன் பாலசிங்கம் போர் முனையில் போராடும் போராளி அல்ல. அரசியல் பிரிவுக்கு தலைவர், அரசியல் ரீதியாக உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துபவர், இந்தியாவுடனும் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். கடைசியில் அவர் ஒரு முக்கிய சமாதான பேச்சு வார்த்தியில் ஈடுபட்டிருந்த போது தான் உடல் நலக்குறைவு ஏற்பட்டது, அவருக்கு முறையான சிகிச்சை கொடுத்து காப்பாற்றியிருந்தால், தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு எட்டியிருக்க முடியும்.

  18. Krishna

    //தடை போட்டது மத்திய அரசு. அவர்களே சொல்லவில்லை. அதற்குள் இந்தம்மா எதற்கு கூப்பாடு போட வேண்டும். மத்திய அரசுக்கு கெடு வைக்க வேண்டும். அப்புறம் நான் தான் தமிழர்களுக்கு எல்லாம் செய்தேன் என்று பொய்யான ஒப்பாரி வைப்பது எப்படி நியாயம்.//

    அரசியல் சட்டத்தை பற்றி யார் கூப்பாடு போட்டாலும் தவறு இல்லை. ஆண்டன் பாலசிங்கம் அரசியல் தலைவராக இருந்தாலும் ஒரு தீவிரவாத இயக்கத்தின் active member என்ற வகையில் ஜெயலலிதா ஆட்சேபனை எழுப்பியது சரியே. ஆனால் பார்வதி அம்மாளோ விடுதலைப்புலிகளுக்கு எந்த வகையிலும் தொடர்புடையவர் அல்ல.

  19. தினகர்

    “ஆண்டன் பாலசிங்கம் அரசியல் தலைவராக இருந்தாலும் ஒரு தீவிரவாத இயக்கத்தின் active member ”

    அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண என்ன வேணும்னாலும் சொல்லலாம். கலிகாலமடா சாமி 🙂

  20. Krishna

    //அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண என்ன வேணும்னாலும் சொல்லலாம். கலிகாலமடா சாமி :)/

    அம்மாவை எதிர்க்கும் காங்கிரஸ்காரர்களும் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த எல்லாரையும் தீவிரவாதி என்று சொல்லியிருக்கிறார்கள். அது என்ன காலம் என்பதை விளக்கவும். கருணாநிதியின் வழக்கமான மழுப்பல் தான் அவர் பதில் – ஏன் பார்வதி அம்மாள் வருகையை அவர் அரசு தடை செய்தது என்ற கேள்விக்கு ஜெயலலிதா இது போன்று செய்யவில்லையா என்ற பதில் தான். இது தான் உண்மையான கலிகாலம்.

  21. குமரன்

    கிருஷ்ணா அவர்களே

    புலிகள் இயக்கத்தை இன்று வேண்டுமானால் சிலர் தீவிரவாத இயக்கம் எனலாம். காலம் நிச்சயம் அவர்களைச் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவே அடையாளம் காணும் என்பது திண்ணம்.

    வென்றோர் சொல்வதெல்லாம் உண்மை எனபது வெற்றியின் மயக்கத்தில் இருக்கும் மட்டுமே. வெற்றியின் களிப்புப் போனபின்னர் வென்றவரே உண்மையை உணர்வதும் ஒப்புக் கொள்வதும் சரித்திரத்தில் பதிவானவையே.

    அசோகன் போர் நடந்த அன்றே தனது வெற்றியின் களிப்பை விடவும் அது ஏற்படுத்திய உயிர்ச் சேதத்துக்காக வருந்தினான் என்பது வரலாறு. அதனால்தான் அவனை இன்னமும் உலகம் பேசுகிறது.

    அசோகனின் மகனும் (மகிந்தனும்) மகளும் (சங்கமித்திரையும்) இலங்கை அனுராதபுரம் சென்று போதி மரத்தை நட்டு பவுத்தத்தை அங்கே பரப்பியதாக வரலாறு சொல்கிறது. அப்படிப் பட்ட இலங்கையில் அதே மகிந்தனின் பெயரை உடையவர் அதிபராக இருக்க நடந்த போர்குற்ற நிகழ்வுகள் அந்த போதி மரத்தையே கண்ணீர் சிந்த vaiththirukkum என்பதில் ஐயமில்லை.

    எது எப்படி ஆனாலும், “உடல் நலமில்லை, மருத்துவ வசதிக்காக வருகிறேன்” என்ற ஆண்டன் பாலசிங்கத்தை அனுமதிக்காதது மனிதாபிமானம் அல்ல. mikap perum thavaRE aakum.

    மனிதம் பார்க்கையில் மனிதனை மட்டுமே பார்க்கவேண்டும், அவனது பின்புலத்தை அல்ல. கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக் கைதிக்குக் கூட மருத்துவ உதவி மறுக்கப்படுவதை சட்டம் அனுமதிக்கவில்லை என்பதைக் கவனத்தில் இருத்துங்கள்.

    As I said earlier, humane values have no boundary.

  22. enkaruthu

    ////கலைஞருக்கே பதில் சொல்ல முடியாதவங்க, குஷ்பு கேக்கிற கேள்விக்கா பதில் சொல்லப்போறாங்க?

    பாஸ்.. என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவர்.. கலைஞர் ஒன்னும் குஷ்புவிற்கு குரஞ்சவர் இல்ல..//

    பாஸ் குமார் தினகர் சொல்லவந்தது கலைஞர் போன்ற முன்னாள் முதல்வர்கள் கேட்கும் கேள்விக்கே அலட்சியம் செய்பவர்கள் இந்த சாதாரண தொண்டர் குஷ்பூவின் பேச்சுக்கா பதில் கொடுக்கபோகிரார்கள் என்ற தோரணையில்தான் அவர் கேட்டிருக்கிறார் என்பது இங்கே அவரின் முந்தைய கமெண்டை படித்தவர்களுக்கு கட்டாயம் புரியும்.

  23. enkaruthu

    //Tamilnadu needs a leader like Vaiko as CM, neither Karuna nor Jaya.//

    வைகோ என்பவர் நல்லவர்தான்.ஆரம்பத்திலிருந்தே ஈழ மக்களுக்காக போரடுபவர்தான்.ஆனால் இவர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் பொடா சட்டத்தில் உள்ளே போட்டவர்தான் ஜெயலலிதா. அன்று கலைஞர் அவர்கள் வைகோ அவர்களை ஜெயிலுக்கு சென்று பார்த்து ஏன் ஜாமீன் கேட்கமாட்டுகிறாய்.உள்ளே முடங்கிபோகாமல் வெளியே வந்து போராடு என்று தானே வழிய போய் அவரிடம் கேட்டுகொண்டவர் கலைஞர்.
    ஆனால் கலைஞர் மத்திய அரசிலிருந்து வெளியே வந்தாலும் ஒன்னும் நடக்காது என்று தெரிந்தும் சில பேர் ஒரு வன்மத்துடன் கலைஞரை இங்கே ஒரு துரோகியாக சித்தரிக்க பார்க்கிறார்கள்.அதற்க்கு இவரும் ஜே போடுவதுதான் இவரின் நிலையை சந்தேகிக்க தோன்றுகிறது.கலைஞர் ஈழ விஷயத்தில் நல்லவரோ கெட்டவரோ ஈழ பாசமிக்க வைகோ அவருடன் சேர்ந்து எப்படியோ அந்த ஈழ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று ஒற்றுமையுடன் போரடவேண்டியதுதானே.அதை விட்டு விட்டு தனி ஆவர்த்தனம் பண்ணினால் தான் என்றும் வெளியே தெரிய என்றும் இந்த ஈழ பிரச்சினை தேவை என்று இவர் மற்றும் பழ.நெடுமாறன் நினைகிறார்கள் என்றுதானே பொதுமக்களாகிய நாங்கள் நினைக்க தோன்றுகிறது.

  24. enkaruthu

    //ஆனால் பார்வதி அம்மாளோ விடுதலைப்புலிகளுக்கு எந்த வகையிலும் தொடர்புடையவர் அல்ல.//

    நண்பர்களே ஒரு கற்பனை. பார்வதி அம்மாள் இங்கே வந்தபொழுது ஒருவேளை கலைஞருக்கு பதிலாக ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்திருந்து யாரவது ஒருவர் இப்படி கேட்டிருந்தால் கிருஷ்ணாவின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா.

    விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனை பெற்ற தாய் எப்படி அந்த இயக்கத்துக்கு தொடர்பு இல்லாமல் போவார்.ஜெயலலிதா முதல்வர் என்ற முறையில் செய்தது நியாயமே என்று ஆங்கில பத்திரிகையில் (வடிவேல் வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல ஆங்கில பத்திரிகை என்றும் பொய் சொல்லாது என்பது கிருஷ்ணாவின் எண்ணம்.) சொல்லியுள்ளது என்று சொல்லிருப்பார்.

    ஜெயலலிதா அவர்கள் சோனியாவுக்கு ஐஸ் வைக்கும் விதமாக பிரபாகரனை கைது செய்தால் அவரை இந்தியாவில் ஒப்படைத்து அவருக்கு நாங்கள்தான் தண்டனை தருவோம் என்று சொன்ன ஜெயலலிதாவை கண்ணை மூடி கொண்டு ஆதரிக்கும் நண்பர்கள் பிரபாகரனின் அம்மாவின் நிலையை பேசுவது வேசத்தனம்.

  25. மிஸ்டர் பாவலன்

    ///வடிவேல் வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல ஆங்கில பத்திரிகை என்றும் பொய் சொல்லாது என்பது கிருஷ்ணாவின் எண்ணம்/// (என் கருத்து)

    கிருஷ்ணா “ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கிறேன்” என எழுதி இருப்பதாக
    எனக்கும் நினைக்கிருக்கிறது. ஆனால் “ஆங்கிலப் பத்திரிக்கை என்றும்
    போய் சொல்லாது” என எழுதி இருக்கிறாரா என்பது எனக்கு நினைவில்லை.
    `என் கருத்து’ இதை வைத்து ரவுண்டு கட்டி வருவதால் கிருஷ்ணா
    அவர்கள் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தால் நல்லது. நன்றி.

    ஒரு குறிப்பு: சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் (சேகர் குப்தா இதன்
    எடிட்டர்) “The January Night Raisina Hill was spooked” என்ற தலைப்பில்
    எழுதிய கவர் ஸ்டோரி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதை
    கிருஷ்ணா google search பார்த்து படித்துக் கொள்ளலாம். நன்றி.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  26. மிஸ்டர் பாவலன்

    //கலைஞர் போன்ற முன்னாள் முதல்வர்கள் கேட்கும் கேள்விக்கே அலட்சியம் செய்பவர்கள் // (என் கருத்து)

    “ஈழத் தமிழருக்காக நான்தான் கிழிக்கல…
    நீங்க ஏன் உண்ணாவிரதமிருந்து சாகல?”
    என்பது கலைஞரின் வாதம்.

    நான், மனோகரன், அமானுல்லா போன்றவர்கள் அவர் வயதிற்கு மதிப்பு
    கொடுத்து முதல் வாக்கியத்தை கவனித்து, அதனுடன் விட்டு விட்டோம்.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  27. Krishna

    //ஜெயலலிதா அவர்கள் சோனியாவுக்கு ஐஸ் வைக்கும் விதமாக பிரபாகரனை கைது செய்தால் அவரை இந்தியாவில் ஒப்படைத்து அவருக்கு நாங்கள்தான் தண்டனை தருவோம் என்று சொன்ன ஜெயலலிதாவை கண்ணை மூடி கொண்டு ஆதரிக்கும் நண்பர்கள் பிரபாகரனின் அம்மாவின் நிலையை பேசுவது வேசத்தனம்//

    ஜெயலலிதா upa அரசுக்கு என்றும் ஐஸ் வைத்ததில்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு ஓர வஞ்சனை செய்வதாகத்தான் கடந்த ஓர் ஆண்டாக கூறி வருகிறார். ஆகவே ஐஸ் வைக்கிறார் என்று சொல்வது சரியல்ல.

    நண்பர்களே ஒரு கற்பனை. பார்வதி அம்மாள் இங்கே வந்தபொழுது ஒருவேளை கலைஞருக்கு பதிலாக ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்திருந்து யாரவது ஒருவர் இப்படி கேட்டிருந்தால் கிருஷ்ணாவின் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா.

    நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து speculate செய்வது வீண் வேலை.

    //விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனை பெற்ற தாய் எப்படி அந்த இயக்கத்துக்கு தொடர்பு இல்லாமல் போவார்.ஜெயலலிதா முதல்வர் என்ற முறையில் செய்தது நியாயமே என்று ஆங்கில பத்திரிகையில் (வடிவேல் வெள்ளையா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்பது போல ஆங்கில பத்திரிகை என்றும் பொய் சொல்லாது என்பது கிருஷ்ணாவின் எண்ணம்.) சொல்லியுள்ளது என்று சொல்லிருப்பார்.//

    பார்வதி அம்மாள் தன் கணவர் வேலுப்பிளையுடன் திருச்சியில் தான் குடியிருந்தார். மத்திய பாஜக ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தமிழகம் வந்து வைகோவுடன் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அதே விழாவில் பிரபாகரனின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். சில நாட்கள் கழித்து காங்கிரஸ் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தது. இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சகம் “பார்வதி அம்மாளுக்கும் வேலுப்பிள்ளைக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்ற தகவல் எங்களிடம் இருக்கிறது. ஆகவே அத்வானி அந்த விழாவில் கலந்து கொண்டது தவறல்ல” என்று விளக்கம் அளித்ததை மறக்க வேண்டாம்.

    //புலிகள் இயக்கத்தை இன்று வேண்டுமானால் சிலர் தீவிரவாத இயக்கம் எனலாம். காலம் நிச்சயம் அவர்களைச் சுதந்திரப் போராட்ட வீரர்களாகவே அடையாளம் காணும் என்பது திண்ணம்.//

    குமரன் அவர்களே, ஈழப்போர் முடிந்த சமயத்தில் செஞ்சுலுவை சங்கமும் (Red cross) மற்றும் ஐநா சார்பில் அங்கு அனுப்பப்பட்ட மனித உரிமை இயக்கங்கள் விடுதலைப்புலிகள் அங்குள்ள மக்களை கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டதை ஒரு நீண்ட அறிக்கை மூலம் வெளியிட்டது – ஆகவே அவர்கள் சுதந்திர போராட்டம் என்ற தகுதியை என்றும் பெற மாட்டார்கள்.

    //கிருஷ்ணா “ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கிறேன்” என எழுதி இருப்பதாக
    எனக்கும் நினைக்கிருக்கிறது. ஆனால் “ஆங்கிலப் பத்திரிக்கை என்றும்
    போய் சொல்லாது” என எழுதி இருக்கிறாரா என்பது எனக்கு நினைவில்லை.
    `என் கருத்து’ இதை வைத்து ரவுண்டு கட்டி வருவதால் கிருஷ்ணா
    அவர்கள் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தால் நல்லது. நன்றி.//
    பாவலன் அவர்களே, சிலர் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவது அவர்களின் எழுத்தின் தரத்தை காட்டுகிறது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

  28. மிஸ்டர் பாவலன்

    நான் சிறு வயதில் மிகவும் விரும்பிப் படித்த புத்தகங்களில்
    Readers Digest -ம் உண்டு. ஏதோ காரணத்தினால் அந்த
    வழக்கம் நின்று விட்டது. ஆங்கில நாளிதழ்கள்
    (Hindu, Indian Express, Pioneer, TOI, Hindustan Times போன்றவை),
    weekly, fortnightly (The Week, Outlook, India Today, Frontline)
    போன்றவை படிப்பது நல்லது. முன்பு Illustrated Weekly of India
    என்ற சிறப்பான வார ஏடு வந்து பின்னர் நின்று விட்டது.
    கருத்துக்கள் முன்னப் பின்ன இருந்தாலும் அவற்றின் தரம்
    பாராட்டப் படவேண்டியது.

    -== மிஸ்டர் பாவலன் ==-

  29. குமரன்

    கிருஷ்ணா அவர்களே

    நீங்கள் சொல்லும் அறிக்கைகள் நம்பத் தக்கன அல்ல. காரணம் லாஜிக் இடிக்கிறது.

    கேடயமாகப் பயன்படுத்தப்பட்டதாக அந்த மக்கள் சொன்னால்தான் நம்பத் தக்கது. உண்மையாகவே அப்படிப் பயன்பட்டவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை!

    புலிகள் மக்கள் வாழும் பகுதிகளில்தான் வாழ்ந்திருக்க முடியுமே அல்லாது வ்றேப்படி வாழ முடியும்?

    அவர்கள் தனியாகப் போர்க் குடில்கள் அமைத்து வாழ வேண்டும் என்ற சிங்கள எதிர்பார்ப்பே இந்தக் குற்றச் சாட்டுக்கு அடிப்படை. ஈழம் தனிநாடு என்று அறிவிக்கப் பட்டால் தனிப் போர்க்குடில்கள் சாத்தியம். உள்நாட்டுப் போராக ஒரு சுதந்திரப் போராட்டம் நடைபெற்றால் அதில் தனிப் போர்க்குடில்கள் அமைப்பது சாத்தியம் அல்ல.

    எனவே புலிகளின் போராட்டம் சுதந்திரப் போராட்டம் என்பதைக் கண்டிப்பாகக் காலம் ஒப்புக் கொள்ளும். அந்த நாள் தொலைவில் இல்லை என்பது எனது நம்பிக்கை.

  30. குமரன்

    ///பதில் அளித்த உள்துறை அமைச்சகம் “பார்வதி அம்மாளுக்கும் வேலுப்பிள்ளைக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்ற தகவல் எங்களிடம் இருக்கிறது. ஆகவே அத்வானி அந்த விழாவில் கலந்து கொண்டது தவறல்ல” என்று விளக்கம் அளித்ததை மறக்க வேண்டாம்.///

    அந்த உள்துறை அமைச்சகம் சோனியா தலைமையிலான அமைச்சகம் அல்ல என்பது கவனிக்கத் தக்கது. சோனியாவுக்கு தனது தனிப்பட்ட பலியை வாங்க வேண்டும் என்ற வெறி இருந்தது என்பதுதான் உண்மை.

  31. Krishna

    குமரன் அவர்களே, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (International Committee of Red Cross) , இந்த குற்றச்சாட்டை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது. ஐநா அமைப்பின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இந்த அமைப்பு பாரபட்சமற்றதாக இருக்கும் என்பது தான் என் வாதம்.

  32. தினகர்

    நான், மனோகரன், அமானுல்லா போன்றவர்கள் அவர் வயதிற்கு மதிப்பு
    கொடுத்து முதல் வாக்கியத்தை கவனித்து, அதனுடன் விட்டு விட்டோம்.
    -== மிஸ்டர் பாவலன் ==

    முதலும், கடைசியும் ஒருவர் தான் என்று தெரியும். இடையில் உள்ள மனோகரன் அவதாரமும் நீங்கள் தானா? 🙂

  33. குமரன்

    கிருஷ்ணா அவர்களே

    செஞ்சிலுவைச் சங்கம் இப்படிச் சொல்வதாக நான் நினைக்க வில்லை. ஏனெனில் சிங்கள அரசு செஞ்சிலுவைச் சங்கத்தை புலிகளின் ஆதரவாளராகவே கருதி வந்துள்ளது. இலங்கை அரசின் ஆதரவான ஒரு இளையதலத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைத் தாக்கி எழுதியுள்ள கட்டுரையைப் பாருங்கள்.

    http://www.srilankawatch.com/index.php?option=com_content&task=view&id=81&Itemid=1

  34. மிஸ்டர் பாவலன்

    //முதலும், கடைசியும் ஒருவர் தான் என்று தெரியும். இடையில் உள்ள மனோகரன் அவதாரமும் நீங்கள் தானா? 🙂 // (தினகர்)

    நான் அவன் இல்லை! நான் அவன் இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *