BREAKING NEWS
Search

ரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன்! – தமிழருவி மணியன் குற்றச்சாட்டு

Rajini-Tamizharuvi

சென்னை: கமல் ஹாசன் ரஜினி மீது காவிச்சாயம் பூச முயல்வதாகவும், அவர் தனித்துப் போட்டியிட்டால் இன்னொரு சிவாஜி கணேசன் ஆவது உறுதி என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

’கமல்ஹாசன் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதாகவும், தனிக்கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அறிவித்துவிட்டார். இருபதாண்டுகளாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

நான்கு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்தபோது அரசியல் அமைப்பு அழுகிக் கிடக்கிறது என்றும், அதை ஒழுங்குபடுத்தப் போர்க்கோலம் பூண்டு களமாடவேண்டிய காலம் வருமென்றும் ரஜினிகாந்த் அறிவித்ததார். அத்துடன் நிற்காமல், ‘என்னை வைத்துப் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இப்போதே என்னை விட்டு விலகிவிடலாம்’ என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்.

சமூகத்தின் பல்வேறு தளங்களில் உள்ள முக்கியமான மனிதர்களை அவர் தொடர்ந்து சந்தித்துத் தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தார். காந்திய மக்கள் இயக்கம் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்துத் திருச்சியில் நடத்திய மாநாடு மாபெரும் மக்கள் கடலாக மாறி அரசியலரங்கில் அழுத்தமான அதிர்வலைகளை உருவாக்கியது.

ரஜினியின் அரசியல் வருகை உறுதிசெய்யப்பட்ட பின்பே கமல் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். ‘நான் முதலமைச்சர் பதவி என்ற முள்கிரீடத்தைச் சுமப்பதற்குத் தயார்’ என்று தன்னுடைய அந்தரங்க ஆசையையும் தயக்கமின்றி கமல் வெளிப்படுத்திவிட்டார். ரஜினியும் கமலும் அரசியலமைப்பு அழுகிவிட்டது என்று ஒப்புக்கொள்கின்றனர். இருவரும் ஊழலுக்கு எதிராகப் போராடப் போவதாகவும் அறிவித்து விட்டனர். நோக்கங்கள் ஒன்றாக இருக்கும்போது இருவரும் இணைந்து செயற்படலாமே! ஆளுக்கொரு கட்சி அவசியமில்லையே!

‘எங்கள் இருவரது சித்தாந்தங்களும் வேறுபட்டவை. அதனால் இணைந்து செயற்பட வாய்ப்பில்லை’ என்று அறிவித்த கமல், தேவையில்லாமல் ரஜினியின் மீது காவிச் சாயம் பூச முயல்கிறார். ரஜினி இன்றுவரை, ‘நான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப் போகிறேன்’ என்று அறிவிக்காத நிலையில், ‘அவர் பா.ஜ.க.வுடன் செல்வார்’ என்று கமல் ஆரூடம் கணிக்கவேண்டிய அவசியம் எதனால் எழுந்தது? இதில் கமல் உள்நோக்கத்துடன் செயற்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

கமல் தனிக்கட்சி தொடங்கும் நிலையில் அவருக்கு முன்னால் மூன்று வாய்ப்புகள்தான் உள்ளன. ரஜினியுடன் கூட்டணி அமைத்து இரு கழகங்களின் களங்கம் நிறைந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவது அல்லது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் அமைக்கப்போகும் கூட்டணியில் இடம் பெறுவது. பெரியாரின் கருப்புச் சட்டையையும், மார்க்சிய சிவப்புச் சட்டையையும் மாற்றி மாற்றி அணிந்துகொள்ளும் கமல் பா.ஜ.க கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை.

‘அமைப்பு அழுகி ஊழல் பெருகிவிட்டது’ என்று டிவிட்டரில் பதிவு செய்யும் கமல் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றால், அவரது நம்பகத்தன்மை அடியோடு பறிபோய்விடும். கெஜ்ரிவால் – கேரள முதல்வர் பிரனாய் – மம்தா பானர்ஜி சந்திப்புகளனைத்தும் இவைக்கு உதவாது. தனியாகத் தேர்தல் களம் காண்பதற்குக் கமல் முடிவெடுத்தால், அவர் அரசியலில் இன்னொரு சிவாஜி கணேசனாவது நிச்சயம்.

கமல் கட்சி தொடங்குவதற்கு முன்பு யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது. நன்றாக யோசித்து முடிவெடுக்கட்டும்.”

இவ்வாறு தமிழருவி மணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

சிவாஜி மணிமண்டப விழாவில் , அரசியலில் ஈடுபடும் கலைஞர்களுக்கு சிவாஜி நிறைய பாடங்களை கற்றுத் தந்துள்ளார் என்றும், அரசியலில் வெற்றி பெறும் சூட்சமம் என்ன என்று கேட்டால் ,தன்னுடன் வா என்று கமல் அழைப்பதாகவும் ரஜினி குறிப்பிட்டார்.

ரஜினியின் சிவாஜி அரசியல் வரலாற்றை, கமல் ஹாசனுக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் தமிழருவி மணியனின் அறிக்கை இருக்கிறது
2 thoughts on “ரஜினி மீது காவிச் சாயம் பூச முயல்கிறார் கமல் ஹாசன்! – தமிழருவி மணியன் குற்றச்சாட்டு

 1. David Rajkumar

  பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தினால் தமிழ்நாட்டை ஆள முடியும் என்று தவறாக கணக்கு போட்டுவிட்டார்கள்.ஐயா நாடும் நாட்டு மக்களும் நாசமாக போக இனி முடியாது. ஆம் என் தலைவன் இருக்கிறான்.

 2. ஸ்ரீகாந்த்.1974

  தலைவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு
  கொண்டவர் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக
  இன்னும் என்னென்ன கலர் சாயமெல்லாம்
  பூசப்போகிறார்களோ?.
  அடேய் ஜிமிக்கி கம்மல் நீ எப்பவுமே
  எல்லாத்துக்கும்,முன்னாடி போவ
  ஆனால் நீ என்னைக்குமே முன்னுக்கு
  வரமாட்டே ஏன்னா?உன் முகராசி அப்படி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *