BREAKING NEWS
Search

அன்று பார்த்த ரஜினியைத்தான் இன்றும் பார்க்கிறேன்… அவரிடம் மாற்றமில்லை! – கமல்

அன்று பார்த்த ரஜினியைத்தான் இன்றும் பார்க்கிறேன்… அவரிடம் மாற்றமில்லை! – கமல்

rajini-at-16-vayathinile160

சென்னை:  அன்று பார்த்த ரஜினியைத்தான் 10 ஆண்டுகளுக்கு முன்பும் பார்த்தேன். இன்றும் பார்க்கிறேன்… அவரிடம் எந்த மாற்றமுமில்லை, என்றார் நடிகர் கமல் ஹாஸன்

வெள்ளிக்கிழமை நடந்த 16 வயதினிலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பங்கேற்று பேசியது:

இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இதில் வேலை செய்தவர்களுக்கு எத்தனை தன்னம்பிக்கை என்பதை அப்போதும் பார்த்து வியந்திருக்கிறேன், இப்போதும் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு பாரதிராஜாவை உதவி இயக்குனராகத் தெரியும். யாராவது “பாரதிராஜா மாதிரி கிராமத்துல இருந்து வந்துருக்கான்”னு யாராவது சொன்னா எனக்கு பயங்கரமா கோபம் வரும். ஏன்னா அவர் அதிர்ஷத்துல இந்த இடத்துக்கு வரல. அவரோட உழைப்பாலதான் வந்திருக்கார்.

இந்தப் படத்தின் கதைக்கு மயில் என்றுதான் டைட்டில் வைத்திருந்தார். 16 வயதினிலே படத்தின் வெற்றிக்கு விழா எடுக்கவில்லை என்று அப்போது கோபித்துக் கொண்டேன். ஆனால் 36 வருடங்கள் கழித்து விழா எடுப்பார்கள் என்று தெரிந்திருந்தால் அப்படி சிறுபிள்ளைத்தனமாக கோபித்திருக்க மாட்டேன்.

16 வயதினிலே அப்போது பெரிய வெற்றி படமாக அமைந்தது. 36 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இங்கே விழா எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் இருந்த எல்லோருமே வெற்றி கண்டு இருக்கிறார்கள். இளையராஜா இசை சிறப்பாக இருந்தது.

கதாநாயகி மயிலுவாக நடித்த ஸ்ரீதேவி அருமையாக நடித்திருந்தார். நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே இந்தப் படத்தில் ‘ஸ்லோ மோஷன்’ காட்சியை எடுக்க முயன்றார் பாரதிராஜா. தன்னிடமிருந்த பணம் முழுவதையும் கொட்டி தயாரிப்பாளர் இந்தப் படத்தை எடுத்தார்.

இப்படத்தின் முதல் நாயகன் பாரதிராஜாதான். படம் எடுத்தபோது சிலர் எதிர்மறை கருத்துக்கள் சொன்னார்கள். தயாரிப்பாளர் நிலையை நினைத்து பயந்தேன். ஆனால் படம் வெற்றி பெற்றது. அதை மீண்டும் ரிலீஸ் செய்ய நடக்கும் இது போன்ற விழா அரிதான ஒன்று.

rajini-at-16-vayathinile18

இப்போ ஸ்லோவாகிட்டோம்… ஆனா வயது காரணமாக அல்ல!

ரஜினி பற்றிச் சொல்ல வேண்டும். இன்று அவரது நினைத்தாலே இனிக்கும் படம் வெளியாகியுள்ளது. இதே நாளில் அடுத்த படத்துக்கான ட்ரைலர் வெளியீடு. அன்றைக்கு எங்கள் படங்கள் இப்படித்தான் வெளியாகின. ஒரு பக்கம் எங்கள் படத்தின் வெள்ளி விழா நடந்து கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் புதுப்படத்தின் பூஜை நடக்கும்.

துவக்கத்தில் நானும் ரஜினியும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்தோம். பின்னர் இடைவெளி அதிகமாகிவிட்டது. நிச்சயம் வயது காரணமல்ல… முதலீடு அதிகமாகிவிட்டதுதான்.

ரஜினி எப்போதும் மாறாதவர்

இந்த 16 வயதினிலே நடித்தபோது ரஜினி எங்கு தங்கினார் என்று நிஜமாகவே எனக்கும் தெரியாது. ஒரு படம் முடிந்ததும் அவர் வேறு படத்துக்கு போக வண்டி வரும். வண்டியிலேதான் தங்கினாரா என்று நினைக்க தோன்றியது.

16 வயதினிலே படத்தில் நடித்தபோது எங்களுக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம் கிடைத்தது. அப்போது ரஜினி எப்படி இருந்தாரோ அப்படித்தான் 10 வருடங்களுக்கு முன்பும் இருந்தார். இன்றும் அப்படியேதான் இருக்கிறார்.

இடைத்தரகர்களைத் தாண்டி

இடைத் தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதற்கான பெருமை எங்கள் இருவரையும்தான் சாரும். நான் உங்களுக்கு செய்த நட்பு நீங்கள் செய்த அன்பின் பலன். இவ்விடமும் அதேதான்.

இளையராஜா இருந்திருந்தால்…

இந்த விழாவில் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் பங்கேற்று இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். அவர்கள் சார்பில் நாங்கள் வந்து இருக்கிறோம். எனக்கு நல்ல நண்பர்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள்,” என்றார் கமல்.

-என்வழி சினிமா செய்திகள்




One thought on “அன்று பார்த்த ரஜினியைத்தான் இன்றும் பார்க்கிறேன்… அவரிடம் மாற்றமில்லை! – கமல்

  1. மிஸ்டர் பாவலன்

    கமல் ரஜினியைப் பாராட்டி பேசுவதில்லை என குறை சொல்லி வரும்
    ரஜினி ரசிகர்கள் இந்தப் பேச்சைப் படித்திருப்பார்கள் என நம்புகிறேன்.
    எத்தனையோ இடங்களில், சமயங்களில் கமல் ரஜினியைப் பாராட்டி
    இருக்கிறார். நன்றி.

    -== மிஸ்டர் பாவலன் ==-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *