BREAKING NEWS
Search

நீண்ட, ஆரோக்கிய ஆயுளுடன் வாழுங்கள் கமல் ஹாஸன்!

கமலுக்கு வயது 60.. அவரது சினிமா வாழ்க்கைக்கு வயது 55!

KAMAL-50

சென்னை: கலைஞானி, உலகநாயகன் என்று புகழப்படும் கமல் ஹாஸன் இன்று தனது 60வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்திய திரையுலகின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவர் கமல் ஹாஸன். படங்களில் அவரைப் போல வித்தியாசமான நடிப்பைக் காட்டிய கலைஞர் யாராவது இருப்பார்களா என்பது சந்தேகமே.

நட்சத்திர ஒளிவட்டம், கூடவே அபார நடிப்புத் திறமை இரண்டும் அமையப்பெற்ற கமல், சினிமாவில் எம்ஜிஆர் போல ஒரு சகலகலா வல்லவர்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், ஒளிப்பதிவு என அனைத்து நுட்பங்களையும் அவற்றின் நவீன மாறுதல்களையும் புரிந்து, தன்னையும் அப்டேட் செய்து கொள்ளும் அபார திறமைசாலி கமல்.

கமர்ஷியல் சினிமா, மாற்று சினிமா என இரு வேறு தடங்களை சினிமாவில் சிலர் ஏற்படுத்த முனைந்தனர். ஆனால் கமலோ, இரண்டையுமே ஒன்றாக்கி சாதித்தவர்.

களத்தூர் கண்ணம்மாவில் தனது திரை வாழ்க்கையை கமல் ஆரம்பித்தபோது அவருக்கு வயது 5. தொடர்ந்து வெற்றிப் படங்கள் பலவற்றின் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். குழந்தையும் அல்லாமல் குமரனும் அல்லாத ஒரு இரண்டுங்கெட்டான் பருவம் வந்தபோது, திரைத் தொழில் நுட்பங்கள், நடனம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் காட்டி கற்றுக் கொண்டார்.

kamal-60

பின்னாளில் நட்சத்திர நடிகனாக உயர்ந்த போது, அவர் கற்றுக் கொண்ட அத்தனையையும் திரையில் பயன்படுத்தினார். அதனால் அவருக்கு நிகரான கலைஞர்களே இல்லை எனும் நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.

60 வயதில் 55 ஆண்டுகள் சினிமா வாழ்க்கைதான் என்பது வேறு யாருக்கும் அமையாத அரிய விஷயம்தான். இந்த 55 ஆண்டுகளும் கமல் ஒரு முழுமையான சினிமாக்காரராகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு இன்று 60 வயது. இந்த வயதிலும் அவர் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த இரு படங்களின் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

‘என் வருத்தமெல்லாம், நான் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போகிறேன் என்பதுதான். வயசு பத்தலையே என்பது, இன்னும் அதிக சினிமாக்களைத் தரமுடியாமல் போகிறதே என்பதற்காகத்தானே தவிர, அதிக காலம் உயிர் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. இருக்கிற இந்த கொஞ்ச காலத்துக்குள் இன்னும் அதிக படங்களைத் தரவேண்டும். வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் உள்ளது..”

-இது கமல் அடிக்கடி சொல்லும் விஷயம். கமல் நம்பும் இயற்கையோ, சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பெரும்பான்மையானோர் நம்பும் இறைவனோ.. கமலின் ஆதங்கத்தைப் போக்கி, ஆரோக்கியத்துடனான நீண்ட ஆயுளைத் தந்து, திரையுலகை ஆசீர்வதிக்கட்டும்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் ஹாஸன்!

-என்வழி




12 thoughts on “நீண்ட, ஆரோக்கிய ஆயுளுடன் வாழுங்கள் கமல் ஹாஸன்!

  1. chozhan

    நன்றி வினோ,

    மிகச்சிறந்த பதிவு, படிக்க தொடுங்கும் போது வஞ்சபுகழ்ச்சியோ என்று நினைத்தேன் நீங்களும் உங்கள் தலைவரை போல் வெளிப்படையாக எழுதியதிற்கு நன்றி.

    உங்களிடம் இருந்து பதிவு வரும் என்பது என் எதிர்பார்ப்பு நீங்கள் ஏமாற்றவில்லை நன்றி

  2. srikanth1974

    உலக நாயகன் திரு.கமல்ஹாசன்.அவர்களுக்கு
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
    நீங்கள் நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியத்தோடும்,பல்லாண்டு வாழ
    இறைவனைப் பிராத்திக்கிறோம்.

  3. srikanth1974

    உலக நாயகன் திரு.கமல்ஹாசன்.அவர்கள் தனது பிறந்தநாளான இன்று
    தமிழகத்தில் உள்ள ஏரிகளை தூய்மைப் படுத்தும்படி தமது நற்பணி இயக்கத்தோழர்களுக்கு அறிவுரைக் கூறியுள்ளார்.அவரது இந்த அறிய செயலுக்கு பாராட்டுக்கள்.

  4. Elango

    கமலை வாழ்த்துகிற அளவிற்கு “அவலோ நல்லவங்களா நீங்க?” 🙂

  5. Elango

    வாழ்த்துகள் கமல் அவர்களே!

    வெறும் சினிமாவை ரசிக்கும் ரசிகர்களை …வைத்து காசு பார்க்காமல் .. அவர்களை நற்பணியில் ஈடுபடுத்திய பெருமை உங்களையே சாரும் ….!

    இன்று நரேந்திர மோதி உங்களை தூய்மை இந்தியா திட்டத்திற்கு தேர்ந்தெடுத்ததை நாங்கள் பெருமையாய் கருதுகிறோம்!

    இறைவன் …தேக நலனையும் ….நிமதியையும் கொடுத்து ..உங்களை நீடூழி வாழ வைக்க வேண்டும் !

  6. மிஸ்டர் பாவலன்

    சிறப்பான கலைஞர் கமல் ஹாசன் பற்றிய சிறப்பான கட்டுரை!

    கமல் படங்களிலேயே “சலங்கை ஒலி” படம் மிகவும் சிறப்பானது.
    அது போல் பிறர் இயக்கி வெளிவரும் படங்களில் அவர் படங்கள்
    கொடுப்பது அரிதாக உள்ளது. கமல் பல புதிய முயற்சிகளை அவரே
    கதை எழுதி இயக்கம் போது நமக்கு குழம்பி விடுகிறது!

    ஷங்கர் இயக்கத்தில் கமல் மீண்டும் ஒரு படம் தருவார் என நம்புவோம்!

    வாழ்த்துக்கள் – உலக நாயகன் அவர்களே!!

    -== மிஸ்டர் பாவலன் ==-

  7. srikanth1974

    கமலை வாழ்த்துகிற அளவிற்கு “அவலோ நல்லவங்களா நீங்க?” 🙂

    ஏன் திரு.கமல் அவர்களை நல்லவங்க யாரும் வாழ்த்தக்கூடாதா?.

  8. குமரன்

    கமலின் எந்தப் படம் சிறப்பானது என்பதற்கு ஒரு பட்டிமன்றம் வேண்டும் பாவலன் அவர்களே!

    சலங்கை ஒளியில் அவர் ஆடும் நடனங்களில், நான் மிகவும் ரசித்தது, கிணற்றின் சுவரிலும் ஆடிய நடனமே!

    கமல் நிச்சயம் நீண்ட நாள் வாழ்ந்து மென்மேலும் கலைச் சேவை செய்யவேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    அவர் இயற்கையை நம்புகிறாரா? எனக்கு நம்பிக்கை இல்லை!

    இறையருள் சித்திக்கட்டும் என்றே இறைஞ்சுகிறேன்.
    அன்பே சிவமாக, சிவமே எல்லாமாக இருக்கும் பேருண்மை என்றும் நிலைத்து நிற்கும், அதையும் அவர் ஆயுட்காலத்தில் உணர்வார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது!

  9. srikanth1974

    திரு.மிஸ்டர் பாவலன் சார் அவர்களுக்கு வணக்கம்’
    திரு.கமல் அவர்கள் திப்பு சுல்தான் வரலாற்றை திரைப்படமாக
    இயக்கி நடிக்கப்போவதாக ஒரு செய்தி படித்தேன்.

  10. மிஸ்டர் பாவலன்

    நண்பர் ஸ்ரீகாந்த் அவர்களே.. என் போன்ற கமல் ரசிகர்கள்
    கமலே கதை எழுதி, இயக்குவதை அவ்வளவாக விரும்புவதில்லை..
    அப்படிப் பட்ட படங்கள் பெரும்பாலும் ஓடியதில்லை என்பது தான்
    Box Office நிலவரம்..அது மட்டும் அல்லாமல் அவருக்கு தயாரிப்பாளர்கள்
    கிடைப்பார்களா என்பதும் ஒரு கேள்விக் குறி.. மர்மயோகி என ஒரு
    படத்தின் பெயர் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? அது போல்
    திப்பு சுல்தான் படமும் வெளிவராமல் போய் விடலாம்.. சிங்கிதம்
    ஸ்ரீனிவாச ராவ், கே. விஸ்வநாத், பாலச்சந்தர், பாரதிராஜா, ஷங்கர்,
    கே. எஸ். ரவிகுமார், முருகதாஸ், கௌதம் மேனன், “ட்விஸ்ட்” புகழ்
    லிங்குசாமி போல் பிறர் இயக்கத்தில் கமல் நடிப்பதே நான் விரும்புகிறேன்..
    முக்கியமாக கதை அவர் எழுதாமல் வேறொருவர் எழுதினால் நல்லது..

    -== மிஸ்டர் பாவலன் ==-

  11. Elango

    \\திரு.கமல் அவர்கள் திப்பு சுல்தான் வரலாற்றை திரைப்படமாக
    இயக்கி நடிக்கப்போவதாக ஒரு செய்தி படித்தேன்

    இப்படி சொல்லி சொல்லியே அவர் உடம்பை ரணகளம் ஆகிடாங்கையா …மருதனாயகதிற்கும் இப்படி தனியா சொனீங்க 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *