BREAKING NEWS
Search

திமுக – அதிமுக இணையாமல் போனது ஏன்?- கருணாநிதி சொல்லும் ப்ளாஷ்பேக்!

திமுக – அதிமுக இணையாமல் போனது ஏன்?- கருணாநிதி சொல்லும் ப்ளாஷ்பேக்!

சென்னை: திமுக- அதிமுக இரு கட்சிகளும் இணைய முடியாமல் போனதற்கான காரணங்களை திமுக தலைவர் கருணாநிதி விளக்கியுள்ளார்.

இதுகுறித்து முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதம்:

சென்னையில் 11-5-2012 அன்று நடைபெற்ற ஒடிசா மாநில 76வது ஆண்டு விழாவில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த விழாவில் நமது முதலமைச்சர் பேசும்போது, ஒடிசா முதல்வரான நவீன் பட்நாயக் அவர்களின் தந்தையான பிஜுபட் நாயக்கை மூன்று முறை வரவேற்றிருப்பதாகவும், மிகச் சிறந்த தலைவராக சாதனை புரிந்தவராக திகழ்ந்த பிஜு பட்நாயக் அவர்களின் மகன் நவீன் பட்நாயக்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்ததோடு, பிஜு பட்நாயக் தனக்கு தந்தை போன்றவர் என்றும், அந்த உணர்வுகளை தனது சகோதரரைப் போன்ற நவீன் பட்நாயக் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டதை ஏடுகளில் படித்தபோது மறைந்த பிஜு பட்நாயக் அவர்களைப் பற்றி நான் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய “நெஞ்சுக்கு நீதி”- மூன்றாம் பாகத்தில் எழுதியிருந்தது என் ஞாபகத்திற்கு வந்ததையொட்டி, அதை அப்படியே இங்கே தந்துள்ளேன்.

“1979, செப்டம்பர் 6ம் தேதி தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். டெல்லியிலே இருந்தார். அன்று மாலையில் அவர் இந்திரா காந்தியைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அதற்குக் காரணம்; எம்.ஜி. ஆருக்கு ஏற்பட்ட குழப்பம் என்று ஏடுகள் எழுதின. குழப்பத்திற்குக் காரணம்; அதே நாள் காலையில் அவர், பிரதமர் சரண் சிங்கைச் சந்தித்தபோது “அ.தி.மு.க., இந்திரா காங்கிரசுடன் உறவு கொள்வதாக இருந்தால் காபந்து சர்க்காரில்
மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் இரண்டு அ.தி.மு.க. அமைச்சர்களும் பதவி விலகி விடுவதுதான் நியாயமாகும்” என்று சரண் சிங், எம்.ஜி.ஆரிடம் கூறி விட்டார். எனவே எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தியைச் சந்திக்காமலே திரும்பி விட்டார்.

அதே செப்டம்பர் 6ம் தேதி மாலையில் டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக்; தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு, முக்கியமான அரசியல் விஷயம் பேச வேண்டுமென்றும் சென்னைக்கு வந்து என்னைச் சந்திப்பதாகவும் கூறினார். நானும் அவர் என்னை சென்னைக்கு வந்து சந்திப்பதை ஒப்புக்கொண்டேன்.

இதற்கிடையில் ஏடுகளில் தி.மு.கவையும் அ.தி.மு.கவையும் இணைப்பதற்கான முயற்சிகளில் பிஜு பட்நாயக் ஈடுபடப் போவதாகச் செய்திகள் வந்தன.

செப்டம்பர் 8ம் தேதி வேலூர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த என்னிடம் இது பற்றிக் கேட்டனர். “பூம்புகாரில் நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.க- அ.தி.மு.க இரண்டும் ஒன்றாக இணைவதில் என்ன தவறு என்று கூறியிருக்கிறார். ஆனால் அதே நாள் மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என்று அறை கூவல் விடுத்துப் பேசியிருக்கிறார். எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கருத்துப்படப் பதில் அளித்தேன்.

என்னிடம் தொலைபேசியில் கூறியவாறு 12-9-79 அன்று பிஜு பட்நாய்க் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்து தி.மு.க, அ.தி.மு.க, இணைப்புக் குறித்துப் பேசினார். நீண்ட நேரம் இருவரும் விவாதித்த பிறகு; ஏற்கனவே நான் கழகப் பொதுச்செயலாளருடனும் கழக முன்னணித் தலைவர்களுடனும் கலந்து பேசி எடுத்த முடிவுக்கேற்ப; இரு கட்சிகளும் இணைந்திடச் சில நிபந்தனைகளைச் சொன்னேன்.

1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.

2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.

4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.

5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

6. முக்கியமான விஷயம்: எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இவற்றைக் கேட்டவுடன்; பிஜு பட்நாயக் அவர்கள் மிகவும் மகிழ்ந்து உற்சாகத்துடன் “இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்” என்றார்.

அதற்கு நான்; “அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவே சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். மறுநாள் 13-9-1979 அன்று சந்திக்க முடிவாயிற்று.

அதற்குள் மாநில முழுவதுமுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் 13ம் தேதி காலையில் சென்னை வந்து சேர்ந்திடவே – அவர்களின் கருத்துக்களையும் நானும் பொதுச் செயலாளரும் கேட்டறிந்தோம்.

அதன்பிறகு அன்று 11 மணியளவில் பிஜுபட் நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க. என்ற பெயரில்தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம்; எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன்.

அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதிட்டுக் கூறினார்.

பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்.

செப்டம்பர் 13ம் தேதி நாங்களிருவரும் பிஜு பட்நாயக் முன்னிலையில் சந்தித்துப் பேசியதற்கு மறுநாள் 14-9-79 அன்று வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க, அ.தி.மு.க. இணைப்புப் பற்றி உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்காதது மட்டுமல்ல; அவரை மேடையில் வைத்துக் கொண்டே அவரது அமைச்சர்கள் தி.மு. கழகத்தையும், என்னையும் மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகவும் தாக்கிப் பேசியிருக்கிறார்கள். சேப்பாக்கம் அரசினர் விடுதியில் நாங்கள் சந்தித்துப் பேசிய பிறகு வேலூர் பொதுக் கூட்டத்திற்கு இடையில் என்ன நடந்தது என்று தெரியாது.

வேலூருக்குப் பிறகு இணைப்புப் பற்றிப் பேச்சுத் தொடரவில்லை. வேலூர் கூட்டத்துப் பேச்சுக்களினால் புண்பட்ட தி.மு.கழக முன்னணியினரும்; இணைப்பு என்பதில் தங்களுக்குள்ள மாறுபாடான கருத்தைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தொடங்கினர். யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தினர், என்னை அணுகி, “தொடர் நடவடிக்கை என்ன?” என்று கேட்டபோது “இரு தரப்பிலும் தொடர் நடவடிக்கை இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் உடன்பாடுகள் வெவ்வேறாகதானிருக்கக் கூடுமெனக் கருதுகிறேன்” என்று பதில் அளித்தேன்.

ஆனால் பிஜுபட்நாயக், தனது முயற்சி வெற்றி பெற்று விட்டது என்ற மகிழ்ச்சியுடன் டெல்லியிலிருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்து இணைப்புக்கான அடுத்த முயற்சிகள் எப்படியிருக்கின்றன என்று விவரம் கேட்டார். நான் அவரிடம் வேலூரில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டம் பற்றியும் அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் பேசிய கருத்துக்கள் இணைப்புக்கான அடிப்படையில் இல்லாதது மட்டுமல்ல; இணைப்புக் கூடாது என்ற நிலையில் இருந்தது என்பதையும், எனவே தி.மு.க. முன்னணியினரும், பல்வேறு மட்டங்களில் உள்ள செயல்வீரர்களும் இணைப்புக்கு இப்போது சாதகமாக இல்லையென்று கூறினேன். அவர் என்னை உடனே புறப்பட்டு டெல்லி வருமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே இந்திரா காந்தி அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ஸ்டீபன், முரசொலி மாறனுடன் டெல்லியில் தொடர்பு கொண்டு, இந்தியாவின் நன்மைக்காகவும், ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதற்காகவும் நடந்தவைகளையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் தி.மு.கவுடன் இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து; இரண்டு மூன்று முறை மாறனிடம் அக்கருத்தை அவர் வலியுறுத்தவே, மாறன் அதுபற்றி எனக்குத் தகவல் தெரிவித்தார்.

1971ம் ஆண்டுக்கு முன்பு பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசிய உடமை ஆக்கியது, மன்னர் மானியங்களை ஒழித்தது போன்ற செயல்களுக்காகத் தி.மு.கவும், இடதுசாரி கட்சிகளும் அவரை ஆதரித்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளரான வி.வி. கிரியை ஆதரித்து வெற்றி பெறவும் செய்தது ஒரு கட்டம்.

அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, இந்திரா காங்கிரசுடன் உடன்பாடு கொண்டு நாடாளுமன்றத்திற்கு மட்டும் இந்திரா காங்கிரசுக்கு ஒன்பது இடங்களை விட்டுக் கொடுத்து வெற்றி பெறச் செய்தது. அதன் பின்னர் 1975ல் நெருக்கடிக் காலப் பிரகடனம், அதற்கு தி.மு.க. பெரும் எதிர்ப்பு, 1976ல் ஆட்சிக் கலைப்பு- மிசாக் கொடுமை இத்தனைக்கும் பிறகு, மீண்டும் தி.மு.கவுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள 1980ல் இந்திரா காந்தி பெருமுயற்சி எடுத்து, என்னையும் உடனடியாகப் புறப்பட்டு டெல்லிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறுகிறார் என்றால்; அது அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனைதானே என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

திமுக-அதிமுக இணைப்பைத் தடுத்தது பண்ருட்டி ராமச்சந்திரன்தான் என்றும், அவர் தான் எம்ஜிஆரிடம் கட்சிகள் இணைப்பு வேண்டாம் என அறிவுறுத்தினார் என்றும் சில ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், இப்போது பண்ருட்டி தேமுதிகவில் உள்ளார். அரசியல் சூழல் மாறிவருவதால், வசதியாக பண்ருட்டியை இந்த விவகாரத்திலிருந்து கழட்டிவிட்டுள்ளார் கருணாநிதி!

-என்வழி செய்திகள்




11 thoughts on “திமுக – அதிமுக இணையாமல் போனது ஏன்?- கருணாநிதி சொல்லும் ப்ளாஷ்பேக்!

 1. Krishna

  “பழைய நெனெப்பு தான் பேராண்டி பழைய நெனெப்பு தான்” இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

  இவர் ஒன்று தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லுவார், அல்லது கனவில் அண்ணா வந்தார், பெரியார் வந்தார் என்று பூ சுற்றுவார் அல்லது பாரதியார் பாராட்டினார், காயிதே மில்லத் பரிசளித்தார் என்று இறந்தவர்களை சாட்சிக்கு அழைத்து தன்னை தானே பாராட்டி கொள்வார். இதில் ஒரு வசதி என்னவென்றால் இறந்தவர்கள் உயிருடன் வந்து இவர் சொன்னதை மறுக்கப்போவதில்லை.
  இவரைப்பார்த்து நித்தியானந்தா நிச்சயம் பொறாமைப்படுவார், என்ன தான் காமெடி செய்ய முயன்றாலும் இவரைப்போல நம்மால் அறிக்கை விட முடியவில்லையே என்று.

 2. தினகர்

  மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஜெயலலிதாவுக்கு மூன்று முறை தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்ற யோகம் இருக்கும் போது, அதிமுக எப்படி திமுகவுடன் இணைந்திருக்க முடியும் 🙂

 3. மிஸ்டர் பாவலன்

  ///“பழைய நெனெப்பு தான் பேராண்டி பழைய நெனெப்பு தான்” ///

  பதினாறு வயதினிலே – கமல், ரஜினி, ஸ்ரீதேவியை யாராலும் மறக்க
  முடியாது. இன்றும் பலர் கிராமத்து ரோல் என செய்தாலும் (ஸ்ருதி
  ஹாசன் – Gabbar Singh படத்தில்) அது மேக்கப் போட்டு நிற்பது போல்
  உள்ளது. அந்த கிராமத்து nativity உடன் பாரதிராஜா இயக்கிய விதம்,
  இசை ஞானியின் இசை மறக்கமுடியாதது. அதே சமயம் இது போன்ற
  கிராமத்து படங்கள் தான் இவரால் எடுக்க முடியும் என்ற கருத்தை
  பாரதிராஜா விரும்ப வில்லை. ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற படத்தை
  எடுத்து மிரட்டினார். இன்னமும் கூட கமல்ஹாசன் இப்படி ஒரு
  படத்தில் சைக்கோ வில்லனாக நடித்தார் என்பதை நம்ப முடியவில்லை.
  பின்னால் ego clash-னால் கமல், பாரதிராஜா தொடர்ந்து செய்ய
  முடியவில்லை. இறுதியாக அவர்கள் செய்த ‘ஒரு கைதியின் டைரி’
  படத்தில் அப்பா கமல் மிக நேர்த்தியான நடிப்பு. (ஹிந்தி படத்தை
  பாக்கியராஜ் இயக்கி குருவை மிஞ்சிய சிஷ்யன் எனப் பெயர் வாங்கியது
  வேறு கதை!!)

  -=== மிஸ்டர் பாவலன் ===-

 4. Manoharan

  @ தினகர். நானும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவன்தான். எனக்கும் மூன்று முறை முதல்வர் பதவி கிடைக்குமா….?

 5. தினகர்

  “நானும் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவன்தான். எனக்கும் மூன்று முறை முதல்வர் பதவி கிடைக்குமா ?”

  மகத்துடன் பெண்ணாக பிறந்து எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்திருக்க வேண்டுமே! 🙂

 6. குமரன்

  மனோகரன் அவர்களே

  தினகர் ஜோசியம் பார்ப்பார் என்ற ரகசியத்தை இப்படிப் போட்டு உடைக்கிறீர்களே !

  உங்களுக்கு ஒரு “உடன்பிறவா சகோதரன்” இருக்கிறாரா, என்ன? சொல்லவே இல்லையே ?

 7. enkaruthu

  //“பழைய நெனெப்பு தான் பேராண்டி பழைய நெனெப்பு தான்” இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது//

  ஆமாம் நண்பரே சசிகலா என்னேம்மோ ஜெயலலிதாவுக்கு தெரியாமல் ஊழல் பண்ணிவிட்டாராம் என்ற கதைதான் இதுவும்.ஆமாம் இந்த சசிகலா ஜெயலலிதா துணை இல்லாமல் ஊழல் பண்ணிவிட்டாராம் .இதை யாராவது நம்புவார்களா .போங்கடா நீங்களும் உங்களின் நேர்மையும் . எனக்கும் இந்த பாடல்தான் நினைவுக்கு வருது கிருஷ்ணன் அவர்களே.அதை பல முறை நீங்களும் கேட்டு விட்டு உங்கள் இனத்திற்கு சாதகமான கருத்துகளை மட்டும் இங்க போடுங்களேன்.

 8. Krishna

  // எனக்கும் இந்த பாடல்தான் நினைவுக்கு வருது கிருஷ்ணன் அவர்களே.அதை பல முறை நீங்களும் கேட்டு விட்டு உங்கள் இனத்திற்கு சாதகமான கருத்துகளை மட்டும் இங்க போடுங்களேன்.//

  எல்லாவற்றிலும் ஜாதி/மதம் என்று இழுப்பது கருணாநிதிக்கு கை வந்த கலை. அதுவே அவர்கள் தொண்டர்களுக்கும் பரவி இருக்கிறது. இந்த செய்திக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இன்று திமுக-அதிமுக இணைப்பு பற்றி பேசும் கருணாநிதி 1985 சட்டமன்ற தேர்தலில் என்ன பிரச்சாரம் செய்தார்? எங்களுக்கு ஒட்டு போடுங்கள். எம்ஜிஆர் சிகிச்சை முடிந்து திரும்பியதும் ஆட்சியை அவரிடமே ஒப்படைத்து விடுகிறோம் என்று மக்களிடம் கெஞ்சவில்லையா? ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் இன்னொரு கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா? மக்களுக்கு இதெல்லாம் பித்தலாட்டமாக தெரியாதா என்று கூட யோசிக்காமல் புளுகினார். இவரைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்ததால் தான் இவரை அண்ட விடக்கூடாது என்று MGR முடிவு செய்தார்.

 9. Krishna

  //மகத்துடன் பெண்ணாக பிறந்து எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்திருக்க வேண்டுமே! :)//

  பெண்ணாக பிறந்தாலும் மக நட்சத்திரத்தில் பிறக்காததால் தான் பத்மினி, பானுமதி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, லதா, மஞ்சுளா போன்றவர்களால் முதல்வர் ஆக முடியவில்லை என்று சொல்கிறீர்களா?

 10. தினகர்

  ”பெண்ணாக பிறந்தாலும் மக நட்சத்திரத்தில் பிறக்காததால் தான் பத்மினி, பானுமதி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா, லதா, மஞ்சுளா போன்றவர்களால் முதல்வர் ஆக முடியவில்லை என்று சொல்கிறீர்களா?”

  ஆக்சுவலா எம்ஜிஆரோட முதல் சாய்ஸ் சரோஜாதேவி தான். அடுத்தது லதா. ரெண்டு பேரும் அரசியல் வேண்டாம் என்று மறுத்த பிறகு தான் ஜெயலலிதாவுக்கு ’மகம்’ வேலை செய்ய ஆரம்பித்தது.. ‘

  லதா’ ரொம்ப லேட்டா அரசியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘திருநாவுக்கரசரின் எம்ஜிஆர்திமுகவில் சேர்ந்தார். பட் டூ லேட்..’குரு’ (எம்ஜியார்) பார்வை பட்டால்தானே எதுவுமே ஒர்க் அவுட் ஆகும்.. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *