BREAKING NEWS
Search

நீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு… என்னமா கோத்து விடுகிறார்கள் கருணாநிதியும் ராமதாசும்!

நீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு… என்னமா கோத்து விடுகிறார்கள் கருணாநிதியும் ராமதாசும்!

thalaivar-spl

சென்னை: நீதிமன்றங்கள் கெட்டுப் போனால் நாடு நன்றாக இருக்காது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதற்கு, திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் நினைவு தபால்தலை வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், வழக்குரைஞர்கள் நிறைந்திருந்த சபையில் ரஜினிகாந்த் பேசும்போது, நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது என்று பேசியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சு ஆழமான அர்த்தச் செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சாகும்.

அண்மைக்காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும்,நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறைக் கருத்துகள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இருந்து வரத் தொடங்கிவிட்டன.

செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன.

rajini-karu

சட்டத்தின் எல்லோரும் சமம் என்பதை சிறிது சிறிதாக நீர்த்துப் போகச் செய்யலாம் என்பன போன்ற கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.

இந்த நாளில் ரஜினிகாந்த் வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் கருத்து, ஜனநாயகத்துக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கது.

-இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாசும் ரஜினியின் இந்தப் பேச்சு குறித்து ட்விட்டரில் கமெண்ட் வெளியிட்டுள்ளார்.

அதில், “நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது: ரஜினிகாந்த் – நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு உங்களை கடுமையாக பாதித்திருக்கிறது போலும்!” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் சமயமாகப் பார்த்து, ரஜினியை இழுத்து, மீண்டும் 1996ஐ திரும்ப வைக்க முடியாதா என்ற ஏக்கத்துடன் இருவரும் ‘வேலைப் பார்ப்பது’ நன்றாகவே தெரிகிறது. தலைவர் ரஜினி பார்க்காத அரசியலா!

 

-என்வழி
7 thoughts on “நீதித்துறை குறித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு… என்னமா கோத்து விடுகிறார்கள் கருணாநிதியும் ராமதாசும்!

 1. குமரன்

  தலைவர் 1996 இல் அரசியல் சார்புக் கருத்துக்களைத் தெரிவித்தது அந்தக் காலக் கட்டத்தில் இருந்த மக்களின் மன நிலையைப் பிரதிபலித்தது.

  1998 இல் கோவை குண்டு வெடிப்பின் போது தங்கள் அரசியல் லாபத்துக்காக அவரது வாயைப் பிடுங்கி குளிர் காய்ந்தவர் கலைஞர் கருணாநிதி. தலைவர் அப்போதுதான் சுதாரித்துக் கொண்டார். அதன்பின் இந்த அரசியல் விளையாட்டுக்களில், கழுவின மீனில் நழுவின மீனாகத் தப்பித்து வருகிறார். ஆட்டம் நன்கு பழகி விட்டது. இது கருணா நிதிக்கும் நன்கு தெரியும்.

  நிற்க, தலைவரின் கருத்தின் அடிப்படையில் தத்தம் கருத்துக்களைக் கருணா நிதியும் ராமதாசும் கூறி உள்ளனர், அதில் தவறேதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், கருணாநிதி கூறியவை இன்றைய சூழலுக்கு மிகவும் பொருத்தமான கருத்துக்களே.

  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால், ………….
  கனிமொழி, ராசா, ஜெயலலிதா அனைவரும் சமம்தானே?

  அதென்ன, குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே கனிமொழிக்கு ஆறுமாத காலத்துக்குப் பின்தான் ஜாமீன்,
  ராசாவுக்கு ஒன்றரை வருடத்துக்குப் பின்தான் ஜாமீன்,
  ஜெயலலிதாவுக்கோ 20 நாட்களிலேயே ஜாமீன் – அதுவும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில்?
  லாலுவுக்கும், சவுதாலாவுக்கும் இந்த வசதி கிடையாதே?

  குமாரசாமி ஜெயாவை விடுதலை செய்த தீர்ப்பை சட்டம் படித்து மனசாட்சி உள்ள எவரும் ஒரு நடுநிலையான, நல்ல தீர்ப்பு என்றே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அண்மையில் நமது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இதே சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள தவறை வெளிப்படையாக- தனது தீர்ப்பிலேயே ஒப்புக் கொண்டு – திருத்தி எழுதி இருக்கிறது. நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான இரு நீதிபதித் தீர்ப்பு, அதன் நேர்மையான வெளிப்படையான அணுகுமுறைக்காக, சட்டத்தின் பொன்னெழுத்துக்களில் பதிக்கப் படவேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள். கர்நாடக உயர்நீதிமன்றமும் சரி, உச்ச நீதிமன்றமும் சரி, இத்தனை அப்பட்டமான தவறுகளைக் கொண்ட குமாரசாமியின் தீர்ப்பை இத்தனை மாதங்களாக அப்படியே விட்டிருப்பது நீதிக்கு அடிக்கப் படும் சாவுமணி ஆகும்.

  எனது வெளிநாட்டு வழக்கறிஞர் நண்பர்கள், இந்தியாவின் நீதித் துறை இவ்வளவு மோசமாக இருக்கிறதே இதை நம்பி எப்படி எமது நாட்டு தொழிலதிபர்களும், வியாபாரிகளும் உங்களுடன் தொழில் செய்வது? இந்தியாவில் நடப்பது ஜனநாயகமா? என்று கேட்கும் போது நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போல இருக்கிறது.

  உச்ச நீதிமன்றம் தனது கடமைகளில் மிகவும் தவறிவிட்டது, தொடர்ந்து தவறிக்கொண்டிருக்கிறது.

  ஜாமீன் கொடுத்ததில் பாரபட்சம் அப்பட்டம்.
  ஜெயாவின் வழக்கை அவரே விதவிதமான மனுக்களால் 18 ஆண்டு இழுத்தடித்த நீதிமன்ற அவலம். அதற்கு அப்போதெல்லாம் முடிவு கட்டாத உச்ச நீதிமன்றம்.
  அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தவுடன், இந்தத் தீர்ப்பின் மீதான மேல் முறையீடு மூன்று மாதத்துக்குள் முடிக்கப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கட்டளை இட்டது இதுவரை எந்த வழக்கிலும் இல்லாத புதுமை, இதே முறையை காவிரி நடுவர் மன்ற, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட வழக்குகளில் இதே உச்ச நீதிமன்றம் கடைப்பிடிக்காதது ஏன்? அவற்றில் லஞ்சம் தர யாரும் முன்வரமாட்டார்கள் என்பதுதான் என்று பலரும் பேசி வருவது நமக்குப் பெருத்த அவமானம்.

  சரி, தீர்ப்பின் மீதான கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீட்டுக்கு மூன்று மாதம் கேடு விதித்த அதே உயர் நீதிமன்றம், இப்போது ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்ட நிலையில் அமைதியாகக் காலம் கடத்துகிறதே? அது எப்படி?

  ஜெயா குற்றம் சாட்டப்பட்டவர் என்ற நிலை என்றால் நீதிமன்றம் 18 ஆண்டுகள் காத்திருக்கும்.
  ஜெயா குற்றவாளி என்ற நிலை என்றால் நீதிமன்றம் மூன்று மாதத்தில் முடிவெடுக்கும்.
  ஜெயா குற்றவாளி இல்லை, குற்றம் சாட்டப்பட்டவர்தான் என்றால் நீதிமன்றம் மீண்டும் அமைதியான மோன நிலைக்குப் போய்விடும் என்றால் நீதி எங்கே?

  “நீதி பரிபாலனம் செய்யப் பட்டால் மட்டும் போதாது.
  நீதி பரிபாலனம் செய்யப்படுவது வெள்ளிடைமலையாக அனைவருக்கும் தெரியும் படிக்கும் இருக்கவேண்டும்” என்பது உலகெங்கும் கடைப்பிக்கப் படும் உயரிய கோட்பாடு.

  ஜெயாவிஷயத்தில் அந்தக் கோட்பாடு இதுவரை கடைப்பித்க்கப் படவில்லை என்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல …. தலைவர் சொல்வதுபோல ….
  “அரசியல்வாதிங்க கெட்டுப் போனா கூட நாடு உருப்படும். ஜனங்க கெட்டுப் போனா கூட நாடு உருப்படும். ஆனா நீதிமன்றங்கள் கெட்டுப் போனா மட்டும் நாடு உருப்படாது.”

  கருணாநிதி வகையறா கெட்டுப் போனதாலோ, ஜெயா வகையறா கெட்டுப் போனதாலோ ஆகும் கெடுதலை விட, கர்நாடக உயர் நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் கெட்டுப் போவது வருத்தம் தரும் விஷயம் மட்டும் அல்ல, உடனடியாகச் சரி செய்யப் படவேண்டிய விஷயமும் கூட. செய்யாவிட்டால், நாடு உருப்படாது.

 2. arulnithyaj

  குமரன் சொல்வது முற்றிலும் உண்மை இதை சொன்னதால் உங்களை DMK சொம்பு என்பார்கள். உண்மையை சொல்வதற்கு எதற்கு கட்சி சாயம் ?

 3. குமரன்

  ஈழப் போர் உச்சகட்டத்தில் இருக்கும்போது கருணாநிதி தனது குடும்பத்துக்கு மத்திய மந்திரிப் பதவிகளுக்காக …… அப்பாவி மக்களை, பெண்கள் குழந்தைகள் உள்பட, வான்வழித் தாக்குதலில் ராஜபக்சே ராணுவம் குண்டுவீசித் தாக்கியதையும் அனுசரித்துப் போனதையும், அதை அவர் அந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதிக்குள் இனப் படுகொலை செய்தாவது போரை முடிக்க சோனியாவின் ஆசை (ஆணை) க்கு இணங்கியே நடந்தது என்பதையும் நானே இதே என்வழியில் எத்தனை எதிர்ப்புக்களுக்கும் இடையில் சொல்லி இருக்கிறேன். அப்போது என்னை ஜெயாவின் ஆதரவாளர் என்று முத்திரை குத்த முயற்சி நடந்தது. அப்போது அப்பாவி மக்களைக் கொன்ற ராஜபக்சே-சோனியா கூட்டணிக்குத் துணை போன கருணாநிதி மீது இருந்த கோப இன்னமும் என் நெஞ்சில் குறையவில்லை.

  இப்போது நீதி நிலைக்கவேண்டும் என்ற ஆத்மார்த்தமான எண்ணம் முறையானது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இதைச் சொல்வதால் நான் இப்போது திமுக ஆதரவாளன் என்று சொன்னால் அது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

  ஏனெனில் நான் எப்போதுமே உண்மையை மட்டுமே விரும்புகிறேன், மதிக்கிறேன். அதை மட்டுமே சொல்ல முயல்கிறேன்.

  தலைவரைக் கூட மிக அதிகம் நேசிப்பது அதனால் மட்டுமே. ஒரு நடிகனான செத்தபின்பும் விக் வைத்து, மேக்கப் போட்டுப் புதைக்கும் இந்தத் தமிழ் நாட்டில், வயதைக் காட்டும் நரைத்த முடியை சாயம் பூசி மறைக்காத, விழுந்த வழுக்கையை விக் வைத்து மறைக்காத அந்த உண்மை மிகவும் மதித்துப் போற்றத் தக்கது. ஒவ்வொரு பேச்சிலும் தெறிக்கும் அந்த ஆத்மார்த்தமான வரிகள் மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.

 4. இனியவன்

  நான் வந்து ரொம்ப நாள் ஆகுது அண்ணா… என் தலைவனுக்கு என்ன நீதி துறையில் வேலை……… நாங்க என்ன மருத்துவ மனை கட்ட அனுமதி கொடுத்துட்டு ஓடுரொமா கோர்ட்டுக்கு…. திருந்தவே மாட்டாட்டாங்கலா…..

 5. Sekar

  தலைவரின் பேச்சு ஒரு சாமானிய மனிதனின் பேச்சு. நீதி துறை நம் நாட்டில் மிக மோசமான பாதைக்கு கொண்டு செல்ல முயலுகின்றனர் சில அரசியல் வியாதிகள். சாதாரண மனிதனின் கடைசி நம்ம்பிக்கை நீதி மன்றம் தான். தலைவர் எங்க என்ன பேச வேண்டுமோ அதை சரியாகத்தான் பேசு உள்ளார்.
  இது ஒரு சாமானியனின் உள்ளத்தில் உள்ளவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *