BREAKING NEWS
Search

தலைமறைவான நித்யானந்தனை கைது செய்ய உத்தரவு… பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்தது கர்நாடக அரசு!

தலைமறைவான நித்யானந்தனை கைது செய்ய உத்தரவு… பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைத்தது கர்நாடக அரசு!

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தனின் ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு சீல் வைத்துள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தனை கைது செய்யவும் போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்தவரான நித்தியானந்தன் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடதியில் ஆசிரம் அமைத்துள்ளார்.

பிரம்மச்சரியம் மூலம் சித்திகளை அடையலாம் என மக்களை நம்ப வைத்து பல கோடி பணம் பார்த்த நித்யானந்தன் நடிகை ரஞ்சிதாவுடன் காமக் களியாட்டங்களில் ஈடுபட்டு வந்தததை, ரகசியமாக படம் பிடித்து அம்பலமாக்கினார் அவரது சீடர் ஒருவர்.

இதைத் தொடர்ந்து தலைமறைவான நித்யானந்தனை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

சிறையிலிருந்து ஜாமீனில் வந்தாலும் இவரது செயல்பாடுகள் பற்றியும் ஆசிரம நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

அண்மையில் மதுரை ஆதீனத்தில் இளைய சன்னிதானமாக நித்தியானந்தன் நியமிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு உருவானது. இது தொடர்பாக வழக்குகளும் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கர்நாடகத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த நித்தியானந்தனின்முன்னாள் சீடர் ஆர்த்திராவ், நித்தியானந்தன் மீது பாலியல் புகாரைக் கூறியிருந்தார்.

இந்தப் புகாருக்கு விளக்கம் கொடுப்பதற்காக நித்தியானந்தா சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் செய்தியாளர்களுடன் கை கலப்பில் நித்தியானந்தனும் அவரது சீடர்களும் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நித்தியானந்தனை பிடதியில் இருந்து வெளியேற்றக் கோரி கன்னட அமைப்பினர் போராட்டமும் நடத்தினர்.

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி அசம்பாவிதங்களை உருவாக்கி வரும் நித்தியானந்தனின் பிடதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்தும் என்றும் கர்நாடக அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் பிடதி ஆசிரமத்தைச் சுற்றி 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும் பிடதி ஆசிரமம் பற்றி ராமநகர மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் ஆகியோர் முதல்வர் சதானந்தா கவுடாவை இன்று காலை நேரில் சந்தித்து இரண்டு அறிக்கைகளையும் தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கைகளின் படி பிடதி ஆசிரமத்துக்கு கர்நாடக அரசு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நித்தியானந்தனை கைது செய்யவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நித்தியானந்தன் ஆசிரம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரமத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவரது அனைத்து ஜாமீனையும் ரத்து செய்யவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மதுரை வந்தால் கைது செய்ய நடவடிக்கை

நித்தியானந்தனின் அனைத்து ஜாமீன்களும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவரை தேடி கர்நாடக போலீசார் மதுரை விரைந்துள்ளனர். இன்று இரவு மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தனைத் தேடி சோதனை நடத்தக் கூடும் என, மதுரை உளவுத்துறை போலீசார் தகவல் கசியவிட்டதையடுத்து, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

மதுரை ஆதீனம் மூடப்பட்டது!

மதுரை ஆதீன மடத்தின் இரண்டு பக்க வாசல் கதவுகளை மூடிய ஆதீனம் அருணகிரிநாதர் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்துள்ளார்.

அதில், தற்காலிகமாக பூஜைகள் ரத்து செய்யட்டு, மடம் மூடிவைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பூஜை நிறுத்தப்பட்டு, மடம் பூட்டிக்கிடப்பதை கேள்விப்பட்ட மதுரை ஆதீன பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *