BREAKING NEWS
Search

தர்மபுரி சாதிக் கலவரம்.. தலித் மக்களின் அச்சத்தைப் போக்குமா அரசு? – கருணாநிதி கேள்வி

தர்மபுரி சாதிக் கலவரம்.. தலித் மக்களின் அச்சத்தைப் போக்குமா அரசு? – கருணாநிதி கேள்வி


சென்னை: தர்மபுரி சாதிப் பிரச்சினை காரணமாக தலித் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மெத்தனப் போக்கைக் கைவிட்டு, அந்த மக்கள் தைரியமாக வாழ அரசு வழி செய்ய வேண்டும், என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கை:

கேள்வி: தர்மபுரியில் தலித் வீடுகள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறதே?

பதில்: தர்மபுரி மாவட்டத்தில் செல்லன்கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும், நத்தம் தலித் குடியிருப்பைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களைப் பாதுகாத்திட வேண்டுமென்றும், சேலம் சரகக் காவல் துறை மற்றும் காவல் துறைத் துணைத் தலைவர் (டி.ஐ.ஜி) ஆகியோரிடம் நேரில் சென்று இருவரும் முறையிட்டிருக்கிறார்கள்.

அதற்குப் பிறகும் பாதுகாப்பு தரப்படாததால், இருவரும் ஊருக்குள் வர முடியாமல் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக இருந்துள்ளார்கள். இந்த நிலையில், இளவரசன், திவ்யா ஆகிய இரண்டு பேரின் பெற்றோரையும் ஊர்ப் பஞ்சாயத்தில் அழைத்து, இருவரையும் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் வாழ விடமாட்டோம் என்றும் ஒரு பிரிவினர் மிரட்டியிருக்கிறார்கள்.

இதனால் வேறு வழியின்றி, திவ்யாவின் தந்தை நாகராஜ் என்பவர், 7-11-2012 அன்று மாலை தற்கொலை செய்து கொண்டார். இதைப் பயன்படுத்திக் கொண்டு மேற்படி பிரிவினர் நாகராஜனின் உடலை தருமபுரி திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் வைத்து, போக்குவரத்தைத் தடுத்து, சாலையோரங்களில் இருந்த மரங்களை வெட்டிச் சாய்த்தும், தீ மூட்டி எரித்தும் மறியல் செய்திருக்கிறார்கள்.

இதற்கடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஆதிக்கச் சக்தியினர் நத்தம் தலித் காலனிக்குள் நுழைந்து தலித் வீடுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார்கள்.

தலித் மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வீடுகளை விட்டு வெளியேறியதைப் பயன்படுத்தி அண்ணா நகர் தலித் காலனி மற்றும் கொண்டலம்பட்டி தலித் காலனிக்குள்ளும் நுழைந்து அனைத்து வீடுகளையும் அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்துள்ளார்கள்.

அதிர்ச்சியிலும் அதிர்ச்சி

இவ்வளவு சம்பவங்கள் நடைபெறும் வரை, அதாவது மாலை சுமார் 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் அங்கே அரசு நிர்வாகமோ, காவல் துறையோ தலையிடவில்லை என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய நிகழ்ச்சியாகும்.

போலீசார் ஏன் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்று விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.ஐ.யான ஆல்வின், சாதிக் கலவரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசாரிடம் பயத்தை உருவாக்கிவிட்டது என்றும், அதனால் கலவரம் நடந்தபோது தங்கள் உயிருக்குப் பயந்த போலீசார் ஒதுங்கிக் கொண்டனர் என்றும், மேலும், தர்மபுரி எஸ்.பி.யான ஆஸ்ரா கார்க், பரமக்குடி, மதுரை என கடந்த ஒரு வாரமாக டெபுடேஷன் பணியில் இருந்தார் என்றும், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் போலீசாரும் திட்டமிட்டுச் செயல்படவில்லை என்றும் கூறுகிறார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்தச் சாதிக் கலவரம் குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாக்குதலுக்கு ஆளான தலித் மக்களை அரூர் தொகுதியின் சட்டசபை உறுப்பினர் பி. டில்லிபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். 250 வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள், வண்டிகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்தும் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன. வீட்டிற்குள் இருந்த பீரோக்களை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்துக் கொண்டு அதன் பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.

3 நாட்களாக அமைதி காத்த அரசு

மூன்று நாட்களாக அங்கே அமைதி ஏற்படவில்லை. அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் தருமபுரி வன்முறையில் வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப் போவதாக முதவ்வர் அறிவித்திருக்கிறார்.

இதற்குக் காரணமானவர்கள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தலித் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். அவர்களுக்கு மீண்டும் வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று  கூறியுள்ளார் கருணாநிதி.
5 thoughts on “தர்மபுரி சாதிக் கலவரம்.. தலித் மக்களின் அச்சத்தைப் போக்குமா அரசு? – கருணாநிதி கேள்வி

 1. Sureshkumar

  ஜாதி எதிர்ப்பு என்றல். அது பிராமண எதிர்ப்பு மட்டும்தான் — இது வசைபாடி ராமசாமி காலதில்லிருந்தி நடப்பது குமரன்…. ஏனென்றால் அவர்கள் எதுவும் செய்யமாட்டார்கள் என தெரியும். மற்ற ஜாதி பற்றி கமெண்ட் செய்தாலே ?….

 2. Kumar

  அதுவும் சேரி தான் செந்தில்.ஏங்க எதிர்ப்பு தெரிவிகவில்லைன்னு கேட்டா பிஸியா இருந்தொம்பாங்க.ஆனா சமத்துவம்,சகோதரதுவோம்னு நல்லா பேசுவாங்க.

 3. குமரன்

  தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வந்கொடுமையையும், வன்முறையையும் செய்தவர்கள் வன்னியர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்ல கருணாநிதிக்கு இருக்கும் தயக்கத்தின் காரணம் என்னவாக இருக்கும்?

  ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்..

  அ. வன்னியர் வாக்குகள் வரும் காலத்தில் தேர்தல்களில் திமுகவுக்குத் தேவை.
  ஆ. திமுகவில் இருக்கும் வன்னியர்கள் திமுகவை விட்டுப் போய்விடக் கூடாது.
  இ. வெளிப்படையாகக் கண்டித்தால் வன்னியர்கள் திமுகவுக்கும் தனக்கும் எதிராக இதே அளவு வன்முறையைக் கட்டவிழ்த்து விடக் கூடும்.
  ஈ. வருகின்ற தேர்தலில் பா.ம.கவுடன் கூட்டணி வைக்க முடியாமல் போய் விடும்.
  உ. வன்னியர்களை வெளிப்படையாகக் கண்டித்து விட்டால், பின்வரும் காலங்களில் இதே போல ஆங்காங்கே உள்ள ஆதிக்கச் சாதிகளான தேவர், நாடார், கொங்குவேளாளர் ஆகியோரையும் கண்டிக்க வேண்டி நேரிட்டு விடலாம். அப்படி செய்தால் அப்புறம் எந்த சாதியினர் வாக்கு திமுகவுக்குக் கிடைக்கும்?
  ஊ. சாதி வெறி ஒருவேளை ஒட்டுமொத்தமாக அழிந்துவிட்டால் எப்படி அரசியல் செய்வது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *