BREAKING NEWS
Search

கபிலுடன் கிரிக்கெட் வாரியம் ‘சமாதானம்’ – மீண்டும் பிசிசிஐயில் இணைந்தார்!

சமாதானப் பேச்சு வெற்றி – மீண்டும் பிசிசிஐயில் இணைந்தார் கபில்தேவ்!

பெங்களூர்: முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவுடன் பேச்சு நடத்தி சமரசமாகப் போய்விட்டது பிசிசிஐ. இதன் மூலம் கபில் மீண்டும் பிசிசிஐயுடன் இணைந்து பணியாற்றுவார் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியும் அறிவித்துள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். இவர் தலைமையிலான இந்திய அணிதான் கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணியில் ஓய்வு பெற்ற பிறகு கபில்தேவ், ஐசிஎல் என்ற தனி கிரிக்கெட் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார்.

இதன் மூலம் முதல் முறையாக 20 ஓவர் கிரிக்கெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் கபில்தான்.

கபில்தேவுடன் கிரண் மோரே மற்றும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்  இணைந்தனர். ஐசிஎல் தலைவராக கபில் தேவ் பதவி வகித்தார். இதனால் பிசிசிஐயின் வெறுப்பிற்கு ஆளான கபில்தேவ், பிசிசிஐ அளிக்கும் சலுகைகளில் இருந்து நீக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலக்கப்பட்டார்.

ஆனால் கபிலின் ஐசிஎல்லைப் பார்த்து, ஐபிஎல் என்ற அமைப்பை பிசிசிஐ உருவாக்கியது.

பிசிசிஐ செய்த வேலைகளால் ஐசிஎல் இப்போது செயல்பாட்டில் இல்லை. ஐசிஎல்லில் இருந்தவர்களை பழிவாங்கக் கூடாது என உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுவிட்டது. ஆனாலும் பிசிசிஐ பிடிவாதமாக கபிலை விலக்கி வைத்திருந்தது. ஐபிஎல்லுக்கு இந்த ஆண்டு கிடைத்த லாபத்திலிருந்து அவருக்கு தர வேண்டிய மதிப்பூதியத்தையும் தரவில்லை.

மேலும் கபில் தேவ் தனது செயலுக்கு மன்னிப்பு கடிதம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. ஆனால் அதற்கு கபில்தேவ் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் கபில்தேவ் இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்றது. இந்த நிலையில் கபில்தேவ்வை சந்தித்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிசிசிஐ உடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் குறித்து சீனிவாசன் விளக்கி கூறினார்.

இதையடுத்து பிசிசிஐயிடம் கடிதம் அளிக்க, கபில்தேவ் ஒப்புக் கொண்டார்.

முன்னதாக ஐசிஎல் அமைப்பில் இருந்து விலகிய கிரண் மோர், பிசிசிஐயிடம் மன்னிப்பு கடிதம் அளித்து பிசிசிஐயில் இணைந்தார்.  கபில் தன் கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையைப் பிரயோகிக்காவிட்டாலும், சம்பிரதாயமாக கடிதம் தர வேண்டும் என்று சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து தான் ஐசிஎல்லிலிருந்து விலகிவிட்டதைக் குறிப்பிட்டு கடிதம் அளித்துள்ளார் கபில். இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ தற்போது கபில்தேவை பிசிசிஐயில் இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் அளித்த விளக்கக் கடிதத்தை பிசிசிஐ ஏற்று கொண்டது. இதில் அவர் பிசிசிஐக்கு எதிரான செயல்பட்ட ஐசிஎல் அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் பிசிசிஐயின் வளர்ச்சிக்கு உதவியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட்டுக்கு கபில்தேவ் ஆற்றியுள்ள பெரும் பணியை பிசிசிஐ மதிக்கிறது. அவருக்கு உரிய மரியாதையைத் தரவும் தயாராக உள்ளது,” என்று தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கபிலுக்கு தரவேண்டிய ரூ 1.5 கோடியை உடனடியாக வழங்கியுள்ளது பிசிசிஐ.

-என்வழி செய்திகள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *