BREAKING NEWS
Search

நூறு முள்ளிவாய்க்கால்கள்: இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம்

‘நூறு முள்ளிவாய்க்கால்கள் நடக்கும்’ என்று பேசிய இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம்

சென்னை: ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம், என்று வாய்துடுக்காக பேசியுள்ள இலங்கை அமைச்சரை கண்டிக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் துயரத்துக்குப் பிறகு வட இலங்கையில் தமிழர் நிலங்கள் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தங்கள் பூர்வீக வீடுகள், நிலங்களை இழந்த தமிழ் மக்கள், இப்போது அறவழிப் போரில் மீண்டும் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சமீபத்தில் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அவரது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, “சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்,” என்று சம்பிக ரணவக்க பேசியுள்ளார்.

அதற்கேற்ப யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பழையில் நேற்று காலை நடந்த நிலமீட்புப்  போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதலும் நடத்தியது.

அமைச்சரின் பேச்சு, இலங்கையில் எத்தகைய சூழலில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. மேலும் சிங்கள இனவாதத்தின் உச்சமாகவும் கருதப்படுகிறது. அவரது இந்த பேச்சுக்கு தமிழ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளதோடு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

அதில், “நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற வைப்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. அவரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்று இதுபோன்று பேசுவதைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும். தமிழர் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் கண்டனம்

இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது அறிக்கையில், “சிங்கள ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு ஆதிக்க வெறி பிடித்தவர்களாகவும் இனவெறி பிடித்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அமைச்சரின் பேச்சு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே இந்த அளவுக்கு வெறித்தனமாகப் பேசும்போது, ஆட்சியிலோ அதிகாரத்திலோ இல்லாத சிங்கள இனவெறிக் கும்பலிடம் எத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக உள்ளது. மேலும், சிங்களப் படையினர் எந்த அளவுக்கு தமிழர்களை நடத்துவார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு வேதனையைத் தருகிறது.

சிங்களவர்களின் வரவுக்கு முன்னர் ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் தமிழர்களின் தாயகமாக இருந்தது என்பதும், பின்னர் வடக்கு-கிழக்கு மாகாணம் மட்டுமின்றி தென்னிலங்கையின் ஒரு பகுதியும் தமிழர்களின் ஆட்சி எல்லைக்குள் இருந்தது என்பதும் வரலாற்று உண்மை.

இந்த வரலாற்று உண்மையைக்கூடச் சொல்லக்கூடாது என்கிற அளவுக்கு சிங்கள ஆட்சியாளர்களிடம் இனவெறி தலைவிரித்தாடுகிறது என்பதை இந்த அமைச்சரின் பேச்சிலிருந்து அறிய முடிகிறது. கேட்பதற்கு நாதியில்லை என்கிற ஆணவத்திலிருந்துதான் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று வெளிப்படையாக அவர்களால் பேச முடிகிறது. புலிகளால் மீண்டும் எழ முடியாது. தங்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது என்கிற இறுமாப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அமைச்சரின் இந்த பேச்சைக் கண்டித்து நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் ஜாதிக ஹெல உருமய கட்சியைச் சேர்ந்த சிங்கள அமைச்சர் சம்பிக ரணவக்க. இவர் அந்நாட்டின் மின்துறை அமைச்சராக உள்ளார்.

-என்வழி செய்திகள்
4 thoughts on “நூறு முள்ளிவாய்க்கால்கள்: இலங்கை அமைச்சருக்கு கருணாநிதி கண்டனம் – திருமா ஆவேசம்

 1. குமரன்

  முதலில் ராஜபக்சேவையும் அவரது கூட்டாளிகளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் போற்குர்ரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நிறுத்தி விசாரித்தால் எல்லா வெறியர்களும் வாயைப் பொத்திக் கொண்டு கிடப்பார்கள். அதற்கான நடவடிக்கைகளை இப்போதாவது இந்திய அரசு எடுக்க ஆவன செய்யவேண்டும். அதை விட்டு விட்டு வேற்று அறிக்கைகளையும் கடிதங்களையும் எழுதுவதில் என்ன பயன். இப்போது கூட பிரனாப்புக்கு திமுக வாக்கு அளிக்கிறோம், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லக் கூட மனமும் இல்லை, நாவும் வரவில்லையே.

 2. Krishna

  //முதலில் ராஜபக்சேவையும் அவரது கூட்டாளிகளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் போற்குர்ரங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நிறுத்தி விசாரித்தால் எல்லா வெறியர்களும் வாயைப் பொத்திக் கொண்டு கிடப்பார்கள்.//

  குமரன் அவர்களே, ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு வரவழைத்து இந்திய இலங்கை உலக கோப்பை இறுதி ஆட்டத்தை காண வைத்து அக மகிழ்ந்த மன்மோகன் அரசிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

 3. தினகர்

  “ராஜபக்ஷேவை இந்தியாவுக்கு வரவழைத்து இந்திய இலங்கை உலக கோப்பை இறுதி ஆட்டத்தை காண வைத்து அக மகிழ்ந்த மன்மோகன் ”

  ராஜபக்‌ஷே உலக கோப்பைக்கு வந்தது சுயவிருப்பத்தின் பேரில் தன்னிச்சையாகத்தான் – இந்திய அரசு அழைக்கவில்லை. மன்மோகன் சிங் அரசு முறைப்படி ஏதும் வரவேற்போ, விருந்தோ கொடுக்கவில்லை.. அழையா விருந்தாளியாகத்தான் வந்தார். மூக்குடைபட்டு தான் சென்றார்.

 4. முல்லைமைந்தன்

  தமிழீழம் உருவாகட்டும்..நூறு ஆனையிறவுகளை நாங்கள் காட்டுகிறோம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *