BREAKING NEWS
Search

‘இப்போ சொல்லுங்க, ராசா குற்றவாளியா?’ – கருணாநிதி

‘2 ஜியை வைத்து அரசியல் செய்தவர்களே… இப்போ சொல்லுங்க, ராசா குற்றவாளியா?’ – கருணாநிதி

சென்னை: 2ஜியை வைத்து இரண்டாண்டுகளாக அரசியல் செய்தவர்கள், இப்போது  என்ன சொல்லப் போகிறார்கள்… ராசா குற்றவாளி என்று கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் மு கருணாநிதி.

இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை:

கேள்வி: சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான பகுதியை நீக்க வேண்டுமென்று நீங்கள் கடிதம் எழுதிய பிறகு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?

கருணாநிதி: கடந்த மாதம் 27-10-2012 அன்றே இந்தப் பிரச்சனை பற்றி நான் முரசொலி கேள்வி-பதில் பகுதியிலே விரிவாக நாடார் சமுதாயத்தினை இழிவுபடுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஒன்பதாம் வகுப்புக்கான புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்டவர்கள் இதிலே தக்க கவனம் செலுத்தி, பிழையினை நீக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தினேன்.

தமிழகத்திலே உள்ள மற்றக் கட்சிகளின் சார்பிலும், இதனைக் கண்டித்து அறிக்கைகள் விடுத்தார்கள். உரியவர்களிடமிருந்து தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியாததால், 15-11-2012 அன்று பிரதமருக்கும், மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியதும்; அது பல ஏடுகளில் செய்தியாக வெளிவந்திருந்தது.

மேலும் 16-11-2012 அன்று டெல்லியில் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றபோது, நாடாளுமன்றக் கழகக் குழுத்தலைவர் தம்பி டி.ஆர். பாலு, அந்தக் கூட்டத்தில் நாடார்களின் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிட, அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய பிரதமர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியோடு தெரிவித்திருக்கிறார்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும், மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பல்லம் ராஜு அவர்களை நேரில் சந்தித்து, நாடார்கள் பிரச்சனை பற்றி கூறியவுடன், மத்திய மனிதவளத் துறை அமைச்சரும், நாடார்கள் பற்றிய அவதூறு வரிகளை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் நம்முடைய தமிழக அரசு திடீரென்று விழித்துக் கொண்டு, 16-11-2012 அன்று அவசர அவசரமாக பிரதமருக்கு இந்தப்பிரச்சனை குறித்து கடிதம் எழுதி, 17ம் தேதி பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் பல்லாயிரம், பல லட்சம் ரூபாய்ச் செலவில், முதல் பக்க விளம்பரச் செய்தியாக அது இடம் பெற்றுள்ளது. நல்ல சுறுசுறுப்பு!!

ஆனால் இதற்கே மிகப்பெரிய விளம்பரங்கள்! நாடார்களுக்கு வந்த ஆபத்து ஏதோ முதல்வர் கடிதத்தால் தான் விலகியது என்பதைப்போல நன்றி தெரிவித்து- பெரிய விளம்பரங்களைக் கொடுத்திருப்பதுதான் வேடிக்கை! விநோதம் – சரியான தமாஷ்!

இப்போ என்ன சொல்லப் போகிறார்கள்?

கேள்வி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டினை ஏலத்தின் மூலமாக கொடுத்திருந்தால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத் திருக்கும் என்ற தணிக்கைக் குழுவின் அறிக்கை; தவறு என்று தற்போது நடைபெற்ற ஏலத்தின் மூலமாக நிரூபணம் ஆகியுள்ளதே?

கருணாநிதி: இதைப்பற்றி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மனீஷ் திவாரி அவர்களே விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து இரண்டாண்டுகளுக்கு முன்பு தணிக்கைக் குழு அறிக்கையினை தாக்கல் செய்தது. அதில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

அந்த 1.76 லட்சம் கோடி எங்கே? தற்போது ஏலத்தில் கிடைத்த தொகை, சுமார் 9,000 கோடி ரூபாய்தான். எனவே தணிக்கை அதிகாரி தனது மதிப்பீடு குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இதுவாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

இதை வைத்து இரண்டாண்டுகளாக அரசியல் நடத்திய பா.ஜ.கவும், இதர எதிர்க்கட்சிகளும் மன்னிப்பு கேட்க வேண்டிய நேரமும் இதுவாகும் என்று மனீஷ் திவாரி சொல்லியிருக்கிறார். மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி அவர்கள், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை முன்பே ஏலத்தில் விட்டிருந்தால், ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்குமென தணிக்கை அதிகாரி அளித்த அறிக்கை தவறானது என்று மத்திய அரசு, பிரதமர் அலுவலகம், மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் ஏற்கனவே கூறி வந்ததைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

தற்போது இந்த அலைக்கற்றைகளை ஏலம் விட்டதில் சுமார் 9,000 கோடி ரூபாய் அளவுக்கே வருவாய் கிடைத்துள்ளதன் மூலம், தவறான அறிக்கை அளித்த தலைமைத் தணிக்கை அதிகாரிதான் விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

எப்படியோ தணிக்கைத் துறை அறிக்கையில் ஒரு பெரும் தொகையைக் குறிப்பிட்டு, அதை ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ப; அந்தத் தொகை இழப்பு என்பதற்குப் பதிலாக, அவ்வளவு தொகையையும் ஏதோ கொள்ளை அடித்துக் கொண்டுபோய் விட்டதைப்போல குற்றஞ்சாட்டி, அதை ஏடுகளும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து நாட்டையே அதிர்ச்சிக் கடலில் ஆளாக்கினார்கள். அவர்கள் எல்லாம் இதற்குப் பிறகு என்ன சொல்லப் போகிறார்கள்?

ராசா குற்றவாளியா?

தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்கள் “விடுதலை”யில் “1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அலைக்கற்றை ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே, ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன? ஆ. ராசா குற்றவாளியா? நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்” என்று அருமையானதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பலரை சில நாள் ஏமாற்றலாம்; சிலரை பல நாள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாதல்லவா?

அதிமுகவினரை போலீசில் நுழைக்க ஜெ. முயற்சி

கேள்வி: தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கென 50,000 பேரைத் தேர்ந்தெடுக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதைபற்றி தாங்கள் ஏற்கனவே எழுதியிருந்தீர்கள். அதிமுகவைச் சேர்ந்தவர்களை காவல் துறையிலே நுழைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிதான் அது என்று பரவலாகப் பேசப்படுகிறதே?

கருணாநிதி: அதைத்தான் நான் முன்பே எழுதியிருந்தேன். அங்கன்வாடிக்கும், சத்துணவுக்கும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எந்த அளவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் பரிந்துரைகளைத் தந்தார்கள் என்பதையும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதன் காரணமாக அந்தப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் எந்த அளவுக்குச் சிரமப்பட்டார்கள் என்பதையும், பரிந்துரை செய்தவர்கள் மீது அதிமுக அரசு எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

ஏடுகளிலேயே அந்தச் செய்திகள் ஏற்கனவே விரிவாக வந்தன.

அதே வழியில் சிறப்புக் காவல் இளைஞர் படை என்ற பெயரில் மேலும் கட்சிக்காரர்களை பணியிலே சேர்ப்பதற்கான முயற்சியிலே அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது. சிறப்புக் காவல் இளைஞர் படையினரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களும், சென்னையில் போலீஸ் கமிஷனரும் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் 110வது விதியின் கீழ் இதற்கான அறிக்கையைப் படித்த போதே, சிறப்புக் காவல் இளைஞர் படையில் ஓராண்டு காலம் பணி நிறைவேற்றினால், காவல்துறையில் காலியாகும் காவலர் பணியிடங்களில் ஈர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று சொல்லியிருப்பதில் இருந்தே, காவல் துறையினரை முறைப்படித் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக தங்கள் கட்சியினரை முதலில் சிறப்புக் காவல் இளைஞர் படையிலே நுழைத்து, ஓராண்டிற்குப் பிறகு அவர்களைக் காவல் துறையிலே சேருவதற்கு வழிவகுத்து விட்டால், காவல்துறையிலே கட்சிக்காரர்களைச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு செய்யப்படும் இந்தக் காரியத்தை கட்சிப் பாகுபாடு பாராமல் அனைத்துக் கட்சியினரும் எதிர்க்க முன் வரவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
23 thoughts on “‘இப்போ சொல்லுங்க, ராசா குற்றவாளியா?’ – கருணாநிதி

 1. srikanth

  அதானே ஏய்;நாட்டாம தீர்ப்ப மாத்தூஊஊஊஊஊஉ……….

 2. Ravi B

  பத்து வருஷத்துக்கு முன்னாள் வந்த முரசொலி ஒரு ரூபாய்க்கு வித்திங்கன்னா, இப்போ அதே ஒரு ரூபாய்க்கு விக்க முடியுமா? பத்து பைசா கூட தேறாது! தி.மு.க.வினரை ஏமாத்த முடியும்! ஆனால் மக்களை ஏமாத்த முடியாது!

 3. தினகர்

  மிஸ்டர் ரவி,, பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ரூபாய்க்கு வித்தத, இன்னிக்கு பத்து ருபாய்க்கு விக்கலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு விக்க முடியுமா?. 2 ஜி என்பது குறைந்த நிலை அலைவரிசை. அதற்க்கு 3 ஜியின் இன்றைய விலையைக் காட்டி ஒரு லட்சத்தி 76 ஆயிரம் கோடி நட்டம் என்று கூறியது தான் தவறு.. இப்போ புதுசாத் தானே ஏலம் விட்டாங்க.. என்ன ஆயிப்போச்சு.. புரிஞ்சுக்ககூடாதுன்னு முடிவு எடுத்துட்டா யார் என்ன சொன்னாலும் தலையில் ஏறாது.. அதுலே நீங்களும் ஒருத்தர் போலிருக்கு:)

 4. villalan

  இல்லை …. நீதான் அந்த குற்றவாளி …….. தமிழின துரோகி …….

 5. தினகர்

  “அதற்காக முன்பு நடந்த இழப்பு இழப்பே இல்லை,செய்தது சரி என்று ஆகி விடுமா.”

  ஒரு ருபாய் பொருளை ஏலத்தில் பத்து ரூபாய் வரைக்கும் விற்கலாம். அது ஒரு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித் தான் 1 76 லட்சம் கோடி ரூபாய் நட்டம். இந்தியாவில் 2 ஜி ஏலத்தில் இருக்கிறது என்றால் பில் கேட்ஸா வந்து ஏலம் கேட்கப்போகிறார். இந்தியாவில் ஏற்கனவே தொழில் நுட்ப துறையில் இருக்கும் நிறுவனங்கள் தான் கேட்க வேண்டும். இன்றைக்கு கூட்டு சேர்ந்து ஏலம் எடுத்தார்கள் என்று வாதத்திற்காகவைத்துக்கொண்டால் கூட, அன்றைக்கும் இதே முறையை பின் பற்றி இருக்க மாட்டார்களா?

  ஒரு வகையில் ராசா, புதிய முதலீட்டார்களை 2 ஜி தொழில் நுட்பத்தில் அனுமதித்தன் மூலம், பின்னாளில் நடைபெற்ற 3 ஜி ஏலத்தில் பங்கேற்க கூடுதல் போட்டியாளர்களை. உருவாக்கியுள்ளார்.

  கருணாநிதி என்ன செய்தாலும் தப்பு தான் என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், வாழ் நாள் முழுக்க அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் ’முதலில் முடிவு செய்து விட்டு’, அதற்கு பிறகு தானே ’என்ன விஷயம்’ என்று அல்சுகிறார்கள் இந்த அறிவு ஜீவிகள்..

 6. Ganesh Shankar

  //மின்வெட்டு பிரச்சினைக்கு மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் சேர்ந்து பொறுப்பேற்க வேண்டும்.//(கிருஷ்ணா)

  பாதி சரி தான்.மின் வேட்டை நீக்க வேண்டிய பொறுப்பு இந்த மாநில அரசிடமும்,மதிய அரசிடமும் இருக்கிறது.
  அதில்,மதிய அரசு நம் தமிழ் நாட்டை ஒரு பார்வைக்கு கூட பார்பதில்லை,கேவலபடுதுகிறது.
  ஆனால்,மின் வெட்டு ஏற்பட்டதற்கு பொறுப்பு முந்தைய மாநில அரசு தான்.

  //2ஜி என்றால் என்ன 3 ஜி என்றால் என்னவென்றே தெரியாத அதிபுத்திசாலிகள், தொலை தொடர்புத் துறை தொழில் நுட்பத்தை அலசி, ஆராய்ந்து கரைத்து குடித்தவர்கள் போல் 2ஜிக்கு 3 ஜியை விட கூடுதல் விலையை நிர்ணயிக்கும் அதிசயம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும்…//(தினகர்)

  2G மற்றும் 3G போன்றவற்றில் மூலம் விடும் ஏலம் அதற்க்கு வருடம் செல்ல செல்ல,அடுத்த தொழில்நுட்பம் வர,வர விலை என்பது ஏறுமுகமாக தான் இருக்கும் என்பதற்கு
  2G என்றால் என்ன என்றும்,3G என்றால் என்ன என்றும் தெளிவாக தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

  அதுவும்,இப்போது எல்லாம் எல்லாரும் கையில் கைபேசி வைத்து இருகிறார்கள்,ஏன் எல்லாரும் இன்யமும் வைத்து இருகிறார்கள் அதில் 3G உபயோகபடுத்தி.

  அரசியல்வாதிகள் நிறைய பேர் நல்லவர்கள் இல்லை என்று தெரிய,மக்களுக்கு அரசியல் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.அவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே ஜனநாயகம் படும் கூத்து தெரியும்.

  இது எல்லாம் சாதாரண பாமரன் புரிந்து கொண்டால் போதும்.

 7. குமரன்

  கேள்வி: 2 ஜி என்றால் என்ன?

  மன்மோகன் சிங்:
  எனக்குத் தெரிந்த 2 ஜி – சோனியா-ஜி , ராகுல்-ஜி

  கேள்வி: 3 ஜி என்றால் என்ன?
  கபில் சிபால்:
  எனக்குத் தெரிந்த 3 ஜி – சோனியா-ஜி , ராகுல்-ஜி, வதேரா – ஜி

  2 – ஜி ஊழலில் அடித்த கொள்ளைக்கும், தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கும் என்ன தொடர்பு?

  மன்மோகன் சிங்/ கபில் சிபால்: பதில் எனக்குத் தெரியவில்லை.

  மக்கள்: இருக்கிறது.

  ஈழத்தில் லட்சம் பேர் செத்தாலும் பரவாயில்லை, என்குடும்பத்தாருக்கு மத்திய மந்திரிப் பதவி வேண்டும் என்று கருணாநிதி அடம் பிடித்து, ௨௦௦௯ மே 17 ஆம் தேதி சிங்களப் படை கொக்கரிக்க, பத்து நாள்களுக்குள், மத்திய மந்திரிசபையில் இடம் பிடித்து தொலைத் தொடர்புத் துறையை வற்புறுத்தி வாங்கி, செய்த ஊழல்தான் 2 G ஊழல். இது நடந்ததால்தான் தமிழக மக்கள் கருணாநிதியைத் தோற்கடித்து ஜெயாவைப் பதவியில் அமர்த்தி இன்று மின்வெட்டால் அவதிப் படுகிறார்கள். எனவே 2009 துரோகம் நடக்காவிட்டால், தமிழக மக்கள் இன்று மின்வெட்டால் வேதனைப் பட மாட்டார்கள். திமுகவே ஆண்டிருக்கும்!

 8. தினகர்

  அம்மாவின் ஓராண்டு சாதனை பாரீர்……செல்போன் சார்ஜ் செய்ய ௫ 5 . லேப்டாப்பிற்கு – ரு.25 – .மின்வெட்டினால் இப்படியும், புதுசாக ஒரு தொழில் ஆரம்பிச்சு ஓஹோன்னு ஓடிகிட்டு இருக்கு…. இதையெல்லாம் கேட்பதற்கு நாதியற்றவர்கள், அடுத்தவர் மீது பழி போட்டுவிட்டு ‘கையாலாகத்தனமாக’ பேசிக்கொண்டிருப்பது வேடிக்கை தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *