வாஜ்பாய் இருக்கும்போது ஒரு பேச்சு… மன்மோகன் சிங் இருக்கும்போது ஒரு பேச்சா? – ஜெவுக்கு கருணாநிதி கேள்வி
சென்னை: காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறேன், என்று திமுத தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன்.
காவிரி நதி நீர் தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவுப்படி ஜுலை 20ம் தேதி வரை தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து சேர வேண்டிய 36.15 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேரவில்லை.
அதனால் குறுவை சாகுபடிக்காக ஜுன் 12ம் தேதியன்று திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்படாமல், மூன்று மாவட்டங்களில் குடிநீர் வழங்குவதற்காக மட்டுமே சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 45 சதவிகித சாகுபடி காவிரி நீரால்தான் நடைபெறுகிறது.
பருவ மழையைக் காரணம் காட்டி, இது போன்ற வறட்சிக் காலங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைக் கர்நாடகம் வழங்காமல் இருக்கிறது. இதனால் தமிழகத்தின் விவசாயம் பாதிக்கப்படுவதுடன் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த காலங்களில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையோ, காவிரி கண்காணிப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவையோ கர்நாடக அரசு ஏற்க மறுத்து வருகிறது. பிரதமர் தலைமையிலான காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வேண்டுமென்று மே 18ம் தேதியே தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதியும் இதுவரை அந்த ஆணையத்தைக் கூட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசினால் எடுக்கப்படவில்லை.
ஆனால் தி.மு. கழக அரசின் முயற்சியினால் இந்த காவேரி நதி நீர் ஆணையம் அமைந்த போது, அதனை “பல் இல்லாத ஆணையம்” என்று சொல்லி கிண்டல் செய்து, அதனை வரவேற்காத இதே ஜெயலலிதா 2002ம் ஆண்டு வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்த போது காவேரி நதிநீர் ஆணையத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கடிதம் எழுதி, உச்ச நீதிமன்றமே அவர் அவ்வாறு எழுதியதை அப்போதே கண்டித்ததையும் மறந்து விட்டு, தற்போது அந்த காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று இன்றைய பிரதமருக்கு கடந்த மே மாதத்தில் கடிதம் எழுதுகின்ற அளவிற்கு வந்திருக்கிறார் என்பதையும் நாம் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டியுள்ளது.
அவ்வாறு மே திங்களில் பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் கொடநாடு சென்று விட்டதால், இந்தப் பிரச்சினை பற்றி நேரடியாக கவனம் செலுத்த இயலவில்லை என்று நினைக்கிறேன்.
எனினும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டுமென்று கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி நதி நீர் ஆணையம் உடனடியாக கூட்டப்பட வேண்டுமென்று திமு கழகத்தின் சார்பில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினையும் வரவேற்கிறேன்,” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-என்வழி செய்திகள்