BREAKING NEWS
Search

‘எதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே குறியாயிருந்தா மின்தட்டுப்பாடு எப்படி நீங்கும்…!’

எதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே ஜெ. குறியாயிருந்தால்…: கருணாநிதி

சென்னை: எந்த எதிர்க்கட்சிக்காரன் மீது என்ன வழக்கு தொடுக்கலாம்; எந்தப் பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதிலேயே ஆட்சியினர் கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருந்தால் மின்தட்டுப்பாட்டை சரி செய்ய முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் வடிவிலான அறிக்கை:

கேள்வி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் எந்தப் பணியையும் நிறைவேற்றாமல் முடிந்துவிட்டதே?

பதில் : இதைவிட துக்ககரமானது வேறொன்றும் இருக்க முடியாது. மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தனது நிறைவுக் குறிப்பிலே கூறியதைப் போல; அலுவல்கள் எதையும் நிறைவேற்றாமல், ஒரு கூட்டத் தொடர் எப்படி வீணாகக் கூடாது என்பதற்குமுன் மாதிரியாக இந்தக் கூட்டத் தொடர் அமைந்துவிட்டது. எவ்வளவு பெரிய தவறு என்றாலும்,அதைப்பற்றி விவாதிக்கத் தயார் என்று பிரதமரே கூறிய பிறகும், விவாதிக்கத் தயாராக இல்லை என்று அவையை எதிர்க்கட்சிகள் முடக்கியதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவையை நடத்த திட்டமிடப்பட்ட 17 நாட்களில் மூன்று நாட்கள் இவ்வாறு முடக்கி வைக்கப்பட்ட பிறகாவது எஞ்சிய நாட்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொண்டிருக்கலாம். என்ன தவறு என்று எதிர்க்கட்சிகள் தங்கள் விவாதத்திலே எடுத்து வைத்து, அதற்கு ஆளுங்கட்சித் தரப்பிலே விளக்கம் அளித்திருந்தால் எது உண்மை என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.

விவாதத்திற்குத் தயார் என்று பிரதமர் கூறிய பிறகும்,விவாதத்திற்கு வராமல் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கியதைப் பார்க்கும்போது, அவர்கள் பக்கம் உண்மை இல்லையோ என்ற சந்தேகம் வரத் தவறவில்லை. இந்தக் கூட்டத்தொடரில் மக்களவையின் நடவடிக்கைகள் 77% பாதிக்கப்பட்டதாகவும், மாநிலங்களவையில் 72% பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசுப் பணியில், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று திரும்பத் திரும்ப எதிர்க் கட்சிகள் கூறுகின்றனவே தவிர,உண்மையிலே இழப்பு நேர்ந்துவிட்டதா? அதனைச் சரிக்கட்ட இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பற்றி விவாதித்தால் தானே முடிவெடுக்க முடியும்.

கேள்வி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறதே?

பதில்: அது உண்மையாக இருந்தால் மிகவும் தவறானதும், கண்டிக்கத்தக்கதுமான முடிவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆட்சியில் இருந்தபோது ஏற்கனவே இதுபோன்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது தெரிந்ததும், அதற்கு நாம் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி அப்போது மத்திய அரசினால் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் “நவரத்னா” பட்டியலில் நெய்வேலி நிறுவனமும் சேர்க்கப்பட்டது என்பது தம்பி முரசொலி மாறன் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். அதைச் சீர் குலைத்துவிடும் வகையில் நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதை கழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எல்லா வகையிலும் அதனை எதிர்க்கும். அப்படிப்பட்ட முயற்சி ஏதாவது இருந்தால், மத்திய அரசும் பிரதமரும் உடனடியாக அதில் தலையிட்டு, அந்த முயற்சியினைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: தண்ணீரை விற்கிறது குடிநீர் வாரியம் என்று சொல்கிறார்களே?

பதில் : ஆமாம், ஏடுகளில் செய்தியே வந்துள்ளது. அதிமுக ஆட்சியின் சாதனைகளிலே குடிநீரை விற்கும் சாதனை தற்போது நடைபெறுகிறது. 6000 லிட்டர் 400 ரூபாயாம். இந்த ஆட்சியிலே இன்னும் எதையெதை விற்பார்களோ?

கேள்வி: “தானே” புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட ஜெயலலிதா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: “தானே புயலின் வேகத்தை மிஞ்சுமளவுக்கு அரசின் நிவாரணப் பணிகள் -கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தர முதல்வர் ஜெயலலிதா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு” என்று பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு அல்ல. 16-1-2012 அன்று அதாவது சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, ஆளுநர் ரோசய்யா தமிழகச் சட்டப் பேரவையில் படித்த ஆளுநர் உரையில் பக்கம் 14-15 இல் “கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதிலாக, அக்குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகள் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய்ச் செலவில் ஒரு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் ஒரு மகத்தான திட்டம் இந்த அரசால் தொடங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்புக்கான அரசாணை தான் முதல்வரால், எட்டு மாதங்களுக்குப் பிறகு 2-9-2012இல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தான் “தானே” புயலின் வேகத்தை மிஞ்சுமளவுக்கு அரசின் நிவாரணப்பணிகள் என்று புதிய அறிவிப்பு போல வெளியிட்டுள்ளார்கள்.

கேள்வி: அண்ணா நகரிலே உள்ள நீண்ட கால நினைவுச் சின்னமான அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று முதல்வர் ஆணை பிறப்பித்திருப்பதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: நீண்டகால நினைவுச் சின்னமான, அண்ணா பெயரால் அமைந்துள்ள அந்த வளைவினை அகற்ற முதலிலே உத்தரவு பிறப்பித்தது யார்? யாரோ ஒரு அமைச்சர் உத்தரவு பிறப்பித்து அந்த வளைவினை அகற்றுவதற்கு யாருக்கும் துணிச்சல் வராது. அந்த வளைவினை அகற்ற முடியவில்லை என்றதும், தற்போது வளைவு அகற்றத் தேவையில்லை என்று உத்தரவு போட்டு ஊரை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் வளைவு தற்போது பாதி உடைபட்ட நிலையில், எந்த நேரத்தில் கீழே விழுமோ என்ற ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், பொது மக்கள் அந்த வழியாகச் செல்லவே அஞ்சுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் யார்? அவர்கள் மீது இந்த அரசு எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன? மக்கள் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். அரசு என்ன பதில் கூறப் போகிறது?

அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவிகிதம் நடைபெற்றுள்ள நிலையில் முதல்வர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்தபோது தோன்றவில்லையா? ஏடுகளில் எல்லாம் பலமுறை அந்த நினைவுச் சின்னத்தை அகற்றப் போகிறார்கள் என்று வந்ததே? அப்போதே முதல்வர் அதனை அகற்றத் தேவையில்லை என்று அறிவிக்காமல், பல லட்சம் ரூபாய் அரசு பணத்தைச் செலவிட்டு, அந்த நினைவுச் சின்னத்தை அகற்றுகின்ற செயல் பாடுகள் நடைபெற்ற பிறகு, அந்தப் பணியை நிறுத்துங்கள் என்று அறிவித்ததால், அரசுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு? இழப்பு மாத்திரமல்லாமல், அந்த வளைவு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் முக்கால் பகுதி இடிக்கப்பட்டு, தானாகவே விழுந்து விடுமோ என்று பொதுமக்கள் அந்த வழியாக நடப்பதற்கே அஞ்சுகின்ற நிலைமை உள்ளது.

அந்த வளைவினை தற்போது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டுவர வேண்டுமென்றால், அதற்காகவும் செலவழிக்க நேரிடும். அப்படியே மீண்டும் அதை முன்னர் இருந்த நிலைக்கே கொண்டு வந்தாலும் அது பழைய உறுதிப்பாட்டோடு இருக்குமா என்பதும் சந்தேகம். அண்ணா வளைவு விவகாரத்தில் திட்டச் செலவு உயரும் என்றும், அதற்கு யார் பொறுப்பு என்றும் இன்றைக்கும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் இதற்கு நல்ல விளக்கமான பதில் அளிப்பார்களா என்று எதிர்பார்ப்போம்.

கேள்வி: மின் நிலைமை சீரடைந்துள்ளதா?

பதில்: அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி அதிகமாகும், அதன் மூலம் நிலைமை சீராகும் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் நிலைமை எதிர்மறையாகத் தான் போய்க் கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் மின் தட்டுப்பாடே இல்லாத நிலையை தமிழகத்திலே உருவாக்குவோம் என்று சொல்லித் தான் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில், நான்கு முறை தீ விபத்துக்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக மட்டும் மின் கழகத்துக்கு 60 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் என்றும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. அனல் மின் நிலைய “கன்வேயர் பெல்ட்”டில்தான் இந்த விபத்துக்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. முதல் முறையாக இந்த விபத்து நடைபெற்றவுடன், சரியாக அரசினால் கவனிக்கப்பட்டிருந்தால், அடுத்த முறை மீண்டும் கன்வேயர் பெல்ட்டிலே அதே கோளாறு ஏற்பட்டு விபத்து நடை பெற்றிருக்காது அல்லவா?

840 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தில், மே 10ம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள, “கன்வேயர் பெல்ட்” எரிந்து சாம்பலானது. அதனால் பத்து கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு என்றும், அந்தச் சேதமான பகுதியை மறுபடியும் சீரமைக்க 7 கோடி ரூபாய் செலவானது என்றும், அந்த விபத்து காரணமாக 20 நாட்கள் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. மேட்டூரில் கன்வேயர் பெல்ட் எரிந்து சாம்பலானது என்றதும்,தூத்துக்குடியில் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஜூலை 3ம் தேதி அதே கன்வேயர் பெல்ட் கருகி, 12 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டது. இதற்குப் பிறகும் கடந்த 3ம் தேதி நடந்த விபத்தில் 800 மீட்டர் அளவுக்கு கன்வேயர் பெல்ட் எரிந்துள்ளது. இதைச் சீரமைக்க 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட் பாய்லரிலும் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளதாக நேற்று செய்தி வந்துள்ளது. மின்சாரம் தமிழகத்திற்கு மிகவும் தேவை என்று கவலைப்பட வேண்டிய நேரத்தில் அரசின் கவனக் குறைவின் காரணமாக இந்த அளவிற்கு விபத்துக்கு மேல் விபத்து நடக்கக் காரணம் என்ன என்பதைக் கவனித்து, அந்த விபத்துகள் மேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எந்த எதிர்க்கட்சிக்காரன் மீது என்ன வழக்கு தொடுக்கலாம்; எந்தப் பத்திரிக்கை மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதிலேயே ஆட்சியினர் கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருந்தால், மின்தட்டுப்பாட்டை சரி செய்ய முடியாது.

கேள்வி: நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் மீண்டும் நடைபெற்றுள்ளதே?

பதில்: நமது முதல்வர் உடனடியாக பிரதமருக்கு இன்று கடிதம் எழுதிவிடுவார்! அதைப் பற்றி அறிவிப்பு இன்று மாலையோ, நாளைக் காலையிலோ ஏடுகளில் வரும். நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க நாமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், அது தொடர் கதையாகவே தொடருகிறது. இந்திய-இலங்கை பிரச்சினையிலே மேலும் மேலும் அலட்சியம் காட்டாமல், இந்திய அரசு இதனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால், இது எங்கே கொண்டு போய் முடியும் என்றே சொல்ல முடியாது. இதனை மனதிலே கொண்டு மத்திய அரசும், பிரதமரும் இதிலே தலையிட வேண்டும். அண்மையில் சென்னையில் நாம் நடத்திய “டெசோ” மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாக இடம் பெற்றிருந்ததை இந்திய மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

-என்வழி செய்திகள்
2 thoughts on “‘எதிர்கட்சிக்காரன், பத்திரிக்கை மீது வழக்கு போடுவதிலேயே குறியாயிருந்தா மின்தட்டுப்பாடு எப்படி நீங்கும்…!’

 1. தினகர்

  முதல்வர் பதவியில் இருப்பவர், முக்கிய பிரச்சனையான மின்வெட்டு குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளை முடுக்கி விட்டிருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (preventive maintenance ) எடுத்து, இந்த இழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.. முதல்வரும் எதுவும் கண்டுக்கவில்லை என்றால், அதற்குரிய அமைச்சரும் எந்த ஆய்வும் நடத்தவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.

  அப்புறம் , எம்.ஜி.ஆர் அமைத்த அர்ச்சை அகற்றும் அளவுக்கு துணிச்சலான அதிகாரிகள் இருக்கிறார்களா? விட்டால் எம்.ஜி.ஆர் சமாதியில் இருக்கும் ஆர்ச்சை கூட இடிக்க துணிந்து விடுவார்கள் இந்த அதிகாரிகள்!

  என்ன ஒரு பம்மாத்து அரசியல்!. தடுமாற்றமான முடிவுகள் எடுத்துவிட்டு அதிகாரிகள் மீது பழி சுமத்துவதா?.

 2. Deen_uk

  ரஜினிகாந்த முதல்வராக பதவி ஏற்று அந்த இரவு நண்பர்கள், எதிரிகள் என புடைசூழ வாழ்த்துக்கள் பெற்று தொலைக்காட்சி, பத்திரிகை என பேட்டிகள் கொடுத்து களைத்து போய் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தனது புது இல்லத்தில் படுத்து உறங்க ஆயத்தமானார் அந்த 60 வயது இளைஞர்…..

  என்ன நண்பர்களே,குழப்பமா?!!..
  பதிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு வேடிக்கையான தொடர் பதிவு படித்தேன் தலைவர் பெயரில்..!
  தலைப்பு….
  ரஜினி முதல்வரானால் – யுத்தம் ஆரம்பம் – தொடர்..
  தலைப்பு அதிருதுல்ல..?!
  தலைவர் தான் நிஜத்தில் வர மாட்டேன்றார்!!
  சரி,கதையிலாவது படிச்சு சந்தோசப் பாடலாமே ன்னு தான்..!
  இது ஒரு தொடர் பதிவு..லிங்க் கீழே..
  http://ideasofharrypotter.blogspot.com/2012/07/blog-post_26.html
  நன்றி :
  ஹாரி பாட்டர்…. http://ideasofharrypotter.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *