BREAKING NEWS
Search

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் கர்நாடக நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் நிபந்தனை ஜாமீன் மறுப்பு!

jaya_happy_1

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்தும், இவ்வளவு அவசரமாக ஜாமீன் வழங்கத் தேவையில்லை என்று நீதிபதி சந்திரசேகரா கூறிவிட்டார்.

காலை 11.50 மணியளவில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. பிற்பகல் 3.35 மணியளவில் ஜாமீன் மறுக்கப்பட்டது.

சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 27-ம் தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தலா 4 ஆண்டு காலம், ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அன்றைய தினமே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையை முன்னிட்டு பெங்களூரின் சில முக்கியப் பகுதி களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முதல் மனுவாக ஏற்க மறுப்பு

முன்னதாக, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். ஜெயலலிதா மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார். ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகரா மறுத்தார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு வரிசை எண் படி 73-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.

ராம் ஜெத்மலானி வாதம்

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராம் ஜெத்மலானி வாதிட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.

பவானி சிங் வாதம்

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என முதலில் வாதிட்டார்.

‘ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக‌ இருக்கிறார்.அவரை ஜாமீனில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பி செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என அவர் தெரிவித்தார்.

ஜெத்மலானி பதில்

அதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, “ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்,” என்றார்.

விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி வாதம் ஒரு மணி நேரம் வாதிட்டார். வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன. தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர்.

உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு ஜாமீன் மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மீண்டும் 2.30 மணிக்கு வாதம் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க தாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறிவிட்டார். ஆனாலும், 3.35 மணியளவில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என நீதிபதி சந்திரசேகரா கூறிவிட்டார்.

இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மற்றும் தண்டனை ரத்து கோரும் மனுக்களை தாக்கல் செய்கின்றனர் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள்.

குறிப்பு: முன்னதாக ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டதாக வெளியான தவறான தகவலால், அதிமுகவினர் தமிழகம் எங்கும் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *