BREAKING NEWS
Search

செத்துப் பிழைத்த கனகா… அவசர உலகில் இனி இதெல்லாம் சகஜமாகி விடுமோ!

நடிகை கனகா பற்றிய பரபரப்பு… அவசர உலகில் இனி இதெல்லாம் சகஜமாகி விடுமோ!

Actress Kanaka_press

முன்பெல்லாம் ஒரு செய்தியைப் படிக்க குறைந்தது 24 மணிநேரம் காத்திருக்க வேண்டும்.. கேட்பதற்கோ குறைந்தது 6 மணிநேரமாவது காத்திருக்க வேண்டும்.

இன்று அப்படியல்ல. ஒரு செய்தியைப் படிக்க, பார்க்க, கேட்க குறைந்தபட்சம் ஒரு நொடி கூட காத்திருக்க வேண்டியதில்லை. தகவல் தொடர்பின் அசுர வளர்ச்சிக்கு தீனி போட முடியாத நிலை செய்தி நிறுவனங்களுக்கு. செய்தியைக் கேள்விப்பட்டு அதை விசாரிக்கும் அவகாசத்துக்குள் போட்டியாளர்கள் செய்தி வெளியிட்டு விடுகின்றனர். இவர்களில் பலர் எதையும் குறைந்தபட்சம் விசாரிப்பது கூட இல்லை. அவர்களின் மூடத்தனமான வேகத்துக்கும் ஈடுகொடுத்து, வாசகர்களின் பரபரப்பான தேடலுக்கும் செய்தி கொடுப்பது பெரும் சவாலாகிவிட்டது.

குறிப்பாக பேஸ்புக் – ட்விட்டரில் வருவதற்கு முன்பு செய்தி போட வேண்டிய நெருக்கடி இருக்கிறதே… அது இன்னும் ரொம்பக் கொடுமை! 🙂

இன்று கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிரபல நடிகை கனகா இறந்துவிட்டதாக மீடியாவில் பரபரப்பாக செய்தி வெளியாக, அவரோ அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டில் நல்ல ஆரோக்கியத்துடன் தோன்றி நிருபர்களுக்கு பேட்டி கொடுத்து அந்த செய்தியை மறுத்தார்.

“எல்லோரும் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம். அதற்கு இந்த நாட்டில் உரிமை உள்ளது. யாரோ சொன்னதாக என்னைப் பற்றி செய்தி வெளியிட்டீர்கள். அது உங்கள் உரிமை. இப்போ நானே நேரில் வந்து அதை தெளிவாக்கிட்டேன். அவ்வளவுதான். இதில் யாரையும் நான் குறை சொல்லல… பிரச்சினை முடிஞ்சிடுச்சி…,” என்றார் கூலாக!

நடிகை கனகா விஷயத்தில் இன்று நடந்த குழப்பத்துக்கு முக்கிய காரணம், அவரை உருக் குலைந்த நிலையில் ஆலப்புழாவில் பார்த்ததாக ஒரு நபர் பரப்பிவிட்ட செய்திதான்.  இந்த செய்திக்கு எந்த மறுப்பும் கனகா தரப்பில் வரவில்லை.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது...

இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது…

இந்த நிலையில்தான் அவர் இறப்புச் செய்தி ஒரு ஏஜென்சி மூலம் வந்ததும் அதை நம்பி பலரும் செய்தி வெளியிட்டு, அடுத்த சில நிமிடங்களில் விசாரித்து உண்மை தெரிந்து நீக்கினர்.

செய்தி போடுவதற்கு முன்பே விசாரிக்க வேண்டியதுதானே என்ற கேள்வி நியாயமானதுதான். பொதுவாக ஏஜென்சிகள் தரும் செய்திகளை யாரும் விசாரித்து வெளியிடுவதில்லை. அந்த வழக்கம் ஒருபக்கம். செய்திகளை முதலில் தரவேண்டிய நெருக்கடி மறுபக்கம்.

ஆயிரம் விளக்கங்கள் கைவசம் இருந்தாலும், சென்னையில் நலமோடு இருந்த கனகாவை, கேரளத்தில் இறந்துவிட்டார் என செய்தி வெளியிட்டது பெரும் தவறுதான்!

-என்வழி ஸ்பெஷல்




One thought on “செத்துப் பிழைத்த கனகா… அவசர உலகில் இனி இதெல்லாம் சகஜமாகி விடுமோ!

  1. srikanth1974

    இவ்வளவு ஏன் ?. நம் அன்புத் தலைவர் பற்றி கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தினத்தில் மிகப்பெரிய மிகத் துயரமான ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு நம் அனைவரையும் வேதனைப்படுத்தியவர்கள் இந்த அவசரச் செய்தியாளர்கள் [புண்ணியவான்கள்]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *